மண்புழு உரம்

(மண் புழு உரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மண்புழு உரம் (vermicompost) திடக்கழிவு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவுப் பொருள்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உள்கொண்டு எச்சங்களை சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்று வதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகிய அத்தனையும் இருக்கிறது.45 முதல் 60 நாளில் மண்புழு உரம் உற்பத்தியாகிவிடும்.

அறுவடை செய்யப்பட்ட மண்புழு உரம்

உலகத்தில் மண்புழுக்களில் 3000 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் இந்தியாவில் 384 வகைகள் உள்ளன. இதில் 6 வகையான மண் புழுக்கள் உரம் தயாரிக்க உகந்தவை. பெரும்பாலும் உரம் தயாரிக்க சிவப்பு ஊர்ந்தி எனப்படும்(எயசெனியா பெடிடா (Eisenia foetida), எயசெனியா ஆண்ட்ரி (Eisenia andrei) மற்றும் லும்ப்ரிகஸ் லுபெல்லஸ் (Lumbricus rubellus) ) மண்புழு இனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

மண்புழு உரம் உற்பத்தி செய்யும் முறை

தொகு
 • மண்புழு உரம் தயாரிக்க அமைக்கப்படும் தொட்டி, அகலம் ஒரு மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 • இடவசதிக்கு ஏற்ப நீளம் இருக்கலாம். அரை அடி ஆழத்திற்கு குழி வெட்டி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
 • முதலில் தொட்டியின் அடியில் செங்கல் அல்லது கூழாங்கற்களை பரப்பி அதற்கு மேல் மணலை பரப்பி பின்னர் பண்ணைக் கழிவுகளை நிரப்ப வேண்டும்.
 • அந்த குழியில்தென்னைநார் கழிவை கொட்டி, அதன் மீது "கரும்புக்கூழ் கழிவு' கழிவைத் தூவ வேண்டும்.
 • அடுத்ததாக, நன்கு காய்ந்த எரு பொடியை பரப்பி அதன் மீது ஈரமான சாணத்தை கொட்டி அதில் மண் புழுக்களை விடவேண்டும். *சாணத்தை உணவாக எடுத்துக் கொண்ட மண்புழுக்கள் வெளியேற்றும் கழிவுகள் உரமாக கிடைக்கும்.
 • பண்ணையில் சேரும் கழிவுகளை, அடுத்ததடுத்த தொட்டிகளில் நிரப்பி சேகரித்து பயிர்களுக்கு இடலாம்.

உரக்கூடம்

தொகு
 • விவசாயிகள் தங்கள் வயல்களிலும், தோட்டங்களிலும் கூட நீர்த்தேங்காத மேட்டுப் பகுதியில் மண்புழு உரக்கூடத்தை அமைத்துக் கொள்ளலாம்.
 • 50-க்கு 20 என்ற அளவில் 1000 சதுர அடி பரப்பில் வெப்பம் குறைவாக இருக்கும் வகையில் கீற்றுக்கொட்டகை அமைப்பது நல்லது.
 • இதில் 20-க்கு 20 அளவில் 2 அடி உயரத்தில் 800 கன அடி அளவுக்கு தொட்டி கட்டி அதனை நான்காகப் பிரித்துக் கொண்டால் உரக்கூடம் தயாராகி விடும்.
 • மக்காத குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வதுடன் இடையிடையே நீர்தெளித்து வர வேண்டும். ஏனெனில், மக்கத எச்சங்கள் வெப்பத்தை வெளிப்படுத்தும்.
 • ஒரு சதுர மீட்டருக்கு 200 மண்புழுக்கள் என்ற அளவில் இட்டால் 3-வது வாரத்திலேயே மண்புழுக்கள், தங்கள் எச்சத்தை கழிவுகளாக மேற்பரப்பில் வெளித்தள்ளுகின்றன. வாரம் ஒருமுறைகூட இவற்றை சேகரிக்கலாம்.

மண்புழு உர அளவு

தொகு

பயறு நடவு செய்த பின்னர், கடைசி உழவில் ஏக்கருக்கு,

 • நெல்லுக்கு ஒரு டன்னும்,
 • கரும்புக்கு ஒன்றரை டன்னும்,
 • பருத்திக்கு ஒரு டன்னும்,
 • மிளகாய்க்கு ஒரு டன்னும்,
 • சூரியகாந்திக்கு ஒன்றரை டன்னும்,
 • மக்காச்சோளத்துக்கு ஒன்றரை டன்னும் பயன்படுத்த வேண்டும்.

மண்புழு உர பயன்கள்

தொகு

மண் வளம்

தொகு
 • மண்புழு உரம் இடுவதால் மண்துகள்கள் ஒன்றாக இணைந்து ஒட்டி, குருணை போன்ற கட்டிகள் உருவாகி மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. இதனால் மண்ணின் காற்றோட்டம் மற்றும் நீர்ப்பிடிப்புத் திறன் மேம்படுத்தப்படுகிறது.
 • களிமண் பாங்கான மண்ணில் உள்ள குழம்புத் தன்மையைக் குறைத்து பயிர்கள் நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்பளிக்கிறது
 • மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை அதிகரிப்பதால் பயிர் பாதுகாப்பதுடன், கோடைக் காலத்தில் மண்ணின் வெப்பநிலையைக் குறைத்து வேர்க்காயம் ஏற்படுவதைத் தடுக்கிறது.
 • மழைக் காலங்களில் மண் அரிப்பை தடுப்பதுடன், மண்ணை வெப்பமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் சத்துக்களை எடுக்கும் புது வேர்கள் உருவாக வாய்ப்பளிக்கிறது.
 • மண்புழு உரத்தால் ஏற்படும் அமிலமும் கார்பன்-டை-ஆக்சைடு(CO2) வாயுவும் மண்ணின் காரத் தன்மையைக் குறைத்து உரப்பிடிப்புத் திறனை மேம்படுத்துகிறது.
 • மண்ணில் உள்ள கரையாத தாதுக்களை கரையச் செய்து தாவரங்களுக்கு கிடைக்கக் கூடிய பேரூட்டச் சத்துக்களையும், அனைத்து வகை நுண்ணூட்டச் சத்துக்களையும் சீரான அளவில் வழங்குகிறது.
 • மண்ணில் உள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய கன உலோகங்களை தாற்காலிகமாக ஈர்த்து வைத்துக் கொள்வதால் தூய்மையான நிலத்தடி நீருக்கும், மண்வள மேம்பாட்டிற்கும் வித்திடுகிறது.
 • ரசாயன உரங்களைத் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதால், மண்ணின் இயற்கைத் தன்மை கெட்டுவிடுகிறது. ஆனால் மண்புழு உரத்தை மண்ணில் இடுவதால் மண்வளம் இயற்கையாகப் பாதுகாக்கப்பட்டு, பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது.

பயிர் மகசூல்

தொகு
 • வாழை, தென்னை, கரும்பு, பழப்பயிர்கள் குறிப்பாக எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா, மா போன்ற பழப் பயிர்கள் கோடையில் முழுமையாகப் பாதுகாக்க மண்புழு உரம் பெரிதும் பயன்படுகிறது.
 • மண்புழு உரத்தில், அதிகப்படியாக அங்கக கரிமம் 20 முதல் 25 சதம் வரை உள்ளது. இது மண்ணின் வளத்தை மேம்படுத்தி பயிருக்கு தேவையான சத்துப் பொருள்களை தேவையான நேரத்தில் தேவையான அளவு கொடுக்கிறது. இதனால் மகசூல் அதிகரிக்கிறது.

குறிப்பாக பழங்களின் நிறம், ருசி, மணம், பழங்கள் சேமித்து வைக்கும் காலம் போன்றவை அதிகரிக்கின்றன.

 • இதைப் போன்று பூக்கள், காய்கனிகள், தானியங்கள், நல்ல விலைக்கு விற்பனை செய்ய வழி வகுக்கிறது,
 • பூச்சி நோய் தாக்குதலை வெகுவாகக் குறைக்க உதவுகிறது. நச்சுத்தன்மை இல்லாத உணவை உற்பத்தி செய்ய மிகவும் உதவுகிறது. மண்புழு உரம் பயன்படுத்துவதால் மண்ணில் உப்பு கடத்தும் திறன் அதிகரித்து கார அமிலத் தன்மை சீர்படுகிறது.
 • மண்புழு உரத்தில் உள்ள ஆக்ஸின், சிஸ்டோஹைனின் ஆகியவை பயிரை வளரச் செய்கிறது. ஜிபிரிலின் பயிரை பூக்கச் செய்கிறது.
 • மண்புழு உரத்தில் அதிகப்படியாகக் காணப்படும் கியூமிக் அமிலம் வேர் வளர்ச்சியை ஏற்படுத்தும். இதனால் பயிருக்குத் தேவையான உரங்களை மண்ணில் இருந்து எடுக்க உதவுகிறது.
 • மண்புழு உரம் இடுவதால் சோளம், மக்காச்சோளம், கம்பு, பருத்தி, சிறுதானியப் பயிர்களின் மகசூல் அதிகரித்து வறட்சியைத் தாங்கி வளர வாய்ப்புள்ளது.

மண்புழு உர உற்பத்தி பயிற்சி

தொகு

இந்த உரம் உற்பத்தி செய்ய தமிழக வேளாண்துறை மூலமும் மற்றும் தமிழ் நாடு வேளண்மை பல்கலைக்கழகம் மூலமும் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

வெளி இணைப்பு

தொகு
 1. மண்புழு உரம்: வேளாண் உள்ளீடு செலவுகளை குறைக்க பூமியினுள் தீர்வு.
 2. தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: பண்ணை சார் தொழில்கள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்புழு_உரம்&oldid=3386689" இலிருந்து மீள்விக்கப்பட்டது