மானிடவியல்சார் மொழியியல்
மானிடவியல்சார் மொழியியல் (Anthropological linguistics) என்பது, மொழி, பண்பாடு ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்யும் ஒரு துறை ஆகும். இத்துறை, மனித உயிரியல், அறிதிறன் (cognition), மொழி ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது. இது, மனிதர்களை அவர்களுடைய மொழிக்கூடாக ஆய்வு செய்யும் மானிடவியற் துறையான மொழியியல்சார் மானிடவியல் துறையுடன் பல விடயங்களைப் பொதுவாகக் கொண்டுள்ளது.
தொடர்புடைய துறைகள்
தொகு- விளக்க மொழியியல்: இத்துறை கிளைமொழிகள் பற்றி விளக்குகிறது. இதன் ஆய்வுப் பரப்பு, ஒலியியல், உருபனியல், தொடரியல், சொற்பொருளியல், இலக்கணம் ஆகிய துறைகளை உள்ளடக்குகிறது.
- வரலாற்று மொழியியல்: காலப்போக்கில் கிளைமொழிகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி இது விளக்குகின்றது. இது, மொழிகள் பிரிதலும், மொழிக் குடும்பங்களும், ஒப்பீட்டு மொழியியல், சொற்பிறப்பியல், மொழிநூல் ஆகிய துறைகளிலான ஆய்வுகளை உள்ளடக்குகின்றது.
- இனமொழியியல்: பண்பாடு, சிந்தனை, மொழி ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்கிறது.
- சமூக மொழியியல்: மொழியின் சமூகச் செயற்பாடுகள் பற்றி ஆராய்வதுடன், பல்வேறு பேச்சுச் சமுதாயங்களுக்கு இடையிலும், தனியான பேச்சுச் சமுதாயங்களுக்கு உள்ளேயும் காணப்படக்கூடிய சமூக, அரசியல், பொருளாதாரத் தொடர்புகள் பற்றியும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது.