வலையர் (Valaiyar) என்போர் மதுரை, தேனி, திண்டுக்கல் (நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை), சிவகங்கை, இராமநாதபுரம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, விருதுநகர் (அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர்), புதுக்கோட்டை (திருமயம், விராலிமலை, கந்தர்வகோட்டை) ஆகிய மாவட்டங்களில் வாழும் ஒரு இனக்குழுவினராவர். இவர்கள் முத்தரையர் சமூகத்தில் உள்ள 29 பிரிவில் ஒருவராவர்.[1]

சங்கஇலக்கியங்களில் வலையர்

”வலைவர்”, ”வலைஞர்” இவையாவும் வலையர் என்ற சொல்வழக்கின் செய்யுள் வடிவம் என்பதை நம் அறிவோம்.அதுபோல வலையர் என்பதை “வலைஞர்”,”வலைவர்” என்றே செய்யுள் வழக்கில் இலக்கியங்கள் குறிப்பிடும்.

பெரும்பாணாற்றுப்படை என்ற தொகையிலிலிருந்து “கோடை நீடினும் குறைப்பட வறியாத் தோடாழ்குளத்துக் கோடுகாத்திருக்கும் கொடுமுடி ‘வலைஞர்’ ”

பாடலின் பொருள்;கோடை நீடித்தாலும்,குறையாத ஆழமுள்ள குளத்தின் கரையினிலே மீன்பிடிக்கக் காத்திருக்கும் வலைஞர்/வலையர்.

மதுரைக் காஞ்சியிலிருந்து “வண்டிரை கொண்ட கமழ்பூம் பொய்கை கம்புட் சேவல் இன்துயில் இரிய ‘வல்லை நீக்கி வயமீன் முகந்து கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்’ “

பாடலின் பொருள்;வண்டுகள் தங்கிய பூமணம் பொருந்திய பொய்கையிலே படர்ந்திருக்கும் வள்ளைக்கொடியைக் கம்புள் சேவலின் இனிய தூக்கம் களையும்படி நீக்கிவிட்டு வலையை விரித்து கொழுத்த மீன்களை பிடித்து விற்கும் வலைஞர்/வலையர்.

ஐங்குறுநூறின் அம்மூவனார் பாடிய நெய்தல் திணையில் வரும் பாடல்

“சிறுநணி வரைந்தனை கொண்மோ பெருநீர் ‘வலைவர்’ தந்த கொழுமீன் வல்சிப் பறைதடி முதுகுருகு இருக்கும் துறைகெழு தொண்டி அன்னவிவள் நலனே”

பாடலின் பொருள்;தலைவனோடு காதல் கொண்ட தலைவி,பறத்தலை கைவிட்டு தம்மை விரைந்து மணம் செய்துகொள்ளுமாறு அவனிடத்தே வற்புறுத்துகிறாள்.அதற்குச் சான்றாய் ‘கடலுக்குச் சென்று வலையைக் கொண்டு மீன் பிடிக்கும் மக்கள்,அம்மீன்களை கரைக்கு கொண்டுவந்தவுடன் அதனை வாங்குவதற்கு பலரும் போட்டியிடுவர்’.அதுபோல பருவ வயதினளாகியத் தம்மை மணம் முடிக்க பலரும் முயன்று வருவதாகவும்,அதை உணர்ந்து தம்மை விரைந்து மணக்குமாறும் அவனிடத்தே சொல்லுகின்றாள். இதன் மூலம் ஐங்குறுநூறு இயற்றப்பட்ட காலத்திலேயே வலையர்கள் வாழ்ந்ததும்,அவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்ததும் தெளிவாகத் தெரியவருகின்றது.

மேற்கோள்கள்

  1. "வலையர் புனரமைப்பு வாரியம்: முதல்வர் இ.பி.எஸ்., உறுதி - Dinamalar Tamil News". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2022-07-27.

வெளி இணைப்புகள்

  • முத்தரையர் நாட்டு வேட அடியார்கள் கண்டெடுத்த திருவப்பூர் முத்துமாரி அம்மன் தல வரலாறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலையர்&oldid=3481853" இலிருந்து மீள்விக்கப்பட்டது