ரீட் ஆணையம்
ரீட் ஆணையம் அல்லது ரீட் கமிசன் (ஆங்கிலம்: Reid Commission; மலாய்: Suruhanjaya Reid) என்பது பிரித்தானியரிடம் இருந்து மலாயா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், மலாயா அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நடுநிலையான ஆணையமாகும்.
இந்த ஆணையத்தின் பரிந்துரைகளுக்குப் பின்னர், 1957 ஆகஸ்டு 31-ஆம் தேதி பிரித்தானியரிடம் இருந்து மலாயா விடுதலை பெற்றது.
மலாயாவைச் சுயமாக ஆளும் ஒரு கூட்டமைப்புக்கு ஓர் அரசியலமைப்பு தேவை; அந்த அரசியலமைப்பை வடிவமைக்க ஓர் ஆணையம் நியமிக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டது.[1] அந்த முன்மொழிவை இரண்டாம் எலிசபெத் ராணியாரும்; மலாயா மலாய் ஆட்சியாளர்களும் ஏற்றுக் கொண்டனர்.
அத்தகைய ஓர் உடன்படிக்கைக்கு இணங்க, காமன்வெல்த் நாடுகளின் அரசியலமைப்பு வல்லுநர்களைக் கொண்டு ஓர் ஆணையம் அமைக்கப் பட்டது. அதற்குப் பெயர் ரீட் ஆணையம்.
பொது
தொகு1956 ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கி 1956 பிப்ரவரி 6-ஆம் தேதி வரை இங்கிலாந்து, லண்டனில் ஓர் அரசியலமைப்பு மாநாடு நடைபெற்றது.
அதில் மலாயா கூட்டமைப்பின் முதல்வர் துங்கு அப்துல் ரகுமான்; மற்றும் மூன்று அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் மலாயாவின் அப்போதைய பிரித்தானிய உயர் ஆணையர் மற்றும் அவரின் ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.[2]
புதிய அரசியலமைப்பிற்குப் பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்காக வில்லியம் ரீட் (Lord William Reid) என்பவரின் தலைமையில் ஓர் ஆணயம் அமைக்கப் பட்டது.
ரீட் ஆணையத்தின் அறிக்கை ஆய்வு
தொகுரீட் ஆணையத்தின் அறிக்கை 11 பிப்ரவரி 1957-இல் தயாரித்து முடிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரித்தானிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு பணிக்குழு; மலாயா ஆட்சியாளர்களின் சம்மேளனம்; மலாயா கூட்டமைப்பு அரசாங்கம்; ஆகிய மூன்று தரப்பினரால் ரீட் ஆணையத்தின் அறிக்கை ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர் இவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் மலாயாவின் அரசியலமைப்பு இயற்றப்பட்டது.[3]
ரீட் ஆணய உறுப்பினர்கள்
தொகு- லார்ட் ரீட் (Lord James Reid) - இங்கிலாந்து (தலைவர்)
- சர் ஐவர் ஜென்னிங் (Sir Ivor Jennings) - இங்கிலாந்து
- சர் வில்லியம் மெக்கெல் (Sir William McKell) - ஆஸ்திரேலியா
- அக்கீம் பி. மாலிக் (Hakim B. Malik) - இந்தியா
- சேக் அக்கீம் அலீம் பின் அப்துல் அமீத் (Sheikh Hakim Halim bin Abdul Hamid) - பாகிஸ்தான்
இந்த ஆணையத்தில் கனடா நாட்டுப் பிரதிநிதி ஒருவரைச் சேர்த்து இருக்க வேண்டும். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.[4]
1956 ஜூன் மாதம் தொடங்கி 1956 அக்டோபர் மாதம் வரையில் ரீட் ஆணையம் 118 முறை சந்திப்புக் கூட்டங்களை நடத்தியது. பல்வேறு தனிநபர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து 131 நினைவூட்டல்களைப் (memoranda) பெற்றது. அதில் மலாயா கூட்டணிக் கட்சி மற்றும் மலாயா ஆட்சியாளர்களின் மாநாட்டு அறிக்கைகளும் அடங்கும்.
பணி வரைவு
தொகு1957-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி ரீட் ஆணையம் தனது பணி வரைவைச் சமர்ப்பித்தது. பின்னர் அந்தப் பணி வரைவு ஒரு செயற்குழுவால் ஆராயப் பட்டது.
செயற்குழுவில் மலாய் ஆட்சியாளர்களின் நான்கு பிரதிநிதிகள்; கூட்டணி அரசாங்கத்தின் நான்கு பிரதிநிதிகள்; பிரித்தானிய உயர் ஸ்தானிகர்; தலைமைச் செயலாளர்; மற்றும் அரசுத் தலைமை வழக்குரைஞர் ஆகியோர் இருந்தனர்.
உள்ளடக்க அட்டவணை
தொகு- அத்தியாயம் I - பொது அறிமுகம்
(Chapter I – General Introduction) - அத்தியாயம் II - வரலாற்று அறிமுகம்
(Chapter II – Historical Introduction) - அத்தியாயம் III - குடியுரிமை
(Chapter III – Citizenship) - அத்தியாயம் IV - நாடாளுமன்றம் மற்றும் நிர்வாகம்
(Chapter IV – Parliament and the Executive) - அத்தியாயம் V - சட்டம் இயற்றுதல் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் பிரிவு
(Chapter V – Division of Legislative and Executive Powers) - அத்தியாயம் VI - நீதித்துறை
(Chapter VI – The Judiciary) - அத்தியாயம் VII - நிதி
(Chapter VII – Finance) - அத்தியாயம் VIII - பொது சேவைகள்
(Chapter VIII – The Public Services) - அத்தியாயம் IX - அடிப்படை உரிமைகள்
(Chapter IX – Fundamental Rights) - அத்தியாயம் X - மாநிலங்கள்
(Chapter X – The States) - அத்தியாயம் XI - குடியிருப்புக்கள்
(Chapter XI – The Settlements) - அத்தியாயம் XII - பரிந்துரைகளின் சுருக்கம்
(Chapter XII – Summary of Recommendations)
அரசியலமைப்பு வரைவு
தொகுகூட்டாட்சி மற்றும் அரசியலமைப்பு முடியாட்சி போன்ற கருத்துகளை அந்த அரசியலமைப்பு வரைவு உள்ளடக்கி இருந்தன. இருந்தாலும், ரீட் ஆணயத்தால் முன்மொழியப்பட்ட மலாயா அரசியலமைப்பில் மலாய்க்காரர்களுக்கான சிறப்பு நிலையைப் பாதுகாக்கும் விதிகளும் இருந்தன.
உயர்கல்வி மற்றும் பொதுச் சேவையில் சேர்வதற்கான இட ஒதுக்கீடுகள் மற்றும் இஸ்லாத்தை அதிகாரப்பூர்வ மதமாக்குதல் போன்ற விதிகள் உள்ளன.
மலாய் மொழியை நாட்டின் அலுவல் மொழியாக்குவது; சீன மொழியிலும் தமிழ் மொழியிலும் மொழிக் கல்வி பெறும் உரிமையைப் பாதுகாத்தல் போன்ற விதிகள் உள்ளன.
மலாய்க்காரர்களின் சிறப்பு நிலை
தொகு"சுதந்திரமான மலாயாவில் அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமைகள், சமச் சலுகைகள் மற்றும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்; இனம் மற்றும் மத அடிப்படையில் பாகுபாடு இருக்கக் கூடாது" என்பதை உறுதிப் படுத்துமாறு ரீட் ஆணையத்திடம் துங்கு அப்துல் ரகுமான் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் கேட்டுக் கொண்டனர்.
இருப்பினும், மலாய்க்காரர்களின் சிறப்பு நிலை அவசியமானது என ஆளும் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பில் (United Malays National Organisation) இருந்த பலர் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடப்பட்டது.
சர்ச்சைக்குரிய அந்தப் பகுதிகள் மலாயா அரசியலமைப்பு பிரிவின் 3, 152 மற்றும் 153 (Articles 3, 152 and 153 of the Constitution) பிரிவுகளாகச் சேர்க்கப் பட்டன.[5][6]
அரசியலமைப்புச் சட்டம்
தொகுஅரசியலமைப்புச் சட்டம், 1957 ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஆனாலும் மலாயாவிற்கு முறையான சுதந்திரம் 1957 ஆகஸ்ட் 31-ஆம் தேதி கிடைக்கப் பெற்றது.
பின்விளைவுகள்
தொகு1963-ஆம் ஆண்டில் சிங்கப்பூர், சபா மற்றும் சரவாக் ஆகியவை மலாயா கூட்டமைப்புடன் (Federation of Malaya) இணைந்தன. மலேசியா எனும் கூட்டமைப்பு (Federation of Malaysia) உருவானது.
அந்தக் கட்டத்தில் அரசியலமைப்பில் பெரிய அளவிலான திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்தத் திருத்தங்கள் கொண்ட அரசியலமைப்பு, இப்போது கூட்டாட்சி அரசியலமைப்பு (Federal Constitution) என்று அறியப் படுகிறது.
சான்றுகள்
தொகு- Mohamed Suffian Hashim, An Introduction to the Constitution of Malaysia, second edition, Kuala Lumpur: Government Printers, 1976.
மேற்கோள்கள்
தொகு- ↑ See paragraphs 74 and 75 of the report by the Federation of Malaya Constitutional Conference
- ↑ See paragraph 3 of the Report by the Federation of Malaya Constitutional Conference
- ↑ Wu Min Aun (2005).The Malaysian Legal System, 3rd Ed., pp. 47 and 48.: Pearson Malaysia Sdn Bhd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-74-3656-5.
- ↑ Stilt, Kristen (2015). "Contextualizing constitutional Islam: The Malayan experience". International Journal of Constitutional Law 13 (2): 414. doi:10.1093/icon/mov031. https://academic.oup.com/icon/article/13/2/407/735734.
- ↑ Adam, Samuri & Fadzil, p. 153–155.
- ↑ Ooi, Jeff (2005). "Social Contract: 'Utusan got the context wrong'" பரணிடப்பட்டது 2005-10-30 at the வந்தவழி இயந்திரம்.