முதலாம் செலஸ்தீன் (திருத்தந்தை)

திருத்தந்தை புனித முதலாம் செலஸ்தீன் (இலத்தீன்: Coelestinus PP. I, இத்தாலியம்: Celestino I) கத்தோலிக்க திருச்சபையின் 43ஆம் திருத்தந்தையாக செப்டம்பர் 10, 422 முதல் சூலை 26, 432 வரை பணியாற்றினார்[1]. அவரது ஆட்சிக்காலம் நவம்பர் 3ஆம் நாள் தொடங்கியதாக "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் நூல் கூறினாலும்[2], தில்லெமோன் போன்ற வரலாற்றாசியர்கள் கருத்துப்படி செலஸ்தீனின் ஆட்சி தொடக்கம் செப்டம்பர் 10ஆம் நாள் ஆகும்[3].

திருத்தந்தை புனித
முதலாம் செலஸ்தீன்
43ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்10 செப்டம்பர் 422
ஆட்சி முடிவு26 சூலை 432
முன்னிருந்தவர்முதலாம் போனிஃபாஸ்
பின்வந்தவர்மூன்றாம் சிக்ஸ்துஸ்
பிற தகவல்கள்
பிறப்புஉரோமை, மேற்கு உரோமைப் பேரரசு
இறப்பு26 சூலை 432
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா6 ஏப்பிரல் (உரோமன் கத்தோலிக்கம்)
8 ஏப்பிரல் (கிரேக்க மரபுவழி திருச்சபை)
செலஸ்தீன் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

வரலாற்று ஆதாரங்கள்

தொகு

திருத்தந்தை முதலாம் செலஸ்தீன் உரோமைப் பேரரசின் கம்பானியா என்னும் பிரதேசத்தில் பிறந்தவர்[2]. அவருடைய தந்தை பெயர் பிரிஸ்குஸ். அவர் சிறிது காலம் மிலான் நகரில் புனித அகுஸ்தீனோடு வாழ்ந்ததாகத் தெரிகிறது. அகுஸ்தீன் செலஸ்தீனுக்கு எழுதிய ஒரு கடிதம் உள்ளது. திருத்தந்தை முதலாம் இன்னசென்ட் என்பவர் 416இல் எழுதிய ஓர் ஆவணத்தில் "திருத்தொண்டர் செலஸ்தீன்" என்று திருத்தந்தை செலஸ்தீனைக் குறிப்பிட்டுள்ளார்.[1]

செலஸ்தீனின் ஆட்சி

தொகு

திருத்தந்தை செலஸ்தீன் திருவழிபாட்டில் சில பகுதிகளை ஆக்கியதாகத் தெரிகிறது. ஆயினும் இதுபற்றி உறுதியான செய்தி இல்லை. 431இல் நிகழ்ந்த எபேசுஸ் பொதுச்சங்கத்தில் அவர் நேரடியாகக் கலந்துகொள்ளாவிடினும் அதில் பங்கேற்க பதிலாள்களை அனுப்பினார். அச்சங்கத்தில் நெஸ்தோரியர்களின் தப்பறைக் கொள்கை கண்டிக்கப்பட்டது. அத்தருணத்தில் அவர் எழுதிய நான்கு மடல்கள் மார்ச்சு 15, 431 என்னும் தேதியைக் கொண்டுள்ளன. அம்மடல்கள் ஆப்பிரிக்கா, இல்லீரியா, தெசலோனிக்கா மற்றும் நார்போன் என்னும் பகுதிகளில் ஆண்ட ஆயர்களுக்கு எழுதப்பட்டவை. இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட அம்மடல்களின் கிரேக்க மொழிபெயர்ப்பு கிடைத்துள்ளது. மூல ஏடு கிடைக்கவில்லை.

மறைபரப்புப் பணி

தொகு

செலஸ்தீன் கத்தோலிக்க கிறித்தவ கொள்கைகளைப் பாதுகாப்பதில் தீவிரம் காட்டினார். பெலாஜியுஸ் (Pelagianism) என்பவர் போதித்த தவறான கொள்கையை அவர் கண்டித்தார். மேலும் அயர்லாந்து நாட்டில் கிறித்தவத்தைப் பரப்புவதற்காக பல்லாதியுஸ் என்பவரை அனுப்பிவைத்தார். அவரைத் தொடர்ந்து அயர்லாந்தில் கிறித்தவ மறையை அறிவிக்கச் சென்றவரே புனித பேட்ரிக் (Saint Patrick) ஆவார்.

உரோமையில் நோவாசியன் என்பவர் போதித்த தவறான கொள்கைகளையும் செலஸ்தீன் கண்டித்தார் (Novatians) [4]

இறப்பு

தொகு

திருத்தந்தை முதலாம் செலஸ்தீன் 432, சூலை 26ஆம் நாள் உயிர்துறந்தார். அவரது உடல் உரோமை சலாரியா வீதியில் அமைந்த புனித பிரிசில்லா சுரங்கக் கல்லறையில் (St. Priscilla) அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் அது புனித பிரசேதே கோவிலுக்கு மாற்றப்பட்டது.

கலை உருவில்

தொகு

புனித முதலாம் செலஸ்தீன் உருவப்படத்தில் ஒரு புறா, பறவைநாகம், தீப்பிழம்பு போன்றவை உருவகமாகச் சித்தரிக்கப்படுவது வழக்கம். உரோமைத் திருச்சபையும் கீழைத் திருச்சபையும் இவரை ஒரு புனிதராகக் கருதி வணக்கம் செலுத்துகின்றன.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1    "Pope St. Celestine I". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  2. 2.0 2.1 Loomis, Louise Ropes (1916). The Book of the Popes (Liber Pontificalis). New York: Columbia University Press. pp. 92f.
  3. Tillemont, Louis Sébastien Le Nain de (1709). Memoires pour servir a l'histoire ecclesiaástique des six premiers siécles. Paris: Charles Robustel. pp. 14:148.
  4. "Ecclesiastical History 7:11". பார்க்கப்பட்ட நாள் 3 March 2012.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Coelestinus I
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்

தொகு
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் திருத்தந்தை
422–432
பின்னர்