வர்க்காரி
வர்க்காரி (Varkari) (மராத்தி: वारकरी என்பது மகாராட்டிர மாநிலத்தை மையமாகக் கொண்ட ஒரு வைணவ பக்தி இயக்க வாழ்க்கை முறை. மராத்திய மொழியில் வர்க்காரி என்பதற்குப் புனித நடைப்பயணி (பாதயாத்ரீகர்) என்று பொருள்.[1][2] ஒவ்வோர் ஆண்டும் இவர்கள் பண்டரிபுரம் யாத்திரை மேற்கொள்வதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது.
வர்க்காரிகள் கிருஷ்ணர் எனப்படும் விட்டலரை வணங்குகின்றனர். ஞானேஸ்வர் (தியானேஸ்வர்), நாமதேவர், துக்காராம், ஏகநாதர் போன்றோர் வர்க்காரி குருக்களில் குறிப்பிடத்தக்கவர்.
வர்க்காரி வாழ்க்கை முறை ஒழுக்கத்தையும் நன்னெறியையும் போதிக்கிறது. ஏகாதசியில் விரதமிருத்தல், மது, புகையிலை ஆகியவற்றைத் தவிர்த்தல், சைவ உணவு முறை போன்றவற்றை வர்க்காரி இயக்கத்தினர் கடைப்பிடிக்கின்றனர்.
பண்டரிபுரம் யாத்திரை
தொகுஆண்டுதோறும் மகாராட்டிராவின் பல்வேறு பகுதியிலிருந்து, விட்டலரின் வர்க்காரி நெறியைப் போற்றும் 10 இலட்சம் பக்தர்கள், ஞானேஸ்வர் சமாதிக் கோயில் உள்ள புனே நகரத்திற்கு அருகில் உள்ள ஆளந்தி மற்றும் தேகுவில் ஒன்று கூடி, 250 கிமீ தொலைவிற்கு கால்நடையாக 20 நாட்கள் பண்டரிபுரம் யாத்திரை மேற்கொள்வர்.[3] யாத்திரையின் போது ஞானேஸ்வர் சிலையை பல்லக்கில் ஏற்றிக் கொண்டு, விட்டலரின் மகிமைகளையும், ஞானேஸ்வர், துக்காராம், நாமதேவர் போன்ற விட்டலரின் அருள்பெற்ற ஞானிகளின் பெருமைகளையும் இசைக்கருவிகளால் இசைத்தும், பாடியும், ஆடிச் செல்வர். பண்டரிபுரம் யாத்திரை ஆடி மாத ஏகாதசி அன்று பண்டரிபுரத்தில் நிறைவடையும்.