மூடா வீட்டு மனைகள் ஒதுக்கீடு ஊழல் வழக்கு

மைசூர் நகர்புற மேம்பாட்டு குழுமத்தை சுருக்கமாக மூடா என்பர். இக்குழுமத்தின் வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்ததில் நடப்பு கர்நாடக அரசு முதலமைச்சர் சித்தராமையா ஊழல் செய்ததாக 27 செப்டம்பர் 2024 அன்று மைசூர் லோகாயுக்தா காவல் துறை மைசூர் சிறப்பு நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது..[1]

பின்னணி

தொகு

மைசூர் பெருநகர வளர்ச்சித் திட்டத்திற்கு, மைசூர் நகர்புற மேம்பாட்டு குழுமத்திற்கு, 2010ல் முதல்வர் சித்தராமய்யா குடும்பத்தினர் 3.2 ஏக்கர் நிலம் வழங்கியதற்கு ஈடாக, மைசூர் பெருநகர வளர்ச்சி குழுமத்திடமிருந்து 14 வீட்டு மனைகள் பெற்றதாக ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. சித்தராமய்யா குடும்பத்தினர் ஒப்படைத்த நிலங்களின் மதிப்பை விட, ஈடாகப் பெற்ற வீட்டு மனைகளின் மதிப்பு மிகக் கூடுதலாக, கோடிக் கணக்கில் இருந்தது.[2]

மூடா வீட்டு மனை முறைகேடு தொடர்பாக ஆகஸ்டு 2024ல் சமூக ஆர்வலர்கள் டி.ஜே.ஆபிரகாம், பிரதீப் குமார் மற்றும் சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர் கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, முதல்வர் சித்தராமய்யா மனைவிக்கு மூடா குழுமம் 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் ரூபாய் 45 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் மனு வழங்கினர்.

இதனை அடுத்து ஆளுநர் தவார் சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா மீது ஊழல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.[3]

மைசூர் பெருநகர வளர்ச்சி குழுமத்திடமிருந்து முதல்வர் சித்தராமய்யா குடும்பததினர் முறைகேடாக 14 மனைகள் ஒதுக்கீடு பெற்ற குற்றச்சாட்டை வழக்கு பதிந்து மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க மாநில ஆளுநர் 17 ஆகஸ்டு 2024 அன்று ஆணையிட்டார். இதனை எதிர்த்த சித்தராமையாவின் முறையீடு மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன்[4], இந்த ஊழல் வழக்கு குறித்து லோகாயுக்தா விசாரிக்கலாம் எனத்தீர்ப்பு வழங்கியது.[5]இதனை அடுத்து 27 செப்டம்பர் 2024 அன்று லோகாயுக்தா காவல் துறை இந்த ஊழல் வழக்கு குறித்து முதல்வர் சித்தராமையா, அவரின் மனைவி பி.எம். பார்வதி, மனைவியின் சகோதரர் மல்லிகார்சூன சாமி ஆகியோர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்து. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.[6]

கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரிக்க மனு

தொகு

28 செப்டம்பர் 2024 அன்று சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா என்பவர் மூடா வீட்டு மனை ஊழல் தொடர்பான புகாரை நடுவண் புலனாய்வுச் செயலகம் விசாரிக்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.[7]

அமலாக்கத்துறை வழக்கு

தொகு

மைசூரு நிலமுறைகேடு வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தினர் 30 செப்டம்பர் 2024 அன்று 2002 பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்துள்ளது.[8][9]இந்நிலையில் முதல்வர் சித்தராமய்யாவின் மனைவி பார்வதி, தனக்கு ஒதுக்கப்பட்ட 14 வீட்டு மனைகளை மைசூர் நகரம் மேம்பாட்டு குழுமத்திடம் ஒப்படைக்க கடிதம் எழுதினார். இதனை அக்குழுமம் ஏற்றுள்ளது.[10]

மேற்கோள்கள்

தொகு