நிலப்படம்

அடிப்படை வரைபடம் விளக்கம்
(வரைபடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நிலப்படம் (map) அல்லது வரைபடம் என்பது புவி அல்லது வேறு கோள்களின் மேற்பரப்பில் உள்ள புவியியல், நிலவியல், புவிஅரசியல் போன்றவை தொடர்புள்ள அம்சங்களை, அளவுவிகிதத்துக்கு (scale) அமையப் பதிலிட்டுக் காட்டுவதற்கான ஒரு வரைபடம் ஆகும். பொதுவாக இது ஒரு மட்டமான மேற்பரப்பில், வரையப்படுகின்றது. இதனைக் குறிக்க, தேசப்படம், வரைபடம் போன்ற சொற்களும் வழக்கில் உள்ளன. உலகக் கோள மாதிரிகளில், நிலப்படம் ஒரு கோள மேற்பரப்பில் வரையப்படுகின்றது. நிலப்படவரைவியல் (Cartography) என்பது நிலப்படங்களை வரைவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். முக்கியமான நிலப்படவகைகளிலே தரைத்தோற்ற வரைபடங்கள் அடங்குகின்றன. இவை புவியின் நில மேற்பரப்பு, கரையோர மற்றும் கடல்சார்ந்த பகுதிகள், கடல் ஆழம் மற்றும் நீர்ச் சுற்றோட்டங்களைக் காட்டும் படங்கள், விமானப் போக்குவரத்து தொடர்பான படங்கள், காலநிலை விபரங்களைக் காட்டும் படங்கள் போன்றவையாக அமைகின்றன. நிலப்படம் ஒரு பரப்பின் காட்சிபூர்வமான அடையாளம் ஆகும். இது அந்த பரப்பின் பொருட்கள், பிரதேசங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை விளக்கும் ஒரு பார்வைக்குரிய அடையாள பிரதியாகும்.

வரைபடங்களுள் பல, நிலையான புவியியற்பிழையற்ற (உத்தேசமாக துல்லியமான) இருபரிமாண பிரதிகளாகவும், இன்னும் சில, சக்திவாய்ந்த ஊடாடுதலைக் கொண்ட முப்பரிமாண பிரதிகளாகவும் உள்ளன. பூகோள சாஸ்திரத்தில் அதிகமாய் பிரயோகிக்கப்பட்டாலும், வரைபடங்கள் மூளை வரைபடம், மரபணு (DNA) வரைபடம், பூமியல்லாத பரப்புகளின் வரைபடமென, பிரத்தியேக தருணங்கள் மற்றும் அளவுகளல்லாத எல்லாவித நிஜ அல்லது கற்பனை பரப்புகளையும் குறிக்க வல்லன.

புவியியல் நிலப்படங்கள்

தொகு

நிலப்படம் வரைதல், கற்காலத்திலேயே இருந்திருப்பதாகத் தெரிகிறது. இது எழுத்து மொழியிலும் பார்க்கப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாகவும் கருதப்படுகின்றது. இன்றுவரை நிலைத்திருக்கின்ற மிகப் பழைய நிலப்படம் ஒன்று, அனதோலியாவில் (தற்காலத் துருக்கி) காட்டல் ஹுயுக் (Catal Huyuk) என்னும் இடத்தில் சுவரில் வரையப்பட்டுள்ளது. இது கி.மு 6200 ஆம் ஆண்டுக்கும் முந்தியதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

 
இங்கிலாந்திலுள்ள தேவாலயமொன்றில் காணப்படும் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலப்படம். ஜெரூசலத்தை மையப்படுத்தி வரையப்பட்டுள்ளது.

நிலப்படங்கள், அறிவியல் சார்ந்த உலகநோக்குக்கு அமைய உருவாக்கப்படுவதாக இன்று கருதப்பட்டு வந்தாலும், முற்கால நிலப்படங்கள் சில சமயங்களில் இவ்வுலகம் கடந்த அம்சங்களை உள்ளடக்கியனவாகவும் காணப்பட்டன. மேற்கத்தைய மரபுகளுக்கு வெளியே காணப்பட்ட, முன்நவீன நிலப்படவரைபு மரபுகள், புவியியலை அறிவியல்சாராத அண்ட அமைப்பியலுடன் கலந்து, படத்தைப் பார்ப்பவருக்கும் அண்டத்துக்கும் உள்ள தொடர்பையும் காட்ட முனைந்தன. எடுத்துக்காட்டாக, மத்தியகாலத்தைச் சேர்ந்த, டி-ஓ நிலப்படங்கள் என அழைக்கப்பட்ட ஒருவகை நிலப்படங்கள், ஜெரூசலத்தை உலகின் மையமாகக் காட்டியதுடன், சில சமயங்களில், புவியைக் கிறிஸ்துவின் உடலுடன் தொடர்புபடுத்தியும் காட்டின. இதற்கு முரணாக, மத்தியதரைக் கடல் பகுதியைச் சேர்ந்த கடற்பயண வழிகாட்டிப் படங்கள் குறிப்பிடத்தக்க துல்லியம் கொண்டவையாக விளங்கின.

புவியியல் நிலப்படங்கள் பண்பியல் (abstract) அடிப்படையில் உலகைக் குறிப்பனவாகும். இந்தப் பண்பியல் தன்மையே அவற்றைப் பயன் உடையதாக்குகின்றது. சாலைகளைக் காட்டும் நிலப்படங்களே இக்காலத்தில் மிக அதிகமாகப் பயன்படுகின்ற நிலப்படங்கள் எனலாம். இவ்வகை நிலப்படங்கள், விமானப் போக்குவரத்து மற்றும் கடற் பயணங்களுக்கான வரைபடங்கள், தொடர்வண்டிப் பாதை வலையமைப்பு நிலப்படங்கள், போன்ற வரைபடங்களுடன் சேர்ந்து வழிகாட்டும் நிலப்படங்கள் என்ற துணைப் பிரிவுள் அடங்குகின்றன. தற்காலத்தில் பல நாடுகளில் வரையப்படும் நிலப்படங்களில், உள்ளூராட்சி அமைப்புக்கள், வரிக் கணிப்பீட்டு அமைப்புக்கள், அவசரகாலச் சேவைகள் வழங்குனர்கள், முதலியனவற்றினால் ஏற்பாடு செய்யப்படும் நில அளவைகள் மூலம் உருவாக்கப்படும் படங்களே அதிகம் எனலாம். வேறு பல நாடுகளில் இதற்கென உருவாக்கப்படுகின்ற அரசாங்க நிறுவனங்களே நிலப்படம் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றன.

 
போர்த்துகீசிய வரைபடவல்லுனரான ஃபிரெட்ரிக் டி விட்டின் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 200 pxA பிரபஞ்ச வரைபடம்

கார்டோகி ராஃபி அல்லது வரைபடவியல் என்பது சமமட்டமான வெளிபரப்பில், பூமியின் பிரதிகளை வரையும் கலையைப் பற்றிய கல்வியனுபவமாகும்.(பார்க்க வரைபடவியலின் வரலாறு).வரைபடம் வரையும் தொழிலைச் செய்பவர் கார்டோகி ராஃபர் அல்லது வரைபடவியல் வல்லுநர் என்றழைக்கப்படுகிறார்.

போக்குவரத்து வழிநடத்தலுக்குதவும் வரைபடங்கள் பின்வரும் சாலைப்போக்குவரத்து வரைபடங்கள், வளிப்போக்குவரத்து வரைபடங்கள், மாலுமி விளக்கப்படங்கள், தண்டவாள வரைபடங்கள், நடைபயண வரைபடங்கள், மற்றும் இருசக்கர வாகன போக்குவரத்து வரைபடங்கள் ஆகிய உட்பிரிவுகளைக் கொண்டது. இவற்றுள் சாலைப் போக்குவரத்து வரைபடங்களே தற்சமயம் அதிகம் பயன்படுத்தப்படுவன. பயன்பாட்டளவைப் பொறுத்தவரை, ஒரு இடத்தைப் பற்றிய உள்ளூர் கண்ணோட்டதிற்காக நகரசபைகள், அடிப்படைத் தேவை சேவைகள், வரி விதிப்போர், அத்தியாவசிய பணிகள் மேற்கொள்வோர் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் ஆகியன அதிக அளவில் வரைபடங்களை வரைகின்றன. பல தேசிய புவியியலாய்வுத் திட்டங்கள் இராணுவத்தால் நடத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக [[ராணுவ தளவாடங்களின் ஆய்வு|ஆங்கிலேயர்களின் யுத்த தளவாடங்களின் ஆய்வு ]](தான் மேற்கொண்ட விரிவான பணிக்காக உலகளாவிய புகழ் பெற்ற இது தற்சமயம் ஒரு அரசு குடிமைப்பணி அமைப்பாக உருவெடுத்துள்ளது).

இருப்பிடத் தகவல்கள் தவிர வரைபடங்கள், ஏற்றக்கோணம், வெப்ப அளவு, மழையளவு ஆகியன மாறாமல் ஒரே சீராக இருக்கும் இடங்களைக் குறிக்கும் சம உயரக் கோடுகளை வரையவும் பயன்படுத்தப்படுகின்றன.

நிலப்படங்களின் திசை

தொகு

நிலப்பட வரைபில், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளின்படி, வடக்குத் திசை மேல் நோக்கி இருக்கும் படியாகவே நிலப்படங்கள் வரையப்படுகின்றன. இருந்தாலும்:

திசையமைவு என்பது வரைபடத்தின் திசைகளுக்கும், திசை காட்டியின் திசைகளுக்கும் உள்ளத் தொடர்பைக் குறிக்கிறது.ஓரியண்ட் எனும் வார்த்தை, கிழக்கு எனப் பொருள்படும் லத்தீன் வார்த்தை ஓரியன்ஸிலிருந்து தோன்றியதாகும்.இடைக்காலங்களில் T மற்றும் O வரைபடங்கள் உட்பட பல வரைபடங்கள், கிழக்கை மேற்பகுதியில் வைத்தே வரையப்பட்டன.விதிவிலக்குகள் சில இருந்தாலும், இன்று பரவலாகக் காணப்படும் வரைபட சம்பிரதாயம் வரைபடத்தின் மேற்பகுதியில் வடக்கு திசையைக் கொண்டதாகும். வடக்கை நோக்கித் திசையமைவு பெறாத வரைபடங்கள் சில இருக்கவே செய்கின்றன:

கடற்கரையையொட்டிய நகரங்களின் வரைபடங்கள் பொதுவாக கடலை மேற்பக்கம் கொண்டு வரையப்பட்டிருந்தன.

 • நேர்மாறான வரைபடங்கள், அல்லது தலைகீழான வரைபடங்கள் அல்லது மேல் தெற்கு வரைபடங்கள் பொதுவாக ஆஸ்திரேலியாவையும் நியுசிலாந்தையும் வரைபடத்தின் கீழ்பகுதிக்குப் பதிலாக மேற் பகுதியில் அமையப்பெற்றிருக்கின்றன.
 • பாதை மற்றும் கால்வாய் வரைபடங்கள் தொன்று தொட்டு தாங்கள் விவரிக்கும் சாலை அல்லது நீர்நிலைகளைப் பொறுத்த திசையமைவைப் கொண்டனவாய்க் காணப்படுகின்றன.
 • ஆர்க்டிக், அண்டார்க்டிக் போன்ற துருவப் பகுதிகளின் நிலப்படங்களை வரையும் போது துருவம் நடுவில் இருக்கும்படி வரைவதே மரபாகும். இத்தகைய சந்தர்ப்பங்களில் வடக்கு மேல்நோக்கி இருக்கும்படி வரைவது பயன்பாட்டுக்கு உகந்ததாக இருக்காது.
 • வானூர்திகளின் பயணப் பாதைகளைத் திட்டமிடுவதற்காகத் தயாரிக்கப்படும் நிலப்படங்களும், குறிப்பிட்ட தொடக்க இடங்களை மையப்படுத்தி வரையப்படுவது உண்டு.

பக்மினிஸ்டர் ஃபுல்லரின் டைமேகிஷியன் வரைபடங்கள் பூமி உருண்டையின் இகோஷ்ட்ரான் மீதான நீட்சியின் அடிப்படையாகக் கொண்டவை. கிடைக்கும் முக்கோணத் துண்டுகள் எந்த விதமான வரிசை அல்லது திசையமைவிலும் அடுக்கப்படலாம்.

ஆர்க்மெப் போன்ற நவீன டிஜிட்டல் வரைபடங்கள் பொதுவாக வடக்கு திசையை மேற்பக்கம் கொண்டிருக்கும். ஆனால் இவை உட்பிரிவு திசைகாட்டலுக்கு காந்த திசைகாட்டி டிகிரிகளை விடுத்து கனக்கு டிகிரிகளையே (கிழக்கில் 0, கடிகார எதிர்சுற்று திசையில் கோணங்கள் அதிகரிக்கும்) பயன்படுத்துகின்றன.

அளவும் துல்லியமும்

தொகு

விதிவிலக்குகள் காணப்பட்டாலும் பெரும்பாலான வரைபடங்கள் ஒரு வரையறுக்கப்பட்ட அளவைக் குறித்த விகிதாச்சாரங்களால் உணர்த்தப்படுகின்றன.உதாரணமாக 1:10,000 எனும் போது வரைபடத்தில் ஏதாவதொரு அளவையின் ஒரு அலகானது நிலத்தில் அதே அளவையின் பத்தாயிரம் அலகுகளைக் கொண்டிருக்கும். வரைபட பரப்பானது பூமியின் கோணமற்ற வளைவு அசட்டை செய்யப்படும் அளவிற்கு சிறியதாயிருக்கும் பொழுது, இவ்விதமான ஒப்பளவுக் கணக்கு விபரம் சரியானதெனக் கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக நகர அமைப்பிற்கான வரைபடம். பூமியின் வளைவு அசட்டை செய்ய முடியாத அளவிற்கு பெரியனவாயிருக்கும் பரப்புகளில், பூமியின் வளைந்த பகுதிகளிலிருந்து (கோளம் அல்லது நீள்வட்டக் கோளம்) சமதளத்திற்கு, வரைபட நீட்டல்களை உபயோகிக்க வேண்டியது அவசியம். கோளத்தை சமதளமாக மாற்றுவது இயலாததெனும் போது எந்தவொரு வரைபட முன்னீட்சியும் மாறாத அளவைக் கொண்டதாக இருக்க முடியாது என்பது புலனாகிறது.பெரும்பாலான முன்னீட்சிகளில் நம்மால் நிகழ்த்தக்கூடிய மிகப் பெரிய சாதனை அம்முன்னீட்சியின் ஒன்று அல்லது இரண்டு கோடுகளில்(நேர்க்கோடுகளாக இருக்க வேண்டியதில்லை) பெறக்கூடிய பிசகில்லாத அளவேயாகும். எனவே வரைபட முன்னீட்சிகளில் நாம் இடவமைப்பின் சார்பலனான புள்ளி அளவை அறிமுகப்படுத்தி வித்தியாசங்களை ஒடுக்கமான வரம்புக்குள் அடக்க பாடுபடவேண்டும். ஒப்பளவுக் கணக்கு விபரம் பெயரளவிற்கே என்றாலும் மிக நுண்ணிய அளவுகள் தவிர ஏனைய அளவுகளில் பொதுவாக தேவைப்படும் அளவிற்கு சரியானதாகவே இருக்கிறது.

1:10,000,போன்ற பெரிய வரையறுக்கப்பட்ட அளவுடைய வரைபடங்கள் சிறிய பரப்புகளை விரிவாக விளக்குபவனவாகவும், 1:10,000,000 போன்ற சிறிய வரையறுக்கப்பட்ட அளவையுடைய வரைபடங்கள் தேசங்கள், கண்டங்கள் அல்லது உலக மொத்தமும் போன்ற பெரிய பரப்புகளை உள்ளடக்கியதாகவும் காணப்படும். பெரிய/சிறிய என்ற சொல்லாட்சி வரையறுக்கப்பட்ட அளவுகளை பின்னங்களாக எழுதும் பழக்கத்திலிருந்து உருவானதாகும்:1/10000 என்பது 1/10000000 ஐ விட பெரியது.இத்தகைய வரையறுக்கப்பட்ட அளவுகளை பெரியனவாகவும்,சிறியனவாகவும் பிரிக்கத்தக்க தெளிவான கோடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.எனவே 1/100000 என்பதை மிதமான வரையறுக்கப்பட்ட அளவாக எடுத்துக் கொள்ளுதல் உசிதமானது. பெரிய ஒப்பளவுகளைக் கொண்ட வரைபடங்களுக்கு எடுத்துக்காட்டு, நடைபயணம் மேற்கொள்ளுபவர்க்ளுக்கான 1:25000 வரைபடங்கள்; ஆனால் வாகனமோட்டிகளுக்கான வரைபடங்களான 1:250,000 அல்லது 1:1,000,000 போன்றவை சிறிய ஒப்பளவுகளைக் கொண்டவைகளேயாம்.

பயனாளிகளின் பார்க்கும் திறனை அதிகரிக்க செய்ய வேண்டும் என்ற நோக்கோடு மிகச் சரியானவை எனக் கருதப்படும் வரைபடங்கள் கூட தங்களது வரையறுக்கப்பட்ட அளவின் நுட்பத்தில் குறிப்பிட்டளவு தியாகம் செய்ய வேண்டியுள்ளது.எடுத்துக்காட்டாக, சாலைகள் மற்றும் சிறிய நதிகளின் அகலமானது, வரைபடங்களில் காட்டப்படுவதற்கு மிக ஒடுக்கமாகத் தோன்றும் பொழுது மிகைப்படுத்திக் காட்டப்படுகிறது.அவ்வாறல்லாத பட்சத்தில், அச்சிடப்பட்ட வரைபடங்களில் அவைகளை வெறுங்கண்ணால் பார்ப்பதற்கு இயலாமல் போகலாம். சிறிய அலகாக பிக்சலைக் கொண்ட கணினி வரைபடங்களிலும் இது போன்றதொரு சூழ்நிலையே நிலவுகிறது.எடுத்துக்காட்டாக ஒரு ஒடுங்கிய நதியின் அகலம் வரைபட ஒப்பளவில் பிக்சலின் அளவை விட பன்மடங்கு சிறியதாயிருப்பினும் ஒரு பிக்சல் அகல ஒப்பளவு கொண்டதாய் நிர்ணயிக்கப்படுகிறது.

 
எளிய விளக்கப்படம்: மக்கள் தொகைப் பரவலைக் காட்ட EU வரைபடத்தைத் திரித்துள்ளது.

சில நேரங்களில் வரைபடங்களின் ஒப்பளவுகள் வேண்டுமென்றே திரிக்கப்படலாம்.எடுத்துக்காட்டாக இங்கு காட்டப்பட்டுள்ள ஐரோப்பாவின் வரைபடம் மக்கள் தொகை பரவலைக் காட்ட எதுவாகத் திரிக்கப்பட்டுள்ளது.கண்டத்தின் கரடுமுரடான வடிவம் தென்படுமளவிற்கு அடிப்படை ஒப்பளவு,தோராயமாக ஒரே சீரானதாகவே உள்ளது.இது எளிய விளக்கப்படம் (கார்டோகிராம்)என்றழைக்கப்படுகிறது.

திரிக்கப்பட்ட வரைபடத்தின் மற்றொரு எடுத்துக்காட்டு பிரசித்தி பெற்ற லண்டனின் நிலத்தடி வரைபடமாகும்.அடிப்படை புவியியற் அமைப்புக்கு உரிய் மரியாதை அளிக்கப்பட்டிருந்தாலும் நிலையங்களின் தொடர்பை தெளிவுபடுத்த குழாய் பாதைகளும், தேம்ஸ் நதியின் போக்குகளும் அசட்டை பண்ணப்பட்டிருக்கிறது.வரைபடத்தின் ஓரங்களைவிட வரைபடத்தின் மையத்தினருகில் நிலையங்களுக்கிடையேயான தூரம் அதிகமானதாகக் காட்டப்பட்டிருக்கிறது.

மேலும் பிசகுகள் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டனவாய் இருக்கலாம்.உதாரணமாக வரைபட வல்லுனர்கள் ராணுவ தளவாடங்களை குறிப்பிடாமல் விட்டுவிடவோ அல்லது வரைபடத்தின் தெளிவை அதிகரிக்க சில முக்கிய அம்சங்களை உதாசீனப்படுத்தவோ முனையலாம். ஒரு சாலை வரைபடம், ரயில் பாதைகளையும் சிறிய நீர்நிலைகளையும் அல்லது சாலையோடு தொடர்பில்லாத அம்சங்களையும்,காட்டவோ,காட்டாமல் விடவோ அல்லது தெளிவற்றதாகக் (உடைக்கப்பட்ட அல்லது புள்ளிகளாலான கோடுகளினாலோ/ வெறும் எல்லைக் கோடுகளினாலோ காட்டுவது) காட்டப்படவோ வாய்ப்புண்டு. ஆரவாரமகற்றுதல் (டிக்ளட்டரிங்)என்றழைக்கப்படும் இந்நடைமுறை பொதுவான புவியியற்பிழையின்மைக்கு பங்கம் வராமல் பயனர் நாடும் தகவலை தெளிவாகத் தரவல்லது. மென்பொருளை அடிப்படையாகக் கொண்ட வரைபடங்களில் ஆரவாரமகற்றுதலை இருநிலைமாற்றி கொண்டு இயக்கவோ,அமர்த்தவோ,தானியங்கியாக நிர்ணயிக்கவோ கூடும்.தானியங்கி முறையில் ஆரவாரமகற்றுதலின் அளவு, திரையில் தோன்றும் ஒப்பளவை பயனர் மாற்றுவதற்கேற்ப மாறுகிறது.

உலக வரைபடங்களும் அவற்றின் முன்னீட்சிகளும்

தொகு
 
நீருக்கடியிலுள்ள பெரிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ள வரைபடம் (1995, NOAA)

உலகம் அல்லது ஏனைய பரப்புகளின் வரைபடங்கள் அரசியல் ரீதியாகவோ,பௌதீக ரீதியாகவோ வரையப்படலாம். அரசியல் வரைபடங்களின் மிக முக்கிய குறிக்கோள் எல்லைகளை காட்டுவது.பௌதீக வரைபடங்களின் குறிக்கோள் புவியியற் அம்சங்களான மலைகளையும், மண் வகைகளையும் நில பயன்பாட்டையும் உணர்த்துவது.நிலவியல் வரைபடங்கள் பௌதீக மேற்பரப்பை மட்டுமல்லாது, நிலத்தின் கீழிருக்கும் பாறைகளையும் அவற்றின் குணாதிசயங்களையும்,பிளவு பெயர்ச்சிக் கோடுகளையும் நிலத்தடி அமைப்புக்களையும் காட்டுகின்றன.

பூமியின் மேற்பரப்பைக் காட்டும் வரைபடங்கள் புவிவடிவ முப்பரிமாண மேற்பரப்பை, இருபரிமாண படமாக மாற்றுவதற்கேதுவாக முன்னீட்சியைப் பிரயோகிக்கின்றன. பிரசித்தி பெற்ற உலக வரைபட முன்னீட்சி மெர்கெடார் முன்னீட்சியாகும். இது முதலில் மாலுமி விளக்கப் படமாகவடிவமைக்கப்பட்டிருந்தது.

விமானிகள், லேம்பர்டின் கூம்பு முன்னீட்சி உருவமாறாபடவரைவை அடிப்படையாகக் கொண்ட வளிப்போக்கு வரைபடத்தை உபயோகப்படுத்துகின்றனர்.இதில் வரைபடத்திற்கான பூமியின் பிரிவில் ஒரு கூம்பு வைக்கப்பட்டிருக்கும். இக்கூம்பு பூகோளத்தின் நியமக் கோடுகளாகத் தேர்வு செய்யப்பட்ட இரு இணைகளை வெட்டுகிறது. இது ஒரு பெரிய வட்ட பாதையின் போக்கை விமானிகள் இருபரிமாண வரைபடங்கள் வாயிலாக நிர்ணயிக்க வழிவகுக்கிறது.

மின்னணு வரைபடங்கள்

தொகு
 
A USGS எண்மருவி செவ்வக வரைகலை.

20 ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து வரைபட வல்லுனரின் மிக முக்கிய கருவி கணினியாகும். தரவு சேகரிக்கும் கருத்தாய்வு நிலையிலிருந்தே, வரைபடவியலின் பெரும்பகுதி புவியியல் தகவல் முறைமைகளால் (ஜியாகிராஃபிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்-GIS)கிரகிக்கப்பட்டுள்ளது. வான்வெளியில் அமைந்துள்ள மாறக்கூடிய காரணிகளை, தற்போதிருக்கும் வரைபடங்களின் மீது இடம்பெறவைப்பதை எளிதாக்கியிருக்கும் தொழில்நுட்பத்தால் வரைபடங்களின் பயன்பாடானது பெருக்கமடைந்துள்ளது. உள்ளூர் தகவல்களான மழையளவு,வனவிலங்குப் பரவல்,அல்லது மக்கள் தொகை தரவு போன்றவை வரைபடங்களோடு ஒருங்கிணைக்கப்படுவது திறமையான பகுப்பாய்வையும்,சிறப்பான முடிவெடுக்கும் தன்மையையும் ஏற்படுத்துகிறது. மின்னணு யுகத்திற்கு முன்பு இம்மாதிரியான தரவு ஒப்புநோக்கல் மருத்துவர் ஜான் ஸ்னோஅவர்கள் காலராவின் காரணத்தை கண்டுபிக்க வழிவகுத்தது. இன்று வன விலங்கு ஆர்வலர்கள் மற்றும் இராணுவத்தினர் உட்பட பலதரப்பட்ட நிறுவனங்கள் இத்தகைய ஒப்புநோக்கலை உபயோகித்து வருகின்றன.

GIS-ஐத் தவிர வரைபடங்களை உருவாக்குவதற்கு வரைபடவல்லுனர்கள், பல்வேறு கணினி வரைகலை நிரல்களையும் தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.

ஊடாடும் கணினி வரைபடங்களும் வணிகர்களிடம் கிடைக்கின்றன.இவை பயனர்கள் வரைபடத்தில் உள்ள விபரங்களை பெரிதாக்கவோ ,சிறிதாக்கவோ (முறையே ஒப்பளவைக் கூட்டுவது குறைப்பது வாயிலாக),அல்லது முடிந்தவரை புள்ளிகளின் இடம் மாறாமல் வைத்து, வேறு வரைபட ஒப்பளவுப் பதிலி வரைபடத்தால் மாற்றவோ வகைசெய்கிறது. அக வாகன உலக போக்குவரத்து வழிநடத்துதலுக்கான செயற்கைக்கோள் வசதிகள் (இன் கார் குளோபல் நேவிகேஷன் சேட்டலைட் சிஸ்டம்) என்பவை செயற்கைக்கோள் துணைகொண்டு பயனர் செல்லும் வழியைத் திட்டமிடும் வசதியையும், இருக்குமிட கண்காணிப்பாலோசனை வசதிகளையும் உள்ளடக்கியது. கணினி விஞ்ஞானியின் பார்வையில் வரைபட விபரங்களை பெரிதாக்குவது கீழ்காணும் பயன்களைக் கொண்டது:

 1. வரைபடத்தை மற்றொரு அதிக விபரமுள்ள வரைபடத்தை வைத்து மாற்றுதல்.
 2. பிக்சல்களை பெரிதுபடுத்தி நுண்மையைக் குறைக்காமல், வரைபடத்தையே பெரிதாக்கி சில தகவல்களைத் தியாகம் செய்வதன் மூலம் நுண்மையை அதிகப்படுத்துதல்.
 3. மாற்றாக வரைபடத்தையும் பிக்சல்களையும் ஒருசேர பெரிதுபடுத்துவது (பெரிதுபடுத்தப்பட்ட பிக்சல்கள், பிக்சல் செவ்வகங்களாக மாற்றப்படுகின்றன.);இதில் நுண்மை குறைக்கப்படுகிறது.ஒருவரது பார்வைத்திறனுக்கேற்ப அதிக விபரங்கள் காணப்படலாம்;கணினித் திரையின் அடுத்தடுத்த பிக்சல்கள் தனித்தனியே அல்லாமல் ஒன்றன்மேலோன்று மேற்படியும் போது (LCD அல்லாத எதிர்முனைக் கதிர்க்குழல்போன்ற) செவ்வகங்களாகும் பிக்சல்கள் அதிக விபரங்களைக் காட்டுகின்றன. இம்முறையின் மாறுபாடே இண்டர்போலேஷன் எனப்படும் இடைச்செருகலாகும்.

எடுதுதுக்காட்டாக:

 • மேற்காணும் இரண்டாம்(2) பயன், போர்டபிள் டாக்குமன்ட் ஃபார்மட் எனப்படும் கையடக்க ஆவண வடிவக் கோப்பிற்கோ அல்லது திசைய வரைகலையை அடிப்படையாகக் கொண்ட பிற வடிவத்திற்கோ சிறப்பாக பொருந்தும். இந்த நுண்மையதிகரித்தல், கோப்புகளில் காணப்படும் தகவல்களுக்கு மட்டுமே பொருந்தும். வளைவினை பெரிதுபடுத்துதல், ஒன்றன் பின் ஒன்றாக நேர்க்கோடுகள்,வட்டவிற்கள் மற்றும் செவ்வகச்சாவிகள் போன்ற நியமவடிவவியல் உருக்களின் வரிசையை உண்டுபண்ணுகிறது.
 • இரண்டாம்(2) பயன் , வரைபடத்தின் எழுத்துவடிவங்களுக்கும் மூன்றாம்(3) பயன்,வனப்பகுதி,கட்டடங்கள் போன்ற வரைபட அம்சங்களின் எல்லைக்கும் பொருந்தும்.
 • முதலாம்(1) பயன் , எழுத்துவடிவங்களுக்கும்(மற்ற அம்சங்களைக் குறிப்பிடும் பொருள் விபரச் சீட்டுகள்) இரண்டாம்(2) பயன், வரைபட தோற்றத்தின் ஏனைய பகுதிகளுக்கும் பொருந்தும். வரைபடம் பெரிதாக்கப்படும்போது, எழுத்துவடிவங்கள் பெரிதாக வேண்டிய அவசியமில்லை.அதைப்போன்றே சாலைகளை உணர்த்தும் இரட்டைவரி கோடுகள் வரைபடம் பெரிதாக்கப்படும்போது அகலப்பட வேண்டுமென்பதில்லை.
 • வரைபடமானது, பகுதி செவ்வக வரைகலைகளையும், பகுதி திசையன் வரைகலைகளையும், கொண்ட அடுக்குகளைக் கொண்டதாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.ஓரடுக்கு செவ்வக வரைகலை படத்திற்கு படக்கோப்பின் பிக்சல்கள் காட்சியின் பிக்சல்களோடு பொருந்தும் வரை இரண்டாம்(2) பயனும், அதற்குப்பின் மூன்றாம்(3) பயனும் பொருந்தும்.

மேலும் பார்க்க வெப்பேஜ் (கிராஃபிக்ஸ்), PDF (லேயர்ஸ்), மேப் க்யுயெஸ்ட், கூகிள் மேப்ஸ், கூகிள் சேர்ச், கூகிள் எர்த், ஓபன் ஸ்ட்ரீட் மேப்அல்லது யாஹூ மேப்ஸ்.

அடையாளமிடுதல்

தொகு

இடஞ்சார்ந்த தகவல்களை திறமையாக அறிவிக்க நதிகள், ஏரிகள், நகரங்கள் போன்ற அம்சங்கள் அடையாளப்படுத்தப்படவேண்டும். வரைபடவியல் வல்லுனர்கள், பல நூற்றாண்டுகளாக அடர்த்திமிக்க வரைபடங்களிலும் கூட பெயர்களைக் குறிக்கும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். எழுத்து அல்லது பெயர் அமைவுருதல், பொருள்விபரச் சீட்டுகளின் எண்ணிக்கை அதிகமானாலோ, வரைபட அடர்த்தி அதிகமானாலோ,மிகப் பெரிய கணிதச் சிக்கலாக உருவாகக் கூடும். எனவே, எழுத்துகள் குறிக்கப்படுதல் அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகவும், பணியாளரடர்த்தி மிக்கதாகவும் இருப்பதால் வரைபடவியல் வல்லுனர்களும் GIS பயனர்களும் இவ்வேலையை எளிதாக்க தானியங்கி பொருள்விபரச் சீட்டு பொருத்துதலை உருவாக்கியுள்ளனர்.[1][2]

புவியியலல்லாத இடஞ்சார்ந்த வரைபடங்கள்

தொகு

சூரிய மண்டலம் மற்றும் ஏனைய பிரபஞ்ச அம்சங்களைப் பற்றி வரைபடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.எடுத்துக்காட்டாக நட்சத்திர வரைபடங்கள். பிற அமைப்புக்களான சந்திரன் மற்றும் ஏனைய கோள்கள் பற்றிய வரைபடங்கள் தொழில்நுட்பரீதியாக நிலவியல் வரைபடங்களல்ல.

இடஞ்சாராத வரைபடங்கள்

தொகு

கன்ட்ட் விளக்கப்படங்கள் போன்றவை இனங்களின் தர்க்கரீதியான தொடர்பை காட்டுமே தவிர இடஞ்சார்ந்த தொடர்பைக் காட்டுவதேயில்லை.

பல வரைபடங்கள் பரப்புருவிலானதன்மையாயின.இவைகளில் தூரங்கள் முக்கியமற்றவை. இணைக்கும் திறனே முக்கியத்துவம் வாய்ந்தது.

அடிக்குறிப்புகள்

தொகு
 1. இம்ஹாஃப், இ.,"டை ஆநோர்ட்னங் டேர் நேமன் இன் டேர் கார்டி" ஆண்யுயெர் இண்டர்நேஷனல் டி கார்டோக்ராஃபி II, ஒரேல் - பஸ்ஸ்லி வேர்லாக், ஸ்யுறிச், 93-129, 1962.
 2. ஃப்ரீமேன்,எச், H.,,மேப் டேட்டா பிராசஸ்ஸிங் அண்ட் தி அன்நோட்டேஷன் பிராப்ளம்,ப்ரோசீடிங்க்ஸ் ஆஃப் தி தேர்ட் ஸ்கெண்டிநேவியன் கான்ஃபரன்ஸ் ஆன் இமேஜ் அனாலிசிஸ்,சார்ட்வெல் - பிராட் லிமிடெட். கோபன்ஹேகன், 1983.

குறிப்புகள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
maps
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வார்ப்புரு:Atlas வார்ப்புரு:Visualization

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலப்படம்&oldid=3628579" இலிருந்து மீள்விக்கப்பட்டது