மங்கோலியப் பண்பாடு

(மங்கோலியக் கலாச்சாரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மங்கோலியக் கலாச்சாரம் (Culture of Mongolia) மங்கோல் நாடோடிகளின் வாழ்க்கை முறையினை பெரிதும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதைத் தவிர திபெத்து, திபெத்திய பௌத்தம் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் கலாச்சாரத் தாக்கமும் மங்கோலியர்களின் கலாச்சரத்தினைப் பாதிக்கின்றன. 20 ஆம் நூற்றாண்டில் உருசியா மற்றும் ஐரோப்பா நாடுகளின் வாழ்க்கை முறைகளும் மங்கோலியரிடம் வலுவான மாற்றங்களை உண்டாக்கின.

குகை ஓவியங்கள், கௌட் திசெங்கர் பிராந்தியம்

பாரம்பரிய மதிப்பீடுகள் தொகு

மிகப்பழைமையான மங்கோலிய இலக்கியப் படைப்புகளில் தொடங்கி மென்மையான நவீன பாப் இசை வரை பெற்றோர்கள் மீதான காதல் மற்றும், ஓடியாடி வளர்ந்த இடத்தின் மீதான வீட்டேக்கம் போன்ற குறிப்பிடப்பட்ட சில தலைப்புகள் பெரிதும் மிகுந்துள்ளன. இவர்களின் தினசரி வாழ்க்கை மற்றும் கலைகளில் குதிரைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மங்கோலிய இலக்கியங்களில் பண்டைக் காலந்தொட்டு பல காவியக் கதாநாயகர்கள் இடம்பிடித்துள்ளனர். மரபுரீதியாகவே விருந்தோம்பல் இவர்கள் வாழ்வில் முக்கியமானதாக கருதப்பட்டு வந்துள்ளது. கதாநாயகன் என்ற சொல்லுக்குரிய மங்கோலியப் பெயரான பத்தூர் என்ற சொல் தனிநபர்களின் பெயர்களிலும் அடிக்கடி இடம்பெறுகிறது. உலான் பத்தூர் என்ற மங்கோலியாவின் தலைநகர் பெயரிலும் இடம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது ஆகும். மங்கோலிய மொழி பேசும் நாடோடிகளால் இச்சொல் மங்கோலிய மொழி பேசாதவர்கள் மத்தியில் இடைக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பல்கேரிய மொழி, உருசிய மொழி, போலிய மொழி, அங்கேரிய மொழி, பாரசீக மொழி, வட இந்தியா மற்றும் சியார்சிய மொழிகளில். இச்சொல் பலவடிவங்களில் காணப்படுகிறது. படைப்பாற்றல் மற்றும் பேரார்வத்தை விவரிக்கும் தெமுல் போன்ற சில பாரம்பரிய சொற்கள் இதே பொருளோடும் சொல்லாகவும் பல மங்கோலிய சொற்களில் பயன்படுத்தப்படுகின்றன. மங்கோலியர்களின் கண்ணோட்டத்திலேயே இதைச் சொல்வதென்றால், பந்தயத்தில் ஓடுகின்ற குதிரையின் கண்களில் அது சேரவேண்டிய இடம்தான் தெரியுமே தவிர மேலே இருப்பவரின் எண்ணங்கள் ஏதும் தெரியாது என்பதாகும்.

 
யூர்டுகள் மங்கோலியப் புறநகர்.

யூர்ட் தொகு

யூர்ட் என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் காவிச் செல்லத்தக்க ஒரு வகை சிறு கூடாரம் அல்லது உறையுள் (வீடு) ஆகும். மங்கோலிய மொழியில் கெர் என்ற சொல்லால் இது குறிக்கப்படுகிறது. கெர் என்ற சொல் மங்கோலியாவின் தேசிய அடையாளமாகும். அனைத்து மக்களின் தலைவரான செங்கிசுகான் கெர் எனப்படும் இத்தகைய கூடாரங்களில் தான் வசித்தார் என்பது மங்கோலியர்களின் வரலாற்று இரகசியாமக தெரிவிக்கப்படுகிறது. இன்றும் மங்கோலிய மக்கள் தொகையில் பெரும்பாலோர் உலான் பத்தூர் நகரிலும் கூட இத்தகைய கெர் கூடாரங்களில்தான் வசிக்கிறார்கள். கெர் என்ற சொல்லுக்கு வீடு என்ற பொருளும் உண்டு. மற்ற சொற்கள் இவ்வேர்ச் சொல்லில் இருந்து உருவாகின்றன. உதாரணமாக, கெர் இலிருந்து கெர்லெக் உருவானது. கெர்லெக் என்றால் திருமணம் செய்து கொள்ள என்று பொருளாம்.அதாவது வீடு என்ற வேர்ச்சொல்லில் இருந்து வீட்டுக்காரி என்ற சொல் தோன்றியது போல இருக்கலாம்.

மதம் தொகு

மாயவித்தை வாதம், ஆன்மவாதம், இனமரபுச்சின்ன முறைமை பல கடவுட் கொள்கை ஒரு கடவுட் கொள்கை ஆகிய கூறுகள் அனைத்தையும் உள்ளடக்கிய தெங்கிரிசம் எனப்படும் படைப்புக் கொள்கை மங்கோலியர்களை ஆதிக்கம் செய்த மதநம்பிக்கையாகும். இன்றும் கூட மங்கோலியர்களின் மத நம்பிக்கையில் இக்கருத்து வேரூன்றியுள்ளது. கான் பேரரசர்களின் காலத்தில் மங்கோலியர்களின் சுதந்திரமான வழிபாடு அவர்களைத் தனித்துவப்படுத்தியது. 17 ஆம் நூற்றாண்டில் திபெத்திய பௌத்தம் மங்கோலியாவில் ஆதிக்கம் செலுத்தியது. சில பகுதிகளில் மட்டும் மதகுரு நம்பிக்கை நிலவியது.

திபெத்திய பௌத்தம் பல தெய்வங்கள் இடம்பெற்றுள்ள ஒரு சம்பிரதாய மதமாக இருந்தது. இதனால் ஓவியம் மற்றும் சிற்பங்கள் உள்ள படங்கள் உட்பட்ட மதப் பொருட்களை உருவாக்கும் ஊக்கம் உண்டானது.

1930 களில் ஸ்டாலினின் சீர்திருத்தக் கருத்துகளுக்குப் பிறகு பௌத்தம் மற்றும் மதகுரு நம்பிக்கைகள் மங்கோலிய மக்கள் குடியரசில் செல்வாக்கிழந்தன. உட்புற மங்கோலியாவில் பாரம்பரிய மதக்கொள்கைகள் பாதிக்கப்பட்டு கலாச்சார புரட்சி ஏற்படத் தொடங்கியது.[1] 1990 கள் வரை பல்வேறு கிறித்துவ அமைப்புகள் மங்கோலியாவில் காலூன்ற முயற்சித்தன. மங்கோலியர்களில் 4 சதவீதம் மக்கள் இசுலாம் சமயத்தவர்களாக உள்ளனர்.

மூட நம்பிக்கைகள் தொகு

மங்கோலியர்கள் பாரம்பரியமாகவே துர்பாக்கியத்திற்கு பயந்தார்கள், நற்குணங்கள் மற்றும் தீய குணங்கள் ஆகியவற்றை நம்பினார்கள். துர்பாக்கியத்தின் எதிர்மறை விளைவுகள் குறித்து பலரிடம் கூடிக்கூடி விவாதித்தார்கள். இவ்விடர்பாடுகள் தீங்கிழைக்கும் மதக்குருக்களால் அனுப்பப்பட்டவை என்றும் கருதினார்கள்.

மிகவும் அருகிவரும் குடும்ப உறுப்பினர்களாக குழந்தைகள் இருந்தனர். சிலசமயங்களில் அவர்கள் பெயரில்லா குழந்தைகளாகவும் அல்லது ஆண்குழந்தைகளை பெண்குழந்தைகள் போல் உடையணிவிக்கப்பட்டும் காண்ப்பட்டனர்.[2] புல்வெளி மக்களுக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு பெயர் என்பதால் அப்பெயரைத் தேர்ந்தெடுப்பதில் பல அடையாள முறைகள் கடைபிடிக்கப்பட்டன. பெயரானது குழந்தையின் நடத்தை, தலைவிதி , ஊழ் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இரவில் வெளியே செல்லும் இளம் குழந்தைகள் நெற்றிகளில் கரி அல்லது புகைக்கரியால் படம் வரைந்து இது குழந்தை அல்ல கருப்பு முடியுடன் கூடிய முயல் என்று தீய சக்திகளை ஏமாற்றி குழந்தைகளக் காப்பாற்ற திட்டமிட்டனர்."[3]

பயணத்தின் நடுவில் கற்குவியலை காண நேரிட்டால் அது அபசகுணம் என்று கருதி ஒருதெய்வதின் உருவத்தைச் சூழ்ந்து கொள்ளும் பழக்கம் அவர்களிடம் இருந்தது. அதே கற்குவியல் மலை உச்சியில் தென்பட்டால் நல்ல காலநிலை , துர்பாக்கியத்திற்கான பரிகாரம் எனவும் நம்பினர்.

ஒரு குழந்தைக்கு 3 முதல் 5 வயதுக்குள் முதலாவதாக முடிவெட்டுவதை மிகப்பெரிய விழாவாக கொண்டாடினார்கள். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அந்நாளில் கொண்டாடப்படவில்லை. ஆனால் தற்காலத்தில் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். திருமணத்தின் போது ஒரு புதிய கூடாரம் வழங்குவது வழக்கமாக இருந்தது. இறந்த உறவினர்களை திறந்த வெளியில் விலங்குகளும் பறவைகளும் உண்ண வைப்பது இவர்கள் வழக்கமாக இருந்தது. தற்காலத்தில் பிணங்கள் புதைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Rudolf Kaschewsky, Die Religion der Mongolen, in Michael Weiers (editor), Die Mongolen, Beiträge zu ihrer Geschichte und Kultur, Darmstadt 1968, p. 87-123
  2. Slawoj Szynkiewicz, Geburt, Hochzeit, Tod - Der menschliche Lebenszyklus im Brauchtum der Mongolen, in Walther Heissig (editor), Die Mongolen (exhibition catalogue), Innsbruck 1989, p. 196ff
  3. Jack Weatherford, Genghis Khan and the making of the Modern World (New York: Three Rivers Press, 2004), p. 14.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கோலியப்_பண்பாடு&oldid=3458450" இலிருந்து மீள்விக்கப்பட்டது