லோம்போக் நீரிணை

லோம்போக் நீரிணை என்பது, சாவாக் கடலையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கும் ஒரு நீரிணை. இது இந்தோனீசியத் தீவுகளான பாலிக்கும், லோம்போக்குக்கும் இடையில் அமைந்துள்ளது. கிலித் தீவுகள் லோம்போக்கின் பக்கத்தில் உள்ளன. இதன் மிக ஒடுக்கமான பகுதி தெற்கு நுழைவாயில் பகுதியில் லோம்போக் தீவுக்கும், நூசா பெனிடாத் தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் நீரிணையின் அகலம் 20 கிமீ. வடக்கு நுழைவுப் பகுதியில் இதன் அகலம் 40 கிமீ. நீரிணையின் நீளம் 60 கிமீ. இதன் ஆழம், மலாக்கா நீரிணையின் ஆழத்தை விடக் மிகவும் கூடுதலாக 250 மீட்டர்களாக[1] இருப்பதால், மலாக்கா நீரிணையூடாகச் செல்ல முடியாத கப்பல்கள் பெரும்பாலும் லோம்போக் நிரிணையையே பயன்படுத்துகின்றன.

இந்தியப் பெருங்கடலுக்கும், பசிபிக் பெருங்கடலுக்குமிடையே நீர்ப் பரிமாற்றம் ஏற்படுத்தும் இந்தோனீசிய ஊடுநீரோட்டத்தின் முக்கிய வழிகளுள் ஒன்றாக லோம்போக் நீரிணை உள்ளது.

இந்தோமலாயா சூழ்நிலைமண்டல விலங்கு வளப் பகுதிக்கும், அதிலிருந்து வேறுபட்டுத் தனித்துவமாகக் காணப்படும் ஆசுத்திரலேசிய விலங்கு வளப் பகுதிக்கும் இடையிலான உயிர்ப்புவியியல் எல்லையின் ஒரு பகுதியாகவும் இந்த நீரிணை உள்ளது. இவ்விரு பகுதிகளிலும் வாழும் விலங்குகள் வேறுபட்டுக் காணப்படுவதையும், இவற்றுக்கிடையே சடுதியான மாற்றத்தைக் காட்டும் எல்லை காணப்படுவதையும் முதலில் எடுத்துக்காட்டிய அல்பிரட் ரசல் வாலசு என்பவர் பெயரில் இந்த எல்லை வாலசுக் கோடு என அழைக்கப்படுகிறது.

லோம்போக் நீரிணையின் ஆழமே இதன் இரு பக்கங்களிலும் வாழும் விலங்குகள் தனிமைப்பட்டதற்கான காரணம் என உயிரியலாளர்கள் நம்புகின்றனர். பிளீத்தோசீன் பனிக்கட்டிக் காலத்தில் கடல் நீர் மட்டம் குறைவாக இருந்தபோது, பாலி, சாவா, சுமாத்திரா ஆகிய தீவுகள் ஒன்றுடன் ஒன்றும், ஆசியத் தலைநிலத்துடனும் இணைந்திருந்தன. இதனால் இத்தீவுகள் ஆசிய விலங்குகளைக் கொண்டுள்ளன. லோம்போக் நீரிணையின் ஆழம் லோம்போக்கையும், சுண்டா சிறு தீவுகளையும் ஆசியத் தலைநிலத்தில் இருந்து பிரித்து வைத்திருந்தது. இதனால் இப்பகுதியில் ஆசுத்திரலேசிய விலங்குகளே காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Susanto, R. Dwi; Leonid Mitnik; Quanan Zheng (December 2005). "Ocean Internal Waves Observed in the Lombok Strait" (PDF). Oceanography. The Oceanography Society. p. 83. Archived from the original (பி.டி.எவ்) on 2009-02-27. பார்க்கப்பட்ட நாள் 2008-05-16.

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோம்போக்_நீரிணை&oldid=3702659" இலிருந்து மீள்விக்கப்பட்டது