மதுரை ஆதீனம்

சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது

மதுரை ஆதீனம் என்பது தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றாகும். சில சமயங்களில் ஊடகங்களினால் பீடாதிபதி/மடாதிபதி பதவியும், மடமும் ஆதீனம் என்று வேறுபாடின்றி ஒரேபெயரால் அழைக்கப்படுகின்றன. மதுரை நகரில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் புனரமைக்கப்பட்டது.[1]

நம்பிக்கை

தொகு

மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் எனும் பாண்டிய மன்னன் சமண மதத்தைத் தழுவிய போது அவனது ஆட்சிக்குட்பட்ட பாண்டிய நாட்டின் பகுதி முழுவதும் சமண மதம் இருந்தது. சிவாலயங்களில் பூசைகள் நடைபெறவில்லை. மக்கள் மத்தியில் சிவ வழிபாடு வீழ்ச்சியுற்றுக் காணப்பட்டது. கூன்பாண்டியனின் மனைவி மானியும்(மங்கையர்க்கரசி) சைவ சமயத்தில் பற்றுக் கொண்டவர். மந்திரி குலச்சிறையாரும் சிவபக்தர். அரசியும், மந்திரியும் கலந்தாலோசித்து திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்தனர். மதுரைக்கு விஜயம் செய்த திருஞானசம்பந்தரை மந்திரி குலச்சிறையார் இம்மடத்தில் தங்க வைத்தார். சமணர்கள் சம்பந்தரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்குத் தீ வைத்தனர். சம்பந்தர் மடத்தை விட்டு வெளியில் வந்து ஆலவாய் அண்ணலை தேவாரப்பதிகப் பாடலால் வேண்டினார். நெருப்பு வெப்பு நோயாக மாறிக் கூன்பாண்டியனை வாட்டியது. சமணர்கள் மன்னனின் நோயைக் குணப்படுத்த பல முயற்சி செய்தும் பலனில்லை. திருஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடி மன்னனின் வெப்பு நோயைக் குணப்படுத்தினார். சமணர்கள் மீண்டும் போட்டிக்கு அழைத்தனர். அனல்வாதம், புனல்வாதம் அனைத்திலும் ஞானசம்பந்தர் வென்று கூன்பாண்டியனின் கூன் முதுகு நோயை நீக்கி நின்றசீர் நெடுமாறனாக மாற்றினார்.

ஞானசம்பந்தப் பெருமான் சைவத்தையும், தமிழையும் மதுரையில் மீண்டும் நிலைநாட்டினார். இச்செய்திகள் முழுவதும் சேக்கிழார் அருளிய பெரிய புராணத்திலும், சுந்தரர் அருளிய திருத்தொண்டர் தொகையிலும், நம்பியாண்டார்நம்பிகள் அருளிய திருத்தொண்டர் அந்தாதியிலும் காணப்படுகிறது. தமிழகத் திருக்கோயில் கல்வெட்டுகள் மற்றும் தேவாரப்பதிகப் பாடல்கள் ஆகியவற்றில் இவ்வரலாற்றுச் செய்திகள் சிறப்பாக இடம்பெற்று உள்ளன.

பீடாதிபதி தேர்வுமுறை

தொகு

திருஞானசம்பந்தர் ஒழுங்குபடுத்திய மதுரை ஆதீனம் மடம், சைவ சித்தாத்தங்களை அடிப்படையாகக் கொண்ட திருமடம் ஆகும். இன்றுவரை 292 பேர் பீடாதிபதியாக இருந்துள்ளனர். 292 ஆவதாக அருணகிரிநாதர் இருந்தார். இவர் தனக்கு அடுத்ததாக 293 வது பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆவார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தில் மூத்த தம்பிரான் ஆக சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆன்மீக பணியிலும் பொது பணியிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார்கள்[2]

பீடாதிபதிகள் பட்டியல்

தொகு

மதுரை ஆதீனக் கோயில்கள்

தொகு

மதுரை ஆதினத்திற்குரிய மூன்று கோயில்கள் தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் உள்ளது.[3]

சர்ச்சைகள்

தொகு

மதுரை ஆதீனத்தின் தற்போதைய பீடாதிபதி, அடுத்த பீடாதிபதியாக நித்யானந்தாவை தேர்ந்தெடுத்ததால் மதுரை ஆதீனம் சர்ச்சைகளுக்குள் சிக்கியது. இருப்பினும் ஆதீனத்தை தேர்வு செய்வதில் தமக்கு முழு உரிமை உண்டு இதில் எவரும் தலையிட முடியாது 292 வது குரு அருணகிரி பத்திரிகைகளில் தெரிவித்தார். காஞ்சி மடம் மற்றும் திருவாவடுதுறை ஆதின மடம் உள்ளிட்ட அனைத்து சைவ மடங்களும் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. மருத்துவர், பொறியாளர்கள் அடங்கிய 50 சன்னியாசிகள் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவார்கள் என்றும், மதுரை ஆதீன மடத்திற்கு 5 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்குவதாகவும் நித்யானந்தா அறிவித்ததும் ஊடகங்களில் பல்வேறு விதமான வியூகங்கள் கிளம்பின.[4] அருணகிரி பணம் பெற்றுக்கொண்டு இந்த பதவியை அவருக்கு வழங்கியதாக கூறி விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் தாங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இது தவிர தமிழகத்தின் இதர திருமடங்கள் ஆதரவுடன் நெல்லை கண்ணனை தலைமையாக கொண்ட மதுரை ஆதீன மீட்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் சார்பில் ஆதீனத்தின் வாசல் முன்பு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.

நித்தியானந்தர் நீக்கம்

தொகு

மதுரை இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமனம் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் இருந்து வந்தன. இந்நியமனத்தைக் காஞ்சி மடம் மற்றும் திருவாவடுதுறை ஆதின மடம் உள்ளிட்ட அனைத்துச் சைவ மடங்களும் எதிர்த்தன. ஆனாலும், நித்தியானந்தரை நீக்கம் செய்ய முடியாது என மதுரை ஆதீனம் அறிவித்தார். இந்நியமனத்திற்குப் பல்வேறு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துப், பல போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் மதுரை ஆதீன மடத்தை அரசே ஏற்கப் போவதாகத் தகவல்கள் பரவின. இதையடுத்துத் திசம்பர் 19, 2012 முதல் நித்தியானந்தாவை வாரிசுப் பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிடுவதாக மதுரை ஆதீனம் அறிவித்தது.[5]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_ஆதீனம்&oldid=3895201" இலிருந்து மீள்விக்கப்பட்டது