வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/29
தேர்வுத் துடுப்பாட்டம் (Test cricket) என்பது துடுப்பாட்டப் போட்டி வகைகளில் உயர்தரம் கொண்டதும் நீண்ட நேரம் ஆடப்படுவதும் ஆகும். இது ஒரு அணியின் முழு வலிமையைப் பரிசோதிக்கும் தேர்வாகக் கருதப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பொதுவாக இது 4 அல்லது 5 நாட்கள் நடைபெறும்.
தேர்வுத் துடுப்பாட்டம் ஐசிசியால் தகுதி வழங்கப்பட்ட 12 நாடுகளைச் சேர்ந்த அணிகளுக்கு இடையே மட்டும் நடைபெறுகிறது. ஆத்திரேலியா, அயர்லாந்து, ஆப்கானித்தான், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சிம்பாவே, வங்காளதேசம் ஆகியன தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் தகுதி பெற்ற அணிகளாகும்.
அங்கீகரிக்கப்பட்ட முதல் தேர்வுத் துடுப்பாட்டம் மார்ச் 15, 1877 முதல் மார்ச் 19, 1877வரை நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிறகு தேர்வுத் துடுப்பாட்டத்தின் 100 ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக 1977ஆம் ஆண்டு இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டி போலவே 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2012ஆம் ஆண்டு தேர்வு துடுப்பாட்டத்தில் பகல்-இரவு போட்டிகள் நடத்த ஐசிசி வழிவகுத்தது.