மார்கரெட் கசின்சு

மார்கரெட் எலிசபெத் கசின்சு (Margaret Elizabeth Cousins), பிறந்தபோது கில்லெசுப்பி (Gillespie) பரவலாக கிரெட்டா கசின்சு (7 அக்டோபர் 1878–11 மார்ச் 1954) ஐரிய-இந்திய கல்வியாளரும், மகளிர் வாக்குரிமைப் போராளியும் பிரம்ம ஞானியுமாவார். இவர் 1927ஆம் ஆண்டில் அனைத்திந்திய மகளிர் மாநாட்டை (AIWC) நிறுவினார்.[1] கவிஞரும் இலக்கிய விசிறியுமான ஜேம்சு கசின்சின் மனைவியான மார்கரெட், தன் கணவருடன் 1915ஆம் ஆண்டில் இந்தியாவில் குடியேறினார். பெப்ரவரி 1919இல் இரவீந்திரநாத் தாகூர் மதனப்பள்ளி கல்லூரிக்கு வருகை புரிந்தபோது, இந்திய நாட்டுப்பண்ணான "ஜன கண மனவிற்கு" இவர் இசையமைத்தார்.[2]

வாழ்க்கை வரலாறு தொகு

மார்கரெட் கில்லெசுப்பியாக ரோசுகாம்மன் கவுன்ட்டியில் பாய்ல் நகரில் ஐரிய சீர்திருத்த கிறித்துவக் குடும்பத்தில் பிறந்தார்.[3] தொடக்கக் கல்வியை உள்ளூரிலும் டெர்ரியிலும் பயின்றார்.[4] டப்ளினிலுள்ள அயர்லாந்து இரோயல் பல்கலைக்கழகத்தில் இசை பயின்று 1902இல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் அங்கேயே இசை ஆசிரியையாகப் பணியாற்றினார். மாணவப் பருவத்திலேயே கவிஞரான ஜேம்சு கசின்சின் இரசிகையான மார்கரெட் 1903இல் அவரை திருமணம் புரிந்தார். இவ்விணையர் சோசலிசம், தாவர உணவுமுறை, உளம் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டனர். 1906இல் மான்செஸ்டரில் மகளிர் தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட மார்கரெட் அதன் அயர்லாந்து கிளையில் உறுப்பினராகச் சேர்ந்து கொண்டார். 1907இல் இலண்டனில் நடந்த பிரம்மஞான சபையின் கூட்டத்திற்கு கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டனர். இலண்டனில் பெண் வாக்குரிமை போராளிகளுடனும் தாவர உணவு செயற்பாட்டாளர்களுடனும் தேசிய உடலாய்வு அறுவைக்கு எதிர்ப்பாளர்களுடனும் இணைந்து பணியாற்றினார்.[3]

1908ஆம் ஆண்டில் அன்னா சீசி-இசுக்கெபிங்டனுன் இணைந்து அயர்லாந்து பெண் வாக்குரிமை சங்கம் நிறுவினார்.[5] 1910இல் பிரித்தானியப் பிரதமரிடம் தீர்மானத்தைக் கொடுக்க மக்களவை நோக்கி அணிவகுத்த மகளிர் பேரணியில் பங்கேற்றார். இதில் 119 பெண்கள் கைது செய்யப்பட்டனர்; 50 பேருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. கைது செய்யப்பட்ட கசின்சு ஒருமாத சிறைத்தண்டனை பெற்றார்.[3]

இந்தியாவில் தொகு

கசின்சு இணையர் 1915ஆம் ஆண்டு இந்தியாவில் குடியேறினர். ஜேம்சு கசின்சு துவக்கத்தில் அன்னி பெசண்ட் நிறுவிய நியூ இந்தியா நாளிதழில் பணியாற்றினார். 1916ஆம் ஆண்டு நடைபெற்ற அயர்லாந்து புரட்சியை புகழ்ந்து அந்த நாளிதழிலில் எழுதிய கட்டுரையால் அவரைப் பதவியிலிருந்து நீக்கவேண்டியக் கட்டாயத்துக்கு ஆளான பெசன்ட், ஜேம்சு கசின்சைப் புதியதாகத் தொடங்கப்பட்ட மதனப்பள்ளி கல்லூரிக்கு உதவித் தலைமை ஆசிரியராக நியமித்தார். அக்கல்லூரியில் மார்கரெட் ஆங்கிலம் கற்பித்தார்.[3]

1916இல், புனேவிலிருந்த இந்திய மகளிர் பல்கலைக்கழகத்தில் இந்தியரல்லாத முதல் ஆசிரியையாகப் பணியாற்றினார்.[4] 1917இல் கசின்சு அன்னி பெசன்ட்டுடனும் டோரொதி ஜீனாராசதாசாவுடனும் இணைந்து இந்திய மகளிர் சங்கத்தை நிறுவினார். இச்சங்கத்தின் இதழான ஸ்த்ரீ தர்மாவின் ஆசிரியையாகவும் இருந்தார்.[3] 1919–20இல் மங்களூரிலிருந்த தேசிய சிறுமியர் பள்ளியின் முதல் தலைமையாசிரியையாக பணியாற்றினார். இந்தியாவின் முதல் பெண் நீதித் துறை நடுவராகப் பொறுப்பாற்றினார். 1927இல் அனைத்திந்திய மகளிர் மாநாட்டை நிறுவிய கசின்சு அதன் தலைவராக 1936 வரை பொறுப்பு வகித்தார்.[3]

1943ஆம் ஆண்டில் மார்கரெட் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அப்போதைய மதராசு மாகாண அரசிடமிருந்து நிநி உதவி பெற்றார், இந்தியாவில் அவரது சேவையை பாராட்டிய ஜவகர்லால் நேருவிடமிருந்து பின்னர் நிதி உதவி பெற்றார்.[4] 1954ஆம் ஆண்டில் மார்கரெட் காலமானார்.[6]

படைப்புகள் தொகு

  • தி அவேக்கனிங் ஆப் ஏசியன் விமன்ஹுட், 1922 - (ஆசியப் பெண்மையின் விழிப்பு)
  • த மியூசிக் ஆப் ஓரியன்ட் அன்ட் ஆக்சிடென்ட்; எசேசு டுவர்ட்சு மியூட்சுவல் அண்டர்சுடாண்டிங்சு, 1935 - கீழை மற்றும் மேலை பண்பாடுகளின் இசை; பரஸ்பர புரிந்துணர்வைக் குறித்துக் கட்டுரைகள்)
  • இண்டியன் விமன்ஹுட் டுடே, 1941 (இந்தியப் பெண்மை இன்று)
  • (ஜேம்சு கசின்சுடன்) வீ டூ டுகெதர், சென்னை: கணேஷ், 1950 (நாங்கள் இருவரும் இணைந்து)

மேற்சான்றுகள் தொகு

  1. History பரணிடப்பட்டது 2016-01-18 at the வந்தவழி இயந்திரம் AIWC website.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-18. பார்க்கப்பட்ட நாள் 2015-03-21.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Kum Jayawardena (1995). The White Woman's Other Burden: Western Women and South Asia During British Rule. Taylor & Francis. பக். 147–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-91104-7. http://books.google.com/books?id=vJ9MCPdcGrsC&pg=PA147. பார்த்த நாள்: 10 October 2012. 
  4. 4.0 4.1 4.2 Jennifer S. Uglow, தொகுப்பாசிரியர் (1999). The Northeastern Dictionary of Women's Biography. Maggy Hendry. UPNE. பக். 140. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-55553-421-9. http://books.google.com/books?id=zlQKDvU1WV0C&pg=PA140. பார்த்த நாள்: 10 October 2012. 
  5. Peter Gordon; David Doughan (2005). Dictionary of British Women's Organisations. Taylor & Francis. பக். 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7130-4045-6. http://books.google.com/books?id=XRVunRT9TH0C&pg=PA66. பார்த்த நாள்: 10 October 2012. 
  6. Alan Denson, தொகுப்பாசிரியர் (1967). James H. Cousins (1873–1956) and Margaret E. Cousins (1878–1954): A Bio-bibliographical Survey. Kendal: published by the author. http://books.google.com/books?id=1YOWtgAACAAJ. பார்த்த நாள்: 10 October 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கரெட்_கசின்சு&oldid=3857306" இலிருந்து மீள்விக்கப்பட்டது