மூன்றாம் புனிதப் போர்
மூன்றாம் புனிதப் போர் (Third Sacred War, கிமு 356 - 346) என்பது தெல்பி ஆம்பித்தியோனிக் லீக்கின் படைகளுக்கும் பேசியன்களுக்கும் இடையே நடந்த ஒரு போராகும். இது முக்கியமாக தீப்சால் ஒழுங்கமைக்கப்பட்டது. பின்னர் மாக்கெடோனின் இரண்டாம் பிலிப் மற்றும் போசியன்களுக்கும் இடையிலான போராக நடத்தப்பட்டது. புனித நிலத்தில் பயிரிட்ட குற்றத்திற்காக, கிமு 357 இல் ஆம்பித்தியோனிக் லீக் (அந்த நேரத்தில் அதில் தீப்ஸ் ஆதிக்கம் செலுத்தியது) மூலம் போசியன்களுக்கு விதிக்கப்பட்ட பெருமளவிலான அபராதத்தால் போர் ஏற்பட்டது. பணம் செலுத்த மறுத்த, போசியன்கள் அதற்குப் பதிலாக தெல்பியில் உள்ள அப்பல்லோ கோயிலைக் கைப்பற்றினர். மேலும் கோயிலில் குவிக்கப்பட்டிருந்த பெருமளவிலான காணிக்கை நிதியைத் தங்களின் படையில் இருந்த பெருமளவிலான கூலிப்படைகளின் செலவுக்குப் பயன்படுத்தினர். போசியன்கள் பல பெரிய தோல்விகளை சந்தித்தாலும், கோயில் நிதியைக் கொண்டு பல ஆண்டுகள் அவர்களால் போரை தொடர முடிந்தது. இறுதியில் அனைத்து தரப்பினரும் சோர்வடைந்தனர். இந்நிலையில் இரண்டாம் பிலிப் மற்ற அரசுகளுக்கு இருந்த கவனச்சிதறல் வாய்ப்பை பயன்படுத்தி வடக்கு கிரேக்கத்தில் தனது அதிகாரத்தை அதிகரித்துக் கொண்டார். போரினால் பிற அரசுகள் சோர்வுற்ற நிலையில், பிலிப் வளர்ந்து வரும் சக்தியாக உருவெடுத்ததால், போருக்கான அமைதித் தீர்வைத் திணிக்க அவரால் முடிந்தது. இது பண்டைய கிரேக்கத்தில் மாக்டோனியாவின் ஆதிக்கத்தின் முக்கிய படியாக கருதப்படுகிறது. [1] [2]
மூன்றாம் புனிதப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
|
|||||||
பிரிவினர் | |||||||
அம்பித்தியோனி, தீப்ஸ், போயோட்டியா, தெசலி, லோக்ரிஸ், டோரிஸ், மக்கெடோனியா | போசிஸ், பெரே, ஏதென்ஸ், எசுபார்த்தா |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பம்மெனெஸ், மக்கெடோனின் இரண்டாம் பிலிப் | பிலோமீலஸ், ஓனோமார்கஸ், பைலோஸ், பலைகோஸ் |
பருந்துப் பார்வை
தொகுகிரேக்கத்தின் தீப்சுக்கும் போசுக்கும் சில காரணங்களினால் பகை நிலவிவந்தது. அச்சமயத்தில் ஆம்பித்தியோனிக் லீக்கானது தீப்சின் செல்வாக்குக்கு உட்பட்டதாக இருந்தது. தீப்சின் தூண்டுதலினால், ஆம்பித்தியோனிக் லீக் போசிஸ் வாசிகள் சிலருக்கு அபராதம் விதித்தது. அவர்கள் அபராதத்தை செலுத்த மறுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக போசிஸ் அரசும் இருந்தது.
தெல்பியின் அப்பலோ கோயில் நிர்வாகம் தொடர்பாக பேசியர்களுக்கும் தெல்பி பிரதேசவாசிகளுக்கும் இடையை நீண்டகாலமாக பிணக்கு இருந்துவந்தது. அந்தக் கோயில் நிர்வாகத்தில் தனக்கும் பாத்தியம் உண்டு என்று பேசியர்கள் உரிமை கோரிவந்தனர். இந்நிலையில் கிமு 356 இல் பிலோமீலஸ் என்பவரின் தலைமையிலான பேசிஸ் படைகள் தெல்பி கோயிலைக் கைபற்றிக் கொண்டன. பின்னர் பிலோமீலஸ் இக்கோயில் நிர்வாகமானது அனைத்து கிரேக்கர்களின் சார்பாக சிறப்பாக நடத்தப்படும் என்று எல்லா கிரேக்க நகர அரசுகளுக்கும் அறிவிக்கை அனுப்பி தனக்கான ஆதரவைத் தேட முனைந்தார். அவருக்கு ஏதென்சும், எசுபார்த்தாவும் தங்கள் ஆதரவை வழங்கின. ஆனால் தீப்சோ வடக்கில் உள்ள சில அரசுகளின் துணையோடு ஆம்பித்தியோனிக் லீக்கின் பெயரால் போருக்கு கிளம்பியது. மூன்றாம் புனிதப் போர் துவங்கியது.
தெல்பி கோயிலுக்கு பக்தர்கள் அளித்த காணிக்கைப் பொருள்கள் ஏராளமாக இருந்த நிலையில், அதில் இருந்து ஒரளவு பொருளை எடுத்த பிலோமீலஸ் படை திரட்டிக் கொண்டு ஆம்பித்தியோனிக் லீக்கின் கூட்டுப் படைகளை எதிர்த்துப் போராடி ஒரு சிறு வெற்றியைப் பெற்றார். ஆனால் அதன்பிறகு அந்தக் கூட்டுப் படை திரும்வும் பிலோமீலசின் படைகளை நியோன் என்ற இடதில் கிமு 354 இல் சந்தித்து வெற்றிபெற்றன. போரில் பிலோமீலஸ் இறந்தார்.
பிலோமீலசுக்குப் பிறகு பேசியப் படைகளுக்கு ஓனோமார்கஸ் என்பவர் தலைமை வகித்தார். இவர் தெல்பி கோயில் பணத்தை தாராளமாக கையாண்டு பெரும் படையை திரட்டினார். அவர் தீப்சைப் போலவே தங்களுக்கு பகையாக இருந்த லோக்ரிஸ், தெசலி போன்ற பிரதேசங்களின் மீது படையெடுத்து வெற்றிகளைக் குவித்தார். மேலும் தெசலி பிரதேச இராச்சியங்களின் கூட்டணியில் தன் பண பலத்தைப் பயன்படுத்தி ஓனோமார்க்கஸ் பிளவை உண்டாக்கினார். இதனால் பாதிக்கபட்ட ஒரு தரப்பினர் மக்கெடோனியாவின் இரண்டாம் பிலிப்பின் உதவியை நாடினர். கிரேக்கத்தின் தெற்குப் பக்கத்தில் ஆதிக்கம் பெறவிரும்பிய பிலிப் இதை நல்ல ஒரு வாய்ப்பாக கருதினார்.
இதனையடுத்து கிமு 353 இல் பிலிப் தெசலியின் மீது படையெடுத்து வந்தார். இரண்டு போர்களில் அவரை ஓனோமார்க்கஸ் முறியடித்து திருப்பி அனுப்பினார். ஓனோமார்க்கசின் படைபலத்திற்கு தெல்பி கோயிலில் இருந்த காணிக்கை நிதியே பெரும் ஆதாரமாக இருந்தது. அதைக் கொண்டே கூலிப்படைகளை அமர்த்தி தன் படை பலத்தை பெருக்கி போர்களில் ஈடுபட்டு வந்தார். கால ஓட்டத்தில் கோயிலில் உள்ள பணம் குறையக் குறைய அவரின் படை பலமும் குறையத் தொடங்கியது. இதை உணர்ந்த பிலிப் கிமு 352 இல் மீண்டும் தெசலி மீது படை எடுத்து வந்தார். கடுமையாக நடந்த போரில் ஓனோமார்க்கஸ் வீழ்ந்தார். அதோடு போசிசின் வாழ்வும் முடிவுக்கு வந்தது. இதன்பிறகு தெசலியின் பெரும்பகுதி பிலிப்பின் வசமாயிற்று.[3]
குறிப்புகள்
தொகு- ↑ "Heritage History - Products". www.heritage-history.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-22.
- ↑ "Third Sacred War, 355–346 BC". www.historyofwar.org. பார்க்கப்பட்ட நாள் 2020-04-22.
- ↑ வெ. சாமிநாத சர்மா (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். pp. 541–544.
{{cite book}}
: Check|authorlink=
value (help)