மாதங்கினி அஸ்ரா

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை

மாதங்கினி அஸ்ரா (Matangini Hazra) (19 அக்டோபர் 1870 - 29 செப்டம்பர் 1942 [1] ) இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்ற ஒரு இந்தியப் புரட்சியாளர் ஆவார். 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி தம்லக் பகுதியைக் கைப்பற்றுவதற்காக சமர் பரிசத் என்ற போர் அமைப்பை அமைத்த ஐந்து தன்னார்வத் தொண்டர்களில் ( வித்யுத் பாஹினி ) ஒருவராக இவர் இருந்தார். மேலும் அந்த அமைப்பிற்கு தலைமையும் தாங்கினார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மிட்னாபூர் காவல் நிலையம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது பிரித்தானிய அரசின் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தீவிர காந்தியவாதியான் இவர் காந்தி புரி என்று அன்புடன் அழைக்கப்பட்டார். காந்தி புரி என்றால் வங்காளத்தில் வயதான கிழவி காந்தி எனப்பொருள்.[2][3][4]

மாதங்கினி அஸ்ரா
Matangini Hazra
பிறப்புமாதங்கினி மைதி
(1870-10-19)19 அக்டோபர் 1870
தம்லக், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய மேற்கு வங்காளம், இந்தியா)
இறப்பு29 செப்டம்பர் 1942(1942-09-29) (அகவை 72)
தம்லக், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பிற்கான
காரணம்
Sபிரித்தானிய காவலர்களால் மூன்று முறை சுடப்பட்டதால் மரணம் ஏற்பட்டது.
அறியப்படுவதுமனிதநேயவாதி
இந்திய விடுதலை இயக்கத்தின் தீவிர வீராங்கனை
அரசியல் இயக்கம்உப்புச் சத்தியாகிரகம்
சௌகிதாரி வரியை ஒழிக்கும் இயக்கம்
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
தாம்ரலிப்தா ஜாதியா அரசாங்கத்தின் 60வது ஆண்டைக் கொண்டாடியபோது வெளியிட்ட இந்திய அஞ்சல் முத்திரையில் மாதங்கினி

ஆரம்பகால வாழ்க்கை.

தொகு

1870 ஆம் ஆண்டில் தம்லக் அருகே உள்ள கோக்லா என்ற கிராமத்தில் ஒரு வங்காளிக் குடும்பத்தில் பிறந்தார். இவர் ஒரு ஏழை விவசாயியின் மகள் என்பதால், இவர் முறையான கல்வியைப் பெறவில்லை என்பதைத் தவிர இவரது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி அதிகம் தெரியவில்லை.[5] இவருடைய 12வது வயதில் தம்லக் தானாவைச் சேர்ந்த அலினன் கிராமத்தைச் சேர்ந்த திரிலோச்சன் அஸ்ரா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.[6] ஆனால் இவரது பதினெட்டு வயதில் இவரது கணவர் இறாந்து போனார். இவர்களுக்கு குழந்தைகள் ஏதுமில்லை.

சுதந்திர இயக்கத்தில் பங்கேற்பு

தொகு

ஒரு காந்தியவாதியான மாதங்கினி அஸ்ரா இந்திய சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக ஆர்வம் காட்டினார். மிட்னாபூரில் நடந்த சுதந்திரப் போராட்டத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் பெண்களின் பங்கேற்பாகும்[7] 1930 ஆம் ஆண்டில், இவர் சட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். மேலும் உப்புச் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்ட இவர் உடனடியாக விடுவிக்கப்பட்டார். ஆனால் பின்னர் 'சௌகிதாரி வரி பந்த்' (சௌகிதாரி வரியை ஒழிப்பது) இயக்கத்தில் பங்கேற்றவர்களை தண்டிக்க ஆளுநரால் ஒரு நீதிமன்றத்தை சட்டவிரோதமாக அமைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்ற கட்டிடத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றபோது, மாதங்கினி மீண்டும் கைது செய்யப்பட்டார். இவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பக்ராம்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையிலிருந்து விடுதலை ஆனவுடன், இவர் இந்திய தேசிய காங்கிரசின் தீவிர உறுப்பினராக ஆனார். மேலும் சொந்தமாக நூற்புச் சக்கரம் நூற்பதற்குத் தொடங்கினார். 1933 ஆம் ஆண்டில், செராம்பூரில் நடந்த துணைப்பிரிவு காங்கிரசு மாநாட்டில் கலந்து கொண்ட இவர், காவல்துறையினரின் தடியடி தாக்குதலில் காயமடைந்தார்.

சமூகப் பணி

தொகு

1930 களில், தனது உடல் நிலை பலவீனமாக இருந்தபோதிலும், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட உடனேயே, தீண்டத்தகாதவர்களுக்கு உதவுவதற்காக மாதங்கினி தனது சமூகப் பணிக்குத் திரும்பினார்.[8] எப்போதும் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுவந்த இவர், இப்பகுதியில் பெரியம்மை பரவியபோது பாதிக்கப்பட்டவர்களிடையே பணியாற்றினார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்பு

தொகு

ஆனாலும் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஒரு பகுதியாக, காங்கிரசின் உறுப்பினர்கள் மிட்னாபூர் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களையும் பிற அரசு அலுவலகங்களையும் கைப்பற்ற திட்டமிட்டனர். மாவட்டத்தில் பிரித்தானிய அரசாங்கத்தை கவிழ்த்து, ஒரு சுதந்திர இந்திய அரசை நிறுவுவதற்கான ஒரு நடவடிக்கையாக இது இருந்திருக்கலாம். அந்த நேரத்தில் 72 வயதாக இருந்த மாதங்கினி அஸ்ரா, தம்லக் காவல் நிலையத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் ஆறாயிரம் ஆதரவாளர்கள், பெரும்பாலும் பெண் தன்னார்வலர்களின் ஊர்வலத்திற்கு தலைமை தாங்கினார். ஊர்வலம் நகரின் புறநகர்ப் பகுதியை அடைந்தபோது, இந்திய தண்டனைச் சட்டத்தின் 144 வது பிரிவின் கீழ் ஊர்வலத்தைக் கலைக்க காவல்துறையால் உத்தரவிடப்பட்டது.வெளிப்படையாக, இவர் முன்னேறி, கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம் என்று காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் காவலர்கள் நடத்திய துப்பக்கிச் சூட்டில் மாதங்கினி சுட்டுக் கொல்லப்பட்டார்.

தான் இறக்கும்போது, வந்தே மாதரம், என்று முழக்கமிட்டார். இந்திய தேசிய கொடியை தாங்கிகொண்டிருந்த நிலையில் மாதங்கினி உயிர் நீத்தார்.[9][10][11]

கௌரவங்கள்

தொகு
 
கொல்கத்தாவின் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள மாதங்கினியின் சிலை

ஆங்கிலேயர்களுக்கு இணையான தம்லக் அரசாங்கத்தை நடத்தி வெளிப்படையான கிளர்ச்சியைத் தூண்டினார். இவரால் மேலும் இரண்டு ஆண்டுகள் செயல்பட முடிந்தது. 1944 இல் காந்தியின் வேண்டுகோளின் பேரில் இந்த அரசாங்கம் கலைக்கப்பட்டது.

1947இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் கொல்கத்தாவில் உள்ள முக்கிய சாலையின் நீண்ட பகுதி உட்பட ஏராளமான பள்ளிகள், குடியிருப்புகள் மற்றும் தெருக்களுக்கு மாதங்கினி அஸ்ராவின் பெயர் சூட்டப்பட்டது. சுதந்திர இந்தியாவில் கொல்கத்தாவில் 1977 இல் அமைக்கப்பட்ட முதல் பெண்ணின் சிலை இவரது சிலையேயாகும்.[12] தம்லக்கில் இவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் இப்போது ஒரு சிலை அமைக்கப்பட்டுள்ளது.[13] 2002 ஆம் ஆண்டில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் அறுபதாவது ஆண்டை நினைவுகூரும் வகையில், தம்லக் தேசிய அரசு உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்திய அஞ்சல் துறை மாதங்கினி அஸ்ராவின் உருவப்படத்துடன் ஐந்து ரூபாய் அஞ்சல் தலையை வெளியிட்டது. கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டில், சாகித் மதங்கினி அஸ்ரா அரசு மகளிர் கல்லூரி இவரது பெயரில் நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "মাতঙ্গিনী হাজরা". Amardeshonline.com. 2010-09-29. Archived from the original on 20 January 2016. பார்க்கப்பட்ட நாள் 2012-10-03.
  2. Amin, Sonia (2012). "Hazra, Matangini". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம்.
  3. Simlandy, Sagar; Mandal, Ganesh Kr (2021-07-07). History of India & Abroad (in ஆங்கிலம்). BFC Publications. p. 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-90880-20-1.
  4. Bhowal, Sayantika (2021-09-29). "The Story Of Matangini Hazra, Fondly Known As 'Gandhi Buri'". www.digpu.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-21.
  5. Maity, Sachindra (1975). Freedom Movement in Midnapore. Calcutta: Firma, K.L. pp. 112–113.
  6. Majumdar, Maya (2005). Encyclopaedia of Gender Equality Through Women Empowerment (in ஆங்கிலம்). Sarup & Sons. p. 231. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7625-548-6.
  7. Chakrabarty, Bidyut (1997). Local Politics and Indian Nationalism: Midnapur (1919-1944). New Delhi: Manohar.
  8. "Matangini Hazra: Flag in hand, the 73-year-old walked into a barrage of bullets". The Indian Express (in ஆங்கிலம்). 2020-03-08. பார்க்கப்பட்ட நாள் 2022-07-21.
  9. Chakrabarty, Bidyut (1997). Local Politics and Indian Nationalism: Midnapur (1919-1944). New Delhi: Manohar. p. 167.
  10. Hallegua, Madhur Zakir (2018-05-28). 100 Desi Stories Series (in ஆங்கிலம்). Jaico Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-86867-14-8.
  11. Vashishth, Himankshi (2022-05-06). Mist of the Forbidden Forest (in ஆங்கிலம்). True Dreamster. p. 71.
  12. catchcal.com (2006). "At first in Kolkata". பார்க்கப்பட்ட நாள் 2006-09-29.
  13. Haldia Development Authority (2006). "Haldia Development Authority". Archived from the original on 31 October 2006. பார்க்கப்பட்ட நாள் 2006-09-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதங்கினி_அஸ்ரா&oldid=4007423" இலிருந்து மீள்விக்கப்பட்டது