வாதி ஹடாத்
அபு ஹானி என்று அழைக்கபடும் வாதி ஹடாத் (Wadie Haddad, 1927-28 மார்ச் 1978) என்பவர் ஒரு பாலத்தீனிய போராளியாவார். இவர் பாப்புலர் பிரண்ட் ஆப் தி லிபரேசன் ஆப் பாலஸ்தீன் என்ற அமைப்புக்குத் தலைமை தாங்கினார். 1960 களிலும், 1970 களிலும் சர்வதேச பயணிகள் விமானங்களின் கடத்தல்கள் பலவற்றிற்கு இவர் மூளையாகச் செயல்பட்டார். இதில் மிகவும் பிரபலமானது என்டெபே கடத்தல் ஆகும். அப்போது பாலத்தீனிய/ஜெர்மன் போராளிகள் இஸ்ரேலில் இருந்து பிரான்சுக்கு பயணித்துக் கொண்டிருந்த வானூர்தியை இசுரேலியர் மற்றும் இஸ்ரேலியர் அல்லாத யூதர்கள் என 106 பிணைக்கைதிகளுடன் கடத்தி உகாண்டாவுக்குக் கொண்டு சென்றனர்.
வாதி ஹடாத் | |
---|---|
சிரியாவில் ஹடாத், அண். 1970 | |
தாய்மொழியில் பெயர் | وديع حداد |
பிறப்பு | 1927 சேப்பாத், கட்டளைப் பலத்தீன் |
இறப்பு | 28 மார்ச் 1978 (அகவை 50–51) கிழக்கு பெர்லின், கிழக்கு ஜெர்மனி |
தேசியம் | பாலத்தீனியர் |
மற்ற பெயர்கள் | அபு ஹானி (ابو هاني) |
படித்த கல்வி நிறுவனங்கள் | பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழகம் |
செயற்பாட்டுக் காலம் | 1951–1978 |
பணியகம் | கேஜிபி |
அமைப்பு(கள்) | PFLP–EO |
துவக்ககால வாழ்க்கையும் கல்வியும்
தொகுஹடாத் 1927 இல் சேப்பாத் நகரில் பாலஸ்தீனிய கிறிஸ்தவக் (கிரேக்க மரபுவழி) குடும்பத்தில் பிறந்தார்.[1][2] 1948 அரபு-இஸ்ரேல் போரின் போது இவரது வீடு அழிக்கப்பட்டது, இவர் பாலஸ்தீனிய அகதியாக லெபனானுக்குச் சென்றார். இவர் பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.[2] அங்கு மருத்துவ மாணவராக இருந்த அவர் சக பாலஸ்தீனிய அகதியான ஜார்ஜ் ஹபாசை சந்தித்தார். இஸ்ரேலை அழித்து உலகின் அரபு நாடுகளை ஒன்றிணைக்க முயன்ற அனைத்து-அரபியர்களின் அரசியல் அமைப்பான அரபு தேசியவாத இயக்கத்தை (ஏ.என்.எம்) உருவாக்க உதவினார்.
பட்டம் பெற்ற பிறகு, இவர் ஹபாஷுடன் ஜோர்டானின், அம்மனுக்கு இடம் பெயர்ந்தார். அங்கு இவர்கள் மருத்துவப் பணியில் ஈடுப்பட்டனர். இவர் 1956 இல் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணப் பணி முகமையுடன் பணிபுரிந்தார். ஆனால் இவரது தேசியவாத நடவடிக்கைகள் காரணமாக அடுத்த ஆண்டில் ஜோர்டானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 1961 இல், இவர் சிரியாவுக்குத் தப்பிச் சென்றார். 1963 முதல், ஹடாத் இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தின் ஆதரவாளராக மாறினார். மேலும் ஏ.என்.எம்ஐ இராணுவமயமாக்குவதில் வெற்றி பெற்றார்.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பங்கு
தொகு1967 ஆறு நாள் போருக்குப் பிறகு ஏ.என்.எம்இன் பாலஸ்தீனியப் பிரிவு, ஹபாஷ் தலைமையில் மார்க்சிசிய அமைப்பான பாலஸ்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃபிரண்டாக மாறியது. ஹடாத் அந்தக் குழுவின் இராணுவப் பிரிவின் தலைவரானார். இஸ்ரேலிய இலக்குகள் மீதான தாக்குதல்களை ஒழுங்கமைப்பதில் இவர் ஈடுபட்டார். 1968 இல் இஸ்ரேலிய எல் அல் விமானம் கடத்தப்பட்டபோது, பி.எப்.எல்.பி இன் முதல் வானூர்திக் கடத்தலைத் திட்டமிட இவர் உதவினார். பாலஸ்தீன விடுதலை இயக்கந்நுக்குள் (பி.எல்.ஓ) இருந்து பி.எப்.எல்.பிஇக்கு எதிரான விமர்சனங்கள் இருந்தபோதிலும், இவர் கடத்தல்களுக்காக வாதிட்டார் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்.
1970 ஆம் ஆண்டு டாசன்ஸ் ஃபீல்ட் விமானக் கடத்தல்கள், லீலா கலீத் உள்ளிட்ட பிஎப்எல்பி உறுப்பினர்கள் ஜோர்டானுக்கு மூன்று பயணிகள் ஜெட் விமானங்களைக் கொண்டு வந்தது, கருப்பு செப்டம்பர் இரத்தக்களரி சண்டைக்கு ஒரு தூண்டு கோலானது. ஜோர்டானில் இருந்து பிஎல்ஓ பிரிவுகள் வெளியேற்றப்பட்ட பிறகு, ஹடாட் பிஎஃப்எல்பியிடமிருந்து கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். இஸ்ரேலுக்கு வெளியே உள்ள இலக்குகளைத் தாக்க வேண்டாம் என்று ஹடாக் உத்தரவிட்டார், ஆனால் இவர் பாலஸ்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் - வெளிப்புற நடவடிக்கைகள் (PFLP-EO) என்ற பெயரில் நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். ஹடாத் 1973 இல் பி.எஃப். எல். பி அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஹடாத் 1976 சூனில் என்டெபே கடத்தலுக்கு ஏற்பாடு செய்தார்.
மரணம்
தொகுஹடாத் 28 மார்ச் 1978 இல் கிழக்கு ஜெர்மனியில் இரத்தப் புற்றுநோயால் இறந்தார். 2006 ஆம் ஆண்டில் ஆரோன் ஜே. கிளீன் வெளியிட்ட ஸ்ட்ரைக்கிங் பேக் என்ற புத்தகத்தின்படி, ஹடாத் மொசாட்டால் கொல்லப்பட்டார். இவர் சாப்பிடும் சாக்லேட்டில் மெல்லச் செயல்படும், கண்டறிய முடியாத நச்சு கலந்து அனுப்பியதால் பல மாதங்களுக்குப் பிறகு இவர் இறந்தார்.[3]
ரோனென் பெர்க்மேன் எழுதிய ரைஸ் அண்ட் கில் ஃபர்ஸ்ட்: தி சீக்ரெட் ஹிஸ்டரி ஆஃப் இஸ்ரேல்ஸ் டார்கெட்டட் அசாசினேஷன்ஸ் என்ற 2018 புத்தகத்தின்படி, மொசாட் ஹடாத்தை அவரது பற்பசையில் நச்சுக் கலந்து கொன்றது என்கிறது. முன்னதாக ஹடாத்தின் வீடு, அலுவலகம் ஆகியவற்றை அணுகக்கூடிய ஒருவரை மோசாட் தன் வலையில் வீழ்த்தியது. அவரைக் கொண்டு ஹடாத்தைக் கொல்ல முடிவெடுத்தது. அதன்படி 1978, சனவரி, 10 அன்று, ஹடாத் வழக்கமாக பயன்படுத்தும் பற்பசைக்குப் பதிலாக அதே மாதிரியான நச்சுத் தடவிய பற்பசையை அவர் பயன்படுத்தும் இடத்தில் வைத்துவிட்டார். இந்தப் பற்பசை இஸ்ரேல் உயிரியல் ஆய்வு மையத்தில் உருவாக்கப்படது. நச்சு சளி சவ்வுகளில் ஊருருவி படிப்படியாக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் பற்பசை அது ஆகும். ஒவ்வொரு முறை இவர் பல் துலக்கும்போதும் இவரது இரத்த ஓட்டத்தில் அந்த நச்சு நுழைந்தது. ஹடாத் நோய்வாய்ப்பட்டு ஈராக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவரது நோய்க்கான காரணத்தை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் இவர் நச்சு குடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கபட்டது. யாசிர் அரஃபாத்தின் வேண்டுகோளின் பேரில், இவர் கிழக்கு ஜேர்மனிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினருக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு மதிப்புமிக்க மருத்துவமனையில் அகமது டக்லி என்ற புனைப்பெயரில் அனுமதிக்கப்பட்டார். இவர் கிழக்கு ஜேர்மனிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, இவரது உதவியாளர்கள் இவருக்கான பொருட்கள் கொண்ட பையில், நச்சுப் பற்பசையையும் இட்டிருந்தார். இவர் அங்கு நன்கு சோதிக்கப்பட்டார். மருத்துவர்கள் இவருக்கு எலி நஞ்சு அல்லது தாலியம் மூலம் நஞ்சு கொடுக்கபட்டிருக்கலாம் என்று ஐயுற்றனர். ஆனால் அதற்கான நேரடி ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இவரது நிலை தொடர்ந்து மோசமடைந்துவந்தது. கிழக்கு ஜெர்மனியில் ஒரு இஸ்ரேலிய முகவர் வழங்கிய உளவுத்துறையின் படி, ஹடாத்தின் வலியின் அலறல் மருத்துவமனை முழுவதும் கேட்டது. மேலும் இவரை அமைதிப்படுத்த மயக்க மருந்துகள் செலுத்த வேண்டியிருந்தது. அங்கு வந்த பத்து நாட்களுக்குப் பிறகு ஹடாத் இறந்தார்.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Thomas Riegler (2020). "When modern terrorism began The OPEC hostage taking of 1975". In Dag Harald Claes; Giuliano Garavini (eds.). Handbook of OPEC and the Global Energy Order. Past, Present and Future Challenges. London: Routledge. p. 291. எண்ணிம ஆவணச் சுட்டி:10.4324/9780429203190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780429203190. S2CID 211416208.
- ↑ 2.0 2.1 Mark Ensalaco (2008). Middle Eastern Terrorism: From Black September to September 11. Philadelphia, PA: University of Pennsylvania Press. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8122-4046-7.
- ↑ "Israel used chocs to poison Palestinian". Sydney Morning Herald. 8 May 2008. http://www.smh.com.au/news/World/Israel-used-chocs-to-poison-Palestinian/2006/05/08/1146940441701.html.
- ↑ Bergman, Ronen: Rise and Kill First, pp. 212-213
- ↑ Horovitz, David (26 January 2018). "Mossad chose not to nab Mengele, didn't hunt down Munich terrorists, book claims". Times of Israel. பார்க்கப்பட்ட நாள் 4 July 2024.