பண்டையக் கிரேக்கத்தில், போரோஸ் (Phoros, கிரேக்கம்: φόρος‎ ) என்பது பாரசீகப் படைகளிடமிருந்து கிரேக்க நகர அரசுகளுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட டெலியன் கூட்டணி உறுப்பினர்களால் ஏதென்சுக்கு செலுத்தப்பட்ட உறுப்பினர் மகமைத் தொகைக்கான பெயர் ஆகும். [1] இதை இராணுவ உபகரணங்களாகவோ (கப்பல்கள் போன்றவை) அல்லது பணமாகவோ செலுத்தலாம். பொதுவாக இது மகைமைத் தொகையையே குறிப்பிடுகிறது. இதன் விளைவாக, இராணுவ நடவடிக்கைகளின் தேவைக்காக ஏதென்சுக்கு பெருமளவிலான நிதி கிடைத்தது. ஏதென்ஸ் தன் படை பலத்தை அதிகரித்தது. இதன் விளைவாக அது மேலாதிக்கம் மிக்க ஒரு செல்வந்த ஆற்றலாக மாறியது.

பின்னணி தொகு

கிரேக்க பாரசீகப் போர்களுக்குப் பிறகு, டெலியன் கூட்டணியானது கிரேக்க நகர அரசுகளின் பரஸ்பர-பாதுகாப்பு உடன்படிக்கையாக உருவாக்கப்பட்டது. மேலும் அதன் முதல் 25 ஆண்டுகளில் டெலோஸ் என்ற புனித தீவை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. பெரிய மோதல்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், கிரேக்கத்திற்கும் பாரசீகத்திற்கும் இடையே ஒரு வகையான பனிப்போர் இருந்துவந்தது. குறிப்பாக கிரேக்கம், பாரசீகம் ஆகிய சக்திகளின் எல்லைப் பகுதிகளில் இராசதந்திர நகர்வுகள் மற்றும் எதிர் நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் கொண்டதாக இருந்தது. [2] கூட்டணி அதன் உச்சக்கட்டத்தில், உறுப்பினர் எண்ணிக்கையானது சுமார் 200 என உயர்ந்தது. மேலும் ஏதெனியன் தரும் பாதுகாப்பிற்கு ஈடாக, ஒவ்வொரு இராச்சியங்களும் வெள்ளித் டாலெட்டுகள் என்ற பணத்தில் போரோக்களை செலுத்தின. அதே நேரத்தில் சாமோஸ், சியோஸ், லெஸ்போஸ் போன்ற மிகவும் சக்திவாய்ந்த உறுப்பினர்கள் தங்கள் பங்காக போர்க்கப்பல்களை வழங்கின. [3] ஆண்டு மகைமைத் தொகையின் பட்டியல் ஏதெனசின் அக்ரோபோலிசில் பளிங்கு கல்வெட்டுகளாக பாதுகாக்கப்பட்டன. அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி, சலாமிஸ் போருக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு அரிஸ்டெய்ட்சால் போரோஸ் தொகை மதிப்பிடப்பட்டது. இத்தொகையை உறுப்பு நாடுகளிடம் வசூலிக்கவும், பாதுகாக்கவும் எல்லெனோட்டோமியி என்ற பதவியில் பத்து ஏதெனியர் நியமிக்கப்பட்டனர்.

பெலோபொன்னேசியன் போருக்கு தேவைப்பபடும் நிதிக்காக ஏதெனியர்களால் இருமடங்காகவும் மும்மடங்காகவும் மாற்றப்பட்டபோது போரோஸ் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியது. [3]

454/3 இல், எகிப்தில் கூட்டணியின் தோல்விக்குப் பிறகு டெலியன் கூட்டணியின் கருவூலம் பாதுகாப்பாக ஏதென்சுக்கு மாற்றப்பட்டது. இருப்பினும் சில ஆதாரங்கள் கூட்டணியின் நிதியை தன் கட்டுப்படில் வைத்திருக்க ஏதெனியர்களின் தரப்பில் சொல்லப்பட்ட ஒரு சாக்குப்போக்கு இது எனக் குறிப்பிடுகின்றன. [4] இராச்சியங்கள் போரோக்களை செலுத்தத் தவறினால், டெலோஸ் வழக்கு போன்ற விரைவான நடவடிக்கைகளை சந்திக்க வேண்டி இருந்தது. மேலும் ஒரு நகர அரசானது அதிருப்தியின் காரணமாக அதன் போரோக்களை செலுத்தாமல் இருந்தால் அது ஏதெனியன் இராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. [4]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போரோஸ்&oldid=3520859" இருந்து மீள்விக்கப்பட்டது