வயலூர் முருகன் கோயில்

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் கோயில்

வயலூர் முருகன் கோயில் (ஆங்கில மொழி: Vayalur Murugan Temple) என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாநகரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் குமார வயலூர் என்ற ஊரில் உள்ள கோயிலாகும். இக்கோயில் சிவன், பார்வதி மகனான முருகப் பெருமானுக்கான ஒரு கோயிலாகும். ஒன்பதாம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் இந்த கோயில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் இக்கோயில் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. கருவறையின் முதன்மை தெய்வம் சிவன் என்றாலும், இக்கோயில் முருகன் கோயிலாக புகழ்பெற்றுள்ளது. இக்கோயில் கௌமார வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக முருகப் பெருமானின் அடியாரான அருணகிரிநாதர் பாடிய தலமாகவும் திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் விளங்குகிறது.


வயலூர் முருகன் கோயில்
பிற பெயர்கள் ஆதி வயலூர்
குமார வயலூர்
கணபதி பொய்யாக் கணபதி
மூலவர் ஆதிநாதர்
மறப்பிலி நாதர்
அக்னீஸ்வரன்
மூலவி ஆதிநாயகி
தல மரம் வன்னி மரம்
தீர்த்தம் சக்தி தீர்த்தம்
சிறப்பு அருணகிரிநாதரின் பாடல்கள் பெற்ற தலம்
திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலம்
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
மாநிலம் தமிழ்நாடு
கட்டியவர் சோழர்

வரலாறு

தொகு

இக்கோயிலை முற்கால சோழ மன்னனான ஆதித்த சோழனால் சோழர் கலைப்பாணியில் பரிவார தெய்வங்களுக்கான தனி சந்நிதிகளோடு கற்றளியான ஒரு சிவன் கோயிலாக கட்டப்பட்டது. இக்கோயில் இறைவன் வயலூர் திருகற்றளி பரமேசுவரர் என அழைக்கப்பட்டார். இந்த ஊருக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த சேந்தன்காரி என்ற பெண் இந்தக் கோயிலின் இறைவனுக்கு ஒரு இறைவியாக உமா தேவியின் செப்புச் படிமத்தை செய்து அளித்தாள். அந்த உமையை மன் மகளாக பாவித்து இறைவனுக்கு மணம் செய்துவித்தாள். இறைவிக்கு திருவமுது படைக்க தன் பிறந்தகத்தில் சீதனமாக வந்த வயலை தானமாக அளித்தாள்.[1]

கோயில்

தொகு

பசுமையான வயல்களால் சூழப்பட்டுள்ள இக்கோயில் உய்யகொண்டான் ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோயில் கிழக்கு பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. கோயில் இரு திருச்சுற்றுகளைக் கொண்டுள்ளது. மூலவரான சிவன் சந்நிதிக்கு பின்புறம் உள்ள முருகப் பெருமான் கோயிலின் முக்கிய தெய்வமாக கருதப்படுகிறார். இக்கோயிலில் உள்ள மற்ற சந்நிதிகள் மூலவர் ஆதிநாதர் (சிவன்). இத்தலத்தில் உள்ள அக்னி தீர்த்தம் சக்தி தீர்த்த குளம் என்றும் அழைக்கப்படுகிறது. தொன்மத்தின் படி, முருகப்பெருமான் தனது வேலாயுதத்தால் இந்த குளத்தை உருவாக்கினார் எனப்படுகிறது. இராசகோபுரத்தின் நுழைவாயிலில் இருந்து இடது புறத்தில் ததல மரமான வன்னி மரம் காணப்படுகிறது. இக்கோயிலுக்கு அமைக்கபட்டுள்ள ஐந்து நிலை இராசகோபுரம் அண்மைக் காலத்தில் கட்டபட்டதாகும். இத்தல சிவன் ஆதிநாதராகவும், அவரது துணைவியார் ஆதிநாயகியாகவும் உள்ளனர். முத்துக்குமாரசுவாமியின் திருவுருவம் கருவறைக்கு பின்புறம் முதல் பிராகாரத்தில் அமைந்துள்ளது.[2][3]

தல வரலாறு

தொகு

இறைவன் தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொண்ட சிறப்பு வாய்ந்த தலங்களில் ஒன்றாக வயலூரைக் கருதுகின்றனர்.

காட்டு விலங்குகளை வேட்டையாடச் சென்ற ஒரு சோழ அரசன் (பெயர் அறியவில்லை) தனது தாகம் தணிக்க கண்ணில் பட்ட கரும்பொன்றை உடைத்து அதன் சாற்றினை அருந்த முற்படுகையில் அது மூன்று கிளைகளாக முறிந்து நின்ற அற்புதம் கண்டு வியப்புற்றான். மேலும் முறிந்த கரும்பிலிருந்து குருதியும் உதிரவே, அக்கரும்பு பயிரான வயலைத் தோண்டிப் பார்க்கையில், சிவலிங்கம் இருக்கக் கண்டான்.

கரும்பினைக் கண்ணுற்ற இடத்திலேயே அச்சிவலிங்கத்தை ஆகம விதிகளின்படி நிறுவி கோயில் ஒன்று எழுப்பினான். மூலவரான சிவன் ஆதிநாதர் எனவும், மூலவி ஆதி நாதி எனவும் வழங்கலாயினர். வயலிடை கண்ணுற்ற மூலவர் என்பதனால், வயலூர் என அவ்விடம் வழங்கப் பெறலாயிற்று.

விழாக்கள்

தொகு
 
முருகனின் உற்சவர் சிலை

கோவில் நாள்தோறும் ஆறுகால பூசை செய்யப்படுகிறது. காலை 6:00 மணிக்கு காலசாந்தி பூசையும், 8:00 மணிக்கு முத்தால காலப் பூசையும், 12:00 மணிக்கு உச்சிக்காலப் பூசையும் முடிந்து மதியம் ஒரு மணிக்கு நடை சார்த்தபடுகிறது. மீண்டும் மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கபடுகிறது. மாலை 6:00 மணிக்கு சாயரக்சை பூசையும், இரவு 8:00 மணிக்கு இரண்டாம் காலப் பூசையும். இரவு 9 மணிக்கு அர்த்தயாம பூசையும் செய்யப்படுகிறது. திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாராந்திர பூசை சடங்குகளும், பிரதோசம் போன்ற இருவார சடங்குகளும், அமாவாசை, கிருத்திகை, பௌர்ணமி, சதுர்த்தி போன்ற மாதாந்திர சிறப்பு பூசைகளும் செய்யப்படுகின்றன. பதினோரு நாள் விழாவாக கொண்டாடப்படும் வைகாசி விசாகம் இங்கு முக்கிய வாழாவாக கொண்டாபட்டுகிறது. மேலும் இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களாக தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடிக் கார்த்திகை, திருக்கார்த்திகை, கந்த சஷ்டி ஆகியவை உள்ளன திருவிழாக்களாகும்.[4] இக்கோயில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான கோயில்களில் ஒன்றாகும்.[5]

தலச் சிறப்புக்கள்

தொகு
  • தம்மை நாடி வரும் பக்தர்களின் வேண்டுகோட்களை மறவாமல் நிறைவேற்றி அவர்தம் துயரம் போக்குவதால் ஆதிநாதர் என்னும் மூலவரை மறப்பிலி நாதர் எனவும் வழங்குகின்றனர். அக்னி வழிபட்டமையால், ஆதிநாதர் அக்னீஸ்வரன் என்றும் வழங்கலானார்.
  • வடமுகம் நோக்கி அமர்ந்திருக்கும் ஆதிநாயகி இத்தலத்தின் தனிச்சிறப்பு.
  • பொய்யான வாழ்வின் மாயைகளை அகற்றித் தம்மை நாடி வருபவருக்கு மெய்ஞானம் அருளும் காரணத்தால் இங்கு வீற்றிருக்கும் கணபதியைப் பொய்யாக் கணபதி எனத் துதிக்கின்றனர். இவரது கையில் உள்ள விளாங்கனி, பழத்தின் ஓடு போன்ற மனித உடல்சார்ந்த மாயைகளை நீக்குவதன் உருவகம் எனப் பொருள் கூறுவர்.
  • வயலூரை முத்தித் தலம் எனப் போற்றுவர்.
  • இங்கு தாண்டவக் கோலத்தில் இருப்பினும், உற்சவரின் காலடியில் முயலகன் உருவகம் கிடையாது. தில்லை அம்பல நடராசனைப் போலன்றி, ஆடிய பாதனார் இத்தலத்தில் அமைதியான தோற்றம் கொண்டு காணப்படுகிறார்.
  • தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும் ஆதி நாதியையும் முருகப் பெருமான் பூசிப்பது வயலூரின் தனிச் சிறப்பு.
  • இங்குள்ள சக்தி தீர்த்தம் முருகப் பெருமான் தமது வேலால் குத்தி உருவாக்கியது எனக் கூறுவர்.
  • அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் தடுத்தாட்கொண்ட எம்பிரான் முருகப் பெருமான் வயலூருக்கு அவரை அழைத்து அதன் சிறப்புக்களைப் பாமாலையாகத் தொடுக்க வைத்தான்.
  • 20ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பக்திமானும் சொற்பொழிவாளருமான திருமுருக கிருபானந்த வாரியார், வயலூர் முருகனிடத்தே மாறா பக்தி பூண்டிருந்தார்.
  • திருமணத் தடைகளைப் போக்கும் தலமாக இதனைப் போற்றுகின்றனர்.

வயலூர் தலப் பாடல்கள்

தொகு

"கைத்தல நிறைகனி" எனத்துவங்கும் பாடலை, இங்குள்ள பொய்யாக் கணபதியைக் குறித்தே அருணகிரிநாதர் பாடியதாகக் கூறுவர்.

இத்தலத்து முருகப் பெருமானைக் குறித்து அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ்ப் பாடல் ஒன்றினைக் கீழே காணலாம்:

திருவு ரூப நேராக அழக தான மாமாய திமிர மோக மானார்கள் கலைமூடுஞ்
சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவி செருகு மால னாசார வினையேனைக்
கருவி ழாது சீரோதி யடிமை பூண லாமாறு கனவி லாள்சு வாமீநின் மயில்வாழ்வுங்
கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத கழலு நீப வேல்வாகு மறவேனே
சருவ தேவ தேவாதி நமசி வாய நாமாதி சயில நாரி பாகாதி புதல்வோனே
சதம கீவல் போர்மேவு குலிச பாணி மால்யானை சகச மான சாரீசெ யிளையோனே
மருவு லோக மீரேழு மளவி டாவொ ணாவான வரையில் வீசு தாள்மாயன் மருகோனே
மநுநி யாய சோணாடு தலைமை யாக வேமேலை வயலி மீது வாழ்தேவர் பெருமாளே.

சிறப்பு விழாக்கள்

தொகு

முருகப் பெருமானுக்கு தனிச் சிறப்பளிக்கும் சிவன் கோயிலானதால், இத்தலத்தின் தனிச்சிறப்பு விழாக்கள் கந்த சஷ்டி, வைகாசித் திங்கள் விசாகம் மற்றும் பங்குனித் திங்கள் உத்திரம் ஆகியவை.

மேற்கோள்கள்

தொகு
  1. "பரமனுக்கு மணமுடித்த பக்தை". Hindu Tamil Thisai. 2023-05-25. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28.
  2. "Arulmigu Subramaniya Swamy Temple". Vayalur Murugan.
  3. Tourist Guide to Tamil Nadu. Sura Books. 2010. p. 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7478-177-2.
  4. "Sri Subramanyaswami temple". தினமலர். 2014. பார்க்கப்பட்ட நாள் 24 November 2015.
  5. Dr. R., Selvaganapathy, ed. (2013). Saiva Encyclopaedia volume 5 - Temples in Tamil Nadu (Later period) (in Tamil). Chennai, India: Saint Sekkizhaar Human Resource Development Charitable Trust. p. 496.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயலூர்_முருகன்_கோயில்&oldid=4168528" இலிருந்து மீள்விக்கப்பட்டது