சென்னை தொழில்நுட்ப நிறுவனம்

(மதராசு தொழில்நுட்ப நிறுவனம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சென்னை தொழில்நுட்ப நிறுவனம் ("'Madras Institute of Technology'"-MIT) எனும் பொறியியல் கல்லூரி சென்னை, குரோம்பேட்டையில் உள்ளது. இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு ஆக்கக்கூறு கல்லூரிகளுள் ஒன்றாகும். 1949-ல் ராஜம் என்பவரால் தொடங்கப்பட்டு பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. தொடங்கப்பட்டபோது இக்கல்லூரி நாட்டின் தொழில்நுட்ப கல்விக்கான சோதனை முயற்சியாக இருந்தது. ஏனெனில், அக்காலத்திலேயே தனிச்சிறப்பு வாய்ந்த தொழில்நுட்ப துறைப்படிப்புகளான வானூர்திப் பொறியியல் (Aeronautical Engg), தானுந்துப் பொறியியல் (Automobile Engg), மின்னணுவியல் பொறியியல் (Electronics Engg), கருவிமயமாக்க பொறியியல் (Instrumentation Engg) ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் இந்தியாவிலேயே முதன் முதலில் இங்குதான் வானூர்தி மின்னணுவியல் துறை (Avionics) மற்றும் எந்திர மின்னணுவியல் (Mechatronics) துறைகளில் முதுநிலைப் பட்ட வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.[1][2][3]

சென்னை தொழில்நுட்ப நிறுவனம்
குறிக்கோளுரைஇந்தியாவிற்கான சேவைக்காக
வகைகல்வி மற்றும் ஆராய்ச்சி
உருவாக்கம்1949
வேந்தர்பன்வாரிலால் புரோகித் (தமிழக ஆளுநர்)
துறைத்தலைவர்பேராசிரியர்.எஸ்.தாமரைச் செல்வி
பதிவாளர்பேராசிரியர்.சா.சண்முகவேல்
பட்ட மாணவர்கள்2000 (தோராயமாக)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்300 (தோராயமாக)
அமைவிடம், ,
வளாகம்நகரம்
இணையதளம்http://www.mitindia.edu/

இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பல துறைகளில் உயர்நிலைகளை அடைந்துள்ளனர். இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று அழைக்கப்பெறுபவரும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் இக்கல்லூரியில் பயின்றவர் ஆவார். எழுத்தாளர் சுஜாதா அவர்களும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.

வரலாறு

தொகு

விடுதலைக்குப் பிறகு, இந்தியாவின் தொழில்துறையை முன்னேற்ற தேவையான தொழில்நுட்ப கல்விநிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. அக்காலகட்டத்தில், 1949-ல், சின்னசுவாமி ராஜம் அவர்கள் தன் வீட்டை விற்ற ரூ.5 இலட்சம் தொகையுடன் எம்.ஐ.டி.(MIT)-யை நிறுவினார். மேலும் பல கொடையாளர்களிடமிருந்தும் தொழில்நிறுவனங்களிடமிருந்தும் கொடை பெற்று நடத்தி வந்தார். ஓய்வு பெற்ற முதுநிலை பொறியாளரான சிறீ.எம்.கே.ரங்கநாதன் அவர்கள் முதல் முதல்வரானார்.

 
மூத்த மாணவர் விடுதியின் மாடியிலிருந்து எம்.ஐ.டியின் விளம்பர பதாகை

நாட்டின் மற்ற தொழில்நுட்ப கல்விநிலையங்கள் வழக்கமான கட்டுமான, மின், எந்திர பொறியியல் துறைகளை நடத்தி வந்த போது, சி. ராஜம் அவர்கள் முற்றிலும் புதிய மற்றும் அதிநவீன துறைகளான வானூர்தி, தானுந்து, மின்னணு, கருவிமயமாக்கப் பொறியியல் துறைகளை அறிமுகப்படுத்தினார். பின்னர், ரப்பர் & பிளாஸ்டிக் பொறியியல், உற்பத்திப் பொறியியல், தகவல் தொடர்பு மற்றும் கணினிப் பொறியியல் துறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் கடந்த காலத்தில் பல ஆராய்ச்சி மையங்களும் நிறுவப்பட்டன.

கருவிமயமாக்கம் மற்றும் கட்டுப்பாட்டுப் பொறியியல் துறைகள் அக்காலத்தில் முற்றிலும் அறியப்படாதவையாகும். ஆனால் இக்காலத்தில், செயல்முறைசார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இத்துறை அனைத்து தொழில்துறைகளுக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்துறையில் பயின்ற எம்.ஐ.டி-யின் முன்னாள் மாணவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களிலும் உற்பத்தி தொழில்துறைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் மிக முக்கிய பொறுப்புகளில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும், உள்ளனர்.

நிர்வாகம்

தொகு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆக்கக்கூறு கல்லூரியான மதராசு தொழில்நுட்ப நிறுவனம் வேந்தர், துணைவேந்தர், பல்கலையின் பதிவாளர், கல்லூரியின் பீடத்தலைவர் ஆகியோரால் நிர்வாகம் செய்யப்படுகிறது. பல்கலைகழகத்துக்கென ஆட்சிக் குழுவொன்றும் உள்ளது. பீடத்தலைவர் கல்லூரியின் நிர்வாகத் தலைவராவார். மேலும் அவரே ஒவ்வொரு நாள் செயல்பாட்டினையும் மேற்பார்வையிடுகிறார். ஒவ்வொரு துறையும் அவ்வத் துறைத் தலைவர்களால் நிர்வாகிக்கப் படுகிறது. கல்லூரியின் விடுதியானது துணை விடுதிக் காப்பாளர்களால் நிருவாகம் செய்யப்படுகிறது. கல்லூரியின் பீடத்தலைவரே விடுதியின் காப்பாளர் ஆவார்.

கல்விசார் விதிமுறைகள் மற்றும் திட்டங்கள் வகுப்புக் குழுவால் முடிவு செய்யப்படுகின்றன. வகுப்புக் குழுவானது அனைத்து பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பிரதிநிதிகள்-அவர்களின் அவைத்தலைவர் ஆகியோரைக் கொண்டது. சென்னை தொழில்நுட்ப நிறுவனம் மாணவர்களின் செயல்பாட்டுத் திறனை மதிப்பிட மதிப்பு-சார் பாடத்திட்ட முறையை பின்பற்றுகிறது. ஒவ்வொரு பாடமும் அதனதன் முக்கியத்துவத்தைப் பொறுத்து செயல்பாடுகளுக்கு மதிப்பளிக்கப்படும். மொத்த மதிப்பெண்களே(100) தரம் பிரிக்க அடிப்படையாக கொள்ளப்படும். 10 என்பது தரவரிசை நிலையில் முதலிடமாக கொள்ளப்படுகிறது.

2007-ஆம் ஆண்டு வரை "தமிழ்நாடு தொழில்நுட்ப படிப்பு நுழைவுத் தேர்வு"(TNPCEE) மூலமே கல்லூரியில் மாணவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். ஆனால் அதன் பின் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

பண்பாட்டு விழாக்கள்

தொகு

இக்கல்லூரியின் வருடாந்திர பண்பாட்டு விழா "மிடாபெஸ்ட்" (Mitafest) ஆகும். மேலும் ஒவ்வொரு துறையும் தனித்தனியே விழாக்களைக் கொண்டாடும். கல்லூரியின் இசை விழா "சிவரஞ்சனி" ஆகும்.

தொழில்நுட்ப விழாக்களும் கருத்தரங்குகளும்

தொகு

எம்.ஐ.டி. 2009-ஆம் ஆண்டு "வைர விழா" கொண்டாடியது. அதோடு, "அசிம்ப்டோட்-2009" எனும் விழாவும் கொண்டாடப்பட்டது. அவ்விழா 2009, சனவரி 9,10,11 தேதிகளில் கொண்டாடப்பட்டது. பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் பலவகைப் போட்டிகளில் கலந்து கொண்டனர். விழா பெருத்த வெற்றி பெற்றது.

ஒவ்வொரு துறையும் அதனதன் சார்பில் பல்வேறு தொழில்நுட்ப கருத்தரங்குகளை நடத்துகின்றன.

 
அசிம்ப்டோட்-2009 விழாவில் ஒரு போட்டியை பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் காட்சி
Department Intra-college Inter-college
Aeronautical Dept - Flight
Automobile Dept Spark Automeet
Computer Technology Dept - PRAYATNA
Information technology Dept Mutex Samhita
Electronics & Communication Dept Apocalypse Electrofocus
Electronics & Instrumentation Dept Livebeat Intecho
Production Technology Dept Expro
Rubber & Plastics Technology Dept Elastoplaz
Student Organisation Intra-College Inter-College
Computer Society Enigma Carte Blanche
Personality Development Assosiation - Persofest
Rotract Club Rotofest Sparish

பருவ இதழ்கள்

தொகு

எம்.ஐ.டி.-யின் வருடாந்திர பருவ இதழ் மிட்மாக்(MITMAG) ஆகும். கல்லூரி தொடங்கிய காலம்தொட்டு இன்று வரை ஒவ்வொரு வருடமும் இவ்விதழ் வெளியிடப்படுகிறது. இதனைத் தவிர்த்து ஆளுமை வளர்ச்சிக் கழகம், எம்.ஐ.டி. கணினிக் கழகம், இளம் செஞ்சிலுவை சங்கம் முதலியவை அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு சமூக நலன் குறித்தும் இதழ்களை வெளியிட்டு வருகின்றன.

டி(T) தொடர்

தொகு

எம்.ஐ.டி. தனித்துவமான "டி-தொடர்"(T-Series) எனும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. இதுவொரு வழிகாட்டுமுறை அமைப்பாகும். புதியதாய் சேரும் ஒவ்வொரு மாணவரும் அவருக்கு முன்னர் சேர்ந்த மாணவர்களில் ஒருவரின் தொடராய் கொள்ளப்படுவர். பின்னோக்கி செல்லும்போது கல்லூரியின் தொடக்க காலம் வரையான மாணவர்கள் இத்தொடரில் அடங்குவர். இது படிப்பு, பண்பாடு முதலியவை வளர ஒரு முக்கிய வழியாக அமையும். மேலும், மற்ற அனைத்து பெரிய பல்கலைக் கழகங்கள் போலவே "பழைய மாணவர் அமைப்புகள்" திறமாக அமைய இது வழி செய்கிறது.

இளநிலை பட்டப்படிப்புத் துறைகள்

தொகு
  • வானூர்திப் பொறியியல் துறை: இந்தியாவிலேயே வானூர்திப் பொறியியல் படிப்பு இங்குதான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. 1949-ஆம் ஆண்டு முதல் இத்துறை செயல்பட்டு வருகிறது. இத்துறையின் மாணவர்கள் நாட்டின் வானூர்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். கால மாற்றத்திற்கேற்ப பாடத்திட்டமும் அவ்வப்போது மாற்றம் செய்யப்படுகிறது. ஆயினும் துறையின் உள்கட்டுமானம் மற்றும் சோதனை சாலைகள் மிகவும் பழையவை. "வானூர்தி மின்னணுவியல்"(Avionics) துறை, இதன் கீழ் செயல்படுகிறது.
  • தானுந்துப் பொறியியல் துறை: இத்துறையும் கல்லூரியில் உள்ள மிகப் பழைய துறையாகும். கல்லூரி தொடங்கும்போது ஆரம்பிக்கப்பட்டது. இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் தானுந்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் இத்துறையின் கீழ் இயங்கி வருகிறது.
  • தகவல் தொழில்நுட்பத் துறை: இத்துறை 2000-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் கீழ் கணினிப் பொறியியல் துறையும் தகவல் தொழில்நுட்பத் துறையும் இயங்கி வருகின்றன. கணினி துறையில் பெருமளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இத்துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
  • மின்னணுவியல் & தொலைத்தொடர்புத் துறை: இத்துறையும் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட வருடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. இதுவே கல்லூரியின் மிகப் பெரிய துறையாகும். சுமார் 25 துறை அங்கத்தினரும் 400 இளநிலை மாணவர்களும் 100 முதுநிலை ஊழியர்களும் உள்ளனர். மின்னணுவியல் துறையில் பெருமளவில் ஆராய்ச்சிகள் நடைபெறு வருகின்றன. உலகம் முழுவதிலுமுள்ள பல ஆராய்ச்சி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இத்துறைக்கு உள்ளன.
  • கருவிமயமாக்கப் பொறியியல் துறை: 1949-ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட இத்துறை கருவிமயமாக்கப் பொறியியல் படிப்பை முதுநிலையிலும் மின்னணுவியல் & கருவிமயமாக்கல் படிப்பை இளநிலை மற்றும் ஆராய்ச்சி நிலைகளிலும் வழங்கி வருகிறது. தொழில்துறையின் இன்றைய தேவையை கருத்தில்கொண்டு அமைக்கப்பட்ட பாடத்திட்டமும் மேம்பட்ட தொழில்துறை சார் பயிற்சிகளும் மாணவர்களை நாட்டின் எதிர்கால தேவைக்கு தகுதியானவர்களாக்குகிறது.
  • உற்பத்திப் பொறியியல் துறை: இத்துறை 1977-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இளநிலை அறிவியல் பட்டதாரிகளுக்கு உற்பத்திப் பொறியியலில் பட்டயப் படிப்பு வழங்கப்பட்டது. 1993-ஆம் ஆண்டு முதுநிலைப் பொறியியல் படிப்பும் நடத்த ஆரம்பிக்கப்பட்டது. இளநிலை பொறியியலில் உற்பத்திப் பொறியியல் பட்டமும் முதுநிலைப் பொறியியல் படிப்பில் தயாரிப்புப் பொறியியல், இயந்திர மின் நுட்பவியல் (Mechatronics) படிப்பும் உள்ளன. நாட்டிலேயே முதன் முறையாக இயந்திர மின் நுட்பவியல் துறையில் முதுநிலை பட்டப் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது இங்குதான் (ஆண்டு 1999).
  • தொய்வம் மற்றும் நெகிழிப் பொறியியல் துறை: இத்துறை 1988-ல் தொடங்கப்பட்டது. எம்.ஐ.டி.-க்கே உரித்தான தனித்தன்மையும் அசாதாரணமான படிப்புகளுக்கும் எடுத்துக்காட்டாய் இத்துறை திகழ்கிறது. தொழிற்துறையின் இன்றைய தேவைகளையும் எதிர்கால முன்னேற்றங்களையும் கருத்தில் கொண்டு பாடத்திட்டம் வடிவமைக்கப்படுகிறது. இத்துறை மாணவர்கள் பலவித ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர்.

உசாத்துணைகள்

தொகு
  1. "AU-KBC Research Center". AUKBC website.
  2. "The MIT Quill". themitquill.mitindia.edu. பார்க்கப்பட்ட நாள் 15 August 2015.
  3. "Madras Institute Of Technology". mitindia.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-08-03.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
எம்ஐடி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு