சிமோன்

ஏதெசின் தளபதி

சிமோன் அல்லது கிமோன் (Cimon or Kimon கிரேக்கம்: Κίμων; ஏ. 510 – 450 கிமு) என்பவர் கிரேக்கத்தில் கி.மு. 5ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த ஒரு ஏதெனிய அரசியல்வாதியும் தளபதியும் ஆவார். இவர் மராத்தான் போரில் வெற்றி பெற்ற மில்டியாட்டீசின் மகனாவார். கி.மு. 480–479-ல் கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் படையெடுப்பில் செர்கஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஆற்றல்வாய்ந்த ஏதெனிய கடல் சாம்ராஜ்யத்தை உருவாக்குவதில் சிமோன் முக்கிய பங்கு வகித்தார். சிமோன் புகழ்பெற்ற ஒரு இராணுவ வீரராக ஆனார். மேலும் சலாமிஸ் போரில் ஈடுபட்ட பிறகு இராணுவத் தளபதி தரத்திற்கு உயர்ந்தார்.

சிமோன்
சைப்பிரசின், இலார்னாக்காவில் உள்ள சிமோன்சின் மார்பளவு சிலை
பிறப்புஅண். 510
ஏதென்ஸ்
இறப்புகி.மு. 450 ( 59–60 வயது)
சிட்டியம், சைப்பிரசு
சார்புஏதென்ஸ்
தரம்ஸ்ட்ராட்டெகாய்ஸ் (தளபதி)
போர்கள்/யுத்தங்கள்சலாமிஸ் போர்

சலாமிஸ் போர் (சைப்ரசில்)

கிரேக்க பாரசீகப் போர்கள்

கிமு 466 இல் யூரிமெடன் ஆற்றுப் போரில் பாரசீக கடற்படை மற்றும் இராணுவத்தை அழித்தது சிமோனின் மிகப்பெரிய வீரச்செயல்களில் ஒன்றாகும். கிமு 462 இல், எலட்களின் கிளர்ச்சிகளின் போது எசுபார்தான்களுக்கு ஆதரவாக இவர் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியுற்றது. இதன் விளைவாக, இவர் கிமு 461 இல் ஏதென்சிலிருந்து ஆஸ்ட்ராசிசம் (நாடுகடத்துதல்) செய்யப்பட்டார்; எவ்வாறாயினும், எசுபார்தாவிற்கும் ஏதென்சுக்கும் இடையில் கிமு 451 இல் ஐந்தாண்டு சமாதான உடன்படிக்கைக்கு மத்தியஸ்தராக செயல்பட 10 ஆண்டுகால நாடுகடத்தல் காலம் முடிவதற்குள் இவர் திரும்ப அழைக்கப்பட்டார். எசுபார்த்தன் சார்பு கொள்கையில் இவரின் பங்கேற்பிற்காக, இவர் அடிக்கடி லாகோனியலாளர் என்று அழைக்கப்படுகிறார். சிமோன் பெரிக்கிள்சுக்கு எதிராக ஏதெனியன் பிரபுத்துவப் பிரிவை வழிநடத்தினார்.

வாழ்க்கை

தொகு

துவக்க ஆண்டுகள்

தொகு

சிமோன் கிமு 510 இல் ஏதெனியன் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தார். இவர் லாசியாடேயின் (லகியாடை) பிலெய்டே குலத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா சிமோன் கோலேமோஸ் என்பவர் ஆவார், அவர் நான்கு குதிரைகள் கொண்ட தேர் பந்தையத்தில் ஒலிம்பிக்கில் மூன்று முறை வெற்றிபெற்றவர். அவர் பிசிசுட்ரேடசின் மகன்களால் படுகொலை செய்யப்பட்டார்.[1] இவரது தந்தை புகழ்பெற்ற ஏதெனியன் தளபதி மில்டியாடீசு[2] தாயார் ஹெகெசிபைல், திரேசிய மன்னர் ஓலோரஸின் மகள் மற்றும் வரலாற்றாசிரியர் துசிடிடீசின் உறவினர்.[3]

சிமோன் இளைஞனாக இருந்தபோது, ஏதெனிய அரசால் தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் இவரது தந்தை மில்டியாடீசுக்கு 50 தாலந்துகள் அபராதம் விதிக்கப்பட்டது. மில்டியாடீசால் இந்தத் தொகையைச் செலுத்த முடியாததால், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் கிமு 489 இல் இறந்தார். சிமோன் இந்தக் கடனை மரபுரிமையாகப் பெற்றார். இவரது குடும்பத் தலைவராக, அவரது சகோதரி அல்லது ஒன்றுவிட்ட சகோதரி எல்பினிசக் இருந்து பொறுப்புகளை கவனிக்க வேண்டியிருந்தது. புளூடார்ச்சின் கூற்றுப்படி, செல்வந்தரான காலியாஸ், எல்பினிஸின் திருமணத்திற்காக சிமோனின் கடன்களை அடைக்க முன்வந்தார். சிமோன் அதற்கு ஒப்புக்கொண்டார்.[4][5][6]

சிமோன் தனது இளமை பருவத்தில் ஒழுங்கான வாழ்கை வாழாமல், கடும் குடிகாரராக இருந்தார். மேலும் நாகரீகத்துடன் நடந்துகொள்ளத் தெரியாதவராக இருந்தார் என்ற கெட்ட பெயரைக் கொண்டிருந்தார்; இந்த பிந்தைய குணாதிசயத்தில் இவர் ஒரு ஏதெனியனாக அல்லாமல் எசுபார்டன் போன்றவர் என்று குறிப்பிடப்பட்டார்.[7][8]

திருமணம்

தொகு

சிமோன் மெகாகிள்சின் பேத்தியும் அல்க்மேயோனிடே குடும்ப உறுப்பினருமான ஐசோடைசை மணந்தார். இவர்களின் முதல் குழந்தைகள் லாசிடெமோனியஸ் (ஏதெனியன் தளபதியாக ஆனார்) மற்றும் எலியஸ் என்ற இரட்டை சிறுவர்கள். அவர்களின் மூன்றாவது மகன் தெசலஸ் (அரசியல்வாதியாக ஆனார்) ஆகியோர் பிறந்தனர்.

இராணுவ வாழ்க்கை

தொகு

சலாமிஸ் போரின் போது, சிமோன் தனது துணிச்சலால் தனித்துத் தெரிந்தார். கிமு 479 இல் எசுபார்த்தாவிற்கு அனுப்பப்பட்ட தூதுக்குழு உறுப்பினராக இவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

கிமு 478 மற்றும் கிமு 476 க்கு இடையில், ஏஜியன் கடலைச் சுற்றியுள்ள பல கிரேக்க தீவுகளில் இருந்த நகர அரசுகள் மீண்டும் பாரசீக கட்டுப்பாட்டிற்கு ஆட்பட விரும்பவில்லை. மேலும் டெலோசில் இருந்த அரிசுடடைடீசு மூலம் ஏதென்சுக்கு தங்கள் விசுவாசத்தை தெரிவித்தனர். அங்கு, இவர்கள் டெலியன் கூட்டணியை (டெலோஸ் கூட்டமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது) உருவாக்கினர். கூட்டணிப் படைகளுக்கு சிமோன் முக்கிய தளபதியாக இருப்பார் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.[9] கி.மு. 463 வரை கூட்டணியின் பெரும்பாலான செயல்பாடுகள் சிமோனின் கட்டளைப்படியே நிகழ்ந்தன. இந்த காலகட்டத்தில், இவரும் அரிசுடடைடீசும் பாசேனியசின் கீழ் எசுபார்த்தன்களை பைசாந்தியத்திலிருந்து வெளியேற்றினர்.

சிமோன் பாரசீக தளபதி போஜசிடமிருந்து ஸ்ட்ரூமா அற்றின் முகத்துவாராரத்தில் இருந்த[1] இயோனையும் கைப்பற்றினார். டோரிசக்கசைத் தவிர, அப்பகுதியின் மற்ற கடலோர நகரங்கள் இயோனுக்குப் பிறகு இவரிடம் சரணடைந்தன. இவர் ஸ்கைரோசைக் கைப்பற்றி, அங்கு தங்கியிருந்த கடற்கொள்ளையர்களை வெளியேற்றினார்.[4][10] இவர் திரும்பும்போது, தொன்மவியல் மாந்தரான தீச்சின் "எலும்புகளை" மீண்டும் ஏதென்சுக்குக் கொண்டு வந்தார். இவரின் இந்த சாதனையைக் கொண்டாடும் வகையில் ஏதென்ஸைச் சுற்றி மூன்று ஹெர்மா சிலைகள் அமைக்கப்பட்டன.[4]

யூரிமெடோன் போர்

தொகு
 
சிமோன் கிரேக்க கடற்படைக்கு தலைமை தாங்குகிறார்.

கிமு 466 இல், சிமோன் பாரசீகத்துக்கு எதிரான போரை சின்ன ஆசியாவுக்கு கொண்டு சென்றார். மேலும் பாம்ப்ளியாவில் உள்ள யூரிமெடன் ஆற்றில் நடந்த யூரிமெடன் போரில் பாரசீகர்களை தீர்க்கமாக தோற்கடித்தார். சிமோனின் தரை மற்றும் கடற்படைகள் பாரசீக முகாமைக் கைப்பற்றியது. மேலும் போனீசியர்களால் நிர்வகிக்கப்பட்ட 200 கப்பல்களைக் கொண்ட முழு பாரசீக கடற்படையையும் அழித்தது அல்லது கைப்பற்றியது. மேலும் இவர் 10,000 குடியேறிகளுடன் ஆம்பிபோலிஸ் என்று அழைக்கப்படும் ஏதெனியன் குடியேற்றத்தை நிறுவினார்.[9] லைசியன்-பாம்பிலியன் எல்லையில் உள்ள வர்த்தக நகரமான பாசிலிஸ் போன்றவை, ஏதென்சின் பல புதிய கூட்டாளிகளாக பின்னர் டெலியன் கூட்டணியில் சேர்க்கப்பட்டன.

சிமோன் சின்ன ஆசியாவில் இருந்தபோது யூரிமெடோன் போரில் வெற்றி பெற்ற பிறகு டெலியன் கூட்டணி மற்றும் பாரசீகர்களுக்கு இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார் என்று சில வரலாற்றாசிரியர்கள் மத்தியில் கருத்து உள்ளது. கிமு 450 இல் இவரது மைத்துனராஆன கால்லியாசால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையான கலியாசின் அமைதி உடன்பாடானது சில சமயங்களில் சிமோனின் அமைதி உடன்பாடு என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் காலியசின் அமைதி முயற்சிகள் சிமோனின் முந்தைய ஒப்பந்தத்தை புதுப்பிக்க வழிவகுத்திருக்கலாம். இவர் பாரசீகப் போர்களின் போது ஏதென்சுக்குச் சிறப்பாகச் சேவை செய்தார் மற்றும் புளூடாக்கின் கூற்றுப்படி: "போருக்கான அனைத்து குணங்களிலும் அவர் தெமிஸ்ட்டோக்ளீஸ் மற்றும் அவரது தந்தை மில்டியாட்சுக்குச் சமமானவர்"[4][9]

திரேசியன் செர்சோனேசஸ்

தொகு

சின்ன ஆசியாவில் இவரது வெற்றிகளுக்குப் பிறகு, சிமோன் திரேசியன் குடியேற்றமான செர்சோனேச்சுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் உள்ளூர் பழங்குடியினரை அடக்கி, கிமு 465 மற்றும் கிமு 463 க்கு இடையில் தாசியர்களின் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார். தாசோஸ் டெலியன் கூட்டணியில் இருந்து திரேசியன் உள்நாட்டுடனான வர்த்தகப் போட்டியின் காரணமாகவும், குறிப்பாக தங்கச் சுரங்கத்தின் உரிமைக்காகவும் கிளர்ச்சி செய்தது. ஏதெனியன் கடற்படை தாசோஸ் கடற்படையை தோற்கடித்த பிறகு சிமோனின் தலைமையில் ஏதென்ஸ் தாசோசை முற்றுகையிட்டது. இந்த நடவடிக்கைகள் இவருக்கு தாசோசின் ஸ்டெசிம்ப்ரோடசின் பகையைப் பெற்றுத் தந்தது (கிரேக்க வரலாற்றில் இந்தக் காலகட்டத்தைப் பற்றிய அவரது எழுத்துக்களில் புளூட்டாக் பயன்படுத்திய ஆதாரம்).

கையூட்டு வாங்கியதற்கான விசாரணை

தொகு

இந்த வெற்றிகள் ஒரு பக்கம் இருந்தபோதிலும், மாசிடோனின் முதலாம் அலெக்சாந்தரிடமிருந்து கையூட்டு பெற்றதாக பெரிக்கிள்சால் சிமோன் மீது வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையின் போது, சிமோன் "நான் எந்த ஒரு பணக்கார இராச்சியத்திற்கும் ஏதெனிய தூதராக இருந்ததில்லை. மாறாக, எசுபார்த்தன்களின் சிக்கன வாழ்க்கை கலாச்சாரத்தை நான் எப்போதும் பின்பற்றி வந்ததில் பெருமைப்படுகிறேன். இது நான் தனிப்பட்ட செல்வத்தை விரும்புவதில்லை என்பதை நிரூபிக்கிறது. மாறாக, நமது வெற்றிகளினின்போது நடத்திய சூறையாடல்களால் நமது தேசத்தை வளப்படுத்துவதை நான் விரும்புகிறேன்." என்று கூறினார் இதன் விளைவாக, சிமோன் இறுதியில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.[4]

எசுபார்த்தாவில் எலட்களின் கிளர்ச்சி

தொகு

சிமோன் ஏதென்சில் உள்ள எசுபார்த்தாவின் அபிமானிகளில் ஒருவர். இவர் இரு அரசுகளுக்கிடையில் நல் ஒத்துழைப்புக்கான கொள்கையை வலுவாக ஆதரித்தார். இவர் எசுபார்த்தாவை மிகவும் விரும்புவதற்காக அறியப்பட்டார். இவர் தனது மகன்களில் ஒருவருக்கு லாசிடெமோனியஸ் என்று பெயரிட்டார்.[11][12] எசபார்த்தா எலட்கள் செய்த புரட்சியால் உள்நாட்டுக் கலகத்தில் சிக்கித்தவித்தது. இந்நிலையில் கி.மு 462 இல் எசபார்த்தாவுக்கு உதவிசெய்ய சிமோன் ஏதென்சு குடிமக்களின் ஆதரவை நாடினார். எசுபார்த்தாவானது கிரேக்க அதிகாரத்தில் ஏதென்சின் ஒரு போட்டியாளர் என்றும், அது தன்னைத் தற்காத்துக் கொள்ள விட வேண்டும் என்று கருத்தின் வழியாக சிமோனின் கருத்துக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. என்றாலும் சிமோனின் கருத்து அவையில் மேலோங்கியது. சிமோன் ஏதெனிய படைகளுடன் எசுபார்த்தாவில் நடந்துவரும் பெரிய கிளச்சியை சமாளிக்க உதவ புறப்பட்டுச் சென்றார். எவ்வாறாயினும், இந்த பயணம் சிமோனுக்கும் ஏதென்சுக்கும் அவமானமாக முடிந்தது, அப்போது ஏதெனியர்கள் எலட்களின் பக்கம் சாய்ந்துவிடுவார்கள் என்று பயந்து, எசுபார்த்தா தன் படையை மீண்டும் அட்டிகாவிற்கு அனுப்பியது.[13]

நாடு கடத்தல்

தொகு
 
நாடு கடத்துல் வாக்களிப்புக்கு அடையாளமாக உடைந்த மட்பாண்டச் சில்லுகள் (ஆஸ்ட்ராகான்). நாடுகடத்த பரிந்துரைக்கப்பட்ட நபர்களான பெரிக்கிள்ஸ், சிமோன், அரிஸ்டைட்ஸ் ஆகிய ஒவ்வொருவருவரும் அவரவர்களின் தந்தைவழி பெயருடன் (மேலிருந்து கீழாக)

இந்த அவமானகரமான முடிவானது ஏதென்சில் சிமோனின் புகழ் வீழ்ச்சியடையச் செய்தது. இதன் விளைவாக, இவர் ஏதென்சிலிருந்து கி.மு 461 இல் தொடங்கி பத்து ஆண்டுகளுக்கு ஆஸ்ட்ராசிசம் (நாடுகடத்துதல்) செய்யப்பட்டார்.[14] இதன் பின்னர் சீர்திருத்தவாதி எபியால்ட்டீஸ் ஏதென்சை வழி நடத்துவதில் முன்னிலை வகித்தார். மேலும் பெரிக்ள்சின் ஆதரவுடன், அரேயோபாகசின் ஏதெனியன் ஆட்சிக் குழுவின் அதிகாரத்தைக் குறைத்தார் (முன்னாள் ஆர்கோன்கள் கொண்டது மற்றும் சிலவர் ஆட்சிகுழுவின் கோட்டையாக இருந்தது).

மக்களுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன. அதாவது ஐநூற்றுவர் பேரவை, சட்டமன்றம், சட்ட நீதிமன்றங்கள் போன்றவற்றிற்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன. சிமோனின் சில கொள்கைகள் தலைகீழாக மாற்றப்பட்டன, இதில் இவரது எசுபார்டன் சார்பு கொள்கை மற்றும் பாரசீகத்துடனான சமாதானத்திற்கான இவரது முயற்சிகள் அடங்கும். இவரது பெயரைக் கொண்ட பல ஆஸ்ட்ராகான்கள் (வாக்கு சீட்டாக பயன்படுத்தப்பட்ட ஓட்டுச் சில்லைகள்) கிடைத்துள்ளன; வெறுக்கத்தக்க வாசகங்கள் தாங்கிய ஒரு சில்லையும் கிடைத்துள்ளது.

கிமு 458 இல், சிமோன் தனக்ராவில் எசுபார்த்தாவிற்கு எதிரான போராட்டத்தில் உதவ ஏதென்சுக்குத் திரும்ப முயன்றார், ஆனால் நிராகரிக்கப்பட்டார்.

நாடு திரும்புதல்

தொகு

இறுதியில், கிமு 451 இல், சிமோன் ஏதென்சுக்குத் திரும்பினார். இவர் முன்பு இருந்த அதிகார நிலைக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை என்றாலும், இவர் ஏதென்சின் சார்பாக எபார்த்தன்களுடன் ஐந்தாண்டு போர்நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்த முடிந்தது. பின்னர், பாரசீக கடற்படையானது கிளர்ச்சியில் ஈடுபடும் சைப்பிரசுக்கு எதிராக நகரும் போது, சிமோன் பாரசீகர்களை எதிர்த்துப் போராட ஒரு பயணத்தை முன்மொழிந்தார். இவர் பெரிக்கிள்சின் ஆதரவையும் பெற்றார் மேலும் டெலியன் கூட்டணியின் இருநூறு கப்பல்களுடன் சைப்ரசுக்குச் சென்றார். அங்கிருந்து, நைல் வடிநிலத்தில் இனாரோசின் எகிப்திய கிளர்ச்சிக்கு உதவ கடற்படை அதிகாரி சாரிடிமைட்சின் தலைமையின் கீழ் அறுபது கப்பல்களை எகிப்துக்கு அனுப்பினார். சைப்ரஸ் கிரேக்க நகர அரசுகளின் எழுச்சிக்கு உதவ சிமோன் மீதமுள்ள கப்பல்களைப் பயன்படுத்தினார்.

ஏதென்சை மீளக் கட்டியெழுப்புதல்

தொகு

இவரது பல இராணுவ வீரச்செயல்கள் மற்றும் டெலியன் கூட்டணி மூலம் பெறப்பட்ட பணத்திலிருந்து, ஏதென்சு முழுவதும் பல கட்டுமான திட்டங்களுக்கு நிதியளித்தார். ஏதென்சில் பாரசீகப் படையெடுப்புனால் ஏற்பட்ட அழிவுக்குப் பிறகு நகரை மீள்கட்டமைப்பு பணிகளுக்கு இவை பெரிதும் தேவைப்பட்டன. அக்ரோபோலிஸ் மற்றும் ஏதென்சைச் சுற்றியுள்ள மதில் சுவர்களை விரிவுபடுத்தவும், சாலைகள், பொது தோட்டங்கள் மற்றும் பல அரசு கட்டிடங்கள் கட்டவும் இவர் உத்தரவிட்டார்.[15]

சைப்ரசில் மரணம்

தொகு

கிமு 449 இல் சைப்ரசின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள போனீசியன் மற்றும் பாரசீக கோட்டையான சிடியத்தை சிமோன் முற்றுகையிட்டார்; இந்த முயற்சியில் ஏற்பட்ட தோல்வியால் அல்லது விரைவில் இவர் இறந்தார்.[2] இருப்பினும், இவரது மரணம் ஏதெனிய இராணுவத்திடமிருந்தே இரகசியமாக வைக்கப்பட்டது. சலாமிஸ்-இன்-சைப்ரஸில்[16] இவரது 'கட்டளையின்' கீழ் பாரசீகர்களுக்கு எதிராக ஒரு முக்கியமான வெற்றியைப் பெற்றார். பின்னர் இவரது உடல் ஏதென்சில் புதைக்கப்பட்டது.[17] அங்கு இவரது நினைவாக நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம்

தொகு

ஏதென்சில் சீமோன் புகழும், செல்வாக்கும் செலுத்திய காலத்தில், இவரது உள்நாட்டுக் கொள்கை தொடர்ந்து சனநாயக விரோதமாக இருந்தது. இவரது இந்தக் கொள்கைகள் இறுதியில் தோல்வியடைந்தன. இவரது வெற்றியும், நீடித்த செல்வாக்கும் இவரது இராணுவ சாதனைகள் மற்றும் இவரது வெளியுறவுக் கொள்கையிலிருந்து வந்தது. இவரது வெளியுறவுக் கொள்கையானது இரண்டு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது: அவை பாரசீக ஆக்கிரமிப்புக்கு தொடர்ந்து எதிர்ப்பு, மற்றும் ஏதென்சு கிரேக்கத்தில் மேலாதிக்க கடல் சக்தியாகவும், எசுபார்த்தா மேலாதிக்க தரைப்படை சக்தியாகவும் இருக்க வேண்டும் என்பதை அங்கீகரிப்பது. கிரேக்கத்திற்கு எதிரான பாரசீகத்தின் நேரடியாக இராணுவ ஆக்கிரமிப்பு என்பதை அடிப்படையில் முடிவுக்கு வருவதை உறுதிப்படுத்த இவரது வெளியுறவுக் கொள்கையில் முதல் கொள்கை உதவியது; அடுத்தது பெலோபொன்னேசியன் போர் வெடிப்பதை கணிசமாக தாமதப்படுத்த உதவியது.[8]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 DGRB&M (1867), ப. 749.
  2. 2.0 2.1 EB (1878).
  3. EB (1911), ப. 368.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 புளூட்டாக், Lives. Life of Cimon.(University of Calgary/Wikisource)
  5. Cornelius Nepos, Lives of Eminent Commanders
  6. புளூட்டாக், Lives. Life of Themistocles. (University of Massachusetts பரணிடப்பட்டது 2011-10-31 at the வந்தவழி இயந்திரம்/Wikisource)
  7. Plutarch, Cimon 481.
  8. 8.0 8.1 Bury, J. B.; Meiggs, Russell (1956). A history of Greece to the death of Alexander the Great, 3rd edition. Oxford: Oxford University Press. p. 343.
  9. 9.0 9.1 9.2 Thucydides, The History of the Peloponnesian War.
  10. Herodotus, The History of Herodotus.
  11. The History of the Peloponnesian War by Thucydides, Donald Lateiner, Richard Crawley page 33 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-43762-0
  12. Who's who in the Greek world By John Hazel Page 56 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-12497-2
  13. The Greek World: 479–323 BC, Simon Hornblower. Page 126.
  14. Goušchin, Valerij (2019-02-26). "Plutarch on Cimon, Athenian Expeditions, and Ephialtes' Reform (Plut. Cim. 14-17)" (in en). Greek, Roman, and Byzantine Studies 59 (1): 38–56. பன்னாட்டுத் தர தொடர் எண்:2159-3159. https://grbs.library.duke.edu/article/view/16194. 
  15. Wycherley, R.E. (1992). "Rebuilding in Athens and Attica". Cambridge Histories 5: 206–222. 
  16. Plutarch, Cimon, 19
  17. EB (1911), ப. 369.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமோன்&oldid=3743959" இலிருந்து மீள்விக்கப்பட்டது