வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/6
சர் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மன் (Sir Donald George Bradman ஆகஸ்டு 27, 1908 – பிப்ரவரி 25, 2001) தெ டான் எனவும் அழைக்கப்படும் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் மட்டையாளர் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றிலேயே மிகச்சிறந்த மட்டையாளர் என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுபவர். பிராட்மனின் தேர்வுத் துடுப்பாட்ட மட்டைவீச்சு விகிதமான 99.94 என்பது, முக்கிய விளையாட்டுகள் அனைத்திலும் உயரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
தனது இருபத்தி இரண்டாம் பிறந்த நாளுக்கு முன்பாக இவர் பல சாதனைகளை நிகழ்த்தினார் குறிப்பாக அதிக ஓட்டங்கள் எடுப்பதில். இவரின் பல சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளது. பெரும் பொருளியல் வீழ்ச்சி காலத்தில் ஆத்திரேலிய விளையாட்டு உலகத்தின் இலட்சிய மனிதராகப் பார்க்கப்பட்டார். 1948ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அங்கு நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் வென்றது. இதனால் வெற்றிகொள்ள முடியாதவர்கள் (Invincibles) என்ற சிறப்புப் பெயர் பெற்ற அந்த அணி துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த அணியாகக் கருதப்படுகிறது.