மூச்சியக்கம் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

alveoli என்பதற்கு நுண்ணறைகள் (நுரையீரலில் உள்ள நுண்ணறைகள், காற்று நுண்ணறைகள்) எனலாம் என்று நினைக்கிறேன். tissue என்பதற்கு இழையம் என்னும் சொல் நன்றாக உள்ளது. கட்டாயம் பயன் படுத்தலாம் என நினைக்கிறேன். --செல்வா 16:22, 14 நவம்பர் 2008 (UTC)Reply

செல்வா, உங்கள் ஆலோசனைப்படி மாற்றங்கள் செய்துள்ளேன். நன்றி. மயூரநாதன் 17:22, 14 நவம்பர் 2008 (UTC)Reply

மூச்சுவிடல் என்பது Breathing (external respiration) என்பதையும், சுவாசம் என்பது Respiration (internal respiration) என்பதையும் குறிக்கும் என நினைக்கிறேன். மூச்சுவிடல் என்பது (breathing) என்பதையே குறிக்கவேண்டும் என நினைக்கிறேன். அதனால் அதனை மாற்றியமைத்து, breathing கட்டுரைக்கே தொடுப்பு கொடுக்க வேண்டும் என்பது எனது கருத்து. தற்போது இக்கட்டுரையில் உள்ள உள்ளடக்கம் Respiration (physiology) கட்டுரையை ஒத்திருப்பதால், அதன் தலைப்பை மாற்றியமைக்கலாம். இதற்கு எவரும் மறுப்பு தெரிவிக்காவிடில், நான் அதனை செய்ய முடியும். கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்.--கலை 11:05, 25 செப்டெம்பர் 2010 (UTC)Reply

இப்போது சுவாசித்தல் கட்டுரையைப் பார்த்தேன். அந்தக் கட்டுரையும் Respiration (physiology) கட்டுரைக்கே தொடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இரு கட்டுரைகளிலும் தகுந்த மாற்றங்களைச் செய்து சரியான தலைப்புக்களைக் கொடுத்தல் நல்லது என நினைக்கிறேன். கருத்துக்களைக் கூறினால் அவற்றை மாற்ரியமைக்கிறேன்.--கலை 11:09, 25 செப்டெம்பர் 2010 (UTC)Reply

ஆம் நீங்கள் கூறியவாறு, மூச்சுவிடல் என்பது (breathing) என்பதையே குறிக்கவேண்டும் என நினைக்கிறேன் மூச்சுவிடல் என்பது மூச்சை உள்வாங்கி வெளிவிடல் ஆகிய இரண்டும் உள்ளடக்கிய சொல். உள்வாங்காமல் வெளிவிடல் இயலாது. அவன் மூச்சுவிடறானா பார் என்னும் பேச்சு வழக்கில் உள்ளதும் அவன் உயிரோடு உள்ளானா என்று பார் என்பதன் வேறு உரு. தமிழில் மூசுதல் என்னும் வினை உண்டு ஆனால் ஏனோ வழக்கில் இல்லை. மூச்சுவிடல் = respiration, breathing. உள்மூச்சு (inhalation), வெளிமூச்சு மூச்சு (exhalation), வாங்கல் அல்லது மூச்சு உள்வாங்கல் (inhalation), வினையாக மூச்சிழு, மூச்சு உள்வாங்கு (inhale), மூச்சு வெளிவிடு (exhale). இரண்டு கட்டுரைகளுமே மிகவும் சுருக்கமாகவே உள்ளன. விரித்து எழுதலாம்.--செல்வா 00:19, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply

மூச்சுவிடல் அல்லது மூச்சு இயக்கம் "breathing" கட்டுரைக்கும் உயிர்ப்பு என்ற தலைப்பு "respiration"க்கும் பொருத்தமாக இருக்கும். மூச்சு விடல் பொதுவாக நுரையீரல் உள்ள உயிரினங்களுக்கும் உயிர்ப்பு அனைத்து உயிரினங்களிலும் ஆக்சிஜன்/ கரியமில வளி பரிமாற்றத்தையும் குறிப்பதாக அறிகிறேன். சுவாசம் மற்றும் மூச்சுவிடல் பொதுவான வழக்கில் ஒரேபொருளில் பயன்படுத்தப்படுவதால் உயிர்ப்பு என்ற சொல்லை respirationக்குப் பரிந்துரைக்கிறேன்.--மணியன் 01:00, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply
செல்வா, மூசுதல் என்ற வினைச்சொல் உள்ளபடியே வழக்கில் இல்லாவிட்டாலும் ஈழை நோய் கண்டவர்கள் இழுத்து இழுத்து மூச்சு விடுவதையும், விரைவாக ஓடி வரும்போது ஏற்படும் இழைப்பினையும் மூசு மூசு என வந்தது என்று வழக்கில் பெருமளவு பயன்படுத்துகிறார்கள். எங்கள் வட்டாரத்தில் இதற்கு இணையான வேறு சொல் எதுவும் பயன்படுத்தியதாக எனக்கு நினைவில்லை. -- சுந்தர் \பேச்சு 01:56, 26 செப்டெம்பர் 2010 (UTC)Reply
மணியன்! உயிர்ப்பு என்ற சொல் மிகவும் அழகான தமிழ்ச் சொல்லாக இருக்கின்ற போதிலும், அதற்கு சாதாரண சுவாச உடற்றொழிலியல் தாண்டியும், பேச்சு வழக்கில் ஆழமான பொருள் இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. அதாவது, உயிர்த்தெழுதல் தொடர்புடையதாகவே தோன்றுகிறது[1]. இது எனது பிரமையா தெரியவில்லை :). நாங்கள் படிக்கும்போது breathing என்பதை 'மூச்சுவிடல்' என்றும், respiration என்பதை 'சுவாசம்' என்றும் படித்திருக்கிறோம். அதனால் breathing என்பதை 'மூச்சுவிடல்' அல்லது 'மூச்சு இயக்கம்' என்றும், respiration என்பதை 'சுவாசம்' என்றும் தலைப்பிடலாம் என்பதே எனது கருத்து. 'சுவாசம்' கட்டுரையில் உள்ளே முதலில் வேண்டுமானால் 'உயிர்ப்பு' என்ற சொல்லையும் கொடுக்கலாம் என நினைக்கிறேன். உங்கள் கருத்தைத் தாருங்கள்.--கலை 10:54, 27 செப்டெம்பர் 2010 (UTC)Reply
ஆம் தமிழ்நாட்டில் மூசு மூசு என்னும் சொல்வழக்கு உள்ளது. யாரேனும் அருகே வந்து மூச்சு படும்படி பேசினானோ, பார்த்தாலோ மூசு மூசு என மாடு மாதிரி மூச்சு விடாதே என்று சொல்லக் கேட்டிருக்கின்றேன். மூசு மூசு என வேலை செய்கிறான் என்னும் சொல்லாட்சி , கடுமையாக மும்முரமாக உழைக்கின்றான் (சுறுசுறுப்பபாக "மூச்சுவிடாமல்" உழைக்கின்றான் என்று பொருள்தரும்). மூசு மூசு என மூச்சிறைத்தது என்றும் சொல்வர். இலக்கியத்தில் மூசுவண்டறை என்னும் சொல் மூச்சு நுரையீரல் தொடர்பான நுட்ப ஓகம் (யோகம்) பற்றியது. திருநாவுக்கரசர் மட்டுமல்ல பிற பெரியோர்களும் பயன்படுத்தியுள்ளனர். breathing, respiration இரண்டும் ஒன்றுதானே. இரண்டையுமே மூச்சுவிடல் எனலாம். respiration என்பதை வேண்டுமானால் மூச்சியக்கம் எனலாம். மூசுதல் என்ப மூச்சு உள்ளிழுத்து வெளிவிடல் என்று ஒரு வரையாறை தந்துவிட்டுப் பயன்படுத்தலாம் (பயன்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை). வரையறை தந்து சொல்லை எடுத்தாளும் பழக்கத்தை நாம் மேற்கொள்ளல் மிகவும் தேவையான ஒன்று. புதிய ஆங்கிலச் சொற்களை, பிறமொழிச்சொற்களை ஏற்கும் நாம் புதிய தமிழ்ச்சொற்களையும் உவந்து ஏற்கப் பழகினால் நல்லது என்று நினைக்கின்றேன்.--செல்வா 12:56, 27 செப்டெம்பர் 2010 (UTC)Reply

புதிய தமிழ்ச் சொற்களை ஏற்கவில்லை என்று தயவு செய்து தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். அந்தச் சொற்கள் சரியான கருத்தைத் தருமா என்றுதான் யோசிக்கிறேன்.
//breathing, respiration இரண்டும் ஒன்றுதானே. இரண்டையுமே மூச்சுவிடல் எனலாம்.// நான் விளங்கிக்கொண்டபடி இவை இரண்டும் ஒன்றல்ல. Breathing (மூச்சு விடல்) என்பது மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றல் மட்டுமே. இது மூக்கின் மூலம் காற்று உட்சென்று நுரையீரலை அடைவதையும், பின்னர் அங்கிருந்து மூக்கின் வழியாக வெளியேறலையும் மட்டுமே குறிக்கும். ஆனால் Respiration (சுவாசம்) என்பது இந்த மூச்சுவிடலுடன் மேலதிகமாக, நுரையீரலுக்கும் உயிரணுக்களுக்களுக்குமிடையலான வாயுப்பரிமாற்றம் வரை செல்லும். சிலசமயம் சக்தியை உருவாக்கும், கலச்சுவாசமும் (உயிரணுச் சுவாசமும்) , இங்கே சேர்த்துக் கொள்ளப்படும்http://www.differencebetween.net/science/difference-between-breathing-and-respiration/][2]. எனவே இவற்றுக்கு தனித்தனியாக பெயரிடலே பொருந்தும். உள்ளான இயக்கங்களையும் இணைத்து எழுதும்போது மூச்சுவிடல், அல்லது மூச்சியக்கம் என்னும் சொல் பொருந்தாது என நினைக்கிறேன். இவ்விரு சொற்களும் மூச்சு உட்சென்று வெளியேறலையே குறிக்கிறது போல்தான் தெரிகிறது. மூசுதல் என்பதும் இவ்வாறே. மூசுதல் அல்லது மூசு என்ற சொல்லும் நான் கேள்விப்பட்டதே. இவை பொதுவாக வேகமாக மூச்சுவிடும்போது பயன்படுத்தப்படும். வேலை செய்து களைத்த நிலையில், அல்லது ஓடிக் களைத்த நிலையில் இந்த மூசு என்ற சொல் பயன்படுத்தக் கேட்டிருக்கிறேன். எனவேதான் Respiration என்றதற்கு சுவாசம் என்ற சொல்லைச் சொன்னேன். மணியன் கொடுத்த உயிர்ப்பு சொல்லும் சரியான சொல்லாக இருந்தாலும், அந்தச் சொல் உயிர்த்தெழுதலுடன் நேரடித் தொடர்புடையதாத் தோன்றுவதால் அதன் பொருள் மேலும் ஆழமான கருத்தைக் கொண்ட சொல்லாக இருக்குமெனத் தோன்றியது.--கலை 14:20, 27 செப்டெம்பர் 2010 (UTC)Reply

மூசுதல் என்னும் சொல் யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ளது. ஆனால், கலை குறிப்பிட்டிருப்பதுபோல் வேகமாக மூச்சுவிடுவதைக் குறிப்பதற்கே இது பயன்படுகிறது. respiration என்பதற்கு அ. கி. மூர்த்தி தனது அறிவியல் அகராதியில் மூச்சுவிடல் என்றும், டாக்டர். சாமி. சண்முகம் தனது மருத்துவக் கலைச்சொற்கள் தொகுப்பில் மூச்சு என்றும் கொடுத்துள்ளனர். சாமி. சண்முகம், respiration centre, respiratory disorder, respiratory distress, respiratory organ, respiratory system ஆகியவற்றுக்கும் முறையே மூச்சு மையம், மூச்சுச் சீரின்மை, மூச்சுத் திணறல், மூச்சு உறுப்பு, மூச்சுமண்டலம் என்று தந்துள்ளார். தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தொகுப்பிலும் மூச்சுவிடல், சுவாசம் என்னும் இரண்டு சொற்களுமே கொடுக்கப்பட்டுள்ளன. சுவாசம் என்பது வடமொழிச்சொல். அதற்கு இணையான தமிழ்ச்சொல் மூச்சுவிடல் என்றுதான் எண்ணுகிறேன். சுவாசம் என்பது respiratory system தொடர்பான செயற்பாடுகளின் முழுமையான பொருளைக் குறிப்பதுபோல இருப்பது அச்சொல்லை நாம் அவ்வாறு எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டதாலேயொழிய உண்மையில் அச்சொல்லுக்கு அப்பொருள்கள் இருப்பதாகத் தெரியவில்லை. -- மயூரநாதன் 18:35, 29 செப்டெம்பர் 2010 (UTC)Reply

respiration என்ற சொல் 'respire என்பதிலிருந்து வந்தது. அதன் சொற்பிறப்பு Online Etymology Dictionary இல் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
respire:
late 14c., from O.Fr. respirer, from L. respirare "breathe again, breathe in and out," from re- "again" + spirare "to breathe" (see spirit).

எனவே இதற்கும் அடிப்படையான பொருள் வளியை உள்ளே இழுத்து வெளியே விடுதல் என்பது மட்டடுமே. --மயூரநாதன் 18:49, 29 செப்டெம்பர் 2010 (UTC)Reply
கருத்துக்களுக்கு நன்றி. சுவாசம் என்பது வடமொழிச்சொல் என்பது எனக்கு தெரியாது. நாம் இலங்கையில் பாடப் புத்தகங்களில் படித்த பல அறிவியற் சொற்கள் வடமொழி சார்ந்தவை என்பதை அண்மைக் காலமாக அறிந்து வருகிறேன். அப்படியானால், சுவாசம் என்ற சொல்லைத் தவிர்க்கலாம்.
இப்போது சுவாசித்தல் என்ற கட்டுரையையும், இந்தக் கட்டுரையுடன் இணைத்துவிட்டு, மூச்சுவிடல் என்ற தலைப்பையே தொடர்ந்து வைத்திருக்கலாமா? Cellular respiration ஐயும் இந்த மூச்சுவிடல் இலேயே சேர்ப்பதா அல்லது அதனை தனிக் கட்டுரையாக்கலாமா? அப்படி அதனைத் தனிக் கட்டுரை ஆக்குவதாயின், அதனை தமிழில் எவ்வாறு அழைக்கலாம்?--கலை 21:06, 29 செப்டெம்பர் 2010 (UTC)Reply

மயூரநாதன் தெளிவாகவும் பயனுடையதாகவும் கருத்துகளை இட்டிருக்கின்றார். அவருக்கு நன்றி. மூசுதல் என்பது இலங்கையில் வழக்கில் இருக்கின்றது என்று அறிந்து மிக மகிழ்ந்தேன் (சற்றே வேறான பொருளில் இருப்பினும்). மூசுதல் என்றால் மொய்த்தல், சூழ்தல் என்னும் பொருள்களும் உண்டு. மூஞ்சல் என்றாலும் மொய்த்தல் , சூழுதல் என்றுபொருள். மூச்சுவிடலில் சூழ்ந்திருக்கும் காற்றை உள்வாங்கி, வெளியேற்றும் வளியை சூழிடத்தில் விடுதலே.மொய்த்தல் என்னும் சொல்லின் பொருளும் நெருங்குதல், சூழ்ந்து நெருங்கல் (இறுகுதல் என்றும் கூடப் பொருள் உண்டு) என்பதாகும். இவை மூச்சு உள்வாங்கி உள்ளுக்குள் சென்று இயங்குவதைக் குறிக்கும். கலை, சுவாசம் என்பது வடமொழி என்பதால் மட்டும தவிர்க்க வேண்டுவதில்லை, ஆனால் (1) தெளிவாக விளங்காது, ஆழங்காட்டாது, பிறசொற்களுடன் எளிதில் இணையாது (2) அடிப்படையான மூச்சுவிடலுக்கே தமிழில் சொல் இல்லை, "வடமொழியைப் பயன்படுத்துகிறாய்" என வடமொழிப்பற்றாளர் ஏளனம் செய்ய இடம் தருகின்றோம், அதுமட்டுமல்ல, சுவாசம் என்பது கூடாது ஷ்வாஸம் (< श्वास) என்று எழுத வேண்டும் என்பர் (3) தமிழ் மொழிச்சொற்களில் வளர்ச்சிக்குப் பயன்படாது, (4) சுவாசம் என்றால் ஏதோ தன்னுடைய மணம், வாசம் என்பது போன்ற குழப்பங்களுக்கும் இடம்தரும் (இப்படியான குழப்பங்கள் தமிழ்ச்சொற்களைப் புரியாமல் பயன்படுத்தினாலும் வரும்). கூடிய மட்டிலும் நல்ல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தினால் கருத்துச் செறிவோடு கருத்து வளர்ச்சிக்குமிடம் தரும். cellular respiration என்பதற்குத் தனி கட்டுரை இருக்க வேண்டுவது நல்லது. ஆனால் சரியான கலைச்சொல் வேண்டும். அதனையும் மூச்சுவிடுதல் என்று கூறலாம் (ஊட்டப் பொருளை சூழிடத்தில் இருந்து உள்வாங்கி கழிபொருளை வெளிவிடலே) என்றாலும், வேறு சொல் இருப்பது நல்லது. உயிரணு ஆற்றல்பரிமாற்றம் எனலாம் (??) இதிலும் ஆக்சிசனும், கார்பன்-டை-ஆக்சைடும் பயன்படுவதும் உண்டு. குளூக்கோசு என்னும் இனியம், அமினோக் காடிகள், கொழுப்பியக் காடிகள் ஆகியவற்றின் தொழிற்பாடுகளும் இருக்கலாம். --செல்வா 22:23, 29 செப்டெம்பர் 2010 (UTC)Reply

படங்கள்

தொகு
 
எசுப்பானிய விக்கியில் உள்ள படம் (பயன்படுமா?)
 
இத்தாலிய விக்கியில் உள்ள படம் (பயன்படுமா?)

தலைப்பை நகர்த்தல்

தொகு

மேலுள்ள கருத்துக்களை மீண்டும் ஒரு தடவை பார்த்தேன். மூச்சுவிடல், மூச்சியக்கம் ஆகிய இரு சொற்களுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மூச்சுவிடலை Breathing என்பதற்கும் (அதாவது மூச்சிழுத்தல் (inhalation), மூச்செறிதல் (exhalation) செயல்முறைகளை உள்ளடக்கியது), மூச்சியக்கம் என்பதை Respiration (Physiology) (அதாவது Cellular respiration உட்பட்ட முழுமையான உயிரணு ஆற்றல் பரிமாற்றச் செயல்முறை) இற்கும் பயன்படுத்துவோமா? அப்படியாயின், இந்தக் கட்டுரையின் தலைப்பை மூச்சியக்கம் என்பதற்கு நகர்த்தலாம். கருத்துக்களைக் கூறுங்கள்.--கலை 14:49, 29 நவம்பர் 2011 (UTC)Reply

அப்படியே செய்யலாம். கலையின் கருத்துக்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்காத படியாலும், மேலுள்ள உரையாடல்களின் அடிப்படையிலும், இந்தக் கட்டுரையின் தலைப்பை மூச்சியக்கம் என்னும் தலைப்புக்கு மாற்றிவிட்டு மூச்சுவிடல் (Breathing) என்பதற்குப் புதிய கட்டுரை எழுதலாம். --- மயூரநாதன் (பேச்சு) 05:22, 20 ஏப்ரல் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மூச்சியக்கம்&oldid=1090311" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மூச்சியக்கம்" page.