முதலாம் செயவர்மன் (பரமார வம்சம்)

பரமார மன்னன்

முதலாம் செயவர்மன் (Jayavarman I) (ஆட்சிக் காலம் பொ.ச. 1142-43 ), அசயவர்மன் என்றும் அழைக்கப்படும் இவன், மத்திய இந்தியாவின் மால்வா பகுதியில் ஆட்சி செய்த பரமார வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னனாவான். நகரத்தின் மேல் ஒரு சோலாங்கிய ஆக்கிரமிப்பிற்குப் பிறகு இவன் பரமார தலைநகர் தார் நகரை மீண்டும் கைப்பற்றியதாகத் தெரிகிறது. சிறிது காலத்திற்குப் பிறகு, பல்லாலன் என்ற ஒரு கொள்ளைக்காரன் நகரத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான். இதனால் செயவர்மன் போபால் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு இராச்சியத்திற்கு மாறியதாகத் தெரிகிறது.

முதலாம் செயவர்மன்
பரம-பட்டாரகன், மகாராஜாதிராஜா, பரமேசுவரன்
மால்வாவின் அரசன்
ஆட்சிக்காலம்அண். 1142 – அண். 1143 CE
முன்னையவர்யசோவர்மன்
பின்னையவர்பல்லாலன்
குழந்தைகளின்
பெயர்கள்
விந்தியவர்மன்
பட்டப் பெயர்
செயவர்மன் அல்லது அசயவர்மன்
அரசமரபுபரமாரப் பேரரசு
தந்தையசோவர்மன்
மதம்இந்து சமயம்

தாராவை மீண்டும் கைப்பற்றுதல்

தொகு

செயவர்மன் தனது தந்தை யசோவர்மனுக்குப் பிறகு பரமார அரசரானார். செயவர்மனுக்கும் யசோவர்மனுக்கும் இடையிலான உறவை அவர்களின் வழித்தோன்றலான அர்சுனவர்மனின் பிப்லியா நகர் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. இது செயவர்மனை "அசயவர்மன்" என்று அழைக்கிறது.[1] யசோவர்மனின் ஆட்சியின் போது , மேற்கிலிருந்து சோலாங்கியர்கள் பரமார இராச்சியத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றினர். இது சோலாங்கிய மன்னன் செயசிம்ம சித்தராசனின் 1138 ஆண்டு உஜ்ஜைன் கல்வெட்டால் அறியப்படுகிறது. பரமார ஆட்சி கிழக்கில் சந்தேலர்களாலும், தெற்கில் சாளுக்கியர்களாலும் அச்சுறுத்தப்பட்டது. இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில், செயவர்மன் தனது தென்கிழக்கு அண்டை நாடுகளான திரிபுரியின் காலச்சுரிகளின் எல்லைக்கு அருகில் உள்ள போபால் பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. காலச்சூரி மன்னன் கயகர்ணன் பரமார இளவரசியை மணந்தான். மேலும் பரமார குடும்பத்துடன் நல்லுறவு கொண்டிருந்தான்.[2] கிபி 1142-1143 இல், செயவர்மன் தலைநகர் தார் உட்பட தனது மூதாதையர் இராச்சியத்தின் ஒரு பகுதியையாவது மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகத் தெரிகிறது. இது அவனது மானியக் கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. அதில் அவன்ர் ஒரு பரமார இறையாண்மையின் பட்டங்களை ஏற்றுக்கொள்கிறான். [3] [2]

செயவர்மன் உண்மையில் மால்வாவின் பாரம்பரிய பரமாரப் பிரதேசத்தை கட்டுப்படுத்தியக் காரணத்தால், சாளுக்கிய ஆட்சியாளர் இரண்டாம் ஜெகதேகமல்லன், போசள மன்னன் விட்டுணுவர்தனன் போன்ற சமகால தென்னக மன்னர்களால் அவனுக்கு தெற்கு எல்லையில் சில பின்னடைவுகள் ஏற்பட்டதாக அவர்களின் கல்வெட்டுகளில் மூலம் அறியப்படுகிறது. [4]

சான்றுகள்

தொகு

உசாத்துணை

தொகு
  • Arvind K. Singh (2012). "Interpreting the History of the Paramāras". Journal of the Royal Asiatic Society 22 (1): 13–28. 
  • K. C. Jain (1972). Malwa Through the Ages, from the Earliest Times to 1305 A.D. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0824-9.
  • R. C. Majumdar (1977). Ancient India. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120804364.
  • Harihar Vitthal Trivedi (1991). Inscriptions of the Paramāras (Part 2). Corpus Inscriptionum Indicarum Volume VII: Inscriptions of the Paramāras, Chandēllas, Kachchapaghātas, and two minor dynasties. இந்தியத் தொல்லியல் ஆய்வகம். எண்ணிம ஆவணச் சுட்டி:10.5281/zenodo.1451755.