முகமது ஹபிபுல்லா

நவாப் கான் பகதூர் சர் முகமது ஹபிபுல்லா (பி. செப்டம்பர் 22, 1869 - இ. மே 16, 1948) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் ஆட்சியாளர். சென்னை மாகாண ஆளுனரின் நிருவாகக் குழு உறுப்பினராகவும் திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாகவும் பணியாற்றியவர்.

நவாப்
கான் பகதூர்
சர்
முகமது ஹபிபுல்லா
திவான், திருவாங்கூர் சமஸ்தானம்
பதவியில்
1934–1936
ஆட்சியாளர்சித்திரைத் திருநாள்
முன்னையவர்டி. ஆஸ்டின்
பின்னவர்சி. பி. ராமசுவாமி ஐயர்
கல்வித் துறை உறுப்பினர், இந்திய வைசுராயின் நிருவாகக் குழு
பதவியில்
டிசம்பர் 1924 – 1930
தலைமை ஆளுநர்முதலாம் ஹாலிஃபாக்ஸ் பிரபு
முன்னையவர்முகமது ஷஃபி
வருவாய்த் துறை உறுப்பினர், சென்னை ஆளுனரின் நிருவாகக் குழு
பதவியில்
டிசம்பர் 17, 1920 – டிசம்பர் 27, 1924
ஆளுநர்வில்லிங்டன் பிரபு,
கோஷன் பிரபு
பின்னவர்டி. ஈ. மோயிர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1869-09-22)செப்டம்பர் 22, 1869
சென்னை
இறப்புமே 16, 1948(1948-05-16) (அகவை 78)
சென்னை

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ஹபிபுல்லா சென்னையில் அன்சுக் உசைன் கான் சாகிப் என்பவரின் மகனாகப் பிறந்தார். அவரது குடும்பத்தினர் ஆற்காடு நவாப்பின் நெருங்கிய உறவினர்கள். சைதாப்பேட்டையிலுள்ள சிலா உயர்நிலைப் பள்ளியில் படித்து பின்பு சட்டக் கல்வியும் கற்றார். ஜூலை 1888 இல் வேலூரில் சட்டத் தொழில் செய்யத் தொடங்கினார்.[1][2][3]

அரசியல் வாழ்க்கை

தொகு

உள்ளாட்சி வாரிய அரசியலில் ஈடுபட்ட ஹபிபுல்லா 1895 இல் வேலூர் நகராட்சியின் அரசு சாரா மதிப்புறு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 1901 இல் நகராட்சியின் அரசு சார் செயலாளராகத் தேந்தெடுக்கப்பட்டபின் தன் சட்டத் தொழிலைத் துறந்தார். 1905 இல் நகராட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த பதினான்கு ஆண்டுகள் அப்பதவியில் தொடர்ந்தார். ஜூலை 1919 - ஜனவரி 1920 காலகட்டத்தில் விடுப்பில் சென்றிருந்த பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரிக்கு பதிலாக சென்னை மாகாண ஆளுனரின் நிருவாகக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றினார்.

1919இல் உலக நாடுகள் சங்கத்தின் முதல் கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதிகளுள் ஒருவராகக் கலந்து கொண்டார். 1920-24 காலகட்டத்தில் சென்னை மாகாண ஆளுனரின் நிருவாகக் குழுவில் வருவாய்த் துறை உறுப்பினராகப் பணியாற்றினார். 1925-30 காலகட்டத்தில் இந்திய அரசபிரதிநிதியின் (வைசுராய்) நிருவாகக் குழுவில் கல்வித் துறை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1926-27 இல் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற இந்தியத் தூதுக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.[4][5]

திருவாங்கூர் திவான்

தொகு

ஹபிபுல்லா மார்ச் 15, 1934 அன்று திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக மன்னர் சித்திரைத் திருநாள் பலராம வர்மாவால் நியமிக்கப்பட்டார். அடுத்த இரு ஆண்டுகளுக்கு அப்பதவியை வகித்தார். தனது பதவி காலத்தில் சமஸ்தானத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பதவியேற்ற உடன் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்து ஆராய குழு ஒன்றை அமைத்தார். ஈழவர், கிறித்தவர் மற்றும் இசுலாமியருக்கு தனியே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்க முடிவு செய்தார். ஆனால் நாயர்களின் எதிர்ப்பால் அத்திட்டம் கைவிடப்பட்டது. அரசு வேலைகளில் தாழ்த்தபப்ட்ட துறையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கினார். சமஸ்தானத்தின் படைகளின் அமைப்பை சீர்திருத்தி, நாயரல்லாதோர் அதில் சேரவும் வழி வகுத்தார். 1936 ஆம் ஆண்டு அவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்த பின்னர் சி. பி. ராமசுவாமி ஐயர் திவானாகப் பொறுப்பேற்றார்.[6]

பிற தகவல்கள்

தொகு

1905ம் ஆண்டு ஹபிபுல்லாவுக்கு “கான் பகதூர்” பட்டம் வழங்கப்பட்டது.[1] பிரித்தானியப் பேரரசின் சி ஐ ஈ, கே சி ஐ ஈ போன்ற பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டன.[7] 1935 இல் மன்னர் சித்திரைத் திருநாள் இவருக்கு “நவாப்” பட்டத்தை வழங்கி சிறப்பித்தார். இவரது மனைவி பெயர் சதனுஸ்சா பேகம். ஹபிபுல்லா மே 16, 1948 அன்று மரணமடைந்தார். சென்னை டி. நகரில் உள்ள ஹபிபுல்லா சாலை இவரது நினைவாகப் பெயரிடப்பட்டதாகும்.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Aḥmad Saʻīd (1997). Muslim India, 1857-1947: a biographical dictionary. Institute of Pakistan Historical Research. p. 144.
  2. More, J. B. Prashant (1997). The Political Evolution of Muslims in Tamilnadu and Madras, 1930–1947. Orient Longman. p. 34.
  3. Nalanda Year-book & Who's who in India. 1947. p. 407.
  4. Nalanda Year-book & Who's who in India. 1949. p. 453.
  5. The Times of India directory and year book including who's who. Bennett & Coleman Ltd. 1922. p. 55. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  6. Travancore State Manual Volume II by TK Velu Pillai 1940
  7. Burke's Genealogical and Heraldic History of Peerage, Baronetage and Knightage. Burke's Peerage Limited. 1937. p. 1885.

மேற்கோள்கள்

தொகு

முகமது ஹபிபுல்லா

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_ஹபிபுல்லா&oldid=3944064" இலிருந்து மீள்விக்கப்பட்டது