மரியாளியல்

இயேசுவின் தாய் மரியாவைப் பற்றிய இறையியல் கண்ணோட்டமே மரியாளியல் என்று அழைக்கப்படுகிறது. கன்னி மரியாவின் வாழ்வு, குணநலன்கள், இறைவனின் திட்டத்தில் அவருக்குள்ள பங்கு ஆகியவை பற்றி நற்செய்திகளும், கிறிஸ்தவ மரபும் தரும் செய்திகளின் ஆய்வியல் கல்வியாக இது விளங்குகிறது.

விண்ணேற்பு அன்னை சொரூபம்

பன்முகப் பார்வை தொகு

கத்தோலிக்கத் திருச்சபையின் மரியாளியல் என்பது கன்னி மரியாவைப் பற்றி தொடக்க காலத்தில் எழுந்த கருத்துருக்கள், திருத்தந்தையரின் விளக்கங்கள், புனிதர்கள் எழுதிய நூல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. வரலாற்றில் நிகழ்ந்த கன்னி மரியாவின் காட்சிகள் பற்றிய ஆய்வுக் கண்ணோட்டத்தையும் இது கொண்டிருக்கிறது. இறைத்திட்டத்தில் மரியாவுக்கு உள்ள முக்கிய இடத்தின் அடிப்படையில் அவருக்கு மேலான வணக்கம் செலுத்துவது பற்றியும் கத்தோலிக்கத் திருச்சபையின் மரியாளியல் போதிக்கிறது. மரியாவை இறைவனின் தாய் என ஏற்றுக்கொள்ளும் கத்தோலிக்க மரியாளியல், அவரது அமல உற்பவம், முக்கால கன்னிமை, விண்ணேற்பு ஆகியவற்றையும் விசுவாசக் கோட்பாடுகளாக அறிக்கையிடுகிறது.

கிழக்கு மரபுவழி திருச்சபையின் மரியாளியல், கன்னி மரியாவை இறைவனின் தாய் என்ற சிறப்பு பெயருடன் கொண்டாடுகிறது. இதன் மூலச்சொல்லான தியோடோக்கோஸ் என்பதற்கு கடவுளைச் சுமந்தவர் என்பது பொருள். இங்கு மரியாவின் தாய்மை நித்திய கடவுளைப் பெற்றெடுத்தவர் என்ற பொருள் தராது. இறைமகன் இயேசுவைக் கருத்தாங்கி பெற்றெடுத்ததால் மரியா இறைவனின் தாய் என்று அழைக்கப்படுகிறார். இதில் மரியாவின் கன்னித் தாய்மை முக்கிய இடம் பெறுகிறது. மரியா பிறப்புவழிப் பாவமின்றி தோன்றினார் என்ற அமல உற்பவ கோட்பாட்டை கிழக்கு மரபுவழி திருச்சபை ஆதரிக்கவில்லை.

ஆங்கிலிக்க திருச்சபையினரின் மரியாளியல் பொதுவாக கத்தோலிக்க கோட்பாடுகளை ஆதரிக்கிறது. இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு (மார்ச் 25), மரியா எலிசபெத்தை சந்தித்தல் (மே 31), மரியாவின் விண்ணேற்பு (ஆகஸ்ட் 15), மரியாவின் பிறப்பு (செப்டம்பர் 8), மரியாவின் அமல உற்பவம் (டிசம்பர் 8) ஆகிய கத்தோலிக்க விழாக்கள் ஆங்கிலிக்க திருச்சபையிலும் கொண்டாடப்படுகின்றன. இருப்பினும் சில ஆங்கிலிக்க பிரிவுகள் மரியாள் வணக்கத்தை ஏற்றுக்கொள்வதில்லை.

சீர்திருத்தத் திருச்சபைகள் மரியாள் பற்றிய கருத்தியலில் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. இவை மரியாள் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளாததுடன், இறைமகன் இயேசுவை உலகிற்கு கொண்டு வந்த கருவியாக மட்டுமே அவரைப் பார்க்கின்றன. கடவுளின் மீட்புத் திட்டத்தில் மரியாவுக்கு முக்கியப் பங்கு இல்லை என்பதே இவற்றின் பொதுவானக் கருத்தாக உள்ளது.

மரியாளியல் தோற்றம் தொகு

மரியாவைப் பற்றிய கருத்தியல் நற்செய்திகளிலேயே காணப்படுகிறது என்றாலும், கிறிஸ்தவ மரபு சார்ந்து எழுந்த நூல்களே மரியாளியல் தோற்றத்திற்கு முதன்மையான காரணமாக அமைந்தன. தொடக்க திருச்சபையின் தந்தையர்கள், மரியாவின் கன்னித் தாய்மையைப் பற்றி அதிகமாக எடுத்துரைத்தனர். "மரியாவின் கீழ்ப்படிதலே மனிதகுல மீட்பரான இயேசுவை உலகிற்கு கொண்டு வந்தது"[1] எனப் புகழ்ந்ததுடன், மரியாவை புதிய ஏவாளாகவும் அவர்கள் எடுத்துக்காட்டினர். "மரியாவின் கன்னிமை நிலைக்கும் கன்னிமை" என ஓரிஜன் உள்ளிட்ட தொடக்க கால கிறிஸ்தவ எழுத்தாளர்கள் பறைசாற்றினர்.

கி.பி.431ஆம் ஆண்டு நடைபெற்ற எபேசு பொதுச்சங்கம், இயேசுவின் தாய் மரியாவை இறைவனின் தாய் என அறிக்கையிட்டது. இயேசுவின் இறைத்தன்மையை எதிர்த்த நெஸ்தோரிய தப்பறையைக் கண்டித்து, "இயேசுவில் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் ஒன்றுக்கொன்று குறைவுபடாமல் முழுமையாக குடிகொண்டிருக்கிறது. எனவே, மரியா இறைவனின் தாயாக விளங்குகிறார்" என்று விளக்கம் அளித்தது. அதுமுதல் மரியா மீதான பக்தி கிறிஸ்தவர்களிடையே விரைந்து பரவியது. மரியாவை சித்தரிக்கும் தொடக்க கால சுவர் ஓவியங்களும், மரியாவைப் பற்றிய இறையியல் கருத்துகள் தோன்ற காரணமாக அமைந்தன.

4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல்கள், மரியாவின் விண்ணேற்பு பற்றிய கருத்தியலை முன்வைக்கின்றன. திருத்தூதர்களின் மரபின் அடிப்படையில் விண்ணேற்பு பற்றிய கருத்து தோன்றியதாக கூறப்படுகிறது. திருவெளிப்பாடு நூலின் 12ஆம் அதிகாரத்தில் காணப்படும் பெண்ணின் உருவகமும்[2] மரியாவின் விண்ணேற்பை அடையாளப்படுத்துவதாக பலரும் கருதினர். மரியாவின் அமல உற்பவம் பற்றிய கருத்தியல் 7ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்தது.

ஆய்வுக்கான ஒழுங்குகள் தொகு

கிறிஸ்தவத் திருச்சபைகளில் காணப்படும் மரியாளியலை அதன் ஆய்வுக்கான காரணத்தின் அடிப்படையில் மூன்று விதமாகப் பிரிக்கலாம். கத்தோலிக்கத் திருச்சபையே மரியாளியல் குறித்த கருத்தியலில் அதிக கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கிறது.

இறையியல் சார்ந்த மரியாளியல் என்பது தொடக்கக் காலம் முதலே வளர்ச்சி அடைந்த கிறிஸ்தவ இறையியல் கருத்துக்களின் அடிப்படையிலான ஆய்வு ஆகும். திருச்சபைத் தந்தையர் காலம் தொடங்கி, கிறிஸ்தவ சிந்தனையில் மரியாவைப் பற்றிய கருத்துருக்கள் வளர்ச்சி அடைந்த கண்ணோட்டத்தை இது விவரிக்கிறது. மீட்புத் திட்டத்தில் மரியாவின் தனித்த பங்கை குறிப்பிட்ட சில கோணங்களில் இது விளக்கிக் காட்டுகிறது.

கோட்பாடுகள் சார்ந்த மரியாளியல் என்பது திருச்சபையின் அதிகாரப்பூர்வ மறைக்கோட்பாடுகள் அடிப்படையிலான ஆய்வு ஆகும். திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை தொடங்கி, நற்செய்தி நூல்கள் தரும் செய்திகள், மரபின் அடிப்படையில் உருவான கோட்பாடுகள் ஆகியவற்றை விவரிப்பதாக இது அமைந்துள்ளது. இயேசுவின் வாழ்வில் மரியாவுக்கு உள்ள முக்கியப் பங்கு குறித்து இது விளக்கம் அளிக்கிறது.

அமைப்புகள் சார்ந்த மரியாளியல் என்பது வெவ்வேறு திருச்சபைகளின் கருத்தியல்களுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் ஆய்வாக இது விளங்குகிறது. மீட்புத் திட்டத்தில் மரியாவின் அருள்நிலை, அவரது பங்கு மற்றும் முக்கியத்துவம் ஆகியவைப் பற்றியும், மரியாவுக்குக் கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வில் அளிக்க வேண்டிய இடம், செலுத்த வேண்டிய வணக்கம் முதலியவைப் பற்றியும் இது விவரிக்கிறது.

ஆதாரங்கள் தொகு

  1. புனித இரனேயு (கி.பி.130-202), Adversus haereses 3:22
  2. திருவெளிப்பாடு 12:1,14 வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். அவருக்கெனக் குறிக்கபட்டிருந்த இடத்துக்குப் பறந்து செல்லுமாறு, பெரும் கழுகின் இரு சிறகுகள் அவருக்கு அளிக்கப்பட்டன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியாளியல்&oldid=3093460" இலிருந்து மீள்விக்கப்பட்டது