மகுடஞ்சாவடி

மகுடஞ்சாவடி என்பது தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்தில், சேலம்சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு ஊர் ஆகும். இந்த ஊர் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்தின் மையப்பகுதி ஆகும். இந்த ஊரானது மாவட்டத் தலைநகரான சேலத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[1]

வரலாறு

தொகு

இவ்வூரின் பண்டைய பெயர் எர்ணாபுரம் ஆகும். இப்போதும் இதன் வருவாய் கிராமத்தின் பெயர் எர்ணாபுரம்தான். மகுடஞ்சாவடி என்ற பெயர் 1850க்குப் பின் வந்த பெயராகும்.

எர்ணாபுரம் பெயர்க்காரணம்

தொகு

மகுடஞ்சாவடியின் பூர்வீகமான எர்ணாபுரமும் புகழ் வாய்ந்த ஊரே. எர்ணாபுரம் ஊரைப் பற்றி மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ உடையார் காலத்து செப்பேடு (கி.பி 1716) உயர்வாகக் குறிப்பிடுகிறது.இவ்வூரை ஹிரண்யபுரம் என்று அம்மன்னர் குறிப்பிடுகிறார்.ஹிரண்யம் என்ற சமஸ்கிருத சொல்லிற்கு பொன் என்று பொருள்.

எர்ணாபுரத்தின் நடுவே பொன்னி ஆறு ஓடுகிறது. இது கஞ்சமலையில் உற்பத்தியாகிறது.கஞ்சமலைக்கு காஞ்சனகிரி என்ற பெயரும் உண்டு. காஞ்சனம் = பொன். இம்மலையிலிருந்து பொன், பொன்னியாறு வழியாக அடித்து வரப்பட்டு இவ்வூருக்கு வந்ததாகவும், அதை இவ்வூர் மக்கள் எடுத்து பயன்படுத்தியதாகவும் செப்பேடு கூறுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ்

தொகு

கி.பி. 1792-இல் சேலம் மாவட்டம் திப்பு சுல்தானிடமிருந்து ஆங்கிலேயருக்குக் கை மாறியது. ஆங்கிலேயர் ஆட்சி வந்த பின் மாவட்டத்தின் பொறுப்பும், மாவட்ட இராணுவத்தின் பொறுப்பும், மாவட்ட ஆட்சியாளர் அலெக்ஸ்சாண்டர் ரீட் வசம் வந்தது. மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பென்னாகரம், சங்ககிரி, ஆத்தூர் ஆகிய இடங்களில் பட்டாளங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

இதில் சங்ககிரி பட்டாளம் லெப்டினன்ட் மெக்டோனால்ட் என்பவரின் தலைமையில் கி.பி. 1792 முதல் இயங்கி வந்தது. மெக்டோனால்ட் சங்ககிரி செல்லும் வழியில் எர்ணாபுரத்தில் காடுகளில் வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி ஒரு சமயத்தில் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதைக் கண்டார். மழைக்காலத்தில் மண் சாலையில் சேறும் சகதியுமாக, மழைக்கு ஒதுங்கக்கூட இடமில்லாமல் மக்கள் நடந்து செல்வதைக் கண்ட அவர் தன் சொந்த செலவில் மக்களுக்காக 1793-இல் ஒரு சத்திரம் கட்டி, பக்தர்களுக்கு உணவு, உடை ஆகியவற்றை இலவசமாக அளித்தார்.[2]

மக்டனால்டு சவுல்ட்ரி

தொகு

தென்னிந்திய ரயில் தடங்களில் முக்கியமான கிளை சங்ககிரி வழியாக கோழிக்கோடு வரை செல்கிறது. எர்ணாபுரம் வழியாக சென்ற அப்பாதையில் இரயில் நிலையம் 01.12.1861 முதல் பயன்பாட்டிற்கு வந்தது. அந்த இரயில் நிலையத்திலிருந்து மெக்டோனால்ட் கட்டிய அந்த சத்திரம் கிழக்கில் 1கி.மீ தொலைவில் இருந்ததால் அவருடைய பெயரையும் சேர்த்து மக்டனால்டு சவுல்ட்ரி (MCDONALD CHOULTRY) என வைக்கப்பட்டது. தற்போதும் இரயில் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்தில் இவ்வூர் மக்டனால்டு சவுல்ட்ரி என்றே அழைக்கப்படுகிறது. மக்டனால்டு சவுல்ட்ரி என்ற ஆங்கிலப்பெயர் மகுடன்சாவடி என்று மருவியது.[3] தற்போது இது மகுடஞ்சாவடி என்று அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.onefivenine.com/india/villages/Salem/Macdonalds-Choultry/Mac.Donald-Choultry
  2. S.P. Saravanan (JULY 05, 2017). "Retain Magudanchavadi's old name too". Artical. the hindu. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2019. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. சோமலெ (1961). சேலம் மாவட்டம். சென்னை: பாரி நிலையம். p. 114.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகுடஞ்சாவடி&oldid=3539143" இலிருந்து மீள்விக்கப்பட்டது