வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/7

வசீம் அக்ரம் (Wasim Akram) (உருது: وسیم اکرم; பிறப்பு 3 சூன், 1966) என்பவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி முன்னாள் பந்து வீச்சாளர் , துடுப்பாட்ட வர்ணனையாளார் மற்றும் தொலைக்காட்சி பிரபலர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவர் இடதுகை விரைவு வீச்சாளர் ஆவார். இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டங்களை தலைமையேற்று நடத்தினார். அக்டோபர், 2013 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பின் 150 ஆண்டையொட்டி வெளியிட்ட தேர்வுத் துடுப்பாட்ட உலக பதினொருவர் அணியில் இடம் பெற்ற ஒரே பாக்கித்தான் வீரர் இவர் ஆவார்.

துடுப்பாட்ட வரலாற்றின் விரைவு வீச்சாளர்களில் குறிப்பிடத் தகுந்தவராகக் கருதப்படுகிறார். பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உள்ளளார். ஊஞ்சலாடும் வகையிலான பந்து வீச்சு முறையினை அறிமுகம் செய்தவர் என்றும் அதனை சிறப்பான முறையில் வீசுபவர் எனவும் பரவலாக அறியப்படுகிறார்.