தி. ச. வரதராசன்
வரதர் என அழைக்கப்படும் தி. ச. வரதராசன் (தியாகர் சண்முகம் வரதராசன்) (ஜூலை 1, 1924 - டிசம்பர் 21, 2006), சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் பலதுறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்தவர். ஈழத்து இலக்கியத்தில் மறுமலர்ச்சி எழுத்தாளர் என அழைக்கப்பட்டவர்.
வரதர் | |
---|---|
பிறப்பு | தியாகர் சண்முகம் வரதராசன் ஜூலை 1, 1924 |
இறப்பு | டிசம்பர் 21, 2006 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | சண்முகம் / சின்னத்தங்கம் |
உறவினர்கள் | மனைவி மகாதேவியம்மா |
பிறப்பும் கல்வியும்
தொகு1924 இல் பொன்னாலையில் சண்முகம் - சின்னத்தங்கம் தம்பதியினரின் நான்கு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர் வரதர். இரத்தினம்மா, அன்னம்மா, தங்கச்சியம்மா ஆகியோர் அவரது சகோதரிகள். இவரது தந்தை ஒரு வர்த்தகர். தனது ஆரம்பக் கல்வியை பொன்னாலை அமெரிக்கன் மிசன் தமிழ்ப் பாடசாலையில் பெற்றார். ஆறாம் வகுப்பை மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், ஏழாம் வகுப்பை சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியாசாலையிலும், எட்டாம் வகுப்பை காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையிலும் கற்றார். சிரேட்ட தராதரப் பத்திர வகுப்பை மீண்டும் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கற்றார்.
திருமண வாழ்க்கை
தொகுசுழிபுரத்தில் பிறந்து மலேயாவில் வாழ்ந்த ஆறுமுகம் - மனோன்மணி தம்பதியினரின் மகளான மகாதேவியம்மாவை வரதர் தனது 27ஆவது வயதில் 1951 நவம்பர் 7 ஆம் திகதி திருமணம் செய்தார். இவர்களுக்குச் செந்தாமரை, தேன்மொழி, மலர்விழி ஆகியோர் புதல்விகள். இவர்களில் செந்தாமரை கனடாவிலும் மலர்விழி லண்டனிலும் வாழ்கின்றனர். வரதர் ஆசிரியையான தேன்மொழியுடன் இறுதிவரை வாழ்ந்தார்.
சிறுகதைகள், கவிதை
தொகுஇவரது முதற் சிறுகதையான கல்யாணியின் காதல் ஈழகேசரியில் வெளியானது. ஜூன் 13, 1943 இல் ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான 'தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்' தொடங்கப்படக் காரணமாயிருந்தோரில் இவர் ஒருவர். இதே ஆண்டில் (1943) ஈழகேசரியில் வரதர் எழுதிய ஓர் இரவினிலே எனும் வசன கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது. வரதரின் முதற் சிறுகதைத் தொகுதியான கயமை மயக்கம் 1960இல் வெளியானது.
சஞ்சிகைகள்
தொகுமறுமலர்ச்சி சஞ்சிகையின் (1946 - 1948) ஆசிரியர் குழுவில் ஒருவர். ஆனந்தன் (1952), தேன் மொழி (1955), வெள்ளி (சஞ்சிகை), புதினம் (வார இதழ்), அறிவுக் களஞ்சியம் (1992-1995, 1998) ஆகியன இவர் நடத்திய இதழ்கள்.
வரதர் வெளியீடு
தொகுவரதர் தொழிலால் ஓர் அச்சக முகாமையாளர். "வரதர் வெளியீடு" என்னும் வெளியீட்டு முயற்சியின் மூலம் பெருமளவு நூல்களை வெளியிட்டுள்ளார். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் இலக்கிய வழியே வரதர் வெளியீடாக வெளிவந்த முதல் நூலாகும். மஹாகவி, வித்துவான் பொன். முத்துக்குமாரன், செங்கை ஆழியான், சாந்தன், க. கைலாசபதி, முருகையன், நா. சோமகாந்தன், நாவற்குழியூர் நடராஜன் போன்ற பலரது நூல்கள் வரதர் வெளியீடாக வெளிவந்துள்ளன. பதினைந்து வயதிற்குட்பட்ட சிறார்களுக்காக வரதர் கதைமலர் தொடரில் ஐந்து நூல்களை வெளியிட்டார். வரதரின் பல குறிப்பு என்ற பெயரில் தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத் தொகுத்து ஆண்டுக்கு ஒன்றாக நான்கு பதிப்புக்கள் வெளியிட்டார்.
விருதுகள்
தொகுவரதரின் சேவைகளைப் பாராட்டி இலங்கைக் கலைக் கழகம் அவருக்கு சாகித்திய இரத்தினம் எனும் பட்டத்தை அளித்தது.
இவரது நூல்கள்
தொகு- கயமை மயக்கம் (சிறுகதைகள்)
- நாவலர்
- வாழ்க நீ சங்கிலி மன்ன
- மலரும் நினைவுகள்
- பாரதக்கதை
- யாழ்ப்பாணத்தார் கண்ணீர்
- சிறுகதை பட்டறிவுக் குறிப்புகள்
வெளி இணைப்புக்கள்
தொகுநூலகம் திட்டத்தில் வரதரின் நூல்கள்
தொகு- நாவலர் பரணிடப்பட்டது 2006-05-10 at the வந்தவழி இயந்திரம்
- கயமை மயக்கம் பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
வரதர் பற்றியவை
தொகுஉசாத்துணை
தொகு- ஈழத்துச் சிறுகதை வரலாறு - கலாநிதி க. குணராசா, டிசம்பர் 2001