இப்னு பதூதா
இக்ஆகத்து 2018யைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
இப்னு பதூதா (Ibn Battuta) என்றழைக்கப்படும் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார். [1] ரிகிலா எனப்படும் இவரது பயணங்களைப் பற்றிய விபரங்கள் பெயர்பெற்றவை.[2] இவரது பயணங்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்ததுடன், அறியப்பட்ட இசுலாமிய உலகம் முழுவதையும், அதற்கும் அப்பாலுள்ள நாடுகளையும் உள்ளடக்கி இருந்தன.இவர் வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா. கிழக்கு ஐரோப்பா, மையக் கிழக்கு, இந்தியத் துணைக் கண்டம், நடு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, சீனா ஆகிய நான்கு திசைகளிலும் பரந்திருந்த பகுதிகளூடாகப் பயணம் செய்துள்ளார். இவர் கடந்த தூரம் இவருக்கும் முன் பயணம் செய்தவர்களும், இவரது கிட்டிய சமகாலத்தவரான மார்க்கோ போலோவும் கடந்த தூரங்களைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமானது. இவர் 44 நாடுகள் 11000 நாட்கள், 75,000 மைல்கள் நீண்ட பயணம் செய்துள்ளார். தான் சென்ற நாடுகளைப் பற்றியும் துல்லியமாக தனது நினைவுகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்.
இபின் பட்டுடா | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி, 1304 தஞ்சியர், மொரோக்கோ |
இறப்பு | 1368 அல்லது 1369 மொரோக்கோ |
காலம் | மத்திய காலம் |
பகுதி | இசுலாமியக் கல்வியாளர்/நாடுகாண் பயணி |
பள்ளி | சுன்னி மலிக்கி |
இளமை
தொகுமொராக்காவில் உள்ள டேன்ஜீர் என்ற சிறிய நகரத்தில் 1304 ஆம் ஆண்டில் ஒரு நீதிபதியின் மகனாகப் பிறந்தவர் இபின் பதூதா. சிறு வயதிலேயே மதக் கல்வியும் அரபி இலக்கணமும் பயின்றார்.[3] இஸ்லாமிய நெறிகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த குடும்பம் என்பதால் அவரது கனவம் முழுமையும் இறையியல் மீதாகவே உருவானது. தனது 20 ஆம் அகவையில் இபின் பதூதா மெக்காவிற்குப் புனிதப் பயணம் துவங்கினார். புனிதக் கடமைகளை நிறைவேற்றுவதற்காகத் துவங்கிய இந்தப் பயணமே அவரை உலக நாடுகளுக்கு இட்டுச் சென்றது. இசுலாமிய மாலிகி மத்ஹப் பிரிவின் நீதிபதியாக அப்பிரிவு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
மெக்காவில் தங்குதல்
தொகுஇபின் பதூதா மெக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளும்போதே இதுவரை தான் அறியாத நிலப்பரப்புகளையும் பல்வேறு வகையான கலாச்சாரக் கூறுகளையும் அறிந்துகொள்ளத் துவங்கினார். புனிதப் பயணம் முடிந்து பயணிகள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பும்போது இபின் பதூதாவிற்கு மட்டும் இன்னும் சில காலம் அங்கே தங்கி அங்கு வழிபாட்டிற்கு வரும் மக்களைப் பற்றியும் மெக்காவின் தினசரி வாழ்க்கை பற்றியும் அறிய ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக இரண்டு ஆண்டுகள் அவர் மெக்காவில் தங்கியிருந்து அங்குள்ள கலாச்சாரக் கூறுகளை நுண்மையாக அறிந்து கொண்டார்.
உலக நாடுகாண் ஆர்வம்
தொகுமெக்காவில் தங்கியிருந்த இபின் பதூதாவிற்கு உலகம் முழுவதும் இருந்த இஸ்லாமிய அரசர்களை நேரில் கண்டு வரவேண்டும் என்ற ஆசை உருவானது. இதனை வெளிகாட்டாமல் மெக்காவில் தன்னோடு நெருக்கமாக இருந்த வணிகர்கள் மற்றும் கடலோடிகளோடு சேர்ந்துகொண்டு தனது பயணத்தைத் துவக்கினார். ஆறு ஆண்டுகாலம் அவர் தொடர்ந்து பயணம் செய்தார். இந்தப் பயணத்தின் நடுவே பாக்தாத்திலும் மெசபடோனியாவிலும் குபா என்ற பழமையான நகரிலும் சில மாதங்கள் தங்கிச் சென்றார்.
பாக்தாத் பற்றிய பதூதாவின் பயணக்குறிப்பு
தொகுபாக்தாத் நகரில் இபின் பதூதா தங்கியிருந்த நாட்களில் அந்நகரைப் பற்றித் தனது குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். அங்குள்ள குளியல் அறைகள் பற்றியும் பாக்தாத் நகரின் தெருக்கள், அங்காடிகள், இசைக் கூடங்கள், வீதிகள், அங்கு நிலவும் தட்பவெப்பம், அங்கு தயாரிக்கப்படும் உணவு, அங்குள்ள மக்களின் பேச்சுவழக்கு, என்ன வகையான உடையணிந்திருந்தார்கள், அன்றைய செலாவணியில் இருந்த நாணயம், அங்கிருந்த மரங்கள், மக்களிடம் இருந்த கேளிக்கை விருப்பங்கள், அங்கிருந்த மக்களின் மத ஈடுபாடுகள் போன்ற செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.
இபின் பதூதா பாக்தாத் நகரில் உள்ள ஒரு பொது குளியலறை ஒன்றிற்குள் குளிப்பதற்காகச் சென்றார். உள்ளே நுழைந்த அவருக்கு மூன்று துண்டுகள் கொடுக்கப்பட்டன. ஒன்று உள்ளே நுழையும் போது தனது உடைகளைக் கழட்டிக்கொண்டு குளிப்பதற்காக இடுப்பில் கட்டிக்கொள்வதற்கு. மற்றொன்று, குளித்த பிறகு ஈரத்துண்டிற்கு மாற்றாகக் கட்டிக் கொள்வதற்கு. மூன்றாவது உடலைத் துவட்டிக் கொள்வதற்கு. குளியலை மக்கள் ஒரு கொண்டாட்டமாக மேற்கொண்டனர். இப்படி சுத்தமானதும் சுகாதாரமானதுமான குளியல் முறை நாடெங்கும் ஒரே சீராக இருந்தது என்று இபின் பதுதா தனது பயணக்குறிப்பில் குறிப்பிடுகிறார்.[5]
இந்தியப் பயணம்
தொகுதனது நீண்ட பயணத்தின் ஒரு பகுதியாக இபின்பதூதா இந்தியாவிற்கும் வருகை புரிந்துள்ளார். முகமது பின் துக்ளக் ஆட்சிக் காலத்தில் இவர் டெல்லிக்கு வருகை புரிந்த போது துக்ளக் ஒரு உள்நாட்டுக் குழப்பத்தை தீர்த்து வைப்பதற்காகத் தென்பகுதிக்குச் சென்றிருந்தார். ஆனாலும் அவருக்கு ஒரு வெளிநாட்டுப் பயணி தன்னைக் காண வந்திருப்பது தெரிவிக்கப்பட்டவுடன் ஐயாயிரம் தினார்கள் வெகுமானம் அளித்து தங்குமிடமும் சிறப்பு வசதிகளும் செய்து தந்தார்.[6]
இபின் பதூதாவின் பார்வையில் முகமது பின் துக்ளக்
தொகுஇபின் பதூதா தனது குறிப்பில் அப்போது இந்தியாவை ஆண்ட மன்னர் முகமது பின் துக்ளக் பற்றிய செய்திகளைப் பதிவு செய்துள்ளார். உள்நாட்டுக் குழப்பம் முடிந்து சில வரங்களின் பின்னர் டெல்லி வந்து சேர்ந்த முகமது பின் துக்ளக், இபின் பதூதாவைச் சந்திக்க அழைப்பு விடுத்தார். இபின் பதூதா துக்ளக்கின் விசித்திரமான மனப்போக்கு பற்றியும் குதர்க்கமான சிந்தனை பற்றியும் முன்னதாகவே அறிந்திருந்த காரணத்தால் அவர் தங்கத்தால் செய்த பரிசுப் பொருட்களுடன் துக்ளக்கைக் காண்பதற்காக காத்துக் கொண்டிருந்தார். துக்ளக் அவரை அருகில் அழைத்து பெர்சிய மொழியில் பேசிப் பாராட்டினார். ஒவ்வொரு முறை அவர் இபின் பதூதாவைப் பாராட்டும் போதும் துக்ளக்கின் கையில் இபின் பதூதா முத்தமிட்டு நன்றி தெரிவிக்க வேண்டியிருந்தது. அந்த ஒரு சந்திப்பில் மட்டும் ஏழுமுறை அவரது கையில் தான் முத்தமிட்டதாகவும் அந்த ஒரு நிகழ்ச்சியே துக்ளக்கின் மனப்போக்கைத் துல்லியமாக எடுத்துக் காட்டியதாகவும் இபின் பதூதா விவரிக்கிறார்.[சான்று தேவை]
துக்ளக் பெர்சிய மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவர். அத்தோடு சிறந்த சித்திர எழுத்துக் கலை நிபுணர். சட்டம் மற்றும் மதம் குறித்த தீவிர சிந்தனையாளர். பெர்சிய மொழியில் கவிதைகள் எழுதுபவர். ஆனால் அவர் ஒரு முன்கோபி. சிறிய குற்றங்களுக்குக் கூட கடுமையான தண்டனைகள் வழங்கக்கூடியவர்.
ஒவ்வொரு நாளும் சபையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஏதேதோ காரணங்களுக்காகப் பிடித்துக் கொண்டுவரப்பட்டிருப்பார்கள். துக்ளக் குற்றங்களைப் பற்றி விசாரிப்பதற்கு முன்பாகவே தண்டனையைக் கொடுத்து விடுவார். கைகளை வெட்டி காலிலும் காலை வெட்டி கைகளிலும் தைத்துவிடுங்கள் என்பது போன்ற விசித்திரமான தண்டனைகள் அளிப்பார். ஒரு முறை மத அறிஞர் ஒருவர் துக்ளக் தெரிவித்த கருத்திற்கு மாற்றுக் கருத்து சொன்னதற்காக அவரது தாடி மயிரை ஒவ்வொன்றாகப் பிய்த்துக் கொல்லும்படியாக குரூர தண்டனை அளித்தார் துக்ளக் என இபின் பதூதா தனது குறிப்பில் கூறியுள்ளார்.
இந்தியாவில் இபின் பதூதாவின் அரசியல் பணி
தொகுமுகமது பின் துக்ளக் தனது நட்பினை வெளிப்படுத்தும் விதமாக இபின் பதூதாவிற்கு நீதிபதி பதவியைக் கொடுத்து, வருடம் ஐயாயிரம் தினார் ஊதியம் வழங்கினார். அன்றைய கால கட்டத்தில் ஒரு சராசரிக் குடும்பத்தின் மாத வருமானம் ஐந்து தினார்கள்தான். இதுமட்டுமல்லாது சில கிராமங்களில் வரி வசூல் செய்து அவரே எடுத்துக் கொள்வதற்கும் உரிமை வழங்கினார். இபின் பதூதா ஏழு ஆண்டுகாலம் துக்ளக்கின் அரசியல் பணியில் இருந்தார். முகமது பின் துக்ளக்கின் நிர்வாகச் சீர்கேடு இந்தியாவைச் சீர்குலையச் செய்தது. இதன் காரணமாக எதிர்ப்பு இயக்கங்கள் வலுக்கத் துவங்கின. துக்ளக் தனது எதிரிகளை ஒழிப்பதற்காக படையோடு டெல்லியை விட்டுச் சென்ற நாட்களில் மொத்த நீதி நிர்வாகமும் இபின் பதூதாவிடமே இருந்தது. அவர் இஸ்லாமிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை அளித்தார்.
இபின் பதூதாவின் காலத்தில் இந்தியாவில் சாதாரண மக்கள் தொடர்ந்து வரியாலும் அதிகார நெருக்கடியாலும் கசக்கிப் பிழியப்பட்ட நிகழ்ச்சிகள் அவரது பயணக் குறிப்புகளில் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளன.
இபின் பதூதாவின் தென்னிந்தியப் பயணம்
தொகுஇபின் பதூதா ஏழாண்டு காலம் அரசியல் பணிகளில் இருந்தபோது அவர் இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளார்.ஒருமுறை தனது கடற்பயணத்தின்போது அவரது கப்பல் சிதைந்து போய்விடவே அவர் மலபார்ப் பகுதியில் சில மாதங்கள் தங்கியிருந்து தென்னிந்திய மக்களின் வாழ்க்கை முறைகளைக் கண்டறிந்துள்ளார். அப்போது அவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் என்ற கடற்கரைத் துறைமுகத்திற்கு வந்து மூன்று மாதம் தங்கியிருந்ததாக ஒரு குறிப்பு எழுதியுள்ளார். தென்னிந்திய மக்கள் வெற்றிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பற்றி குறிப்பிட்டுள்ளார். விருந்தினர்களை வரவேற்று வெற்றிலை பாக்கு தருவது அவர்களுக்குத் தங்கமோ வெள்ளியோ தருவதை விடவும் உயர்வானதாகக் கருதப்பட்டதாக அவர் ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சீனப்பயணம்
தொகுதுக்ளக்கிற்கு எதிரான புரட்சி நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டதும் துக்ளக் தனது எதிரிகளோடு தொடர்புள்ளவர்கள் யார் என்ற ஒரு பட்டியலைத் தயாரித்தார். அதில் எதிரி ஒருவரின் வீட்டில் இருந்த சூபி தத்துவவாதி ஒருவருக்கும் இபின் பதூதாவிற்கும் தொடர்பு இருந்தது துக்ளக்கிற்கு தெரிய வந்தது. எங்கே துக்ளக் தன்னையும் கொன்றுவிடக் கூடுமோ என்று அஞ்சிய இபின் பதூதா ஒரு வார கலம் உண்ண நோன்பு இருந்து, பகலும் இரவும் பிரார்த்தனை செய்தபடியிருந்தார். துக்ளக் எப்போது என்ன செய்வார் என்று அவரால் அறிந்துகொள்ள முடியவில்லை. சில நாட்களில் பிச்சைக் காரர் போல வேடமணிந்து டெல்லி தெருக்களில் சுற்றியலைந்துள்ளார். ஒரு நாள் அரசரிடம் இருந்து அழைப்பு வந்தது. அரசரைக் கண்டதும் வணங்கி தான் திரும்பவும் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக இபின் பதூதா தெரிவித்தார். துக்ளக் அதை மறுத்து அவரை சீனாவிற்கான தூதுவராக நியமித்து, தேவையான பொருட்களும் வேலையாட்களும் கொடுத்து சீனாவிற்கு அனுப்பி வைத்தார். துக்ளக்கிடம் இருந்து தப்புவதற்காக அந்தப் பணியை ஒத்துக் கொண்ட இபின் பதூதா மார்க்கோபோலோவிற்குப் பிறகு சீனாவிற்குச் சென்ற வெளிநாட்டுப் பயணியாவார். சீனாவிற்குச் செல்வதற்காகப் புறப்பட்ட கடற்பயணத்திலும் கப்பல் விபத்திற்கு உள்ளாகி மீனவர்களால் காப்பாற்றப்பட்டு இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகளுக்கும் சென்ற இபின் பதூதா கடுமையான தடைகளைத் தாண்டிய பின்னரே சீனா சென்றடைந்தார்.[7]
சொந்த நாடு திரும்புதல்
தொகுமுப்பது ஆண்டுகள் பயணத்தில் பல நாடுகளில் நோயால் பீடிக்கப்பட்டும், சில அரசர்களினால் சிறைகளில் அடைக்கப்பட்டும், பயணம் செய்த கப்பல் விபத்திற்குள்ளாகியும் துன்புற்றார். மோசமான உடல்நலக் கேட்டிற்கு உள்ளான இபின் பதூதா முடிவாகத் தனது சொந்த நாடு திரும்பினார். அவருக்கு சுல்தான் சிறப்பான வரவேற்பு கொடுத்து பாஸ் என்ற நகரில் வசிப்பதற்கான உதவிகள் செய்தார்.[8]
இபின் பதூதாவின் பயணக்குறிப்புகள்
தொகுஇபின் பதூதாவின் பயணக் குறிப்புகள் யாவும் அவரது இறுதிக் காலத்தில் மொராக்கோவின் சுல்தான் ஆணையின்படி, அவர் சொல்லச் சொல்ல இபின் சஜாயி என்ற கவிஞராய் எழுதப்பட்டது. இபின் பதூதா தனது வயதான காலத்தில் தான் கண்டும் கேட்டும் அறிந்திருந்த விவரங்களை இரண்டு வருட காலம் தினமும் அரச சபையில் தெரியப்படுத்தினார். இபின் சுஜாயி அவற்றைக் குறிப்புகளாக எடுத்துத் தொகுத்து நீண்ட பயண நூலாக்கி அதற்கு புத்தக வடிவம் கொடுத்துள்ளார். 'அறிவைத்தேடிச் செல்வது மனிதனின் முதற்கடமையாகும். எனது பயணம் முழுவதுமே அறிவைத்தேடி நான் மேற்கொண்ட முயற்சிகளே' என்று குறிப்பிடும் இபின் பதூதாவின் பயணக் குறிப்புகள் 14-ஆம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும், அன்றைய அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளைப் பதிவு செய்வதிலும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. இந்த நூலில் இபின் பதூதா கண்ட இந்தியாவைப் பற்றிய நினைவுக் குறிப்புகள் ஏராளம் உள்ளன. குறிப்பாக துக்ளக்கின் குரூரமான தண்டனைகள் பற்றியும், இபின் பதூதா நீதிபதியாக பணியாற்றிய சம்பவங்களைப் பற்றியும் விவரித்திருக்கிறார்.
இபின் பதூதாவின் பயணக் குறிப்புகள் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இந்தத் தொகுப்புகளை வாசிக்கும் போது முன்னுக்குப் பின் முரணான சில விவரங்களும் இடம் காலம் பற்றிய குழப்பங்களும் ஏற்படுகின்றன. அத்தோடு இபின் பதூதா எழுதியதற்கு மேலதிகமாக இடைச் செருகல்கள் இருந்திருக்கக்கூடும் எனவும் கருதப்படுகிறது. ஒரு மலையைத் தூக்கிக் கொண்டு பறவையொன்று பறந்து போனதைக் கண்டதாக அவர் எழுதியுள்ள ஒரு குறிப்பு, இபின் பதூதாவும் மற்ற பயணிகளைப் போலவே பல செவி வழிச் செய்திகளை உண்மை எனப் பதிவு செய்திருப்பதையே இது உணர்த்துகிறது.
.[சான்று தேவை]
உசாத்துணை
தொகு- ↑ Nehru, Jawaharlal (1989). Glimpses of World History. Oxford University Press. p. 752. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-561323-6.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) After outlining the extensive route of Ibn Battuta's Journey, Nehru notes: "This is a record of travel which is rare enough today with our many conveniences.... In any event, Ibn Battuta must be amongst the great travellers of all time." - ↑ Ibn Battuta, The Travels of Ibn Battuta (Translated by Samuel Lee, 2009), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60520-621-9, pp. 97-98
- ↑ Defrémery & Sanguinetti 1853, ப. 1 Vol. 1; Dunn 2005, ப. 19
- ↑ A Mediterranean Society. University of California Press. 1967. pp. 67–. GGKEY:TA7KAQ8PCE3.
- ↑ Dunn 2005, ப. 88–89; Defrémery & Sanguinetti 1853, ப. 404 Vol. 1; Gibb 1958, ப. 249 Vol. 1
- ↑ Jerry Bently, Old World Encounters: Cross-Cultural Contacts and Exchanges in Pre-Modern Times (New York: Oxford University Press, 1993),121.
- ↑ Haw, Stephen G. Marco Polo's China: A Venetian in the Realm of Khubilai Khan. Routledge. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-27542-7.
- ↑ Dunn 2005, ப. 261
- The Travels of Ibn Battuta. vols. I,II,III- tr&ed H.A.R.Gibb, Hakluyt Society, Cambridge University Press, London, 1956.
- எஸ். ராமகிருஷ்ணன், 'கோடுகள் இல்லாத வரைபடம்', உயிர்மை பதிப்பகம். 2008