வரலாற்று மொழியியல்
வரலாற்று மொழியியல் என்பது, மொழிகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய ஆய்வாகும். இது நான்கு முக்கியமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இவை:
- குறிப்பிட மொழிகளில் கவனிக்கப்பட்ட மாற்றங்களை விளக்குதல்;
- பேச்சுச் சமுதாயங்களின் (speech communities) வரலாற்றை விளக்குதல்;
- மொழிகளின் முன்-வரலாற்றை மீளுருவாக்கலும் (reconstruct), மொழிக் குடும்பங்களாக ஒழுங்குபடுத்துதலும்;
- மொழிகள் மாற்றமடைவதற்கான காரணங்கள், அதற்கான வழிமுறைகள் தொடர்பான கோட்பாடுகளை உருவாக்கல்; என்பனவாகும்.
தற்கால வரலாற்று மொழியியல், 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், மிகப் பழங்காலத்திலிருந்தே, பண்டைய நூல்களையும் ஆவணங்களையும் ஆயும் துறையான மொழிநூலில் (philology) இருந்து உருவம் பெறத் தொடங்கியது.
முதலில், வரலாற்று மொழியியல், உள் மீளுருவாக்கம், ஒப்பீட்டு முறை ஆகியவற்றைப் பயன்படுத்தி, மொழிக் குடும்பங்களை உருவாக்குவதிலும், முன்-வரலாற்று மொழிகளை மீளுருவாக்கம் செய்வதிலும், கவனம் செலுத்தியது. ஆய்வுகள் பெரும்பாலும் பரவலாக அறியப்பட்ட இந்தோ ஐரோப்பிய மொழிகள் பற்றியே அமைந்திருந்தன. இம் மொழிகளில் பல நீண்ட எழுதப்பட்ட வரலாறுகளைக் கொண்ட மொழிகளாகும். அதன் பின்னர், குறிப்பிடத்தக்க அளவில், ஒப்பீட்டு மொழியியல் ஆய்வுகள் உலகின் பல்வேறு மொழிகள் தொடர்பிலும் நடத்தப்பட்டுள்ளன. தற்காலத்தில் ஒப்பீட்டு மொழியியல், பரந்த வரலாற்று மொழியியலின் ஒரு பகுதியாகவே உள்ளது.