டென்னிசு

(வரிப்பந்தாட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டென்னிசு (ரென்னிஸ், தட்டுப்பந்து, வரிப்பந்தாட்டம்) என்பது, எதிரெதிராக இருவரோ, அல்லது எதிரெதிராக அணிக்கு இருவராக மொத்தம் நால்வரோ சேர்ந்து, சல்லடை மட்டையால் (ராக்கெட்டு) பந்தை அடித்து அரங்கத்தின் நடுவே கட்டியுள்ள வலையைத் தாண்டி, அரங்கத்துக்குள் விழுமாறு பந்தைத் தட்டியாடும் ஒரு விளையாட்டு. இவ்விளையாட்டு தொடக்க காலத்தில் கைகளால் தட்டி விளையாடப்பட்டது. பின்னர் பிரான்சு நாட்டினர் டென்னிசு மட்டையை அறிமுகப்படுத்தினர். டென்னிசு என்பது பிரான்சு சொல்லாகும். இவ்விளையாட்டை உள்ளரங்கத்திலும், வெளியிலும் ஆடலாம். டென்னிசு, உலகில் மிக அதிக இரசிகர்களையும் வீரர்களையும் உடைய விளையாட்டுகளில் ஒன்றாகும். அக்காலத்தில் இது புல்வெளி டென்னிஸ் என்ற பெயரோடு 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிரபலமடைந்தது. இவ்விளையாட்டுக்கான விதிமுறைகள் மெல்போன் கிரிக்கெட் கிளப்பினரால் 1875 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது.

டென்னிசு
விம்பிள்டன்
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்புசர்வதேச டென்னிசு பெடரேசன்
முதலில் விளையாடியது1859–1865 இடையில் இங்கிலாந்தில்
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
தொடர்புNo
அணி உறுப்பினர்கள்ஒற்றையர் மற்றும் இரட்டையர்
இருபாலரும்ஆம்,தனிப்பட்ட போட்டிகள் மற்றும் கலப்பு இரட்டையர்
பகுப்பு/வகைசல்லடை மட்டை விளையாட்டு
கருவிகள்டென்னிசு பந்து, டென்னிசு ரெக்கெட்
விளையாடுமிடம்உள்ளரங்க மற்றும் வெளியரங்க ஆடுதளம்
தற்போதைய நிலை
தாயகம்உலகம் முழுவதும்
ஒலிம்பிக்1896 முதல் 1924 வரை கோடைகால ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாகவும்,
1968 மற்றும் 1984 ஆண்டுகளில் காட்சிவிளையாட்டாகவும்,
1988 முதல் வரை கோடைகால ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாகவும் இருந்து வருகிறது.
இணை ஒலிம்பிக்1992 முதல்ஊனமுற்றோருக்கான கோடைகால ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாகவும் இருந்து வருகிறது.
டென்னிசு ஆட்டரங்கம். மக்கள் திரளாக வந்து ஆட்டத்தைக் காணும் காட்சி
டென்னிசுப் பந்துகள்

டென்னிஸ் விதிகள் 1890 களின் பின்னர் சிறிதளவே மாற்றமடைந்துள்ளது. எனினும் 1908 முதல் 1961 வரையிலான காலகட்டத்தில் பந்தை முதலில் வழங்குபவர் எல்லா நேரங்களிலும் தரையில் ஒரு காலை வைக்க வேண்டும் என்று ஒரு விதி இருந்தது மற்றும் 1970 களில் சமநிலை முறிவு விதியின் அறிமுகம் ஆகியவை குறிப்பிட தக்க மாறுதல்கலாகும். தற்போது தொழில்முறை டென்னிஸ் மின்னணு ஆய்வு தொழில்நுட்பத்தின் மூலம் சமீபத்தில் ஒரு வீரர் ஒரு புள்ளி சவால் முறை இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு வீரர் கோரும் மறு ஆய்வு சரியாக இருக்கும் பட்சத்தில் அவரின் புள்ளியில் மாறுதல் இருக்காது. ஆனால் அவர் தவறாக இருக்கும் பட்சத்தில் ஒரு புள்ளி குறைக்கப்படும். மேலும் இது ஒரு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.

விதிகள்

தொகு

இப்போட்டியின் முக்கிய நோக்கம் எதிரணியினர் அடிக்கும் பந்தை தவறவிடாமல் எதிராளியின் ஆடுகளப்பகுதிக்கு அனுப்புவதாகும். மேலும் பந்தை தவற விட்டாலோ அல்லது ஆடுகளப்பகுதிக்கு வெளியே பந்தை அடித்து அனுப்பினாலோ மேலும் அடிக்கும் பந்து வலையில் பட்டாலும் எதிர் போட்டியாளர்க்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.

புள்ளிகள் வழங்கும் முறை

தொகு

ஒரு "கேம்" எனப்படும் விளையாட்டில் வெற்றிபெற குறைந்தது நான்கு புள்ளிகளும் எதிராளியை விட இரு புள்ளிகள் அதிகமாகவோ பெற வேண்டும்.முதலில் ஆறு "கேம்களை" வெற்றிபெற்றவர் ஒரு "செட்" என்று அழைக்கப்படும் சுற்றில் வெற்றியடைந்ததாக கருதப்படும். ஒரு ஆட்டமானது 3 அல்லது 5 சுற்றை கொண்டிருக்கும் இதில் அதிகமான சுற்றுகளில் வெற்றியடைந்த போட்டியாளர் ஆட்டத்தில் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்படுவார்.

கேம் (ஆட்டம்)

தொகு

ஒரு கேம் என்பது பந்தை அடித்து (சேவை) ஆட்டத்தை ஆரம்பிக்கும் வீரர்க்கு வழங்கப்படும் புள்ளிகளின் வரிசையாகும்.போட்டியில் குறைந்த பட்சம் நான்கு புள்ளிகள் வென்ற முதல் வீரர் மற்ற எதிர் போட்டியாளரைக் காட்டிலும் குறைந்தது இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்றால் ஒரு கேம் வென்றதாக கருதப்படுவார்.விளையாடப்படும் ஒவ்வொரு கேம்மிற்கும் (ஆட்டம்) வழங்கப்படும் புள்ளிகள் டென்னிசு விளையாட்டில் விசித்திரமாக விவரிக்கப்பட்டுள்ளது:பூஜ்யம் முதல் மூன்று புள்ளிகள் வரை முறையே "(love)லவ்", "பதினைந்து", "முப்பது" மற்றும் "நாற்பது" என்று அழைக்கின்றனர். குறைந்த பட்சம் மூன்று புள்ளிகள் ஒவ்வொன்றும் ஆட்டக்காரர்களால் தோற்கடிக்கப்பட்டால், நாற்பது புள்ளிகள் முதலில் பெறும் வீரர் வெற்றி பெறுவார். ஆனால் சில சமயங்களில் நாற்பது புள்ளிகளுக்கு சமமான புள்ளிகளை இரு ஆட்டகாரர்களும் பெற்றால், ஸ்கோர் "நாற்பது நாற்பது" என்று அழைக்கப்படுவதில்லை, மாறாக "டியுஸ் (deuce)" என்று அழைக்கப்படுகிறது.

 
ஆண்டி ரோடிக் மற்றும் சிரில் சவுனிர் இடையே நடந்த ஆட்டத்தின் புள்ளிகளின் அட்டவனை.

குறைந்தபட்சம் மூன்று புள்ளிகள் ஒவ்வொரு பக்கத்திலும் அடித்திருந்தால், ஒரு வீரர் தனது எதிர் வீரரை விட ஒரு புள்ளி அதிகம் கொண்டிருந்தால், இது அந்த முன்னணியில் உள்ள வீரருக்கு "சாதகமானது (advantage)" ஆகும்.

ஒரு டென்னிஸ் விளையாட்டின் புள்ளிகள் கணக்கை முதன்முதலில் பந்தை அடித்து (சேவை) ஆட்டத்தை ஆரம்பிக்கும் வீரரின் புள்ளிகள் மூலம் வாசிக்கப்படுகிறது. போட்டியில் விளையாடுகையில், ஒவ்வொரு புள்ளிகளுக்கும் இடையில், நாற்காலி நடுவர் புள்ளியை (எ.கா., "பதினைந்து-லவ்") என்று அழைக்கிறார்.

ஒரு விளையாட்டின் முடிவில், நாற்காலி நடுவர் ஆட்டதின் ஒட்டுமொத்த புள்ளிகளையும் மற்றும் வெற்றிபெற்ற வீரரை பற்றியும் அறிவிக்கிறார்.

செட்(Set)

தொகு

ஒரு செட்(Set) அல்லது தொகுப்பு என்பது பல கேம்களின் தொடர் வரிசையாகும்.இந்த தொடர் கேம்களில், சேவை (பந்தை அடித்து) ஆரம்பிக்கும் வாய்ப்பு இரு வீரர்களுக்கும் கேம்களுக்கு இடையே மாறி வரும். கேம்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவை (புள்ளியை) எட்டும்போது முடிவடையும்.

  • பொதுவாக, ஒரு ஆட்டக்காரர் ஒரு செட்டை வெள்ள குறைந்தபட்சம் ஆறு கேம்களை(ஆட்டங்களை) வென்றும், எதிர் வீரரை காட்டிலும் குறைந்தபட்சம் இரண்டு கேம்களை அதிகம் வென்றிருக்கவேண்டும்.
  • ஒரு வீரர் ஆறு ஆட்டங்களையும்(கேம்கள்) , எதிர் வீரர் ஐந்து ஆட்டங்கள்(கேம்கள்) வென்றிருந்தால், ஒரு கூடுதல் (கேம்) ஆட்டம் விளையாடப்படும்.அந்த கூடுதல் ஆட்டத்தில் புள்ளிகளில் முன்னணி வகிக்கும் வீரர் வெற்றி பெற்றால், வீரர் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக கருதப்படுவார் மாறாக எதிர் வீரர் வென்றால் ஒரு டை-பிரேக் ஆட்டம் விளையாடப்படும்.
  • ஒரு தனிப்பட்ட விதிகளின் கீழ் விளையாடப்படும் ஒரு டை-பிரேக் என்பது, ஒரு ஆட்டக்காரர் இன்னும் ஒரு ஆட்டத்தை (கேம்) வென்றெடுக்க அனுமதிக்கிறது, இதனால் செட், 7-6 என்ற இறுதிப் புள்ளியை கொடுக்கிறது.
  • ஒரு "லவ் செட்" என்பது, தோல்வி பெற்ற வீரர் பூஜ்ய புள்ளிகளை பெற்றதை குறிக்கிறது, வழக்கமாக அமெரிக்காவில் 'ஜாம் டோனட் (jam donut)' என்று அழைக்கப்பட்டது.[1]
  • போட்டியில் விளையாடும் போது, நாற்காலி நடுவர் செட் வென்ற வீரர் மற்றும் வீரர்கள் பெற்ற மொத்த புள்ளிகள் அறிவிக்கிறார். செட்டில் உள்ள இறுதிப் புள்ளியை முதன் முதலில் பெற்ற வீரர் மூலம் வாசிக்கப்படும், எ.கா. "6-2, 4-6, 6-0, 7-5".

போட்டிப்புள்ளி (Match score)

தொகு

ஒரு போட்டிப்புள்ளி (Match score) என்பது பல செட்டுகளின் தொகுப்பாகும். போட்டியின் முடிவானது சிறந்த மூன்று அல்லது ஐந்து செட்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

பொழுதுபோக்கிற்காக விளையாடும் வீரர்கள் தங்களுக்குக் கிடைக்கும் நேரம் அல்லது அவர்களின் சக்தியை பொறுத்து, எத்தனை செட் விளையாடவது என்பதை ஒப்புக்கொள்ளவார்கள்.

தொழில்முறை விளையாட்டில், ஆண்கள் சிறந்த ஐந்து-செட்டுகள் கொண்ட போட்டியாக நான்கு கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில், டேவிஸ் கோப்பை, மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுகள் இறுதிச் சுற்று போட்டிகளில் விளையாடுவார்கள் மற்றும் சிறந்த மூன்று-செட்டுகள் கொண்டதாக மற்ற போட்டிகளில் விளையாடுவார்கள்,பெண்கள் அனைத்து போட்டிகளிலும் சிறந்த மூன்று-செட்டுகள் கொண்ட போட்டிகளை விளையாடுகின்றனர்.

ஒரு சிறந்த மூன்று-செட்டுகள் கொண்ட போட்டிகளில் இரண்டு செட் வென்ற முதலாவது வீரர், அல்லது சிறந்த ஐந்து-செட்டுகள் கொண்ட போட்டிகளில் ஐந்து-ல் மூன்று செட் வென்ற முதலாவது வீரர், போட்டியில் வெற்றி பெறுவார்.[2] ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், விம்பிள்டன், ஒலிம்பிக் விளையாட்டுகள், டேவிஸ் கோப்பை (2015 வரை) மற்றும் பெட் கோப்பை ஆகியவைகளில் டை-பிரேக்கற்கள் விளையாடப்படவில்லை. இந்த நிகழ்வில், ஒரு வீரர் இரு கேம்கள் முன்னணிக்கு வரும் வரை, செட் காலவரையின்றி விளையாடப்படும்.

சிறப்பு புள்ளிகள் விதிமுறைகள்

தொகு

கேம் புள்ளி

தொகு

கேம் புள்ளி என்பது ஆட்டத்தில் முன்னணியில் உள்ள வீரர் விளையாட்டை வெல்ல ஒரே ஒரு புள்ளியை தேவைபடும்போது டென்னிஸ் விளையாட்டில் இதை ஒரு கேம் புள்ளி என்று அழைக்கின்றனர். இந்த சொற்களானது செட் (செட் புள்ளி), போட்டிகள் (போட்டிப் புள்ளி) மற்றும் சாம்பியன்ஷிப் (சாம்பியன்ஷிப் புள்ளி) ஆகியவற்றிற்கு வழங்கப்படுகிறது.

ஆடு தளம்

தொகு
 
ஆடுதளத்தின் அமைப்பு

ஆடும் தளம் 23.8 மீ (78 அடி) நீளமுடையது. அகலம் ஒருவர் ஆட்டத்திற்கு 8.2 மீ (27 அடி), இருவர் ஆட்டத்திற்கு 11 மீ (36 அடி). ஒருவர் ஆட்டத்திற்கு போடப்பட்ட கோட்டின் இரு புறமும் 1.4 மீ (4.5 அடி) சேர்த்து இருவர் ஆட்டத்திற்கு கோடு போடப்படும். ஆடு தளம் புல்வெளி, களிமண், செம்மண், கற்காறை (கான்கிரீட்), மரம்த்தளம், செயற்கைப் புல்லால் ஆன தளம் ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம். நடுவலை, ஆடு தளத்தின் நடுவில் தரையிலிருந்து 0.9 மீ (3 அடி) உயரத்திலிருக்கும். வலை தரையைத் தொட்டுக் கொண்டு இருக்கும்.

பந்து

தொகு

டென்னிசுப் பந்து உள்புறம் காலியாக (உள்ளீடு அற்றதாக) உள்ள ரப்பர் பந்து. இதன் மேல் மென் கம்பளி மற்றும் செயற்கை இழைத் துணியால் மூடப்பட்டிருக்கும். பந்தின் விட்ட அளவு 6.35 செ.மீ முதல் 6.67 செ.மீ வரை இருக்கும். எடை 57.7 கிராம் முதல் 58.5 கிராம் வரை இருக்கலாம். மஞ்சள் நிறத்தில் வெள்ளை வளை கோடு போட்ட பந்துகள் பொதுவாக பயன்படுத்தப் படும்.

சல்லடை மட்டை

தொகு

சல்லடைக் கைமட்டைகளுக்குத் (ராக்கெட்டுகளுக்கு) தீர்மான வரையறை இல்லை. இவை பெரும்பாலும் நீள்வட்ட வடிவில் கைப்பிடியுடன் இருக்கும். அதன் நீள்வட்டப் பகுதியின் அளவைப் பொருத்து பொதுச்சீர் (இஸ்டாண்டர்டு, Standard), நடுவளவு (மிட்சைசு, Mid size), பெரிது (ஓவர்சைசு, Over size), மிகப்பெரிது (சூப்பர் ஓவர்சைசு, Super over size) என்று வழங்கப்படும். முந்தய காலகட்டங்களில் மட்டைகள் மரத்தால் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அவை பலவகை உலோகங்கள்,கார்பன் கிராபைட்,டைட்டானியம் போன்ற பொருட்களால் செய்யப்படுகிறது.

 
டென்னிசு ஆட்டவீரர் நடால் சல்லடை மட்டையால் பந்தைத் தட்டும் காட்சி

போட்டிகளில் பயன்படுத்தும் சல்லடை மட்டைகள் (ராக்கெட்) 81.3 செ.மீ (32 அங்குலம்) நீளத்திற்கும், 31.8 செ.மீ. (12.5 அங்குலம்) அகலத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மட்டையின் தலைப்பகுதி (வலை பின்னல் பகுதி) 39.4 செ.மீ (15.5 அங்குலம்) நீளத்திற்கும், 29.2 செ.மீ (11.5 அங்குலம்) அகலத்திற்கும் மேற்படாமல் இருக்க வேண்டும். எடைக்கு வரையறை இல்லை. மேலும் இது போட்டியாளர்களுக்கு எந்த வகை செய்திகளை கொண்டதாகவோ அல்லது ஆற்றல் மூலங்களை உட்பொதிந்ததாகவோ இருக்க கூடாது.

சிறப்புப் போட்டிகள்

தொகு

இவ்விளையாட்டுப் போட்டியில் விம்பிள்டன் டென்னிசு போட்டி, டேவிஸ் கோப்பை டென்னிசு போட்டி ஆகியவை சிறப்புப் போட்டிகளாகக் கருதப்படுகின்றன. விம்பிள்டன் டென்னிசு போட்டிகள் 1877 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் விம்பிள்டன் எனும் இடத்தில் முதலில் தொடங்கப்பட்டது. டேவிஸ் கோப்பை டென்னிசு போட்டிகள் 1900 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த டேவிஸ் கோப்பை போட்டியை டிலைட் எப் டேவிஸ் என்பவர் இதற்கான கோப்பையை வழங்கினார்.

மேலும் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டி பிரபலமானதாக உள்ளது. அவற்றில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகள் கடினமான தரையிலும்,பிரஞ்சு ஓபன் சிவப்பு களிமண் ஆடுகளத்தையும், விம்பிள்டன் போட்டிகள் புல்தரையை கொண்ட ஆடுகளத்திலும் நடைபெறும்.

Grand Slam Tournaments
காலம் போட்டி நடைபெறுமிடம் ஆடுகளம் பரிசுத் தொகை தொடங்கப்பட்டது
ஜனவரி-பிப்ரவரி ஆஸ்திரேலியன் ஓபன் மெல்போர்ன் கடினமான தரை A$26,000,000 ஆஸ்திரேலிய டாலர் 1905
மே-ஜூன் பிரஞ்சு ஓபன் பாரிசு களிமண்தரை €18,718,000 யூரோ 1891*
ஜூன்-ஜூலை விம்பிள்டன் லண்டன் புல்தரை £14,600,000 பவுண்டு 1877
ஆகஸ்ட்-செப்டம்பர் அமெரிக்க ஓபன் நியூயார்க் கடினமான தரை US$21,016,000 அமெரிக்க டாலர் 1881

* சர்வதேச போட்டிகள் 1925 முதல் நடைபெறுகிறது

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "ATP Most Jam Donuts Served". Tennis.com. பார்க்கப்பட்ட நாள் 6 May 2012.
  2. From 1984 through 1998, women played first-to-win-three-sets in the final of the year-ending WTA Tour Championships.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டென்னிசு&oldid=3917888" இலிருந்து மீள்விக்கப்பட்டது