மெகாபிசஸ்
மெகாபிசஸ் (Megabyzus, பண்டைக் கிரேக்கம்: Μεγάβυζος ) என்பவர் ஒரு அகாமனிசிய பாரசீகத் தளபதி ஆவார். இவர் சோபிரசின் மகனும், பாபிலோனியாவின் சட்ராப் மற்றும் முதலாம் டேரியசை அரியணையில் அமர்த்திய ஏழு சூழ்ச்சிக்காரர்களில் ஒருவரான முதலாம் மெகாபிசசின் பேரன் ஆவார். கிமு 482 இல் சத்ரபி கிளர்ச்சி செய்தபோது இவரது தந்தை கொல்லப்பட்டார், மேலும் நகரத்தை மீண்டும் கைப்பற்றிய படைகளுக்கு மெகாபிசஸ் தலைமை தாங்கினார். அதன் பிறகு எதிர்கால கிளர்ச்சிகளைத் தடுக்க மர்துக் கடவுளின் சிலை அழிக்கப்பட்டது. மெகாபிசஸ் கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பில் (கிமு 480-479) கலந்துகொண்டார். தெல்பியைக் கொள்ளையடிக்க தொடுக்கபட்ட உத்தரவின் பேரில் செயல்பட மறுத்ததாக எரோடோட்டசு கூறுகிறார். ஆனால் அத்தகைய உத்தரவுகள் எப்போதாவது கொடுக்கப்பட்டதா என்பது சந்தேகமே.
மெகாபிசஸ் | |
---|---|
அகாமனிசியப் பிரபு, கிமு 520-480. | |
சார்பு | அகாமனிசியப் பேரரசு |
சேவைக்காலம் | fl. c.485 – 440 BCE |
தரம் | சிரியாவின் ஆளுநர் |
போர்கள்/யுத்தங்கள் | எகிப்திய போர்த் தொடர்கள் |
துணை(கள்) | Amytis |
பிள்ளைகள் | Zopyrus II |
எகிப்திய போர்த் தொடர்
தொகுமெகாபிசஸ் சிரியாவின் சாட்ராப் எனப்படும் ஆளுநராக இருந்தார். அப்போது எகிப்தில் இனாரசின் கிளர்ச்சியை அடக்குவதற்கு இவரும், பிரிஜியாவின் ஆளுநரான அர்தபாசசும் அனுப்பப்பட்டனர். அந்த பாரசீகப் படைகளுக்கு மெகாபிசஸ் தலைமை வகித்தார். இவர்கள் கிமு 456 இல் படைகளுடன் வந்தனர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கிளர்ச்சியை அடக்கி, இனாரஸ் மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த ஏராளமான ஏதெனியர்களைப் பிடித்தனர். [1]
எகிப்திய போர்த் தொடரின் தோற்றம்
தொகுகிமு 465 இல் முதலாம் செர்கஸ் படுகொலை செய்யப்பட்ட, பிறகு அவரது மகன் முதலாம் அர்தசெராக்சஸ் பதவிக்கு வந்தார். இக்காலக்கட்டத்தில் பாரசீகப் பேரரசின் பல பகுதிகளில் விரைவாக கிளர்ச்சிகள் தோன்றின. அவற்றில் முதன்மையானது பாக்திரியா மற்றும் எகிப்து ஆகும். எகிப்தின் இனாரஸ் என்பவர் அர்டாக்செர்க்சின் சகோதரரான எகிப்தின் பாரசீக ஆளுநரான அச்செமெனெசை தோற்கடித்து, கீழ் எகிப்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். அவர் தன் உதவிக்கு கிரேக்கர்களை அழைத்தார். அவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக பாரசீகர்களுடன் போரில் ஈடுபட்டுவந்தனர். கிமு 460 இல், ஏதென்சு 200 கப்பல்கள் மற்றும் 6000 கனரக காலாட்படைகளை இன்னாரசுக்கு ஆதரவாக அனுப்பியது. எகிப்திய மற்றும் ஏதெனிய படைகள் எகிப்தில் இருந்த பாரசீக படைகளைத் தோற்கடித்து, பல ஆண்டுகளாக அவர்கள் முற்றுகையிட்ட பாரசீக கோட்டையைத் தவிர, மெம்பிஸ் நகரைக் கைப்பற்றினர்.
மெம்பிஸ் முற்றுகை (கிமு 459–455)
தொகுஎகிப்தின் உள்ளூர் பாரசீக படைகள் இருந்த வெள்ளை கோட்டையகத்தை ஏதெனியர்களும், எகிப்தியர்களும் முற்றுகையிட்டிருந்தனர். முற்றுகையில் குறிப்பிடத்தக்க முன்னேறம் இருக்கவில்லை. இந்த முற்றுகையானது குறைந்தது நான்கு ஆண்டுகள் நீடித்திருக்கலாம், ஏனெனில் கிரேக்கர்களின் முழுப் பயணமும் 6 ஆண்டுகள் நீடித்தது என்று வரலாற்றாளர் துசிடிடீஸ் கூறுகிறார். [2] முற்றுகை இட்டிருந்த ஏதெனியப் படைகளை மெகாபிசஸ் தலைமையிலான பாரசீகப் படைகள் முறியடித்து ,முற்றுகையில் இருந்த பாரசீகர்களை விடுவிக்கப்பட்டனர். முறியடிக்கப்பட்ட ஏதெனியப் படை நைல் ஆற்றில் இருந்த புரோசோபிட்டிஸ் என்னும் தீவில் அடைக்கலம் புகுந்தது. அங்கேயே அந்தப் படை 18 மாதங்கள் அடைபட்டுக் கிடந்தது. இறுதியில் பாரசீகப் படைகளால் அழிக்கப்பட்டது. [3]
துசிடிடீசின் கூற்றின்படி, முதலில் பாரசீக மன்னர் அர்தர்செக்ஸ் எகிப்தில் இருந்து ஏதெனியன் படைகளை ஏதென்சை நோக்கி திருப்பி அனுப்பும் விதமாக, அட்டிகா மீது படையெடுக்க எசுபார்த்தன்களுக்கு பணம் கொடுத்து தூண்டினார். பணத்தைப் பெற்ற எசுபார்த்தா, படையெடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி மெகாபிசஸ் தலைமையில் ஒரு பெரிய படையைத் திரட்டி, அதை எகிப்துக்கு அனுப்பினார். [3] வரலாற்றாலர் தியோடோரசின் தகவல்கள் இது குறித்த கதையை அதிக விவரங்களுடன் கூட்டியோ அல்லது குறைத்தோ கூறியுள்ளார்; பணம் கொடுத்து எசுபார்த்தன்களை ஏவும் முயற்சி தோல்வியடைந்த பிறகு, கிளர்ச்சியை அடக்குவதற்கான திட்டங்களுடன், 300,000 பேர் கொண்ட படையை மெகாபிசஸ் மற்றும் அர்டாபஸஸ் ஆகியோரின் பொறுப்பில் அனுப்பி வைத்தார். அவர்கள் முதலில் பாரசீகத்திலிருந்து சிலிசியாவுக்குச் சென்று சிலிசியர்கள், போனீசியர்கள் மற்றும் சைப்ரியாட்களிடமிருந்து 300 கப்பல்களை கொண்ட ஒரு கடற்படையைத் திரட்டி, ஒரு ஆண்டு தங்கள் ஆட்களுக்குப் பயிற்சி அளித்தனர். பின்னர் இறுதியாக அவர்கள் மெகாபிசஸ் தலைமையில் எகிப்துக்குச் சென்றனர். [4] எவ்வாறாயினும், நவீன மதிப்பீடுகள், பாரசீக துருப்புக்களின் எண்ணிக்கையை 25,000 பேர் என்ற கணிசமான அளவில் குறைவாகக் குறிப்பிடுகிறது. [5] பாரசீகப் படைகள் நீண்ட காலம் பயிற்சியில் ஈடுபட்டது தெளிவாக தெரிகிறது. ஏனெனில் பாப்ரெமிஸில் எகிப்திய வெற்றிக்கு பதிலடி கொடுக்க அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் பிடித்தன. எந்தவொரு எழுத்தாளரும் பல விவரங்களைத் தரவில்லை என்றாலும், மெகாபைசஸ் இறுதியாக எகிப்துக்கு வந்தபோது, மெம்பிசின் முற்றுகையை விரைவாக முறியடிக்கவும், போரில் எகிப்தியர்களைத் தோற்கடிக்கவும், ஏதெனியர்களை மெம்பிசிலிருந்து விரட்டவும் முடிந்தது என்பது தெளிவாகிறது. [3] [6]
பிரோசோபிடிஸ் முற்றுகை (கிமு 455)
தொகுமெம்பிசிலிருந்து பின்வாங்கிய ஏதெனியர்கள் பின்னர் நைல் வடிநிலத்தில் உள்ள பிரோசோபிடிஸ் தீவுக்கு சென்றனர். அங்கு அவர்களின் கப்பல்கள் நிறுத்தப்பட்டன. [3] [6] அங்கு, மெகாபைசஸ் அவர்களை 18 மாதங்கள் முற்றுகையிட்டார், இறுதியாக இவர் கால்வாய்களை தோண்டி அதன் மூலம் தீவைச் சுற்றியுள்ள ஆற்று நீரை திசைமாற்றினர். இதனால் "தீவை பிரதான நிலப்பகுதியுடன் இணைத்தார்". [3] துசிடிடீசியின் தரவுகளின் படி, பாரசீகர்கள் ஆற்றை திசைமாற்றியதால் பிரதான நிலப்பகுதியுடன் இணைந்த தீவுக்கு சென்று அதைக் கைப்பற்றினர். [3] லிபியா வழியாக சிரேனுக்கு தப்பிச் சென்ற ஏதெனியப் படையில் ஒரு சிலர் மட்டுமே ஏதென்சுக்குத் திரும்பிச் சென்றனர். [2] இருப்பினும், டியோடோரசின் குறிப்புகளில், ஆற்றை திசை திருப்பியதால் எகிப்தியர்களை (துசிடிடீஸ் குறிப்பிடாத) பாரசீகர்களிடம் சரணடைய வைத்தது. பாரசீகர்கள், ஏதெனியர்களைத் தாக்குவதில் ஏற்படும் பெரும் உயிரிழப்புகளைத் எதிர்கொள்ள விரும்பவில்லை. அதனால் அவர்கள் ஏதென்சுக்குத் திரும்பிச்செல்ல ஏதுவாக அவர்கள் புறப்பட அனுமதித்தனர். [6] எகிப்திய போர் பயணத்தின் தோல்வி ஏதென்சில் ஒரு பீதியை ஏற்படுத்தியதால், டெலியன் கருவூலத்தை ஏதென்சுக்கு மாற்றுவது உட்பட தகவல்கள் கொண்ட, துசிடிடீசின் குறிப்புகள் சரியானதாக இருக்கலாம். [7]
சைப்ரஸ் போர்த் தொடர்
தொகுசிமோன் தலைமையிலான ஏதெனியர்களால் தாக்குதலுக்கு ஆளான சைப்பிரசு மீது இவர்கள் தங்கள் கவனத்தைத் திருப்பினார்கள். சிறிது காலதிற்குப் பிறகு, பாரசீகத்திற்கும் ஏதென்சுக்கும் இடையிலான பகையை முடிவுக்க் கொண்டுவந்த உடன்படிக்கையானது காலியாசின் அமைதி உடன்பாடு என்று அழைக்கப்பட்டது.
மெகாபைசஸ் 76 வயதில் இறந்தார். இவரது மகன் இரண்டாம் ஜோபிரஸ் நாடுகடத்தப்பட்டு ஏதென்சில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது.
குறிப்புகள்
தொகு- ↑ Thucydides, History of the Peloponnesian War, I.104, 109.
- ↑ 2.0 2.1 Thucydides I, 110
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Thucydides I, 109
- ↑ Diodorus XI, 74–75
- ↑ Ray, Fred (1949). Land Battles in 5th Century BC Greece: A History and Analysis of 173 Engagements. McFarland & Company, Inc. pp. 109–110.
- ↑ 6.0 6.1 6.2 Diodorus XI, 77
- ↑ Holland, p. 363.