வாதீ அக்காரித் சண்டை

வாதீ அக்காரித் சண்டை (Battle of Wadi Akarit) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. தூனிசியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் பிரித்தானிய 8வது ஆர்மி அகாரிட் பள்ளத்தாக்கிலிருந்த அச்சு நாட்டு அரண்நிலையினை தகர்த்து தூனிசியாவுள் ஊடுருவியது. இது ஸ்கிபியோ நடவடிக்கை (Operation Scipio) என்றும் அழைக்கப்படுகிறது.

வாதீ அக்காரித் சண்டை
துனிசியப் போர்த்தொடரின் பகுதி

துனிசியப் போர்க்களம்
நாள் 6/7 ஏப்ரல், 1943
இடம் வாதீ அக்காரித், துனிசியா
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
 நியூசிலாந்து
 இந்தியா
 கிரேக்க நாடு
 ஜெர்மனி
 இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் பெர்னார்ட் மோண்ட்கோமரி  இத்தாலி ஜியோவானி மெஸ்சே
பலம்
3 டிவிசன்கள் 24,500 பேர் +

மார்ச் 1943ல் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்த அச்சு படைகள் துனிசியா நாட்டின் ஒரு முனையில் சுற்றி வளைக்கப்பட்டன. மேற்கிலிருந்து அமெரிக்கப் படைகளும் கிழக்கிலிருந்து பிரித்தானியப் படைகளும் அவற்றை முற்றுகையிட்டிருந்தன. கிழக்கில் பிரித்தானிய 8வது ஆர்மி அச்சுப் படைகளின் மாரெத் அரண்கோட்டினை மார்ச் மாத இறுதியில் ஊடுருவியது. ஜெர்மானியப் படைகள் அடுத்த அரண்நிலையான வாடி அகாரிட்டுக்குப் பின்வாங்கின. வாடி என்பது ஒருவித பள்ளத்தாக்கு. வாடி அகாரிட்டில் கபேஸ்-எல் ஹம்மா நகரங்களுக்கிடையே அச்சுப்படைகள் ஒரு பலமான அரண்கோட்டினை உருவாக்கியிருந்தன. தூனிசியாவின் தென்பகுதியில் இறுதிகட்ட அச்சு அரண்நிலையாக இது இருந்தது. கிழக்கு-மேற்காக அமைந்திருந்த இக்கோட்டின் கிழக்குப் பகுதியில் நடுநிலக்கடலும் மேற்கில் அல்-ஹம்மா உப்பு சதுப்புநிலப்பகுதியும் அமைந்திருந்தன. இதனால் பிரித்தானியப் படைகளால் இதனைச் சுற்றி வளைக்க இயலாமல், நேரடியாகத் தாக்கும்படியானது. மார்ச் 30, 1943ல் இவ்வரண்நிலையைப் பிரித்தானியப் படைப்பிரிவுகள் அடைந்து விட்டாலும் உடனடியாகத் தாக்குதலைத் தொடங்காமல் அடுத்த ஒருவார காலத்துக்கு தாக்குதலுக்கான ஆயத்தங்களைச் செய்தன. அச்சு தரப்பில் அகாரிட் அரண்நிலைகளில் இத்தாலிய 1வது ஆர்மி பாதுகாவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தது.

ஏப்ரல் 6ம் தேதி அகாரித் அரண்நிலை மீது 8வது படையணியின் தாக்குதல் தொடங்கியது. அதன் ஒரு பகுதியான பிரித்தானிய 51வது படையணி அரண்நிலைகளில் ஒரு சிறுபகுதியை முதலில் கைப்பற்றியது. இதைப் பாலமுகப்பாகப் பயன்படுத்திக் கொண்டு பிற படைப்பிரிவுகள் அகாரிட் அரண்கோட்டை ஊடுருவிவிட்டன. பின்னர் அங்கிருந்து அரண்நிலைகளின் பிற பகுதிகளைப் பக்கவாட்டிலிருந்து தாக்கிக் கைப்பற்றின. இரு நாட்கள் சண்டையில் அகாரிட் அரண்கோடு தகர்க்கப்பட்டது. நிலை குலைந்த அச்சுப் படைகள் வேகமாக தூனிஸ் நகரை நோக்கிப் பின்வாங்கின. அகாரிட்டுக்கு அடுத்தபடியாக எந்தவொரு பலமான அரண்நிலையும் தெற்கு துனிசியாவில் இல்லையென்பதால், அவற்றை விரட்டிச் சென்ற நேச நாட்டுப் படைகள் குறுகிய காலத்தில் சுமார் 220 கிமீ தூரம் முன்னேறிவிட்டன. நடுநிலக்கடல் கரையோரமாக நிகழ்ந்த இம்முன்னேற்றம், தூனிஸ் அருகே என்ஃபிடாவில் நகர் வரை தடையின்றி நிகழ்ந்தது. இதற்கு அடுத்து துனிசியப் போர்த்தொடரின் இறுதிகட்ட மோதலான வல்கன் நடவடிக்கை தொடங்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாதீ_அக்காரித்_சண்டை&oldid=1359775" இலிருந்து மீள்விக்கப்பட்டது