வானமே எல்லை (திரைப்படம்)

கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வானமே எல்லை (Vaaname Ellai) திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கே.பாலசந்தர் எழுதி, இயக்கி ராஜம் பாலச்சந்தர் மற்றும் புஷ்பா கந்தசாமி ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஆனந்த் பாபு, ரம்யா கிருஷ்ணன், பானுபிரியா, மதுபாலா பப்லு பிருத்திவிராஜ், விசாலி கண்ணதாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.

வானமே எல்லை
இயக்கம்கே.பாலசந்தர்
தயாரிப்புராஜம் பாலச்சந்தர்
புஷ்பா கந்தசாமி
கதைகே.பாலசந்தர்
இசைகீரவாணி
நடிப்புஆனந்த் பாபு
பானுபிரியா
ரம்யா கிருஷ்ணன்
மதுபாலா
ராஜேஷ்
விசாலி கண்ணதாசன்
ஒளிப்பதிவுஆர். இரகுநாத ரெட்டி
படத்தொகுப்புகணேஷ் குமார்
கலையகம்கவிதாலயா
விநியோகம்கவிதாலயா
வெளியீடு22 மே 1992
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

தொகு

வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்யும் ஐந்து கதாபாத்திரங்களைப் பற்றிய கதை.

தீபக் (ஆனந்த் பாபு) நீதிபதியாக பணியாற்றும் தனது தந்தையின்மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டுள்ளான். தீபக்கின் நண்பன், தீபக்கின் தந்தை லஞ்சம் பெற்று தீா்ப்புகளை வழங்குகிறவா் என்ற உண்மையைச் சொல்லும்போது நம்ப மறுத்து சண்டையிடுகிறான். அவனே தன் தந்தை லஞ்சம் வாங்குவதை நேரில் கண்டதும் அதிா்ச்சியடைகிறான். வசதியாக வாழவும், தீபக்கின் சகோதரிகள் திருமணத்திற்காகவும் லஞ்சம் வாங்க வேண்டியிருப்பதாக தீபக்கின் தாய் அதை நியாயப்படுத்துகிறாள். அதை ஏற்றுக்கொள்ள முடியாத தீபக் லஞ்சப்பணத்தின் மூலம் வாங்கிய தன் இருசக்கர வாகனத்தை எரித்துவிட்டு தன் வீட்டைவிட்டு வெளியேறுகிறான்.

கெளதம் (பிருத்விராஜ் ) பணக்காரத் தந்தையின் (கொச்சி ஹனீஃபா) ஒரே மகன்; தாயை இழந்தவன்;அவனது தந்தையின் அலுவலவத்தில் கணினி இயக்குபவராகப் பணியாற்றுபவள் சுகுணா(விசாலி கண்ணதாசன்). கெளதமும், சுகுணாவும் காதலிக்கிறாா்கள். தன் மகனுக்கு பணக்கார வீட்டுப்பெண்ணை திருமணம் செய்ய நினைக்கும் தந்தை, மகனின் காதலை எதிா்க்கிறாா். கெளதம் தன் காதலில் உறுதியாக இருக்கிறான். அவா்களது காதலைப் பிரிக்க அவன் தந்தை அதிரடியான முடிவெடுக்கிறாா். விதவையான சுகுணாவின் தாயை கெளதமின் தந்தை திருமணம் செய்துகொள்கிறாா். சுகுணா சகோதரி உறவானதை ஏற்க முடியாத கெளதம் வீட்டைவிட்டு வெளியேறுகிறான். வீட்டைவிட்டு வெளியேற விரும்பாத சுகுணா தன் காதலைக் கெடுத்த தாயும், இரண்டாவது தந்தையும் வெறுப்படையும்படி நடந்து பழிவாங்குகிறாள்.

கற்பகம் (மதுபாலா ) வயதான பணக்காரரை அவள் தந்தையின் வற்புறுத்தலால் விருப்பமின்றி திருமணம் செய்துகொள்கிறாள். முதலிரவன்று வீட்டைவிட்டு வெளியேறி தற்கொலைக்கு முயற்சி செய்யும் இடத்தில் சுபத்ராவைக் (ரம்யா கிருஷ்ணன்) காப்பாற்றுகிறாள்.

சுபத்ரா தனியே ரயிலில் வரும்போது நான்கு பேரால் கற்பழிக்கப்பட்டு ரயிலிலிருந்து தூக்கி எறியப்பட்டு வாழ்க்கையில் விரக்தி அடைந்தவள்.

பசுபதி ( கெளதம் சுந்தரராஜன்) படித்த படிப்புக்கு வேலை கிடைக்காத விரக்தியில் தனது தந்தையிடம் (ராஜேஷ்) சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறியவன்.

ஐந்து பேரும் குன்னூரில் சந்தித்து நூறு நாள்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து பிறகு சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால் அவர்களில் பசுபதி மட்டும் அனைவரையும் தற்கொலை முடிவிலிருந்து மாற்ற முயற்சி செய்கிறான். தான் தற்கொலை செய்வதை காணொளியாக பதிவு செய்து மற்றவர்களை தற்கொலை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.

இது மற்ற நால்வரிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அப்போது பசுபதியின் தந்தை அங்கே வருகிறார். பசுபதி இறந்த செய்தியைக் கேட்டு மற்ற நால்வரும்தான் பசுபதி இறப்புக்குக் காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டுகிறார். இதனால் மற்ற நால்வரும் கோபம் அடைந்து தற்கொலை செய்ய செல்லும்போது அங்கே இறந்துவிட்டதாக எண்ணிய பசுபதி உயிரோடு வருகிறான். பிறகுதான் இந்த தற்கொலை நாடகம் பசுபதி மற்றும் அவன் தந்தையின் திட்டம் எனத் தெரிகிறது. இறுதியாக அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளராக வரும் பாதிபாண்டியன் (மதன் பாப்) அவர்கள் ஐவரையும் ஆதரவற்றவர்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மாற்றுத்திறனாளி காந்திராமனை சந்திக்க வைக்கிறார். காந்திராமனின் அறிவுரையால் தங்கள் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு புதுவாழ்வைத் தொடங்குகிறார்கள்.

நடிகர்கள்

தொகு

சிறப்புத் தோற்றம்

தொகு

திரைப்படத்தின் சிறப்புகள்

தொகு

நகைச்சுவை நடிகர்களான தாமு மற்றும் மதன்பாப் இருவரும் அறிமுகமான முதல் படம். பசுபதி கதாபாத்திரத்தில் நடித்த கௌதம் சுந்தர்ராஜன், பாலச்சந்தரின் அழகன் திரைப்படத்தில் அறிமுகம் ஆகியிருந்தாலும் தன் திரைவாழ்வில் "மறக்கமுடியாத திரைப்படம் " எனக் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் சிகரம் பாலசந்தர் தான் இயக்கிய படங்களில் தனக்குப் பிடித்த 10 படங்களில் ஒன்றாக இப்படத்தைக் குறிப்பிட்டுள்ளார்.[3]

திரைப்படத்திற்கு மரகதமணி இசையமைத்தார். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதினார்.[4]

வரிசை

எண்

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் பாடல் ஒலிக்கும் நேரம்
1 அட யாரிங்கே மனிதன் ராஜாமணி வைரமுத்து 03:05
2 ஜன கண மன என ஜதி சொல்லும் நேரம் எஸ். பி. பாலசுப்ரமணியம் , சித்ரா 05:37
3 கம்பங்காடு கம்பங்காடு மரகதமணி, சித்ரா 04:36
4 நாடோடி மன்னர்களே சித்ரா 05:01
5 நீ ஆண்டவனா எஸ். பி. பாலசுப்ரமணியம் , சித்ரா 05:10
6 சிறகில்லை நான் கிளியில்லை சித்ரா 04:26
7 சோகம் இனி இல்லை இனி வானமே எல்லை எஸ். பி. பாலசுப்ரமணியம் 04:26
8 தம்பிகளா மரகதமணி 01:03

மேற்கோள்கள்

தொகு
  1. Rao, Thara Mohan (29 August 2002). "Anchored to success". The Hindu இம் மூலத்தில் இருந்து 27 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200227034844/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/anchored-to-success/article28379784.ece. 
  2. "H. Ramakrishnan's Experience". hramakrishnan.com. Archived from the original on 7 July 2020. பார்க்கப்பட்ட நாள் 30 November 2021.
  3. "பாலச்சந்தருக்குப் பிடித்த 10 படங்கள்".
  4. "Vaaname Yellai (1991) [sic]". Raaga.com. Archived from the original on 1 October 2021. பார்க்கப்பட்ட நாள் 1 October 2021.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானமே_எல்லை_(திரைப்படம்)&oldid=4047757" இலிருந்து மீள்விக்கப்பட்டது