மானசா தேவி வட இந்தியாவில், குறிப்பாக மேற்கு வங்கம் பகுதியில் அதிகம் வழிபடப்படும் நாகதேவதை ஆவாள். இத்தேவி, நாகராசனான வாசுகியின் தங்கையும், ஜரத்காரு முனிவரின் மனைவியும்[1] ஆவாள். பாம்புக்கடியிலிருந்து உயிர்பிழைக்கவும், வளம், செழிப்புக்காகவும் மானசா தேவியை வழிபடுவது வழக்கம்.

மானசா தேவி
அதிபதிபாம்புகள் மற்றும் நஞ்சின்
வகைதேவி, நாக தேவதை
துணையரத்கார முனிவர்
குழந்தைகள்ஆத்திகன்


தோற்றம்

தொகு
 
மானசையின் இன்னொரு பழைய ஓவியம்

பழங்குடித் தெய்வமாக விளங்கிய மானசை, பிற்காலத்திலேயே, இந்துப் பெருமதத்துக்குள் உள்ளீர்க்கப்பட்டிருக்க வேண்டும்.[2] தேவ தம்பதியினரான காசிபர், கத்ரு ஆகியோரின் மகளாகச் சொல்லப்படும் மானசை, பதினான்காம் நூற்றாண்டின் பிற்பாகத்தில், சைவப்பெருநெறிக்குள் மெல்ல மெல்ல உள்ளீர்க்கப்படலானாள். பாற்கடல் கடைந்தபோது ஈசனை ஆலகாலத்திலிருந்து காத்தவள் என்றும், அவள் ஈசனின் மகள் என்றும் பிற்காலத்தில் கதைகள் எழுந்தன.[3] வடகிழக்கிந்தியப் பழங்குடியினரான ஃகயொங் குலத்தவரின் மூதிகங்களில் ஒன்று, அவளது செவிலித்தாயான "சண்டி"யால், அவளது கண்ணொன்று குருடாக்கப்பட்டதாக சொல்வதால், அவள் அவர்கள் மொழியில், "காணி டியொ" ('Kānī Dīyāʊ - குருட்டுத் தேவி) என்றும், ஒற்றைக்கண்ணி என்றும் அழைக்கப்படுகின்றாள்.

தம் முன்னோரைக் கடைத்தேற்றக் குழந்தை வேண்டுமென்று, யரத்கார முனிவர், நாகராசன் வாசுகியை வேண்ட, அவள் தன் தங்கை மானசையை அவருக்கு வழங்கியதாகவும், அவர்களுக்கு ஆத்திகன் எனும் மகன் பிறந்ததும், மீண்டும் யரத்காரர் துறவறம் பூண்டு நீங்கியதாகவும் மகாபாரதம் சொல்கின்றது. இந்த ஆத்திகனே, தன் தந்தை பரீட்சித்துவின் மரணத்துக்குப் பழிவாங்க, மன்னன் சனமேசயன் நிகழ்த்திய சர்ப்ப யாகத்தை நிறுத்தி, பாம்பினத்தைக் காப்பாற்றியவன்.[4]


கணவனின் தூக்கம் கெடக்கூடாதே என்று, பூசை நேரத்திலும் அவரை எழுப்பாது மானசை மௌனம் காத்ததாகவும், அதனால் கோபமூற்றே யரத்காரர் அவளை விட்டு நீங்கியதாகவும் சில புராணங்கள் சொல்கின்றன.[5]

மங்கள காவியங்கள்

தொகு

பதின்மூன்றாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளுக்கிடையில் வங்காள மொழியில் இயற்றப்பட்டதாகச் சொல்லப்படும் "மங்கள காவியம்" எனப்படும் வங்கத்துக் கிராமிய இலக்கியங்களில் மானசையின் வரலாறும் சொல்லப்படுகின்றது. 1495இல் எழுந்த "மானசா விஜயம்", மானசா மங்களகாவியம் என்பன அவற்றிற் சில.

மானச்சா விஜயத்தின் படி, வாசுகியின் தாய் செய்து விளையாடிய பாவைச்சிற்பமொன்றில், ஈசனின் வீரியம் பட்டெழுந்தவளே மானசை. மானசைக்கும் சிவன் மனைவியான சண்டிக்குமிடையே ஏற்படும் குழப்பத்தில், அவளைக் குருடாக்கி விடுகின்றாள் சண்டி. பின், மானசைக்குத் துணையாக, தன் கண்ணீரிலிருந்து "நேடோ" அல்லது "நேதளசுந்தரி" எனும் பெண்ணை உருவாக்கியளித்து, அவளை அனுப்பி விடுகின்றார் ஈசன்.[6]

சண்டியின் கோபத்தாலேயே, பின் யரத்காரரை மணக்கும் மானசையின் வாழ்க்கை, துன்பகரமாக ஆரம்பிக்கின்றது. பின் பூலோகம் வந்து, மக்களை அச்சமூட்டியும், பலரை அழித்தும், தன் தெய்வீக ஆற்றலை நிறுவி, ஒரு பெருந்தெய்வமாக மாறுகின்றாள் மானசை. [7] வெகு உலகியலாகச் செல்லும் இந்த மங்களகாவியக் கதை, சைவத்துக்கும் மானசையின் வழிபாட்டுநெறிக்குமிடையே இருந்த முரண்பாட்டையும், பின் அவள் சைவத்துடன் சமரசமடைந்து, சைவத் தெய்வமானதையும் மறைமுகமாகக் குறிப்பதாகச் சொல்வர்.[8]

உருவவியல்

தொகு
 
பீகாரில் கிடைத்த 10ஆம் நூற்றாண்டு மானசை சிற்பம். மடியில் மகன் ஆத்திகனுடன்.

பாம்புகளால் அலங்கரிக்கப்பட்டு, தாமரை அல்லது அன்னமொன்றின் மீது அமர்ந்தவளாக மானசை சித்தரிக்கப்படுகிறாள். சிலவேளைகளில், மடியில், அவள் மகன் ஆத்திகன் அமர்ந்திருப்பான்.[1][9]

வழிபாடு

தொகு
 
அரித்துவார் மானசை ஆலயம்

மண்பானை, மண்ணாற் செய்த நாகம் அல்லது மரக்கிளை என்பவற்றிலொன்றை மானசையாக உருவகித்து வழிபடுவதே மரபு.[1] தற்போது அவளுக்கு உருவம் செய்து வழிபடப்படுவதுடன், பாம்புக்கடி, அம்மை முதலான நோய்கள் என்பவற்றிலிருந்து விடுபடவே பிரதானமாக வழிபட்டப்படுகின்றாள். வங்காளத்தில், நேதளசுந்தரி என்றழைக்கப்படும் சலவைத்தொழிலாளர் குலத்துத் தோழி ஒருத்தியுடனே இவள் பெரும்பாலும் இணைத்து வழிபடப்படுவாள். "தான்" என்றழைக்கப்படும் மானசை ஆலயம், பொதுவாக எல்லா வங்காள விவசாயிகள் வீட்டு முற்றத்திலும் அமைந்திருக்கும். வங்கத்து வணிகரும் அவளை விரும்பி வழிபடுவர். நாகபஞ்சமியில் மானசை நோன்பு நோற்று, புற்றுக்குப் பெண்கள் பால்வார்ப்பதும் வழக்கத்தில் உள்ளது.[10]

மேலும் பார்க்க

தொகு

உசாத்துணைகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Wilkins p.395
  2. Tate, Karen (2005). Sacred Places of Goddess: 108 Destinations. CCC Publishing. p. 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-888729-11-2.
  3. Tate, Karen (2005). Sacred Places of Goddess: 108 Destinations. CCC Publishing. p. 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-888729-11-2.
  4. Wilkins p.396
  5. Sharma, Mahesh (2005). Tales from the Puranas. Diamond Pocket Books (P) Ltd. pp. 38–40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-288-1040-5.
  6. McLean p. 66
  7. Coomaraswamy, Ananda K.; Sister Nivedita (2003). Myths of the Hindus and Buddhists. Kessinger Publishing. pp. 324–30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7661-4515-8.
  8. Coomaraswamy, Ananda K.; Sister Nivedita (2003). Myths of the Hindus and Buddhists. Kessinger Publishing. p. 330. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7661-4515-8.
  9. Chaplin, Dorothea (2007). Mythlogical Bonds Between East and West. READ BOOKS. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781406739862.
  10. McDaniel (2002) p.55-57

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானசா_தேவி&oldid=3581527" இலிருந்து மீள்விக்கப்பட்டது