மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் கோயில்

மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் கோயில் என்பது இராமநாதபுரம் மாவட்டம், மேலக்கொடுமலூரில் உள்ள முருகன் கோயிலாகும்.

கோயிலின் வரலாறு தொகு

முருகன் அசுரனை மழு என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தால் அழித்துவிட்டு திரும்பும்போது, அங்கிருந்த முனிவர்கள் முருகனைக் கண்டுவணங்கினர். அந்த இடத்திலேயே (மேற்கு திசையில்) முருகன் நின்று அருளாசி வழங்கினார் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் இந்த ஊருக்கு மேலக்கொடுமழூர் என்ற பெயர் ஏற்பட்டது. மேலக்கொடுமழூர் என்றால் ‘வலிமைமிக்க மழு ஆயுதம் தாங்கி மேற்கு திசை நோக்கி நிற்கின்றவனின் ஊர்’ என்று பொருள். மேலக்கொடுமழுர் என்பது காலப் போக்கில் மருவி மேலக்கொடுமலூர் என மாறிவிட்டது எனக் கூறப்படுகிறது. இக்கோயிலை இராமநாதபுரம் சேதுபதி மன்னர் கட்டினார். [1] இக்கோயில் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது, கோயில் இறைவனான முருகனும் மேற்கு பார்த்தபடி இருப்பது சிறப்பு. இங்கு குமரக்கடவுள் சுயம்பு மூர்த்தியாக சுமார் ஆறு அடி உயரத்தில் காட்சியளிக்கிறார். குமரனுக்கு வாரத்தில் திங்கள், வெள்ளி, ஆகிய இரு நாட்களில் மட்டும் தான் பகளில் அபிஷேகம் பூசை செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் .இரவில் மட்டுமே அபிஷேகம் மற்றும் பூசை செய்யப்படுகிறது.[2]

திருப்பணிகள் தொகு

இக்கோயிலுக்கு. 1926 ஆம் ஆண்டு முதன்முறையாக குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் 2004 ஆம் ஆண்டு கோயில் புணரமைக்கப்பட்டபோது இக்கோயிலைப் பற்றி ஜவாது புலவர் பாடிய குமரையா பதிகத்தை கோயில் மதில் சுவரில் கல்வெட்டாகப் பதித்து கோயிலின் விமானத்தின் தெற்குப் பகுதியில் ஜவாது புலவரின் உருவத்தைச் சுதையில் அமைத்தனர்.

இலக்கியங்கள் தொகு

இக்கோயில் பாம்பன் சுவாமிகள், முகம்மது மீர் ஜவாது புலவர் ஆகியோரால் பாடப்பட்டது, மேலும் வேம்பத்தூர் கவிராஜ பண்டிதரால் "மேலக்கொடுமளுர் முருகன் ஞான உலா" என்ற இலக்கியம் பாடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. எஸ்.முஹம்மது ராஃபி (22 அக்டோபர் 2016). "முருகன் கோயிலில் முஸ்லிம் புலவருக்கு சிலை: மத நல்லிணக்கத்துக்கு சான்றாக விளங்கும் மேலக்கொடுமலூர்". செய்திக் கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2016.
  2. "அருள்மிகு சுப்பிரமணியசுவாமி (குமரக்கடவுள் ) கோயில்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2016.