ம. வே. மகாலிங்கசிவம்
ம. வே. மகாலிங்கசிவம் (1891 - மார்ச் 13, 1941) ஈழத்துத் தமிழறிஞரும், புலவரும், சிறந்த சொற்பொழிவாளரும் ஆவார். தமது பன்னிரண்டாவது அகவையிலேயே பழனிப் பதிகம் பாடியவர். குருகவி என அறிஞர்கள் இவரை அழைப்பர். ”கற்பனைச் சுருக்கம்” எனப் போற்றப்பட்டவர்.
ம. வே. மகாலிங்கசிவம் | |
---|---|
பிறப்பு | 1891 மட்டுவில், யாழ்ப்பாண மாவட்டம் |
இறப்பு | மார்ச் 13, 1941 (அகவை 49–50) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | புலவர், பேச்சாளர், தமிழாசிரியர் |
அறியப்படுவது | தமிழறிஞர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | ம. க. வேற்பிள்ளை |
பிள்ளைகள் | நால்வர் |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுமகாலிங்கசிவம் 1891 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மாவட்டம், மட்டுவில் என்ற ஊரில் உரையாசிரியரும், தமிழாசிரியருமான ம. க. வேற்பிள்ளை, மகேசுவரி ஆகியோரின் ஐந்து பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர். வழக்கறிஞர் வே. மாணிக்கவாசகர், எழுத்தாளர் ம. வே. திருஞானசம்பந்தம் பிள்ளை, மற்றும் ஆசிரியர்கள் கந்தசாமி, நடராசா ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள். சிறு வயதிலேயே தந்தையிடம் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தெளிந்தார். பின்னர் பெயர்த்தி பார்வதிப் பாட்டியிடம் கல்வி கற்றார்.[1]
மட்டுவிலில் தந்தை ஆரம்பித்த நாவலர் காவியப் பாடசாலையில் இலக்கியம், இலக்கணம் கற்பித்து வந்தார். இவரிடம் கல்வி கற்றவருள் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 1923 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[1]
எழுத்து
தொகுசிறு வயதில் இருந்தே கவி பாடும் வல்லமை பெற்றிருந்தார். சிறு வயதில் பழனிப் பதிகம் என்ற ஆக்கத்தை எழுதினார். ஈழ மண்டல சதகம், இராமநாத மான்மியம், கணேசையர் மலர், ஈழகேசரி மலர் ஆகியவற்றில் இவர் எழுதிய சில சிறப்புப் பாயிரங்களும், சில தனிப்பாடல்களுமே இன்றுள்ளன.[1] காமாட்சி அன்னை, புன்னெறி விளக்கு ஆகியன இவர் பாடிய தனிப்பாடல்களில் சில. 1939 இல் ஈழகேசரி ஆண்டு மலரில் அன்னை தயை என்ற சிறுகதையை எழுதியுள்ளார்.
குடும்பம்
தொகுமகாலிங்கசிவம் 1941 மார்ச் 13 இல் மரணமானார். இவருக்கு நான்கு பிள்ளைகள். மகள் பிரபாவதி அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர். சிறு வயதிலேயே இறந்து விட்டார். நான்காவதாகப் பிறந்த ம. பார்வதிநாதசிவம் புலவரும், பத்திரிகையாளரும் ஆவார்.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- குருகவி ம. வே. மகாலிங்கசிவம் வரலாறும் ஆக்கங்களும், ம. பா. மகாலிங்கசிவம் (நூலகத்தில்)