விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி/அறிக்கை
தமிழ் விக்கிச் சமூகம் கடந்த நவம்பர் 15, 2011 முதல் மார்ச்சு 28, 2012 வரையிலான காலப்பகுதியில் தமிழ் விக்கி ஊடகப் போட்டி ஒன்றை நடத்தியது. இப்போட்டி அதன் முழுப்பரிமாண வெற்றியை அடைந்தது. அதன் இலக்குகள் அடையப்பட்ட முறையை இவ்வறிக்கை ஆவணப்படுத்துகின்றது. அதன் ஒருங்கிணைப்பு, செயல்பாடுகள்,. கற்றபாடங்கள் ஆகியவை இவ்வறிக்கையில் தரப்படுகின்றன.
இலக்குகள்
தொகுதமிழ்விக்கி ஊடகப் போட்டி பின்வரும் மூன்று இலக்குகளைக் கொண்டிருந்தது.
1. தமிழ் விக்கியில் பல்வேறு விக்கித் திட்டங்களிலும் பயன்படக் கூடிய எழுத்தாக்கமல்லாத தமிழ் மற்றும் தமிழர் சார்ந்த தரமிக்க ஊடகங்களின் எண்ணிக்கைகளை அதிகரித்தல்.
2. எழுத்தாளர்களுக்கு மேலதிகமாக புகைப்படக் கலைஞர்கள், படவரைஞர்கள், ஒவியர்கள் , மற்றும் சலனப்படப்பிடிப்பளர்களை விக்கித்திட்டங்கள் அதிலும் குறிப்பாக தமிழ் விக்கித் திட்டங்களுக்குக் கவருதல்.
3.தமிழ் விக்கிச் சமூகம் விக்கிமீடியா அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்ற ஒரு சிறந்த முன்மாதிரியை உருவாக்குதல்.
போட்டி ஒழுங்குகள்
தொகுபோட்டி பற்றிய கருத்தாடல் செப்டெம்பெர் 2011 பிற்பகுதியில் ஆலமரத்தடியில் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் திட்டப்பக்கம் தயாரிக்கப்பட்டு அத்திட்டப் பக்கத்தில் பயனர்களின் அபிப்பிராயங்கள் கலந்ரையாடப்பட்டன.[1]
விக்கிச் சமூகத்தின் ஏகமனதான ஒப்புதலுடன் இரண்டு வாரங்களில் திட்ட வரைபு[2] தயாரிக்கப்பட்டது. நல்கை விண்ணப்பம் ஒக்டோபர் 11,2011 இல் மேல்விக்கியில் சமர்ப்பிக்கப்பட்டு ஒக்டோபர் 20, 2011 இல் அனுமதி பெறப்பட்டது.
இப்போட்டிக்கு ஒருங்கிணைப்பாளார்களாகவும் நடுவர்களாகவும் விக்கிச் சமூகத்திலிருந்து ஐந்து பேர் செயற்பட்டனர். தமிழர் பரந்து வாழும் புவியியல் பரம்பலுக்கு ஏற்ப இவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர் (இந்தியாவிலிருந்து இருவரும் இலங்கை, ஐரோப்பா மற்றும் கனடாவிலிருந்து முறையே ஒவ்வொருவர்). இப்போட்டிக்காக கொமன்சின் புதிய தரவேற்ற நீட்சி மாற்றியமைக்கப்பட்டது.[3]
போட்டியின் இலக்கு 3000 கோப்புகள்மற்றும் 100 புதிய பங்களிப்பாளர்கள் விக்கிக்கு கொண்டுவருதல். (இவ்விலக்கு 2010 போட்டிகளின் அடிப்படையில் நிருணயிக்கப்பட்டது) எதிர்பார்த்ததை விட போட்டி ஏற்பாடுகள் முற்கூட்டியே நிறைவுற்றதால் போட்டி 15 நாட்கள் முன்னதாகவே திறந்து விடப்பட்டது.
விளம்பரம்/ பரப்புரை
தொகுபரப்புரை இரு முறைகளில் அமைந்திருந்தது
1) விக்கியில்: தமிழ் விக்கித் திட்டங்களில் பதாதைகளை வெளியிட்டமை மூலம் - படவமைப்புப் பதாதைகள் பெரும் வெற்றிக்கு ஆதாரமாயிருந்தது. அது தவிர ஆங்கில விக்கியில் தமிழ்ப் பயனர்களுக்கு இந்தியா அறிவிப்புப் பக்கத்தில் விளம்பரப்பலகை, விக்கி மின்னஞ்சல், பேச்ச்சுப் பக்க அறிவித்தல்கள் என்பன மூலம் அறிவித்தல் செய்யப்பட்டது.
2) விக்கிக்கு வெளியில்: போட்டிக்கான அறிவிப்புகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் ஆக்கப்பட்டு தமிழ் இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், இடுகைகள் என்பவற்றில் பிரசுரிக்கப்பட்டன. தமிழ் விக்கிப்பீடியர்கள் மற்றும் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் குழு மின்னஞ்சல் முகவரிகளுக்கும் அனுப்பப்பட்டன. முகநூல், ருவிற்றர் அறிவித்தல்களும் மேற்கொள்ளப்பட்டன. திண்ணை.கொம், கீற்று.கொம், 4tamilmedia.com, தமிழம்.நெற் முதலான பிரபலமான தமிழ்; வலைப்பக்கங்களில் விளம்பரம் செய்யப்பட்டது. அச்சு ஊடகங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் முன்னணி அச்சிதழான புதிய தலைமுறையில் அரைப்பக்க அளவில் செய்தி வெளியிடப்பட்டது.
தென்னிந்தியாவில் பிரபல செய்தித்தாளும் முழு இந்தியாவிலுமே இரண்டாவது அதிகப் பிரதிகளை விற்பனை செய்யும் இந்து நாளிதளில் போட்டி பற்றிய செய்திக் கட்டுரை வெளியிடப்பட்டது.[4] இலங்கையில் தினகரன், நவமணி முதலான நாளிதழ்களில் அறிவித்தல்கள் இடப்பட்டன. இலங்கை வானொலியான வெற்றி எவ்.எம் விளம்பர அறிவித்தலை வெளியிட்டது. அவுத்திரெலிய தமிழ் செய்தித் தாளான தமிழ் முரசு இப்போட்டி பற்றி அறிவித்தது.
ஐரோப்பிய மற்றும் அவுத்திரெலிய தமிழர்கள் பிரபல்யமன தமிழ் வானொலி அறிவிப்புகள் மூலம் அறிவிக்கப்பட்டார்கள். நோர்வே தமிழோசை மற்றும் அவுத்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் போட்டி பற்றிய தொடர்ச்சியான அறிவிப்புகளைத் தொடர்ச்சியாகச் செய்தது. போட்டி ஒருங்கிணைப்பாளர் சோடாபாட்டிலுடனான 15 நிமிட நேர்காணல் ஒன்றினையும் அவுத்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒலிபரப்பியது.[5]
போட்டி பற்றிய முகநூல் பக்கம்[6] ஒன்று திறக்கப்பட்டது. இது இரு வாரங்களிலேயே மிகப் பிரபல்யமானதாகவும் வலுவானதாகவும் மாறியது. போட்டி ஆக்கங்களில் தெரிவு செய்யப்பட்ட ஆக்கங்கள் தினம், முதல் ஐம்பது நாட்கள் வரை இடப்பட்டன. பரப்புரைக்கு 50 டாலர்வரை ஒதுக்கீடு இருந்த போதிலும் இலவசமாக பரப்புரை வாய்ப்புகள் இருந்தமையால் பயன்படுத்தத் தேவை ஏற்படவில்லை.
- பக்கம் உசாவப்பட்டமை:
- போட்டிகான தளம் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆக்கப்பட்டிருந்தன. பொதுவில் பதிவேற்றம் செய்வது பற்றிய விபரிப்புகளைக் கொண்ட உதவி மற்றும் அ.கே.கே. பக்கங்களும் காணொளி கையேடுகளுடன் ஆக்கப்பட்டன. போட்டிக்கான தமிழ் வலைவாசல் நவம்பர் 15க்கும் பெப்ரவரி 29 இக்குமிடையில் 75,000 முறை பார்க்கப்பட்டது. முதல் ஐம்பது நாட்களில் சராசரியாக நாளொன்றுக்கு 800-1000 தடவைகளும் மிகுதிக் காலங்களில் நாளொன்றுக்கு 400-500 தடவைகளும் பார்க்கப்பட்டது. ஆங்கிலத் வலைவாசல் தமிழ் வலைவாசலுக்குக் கிட்டிய வருகைகளில் 5-10 விழுக்காடு அளவு பார்க்கப்பட்டது.
- விக்கிப் பொதுவிலுள்ள போட்டிக்கான பகுப்புப் பக்கம் இதே காலப்பகுதியில் ஏறக்குறைய 6000 தடவைகள் பார்க்கப்பட்டது. போட்டிக்கான முகநூல் பக்கம் பிரபல்யத்தை உறுதி செய்யும் வகையில் 830 விருப்புகளை (ஏப்ரல் 1 இல் உள்ளபடி) பெற்றிருந்தது. இதில் பிரசுரிக்கப்பட்ட படங்கள் ஒவ்வொன்றும் ஏறக்குறைய 400 தடவைகள் பார்க்கப்பட்டன.
மதிப்பீடு
தொகுபோட்டி நுழைவுகள் இரு அடிப்படைகளில் மதிப்பிடப்பட்டன. அவை ஆக்கத்தின் தரம் மற்றும் பயன்பாடு என்பவையாகும். மதிப்பீட்டில் இவ்விரு பிரிவுகளுக்கும் சம மதிப்பளவு கொடுக்கப்பட்டது. போட்டி நிறைவடைந்த பின்னரே மதிப்பீட்டுச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. போட்டியில் எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையான ஆக்கங்கள் நுழைவாகியமையால் ஒரு போட்டியாளர் ஒரு பரிசிலை மட்டும் பெறுவதையும் அதிக எண்ணிக்கையான பரிசில்களை வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. மேற்படிக் காரணம் தவிர போட்டிக்கு வந்த நிறைய ஆக்கங்கள் தரமானதாக இருந்தமையால் பரிசில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆதலால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 850 $ பெறுமதியான 9 பரிசில்கள் என்பதற்கு மாறாக 875 $ பெறுமதியான 14 பரிசில்கள் என முடிவாகியது.
பரிசில் | திட்டமிடப்பட்டது | வழங்கப்பட்டது |
முதலிடம் | 1 * 200$ = 200$ | 2 * 100 = 200$ |
இரண்டாமிடம் | 1 * 100$ = 100$ | 3 * 50$ = 150$ |
மூன்றாமிடம் | 1 * 50$ = 50 $ | 3 * 25$ = 75$ |
ஆறுதல் பரிசு | 2 * 25$ = 50$ | 0$ |
தொடர் பங்களிப்பாளர் பரிசு | 3 * 100$ = 300$ | 4 * 75$ = 300$ |
சிறப்புப் பிரிவு பரிசில் | 1 * 150$ = 150$ | 2 * 75$ = 150$ |
மொத்தம் | 9 பரிசிகள் பெறுமதி850$ | 14 பரிசில்கள் பெறுமதி 875$ |
தொடர்பங்களிப்பாளர் பரிசுத் தெரிவுகள் முதலில் தீர்மானிக்கப்பட்டன. பொதுப் பரிசுத் தேர்வுகள் அடுத்ததாகத் தெரிவு செய்யப்பட்டன. பொதுப்பரிசு ஆக்கங்கள் மூன்று சுற்றுகள் நீக்கங்களுக்கு உட்பட்டு நான்காவது பட்டியல் தயாரிக்கப்பட்டது. இவ்விறுதிப் பட்டியல் (மொத்த ஆக்கங்களில் இது 9%) நான்கு நடுவர்களாலும் (தனிப்பட்ட காரணங்களால் கலையினால் இறுதி மதிப்பீட்டுப் பணிகளில் கலந்து கொள்ள இயலவில்லை) தனித்தனியாக மதிப்பிடப்பட்டன. இதில் முன்னிலையில் இருந்த 8 ஆக்கங்கள் பரிசுக்குத் தெரிவாகின. இப்பட்டியலிலிருந்து தமிழரின் தொழில் கலைகள் சிறப்புப் பகுதிக்குரிய ஆக்கங்கள் வேறாக்கப்பட்டு அவற்றில் முன்னிலையில் இருந்த இரு ஆக்கங்கள் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டன.[7]
பரிசுபெற்றோரில் 12 பேர் இந்தியாவிலிருந்தும் இருவர் இலங்கையிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இந்திய வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் இந்திய ரூபாயிலும் இலங்கை வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் அமெரிக்க டாலர் வரைவோலைகளாகவும் அனுப்பிவைக்கப்பட்டன.
தாக்கம்
தொகுபோட்டிக்காக ஏறத்தாழ 15,000 கோப்புககள் பதிவேற்றப்பட்டன. இதில் 6500 ஒலிக்கோப்புகள், 100 நிகழ்படக் கோப்புகள் மற்றும், 8000 புகைப்படங்களும் அடக்கம். 251 புதிய பயனர்களும் 56 விக்கியர்களும் (மொத்தம் 307 போட்டியாளர்கள்) இப்போட்டியில் கலந்து கொண்டனர். இந்தியா, இலங்கை, மலேசியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜெர்மனி போன்ற பல நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
பயன்பாட்டுக் கண்ணோட்டத்தில் நோக்கினால் இப்போட்டி மாபெரும் வெற்றி பெற்றது. போட்டிக்கு வந்த கோப்புகளில் சுமார் 52 விழுக்காடு (7850 கோப்புகள்) விக்கித்திட்டங்களில் பயன்பட்டு வருகின்றன. இது பொதுவெளிக் கணக்கீடு மட்டும். பயனர்வெளி போன்ற பிற பெயர்வெளிகளைக் கணக்கில் சேர்த்தால் இவ்வெண்ணிக்கை இன்னும் சில நூறுகள் உயரும். 1642 கோப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவிலும் 6121 கோப்புகள் தமிழ் விக்சனரியிலும் பயன்படுத்தப்படுகின்றன.[8]. இவற்றில் பல படங்கள் தமிழ் விக்கியின் முதல் பக்கத்தில் “இன்றைய சிறப்புப் படம்” பிரிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, வருங்காலங்களிலும் காட்சிப்படுத்தப்படும். விக்கிமீடியா காமன்சின் முதற்பக்கத்தில் இரு நிகழ்படங்கள் “மீடியா ஆஃப் தி டே” பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[9][10] நார்ஸ்க் மொழி விக்கிப்பீடியாவில் தனது புதிய கட்டுரை ஒன்றைத் தொடங்க போட்டிக்கு வந்த படமொன்று தனக்குப் பயன்பட்டதாக நார்வீஜீய விக்கிப்பீடியர் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார்.[11] பிரெஞ்சு விக்கிநூல்களில் அசையும் பொருட்கள் புகைப்படக்கலை பற்றிய நூலொன்றில் போட்டிக்கு வந்த மற்றொரு படம் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.[12]
உள்ளடக்கங்களைத் தவிர பிற தளங்களிலும் ஊடகப் போட்டி நல்ல தாக்கம் கொண்டிருந்தது. காமன்சில் படங்களைத் தரவேற்ற தற்போதுள்ள வழிமுறைகள் போதிய வேகமானதாக இல்லை என உணர்ந்த போட்டியாளர் ஒருவர், புதிய தரவேற்றக் கருவி ஒன்றை உருவாக்கினார்.[13] பல காலமாக நீண்ட ஓய்விலிருந்த இரு தமிழ் விக்கியர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
பராமரிப்பு
தொகுபோட்டியின் துவக்கத்திலிருந்து பதிப்புரிமை மீறல்களை இனங்காணுவதில் முனைப்புக் காட்டினோம். ஏறத்தாழ 200-300 படங்கள் பதிப்புரிமை மீறல்களாக அடையாளம் காணப்பட்டு நீக்கபட்டுள்ளன. பகுப்பாக்கம், கோப்புகளை நகர்த்துதல் போன்ற பராமரிப்புப் பணிகளும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டன. போட்டிக்கு வந்த 15,000 கோப்புகளில் சுமார் 2000 கொப்புகள் இன்னும் பகுப்புகளின்றி உள்ளன. (ஏப்ரல் 1, 2012 தரவுகளின் படி)
கற்ற பாடங்கள்
தொகு1) காமன்ஸ் வேலைப்பளு: போட்டிக்கு அதிக அளவில் கோப்புகள் வந்தமை காமன்சில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப் பணிகளை அதிகரித்தது. வழமையாகப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடும் காமன்ஸ் பயனர்களைத் தவிர தமிழ் விக்கியர்கள் தகவலுழவன், சூர்யப்பிரகாஷ், சண்முகம் ஆகியோர் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு உதவினர். வருங்காலப் போட்டிகளில் இப்பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபடாத ஒரு தனிப் பராமரிப்பு அணி ஒன்றை உருவாக்கிச் செயல்படவேண்டும். (பராமரிப்புப் பணிகள் = பகுப்பாக்கம், சுருக்கம் சேர்த்தல், கோப்புகள் பெயர் மாற்றம், பதிப்புரிமை சரிபார்த்தல், கோப்புகளை விக்கித்திட்டங்களில் பயன்படுத்துதல்)
2) பராமரிப்புப் பணிகள்: போட்டியாளர்கள் செய்ய வேண்டிய வேலைகளைக் குறைவாகவே வைத்திருந்தோம். பதிவேற்றும் கோப்புக்கு ஒரு சிறிய சுருக்கம் தருவது மட்டுமே கட்டாயமாக இருந்தது. பெயரிடல் முறை பின்பற்றல், விரிவான விளக்கம் சேர்த்தல், ஆங்கிலம்/தமிழ் இரு மொழிகளில் விளக்கம் சேர்த்தல், பகுப்பாக்கம் போன்ற பணிகள் கட்டாயமாக்கப்படவில்லை. இதனால் சரியான விளக்கம்/தலைப்பு இல்லாத பல கோப்புகள் பதிவாகியுள்ளன. நற்கீரனும் ஸ்ரீகாந்தும் பகுப்பாக்கத்தை உடனடியாக மேற்கொள்ளுவது / போட்டியாளர்களையே மேற்கொள்ளச் செய்வது பற்றிய கருத்துகளைப் போட்டி துவக்கத்திலேயே முன்வைத்தனர். ஆனால் சோடாபாட்டில் அவ்வாறு செய்யத் தேவையிருக்காது (குறைவான கோப்புகளே வரும், வழமையான காமன்ஸ் பயனர்களே கவனித்துக்கொள்வார்கள் என்ற தவறான கணிப்பில்) என்று இச்சிக்கலைப் புறந்தள்ளிவிட்டார். ஆனால் முந்தைய புள்ளியில் தெரிவித்தபடி வேலைப்பளு மிகுதியானதால், தனி பராமரிப்பு அணி ஒன்று தானாக உருவாகி இவ்வேலைப்பளுவை ஏற்றுக் கொண்டது.
3) பரப்புரையில் சமூகவலையின் தாக்கம்: போட்டிக்காக உருவாக்கப்பட்ட முகநூல் பக்கம் போட்டியை விளம்பரப்படுத்தப் பெரிதும் உதவியது. போட்டி தொடங்கி முதல் 45 நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் தரவேற்றப்பட்ட போட்டிப் படங்களிலிருந்து கண்ணைக் கவருபவை முகநூல் பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. அவை ஒவ்வொன்றும் நூற்றுக்கணக்கானோரால் பார்வையிடப்பட்டன. தினம் சில பத்து முகநூல் பயனர்கள் போட்டி பக்கத்திற்கு விருப்பம் தெரிவித்தனர். ஆனால் முகநூல் பயனர்களை விக்கித்திட்டங்கள் பக்கம் நகர்த்துவது கடினமாக இருந்தது. பலர் முகநூல் பக்கத்திலேயே தங்கள் படங்களை இட்டனர். தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்வதன் மூலமாகவும், பக்கச் சுவரில் கோரிக்கை விடுத்தும் அவர்களில் பலரை காமசின்ற்கு கொண்டு சென்றோம். ஆனால் மேலும் பலர் அவ்வாறு நகரவில்லை. முகநூல் பரப்புரை எளிதில் மக்களைச் சென்றடைந்தாலும், முகநூலுக்கு வெளியே மக்களைக் கொணர்வது கடினமென்பது புலனானது.
4) விக்கியில் தள அறிவிப்புகள்: தள அறிவிப்புகளில் கண்ணைக் கவரும் பதாகைகளைப் பயன்படுத்துவது அதிக அளவில் பயன்களைத் தருகிறது. ஆனால் விக்கித்திட்டங்கள் அனைத்துக்கும் பொதுவான தள அறிவிப்புகள் (அறக்கட்டளையின் நன்கொடை வேண்டல் அறிவிப்பு போன்று) இருப்பின், இரு தள அறிவிப்புகளால், பக்கத்தின் வழக்கமான உள்ளடக்கங்கள் திரையின் பாதிக்கு கீழே தள்ளப்படுகின்றன.
5) ஓரங்களும் நீர்க்குறிகளும்: காமன்சில் ஓரங்களும் நீர்க்குறிகளும் கொண்ட படங்கள் வரவேற்கப்படுவதில்லை. போட்டியில் இவ்வாறான படங்கள் வரும் என எதிர்ப்பார்க்காததால் விதிகளில் இதனைச் சேர்க்கத் தவறிவிட்டோம். இதனால் சுமார் 100-150 படங்கள் ஓரங்களோடும், நீர்க்குறிகளோடும் பதிவேற்றப்பட்டுள்ளன. இவற்றை அகற்றும் பணிகள் காமன்சில் முன்னரே தேங்கியுள்ளன.
6) விடுபட்ட கோப்புகள்: பல பயனர்கள் போட்டிக்கான தரவேற்றக் கருவியைப் பயன்படுத்தாது நேரடியாக காமன்சில் படங்களைப் பதிவேற்றியுள்ளனர். ஒரு சிலர் முதல் படத்தை போட்டிக் கருவி மூலம் பதிவேற்றி விட்டு பின் பதிவேற்றியவற்றை நேரடியாக காமன்சில் ஏற்றிவிட்டனர். இதனால் போட்டி பகுப்பு அவற்றில் சேராமல் அவை போட்டியில் இருந்து விலகி நிற்கின்றன. சில பயனர்கள் ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொண்டு தங்கள் படங்களை போட்டியில் சேர்த்துவிடும்படி கேட்டுக் கொண்டதால் அவை போட்டி பகுப்பில் இணைக்கப்பட்டன. ஆனால் பல நூற்றுக்கணக்கான கோப்புகள் இவ்வாறு போட்டியில் சேராது போயிருக்கலாம் எனக் கணிக்கிறோம்.
7) நாணயம்: தமிழர் வாழிடங்கள் பலவாக உள்ளதால் பொதுமை கருதி பரிசுகள் அமெரிக்க டாலர்களில் அறிவிக்கப்பட்டன. ஆனால் பரிசுத்தொகை கையிருப்பு இந்திய ரூபாய்களில் இருந்தது. அமெரிக்க டாலர் எதிர் இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதத்தின் ஏற்ற இறக்கங்களால் சிக்கல்கள் உருவாகின. மேலும் இந்தியாவிலிருந்து பிறநாடுகளுக்குப் பரிசுத்தொகை அனுப்ப அதிகம் செலவாகியது. இனி இவ்வாறு நல்கை பெறும் திட்டங்களில் வட அமெரிக்காவில் வாழும் ஒருங்கிணைப்பாளர் ஒருவரே நல்கைப் பணத்தை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அறக்கட்டளையிடமிருந்து நல்கைப் பணம் பெறுவதைத் தாமதப்படுத்த வேண்டும்.
8) ஒலி/ஒளி கோப்புமுறைகள்: போட்டியாளர்கள் எழுப்பிய உதவிக் கோரிக்கைகளில் பெரும்பானவை ஒலி/ஒளிக் கோப்பு முறைகள் பற்றியானதாகவே இருந்தன. வலைவாசலில் இது குறித்து விவரமான ஒரு உதவிப் பக்கம் இருந்தாலும் .ogv, .ogg முறைகளுக்கு கோப்புகளை மாற்றுவதில் பயனர்கள் தடுமாறினர். இந்த மாற்றம் தரவேற்றத்தின் போதே காமன்சில் நிகழ்ந்தால் பயனர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
9) குறைபாடுகள்: திட்டமிட்ட செயல்பாடுகளில் மூன்று பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை
- 1) இலங்கை மற்றும் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களுக்கு ஒட்டிகளும், துண்டறிக்கைகளும் அனுப்பிப் பரப்புரை செய்யத் திட்டமிட்டிருந்தோம். அச்சிடும் செலவு மற்றும் அனுப்புதலின் வேலைப்பளு மிக அதிகமாக இருக்குமென உணர்ந்ததாலும், இதற்குப் பதில் இணையவழிப் பரப்புரையே பயனுள்ளதாக இருக்கும் என்று கருதியதாலும் இப்பரப்புரை நடத்தப்படவில்லை
- 2) தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு படிமத் துப்புரவு மற்றும் பதிப்புரிமை விழிப்புணர்வுத் தொடர் முயற்சி மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இதனை நிறைவேற்றவில்லை. ஒருங்கிணைவின்றி பல பயனர்கள் ஓரளவுத் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டிருந்தாலும், திட்டமிட்டு நடைபெறவில்லை. இது வருங்காலத்தில் நடத்தப்படவேண்டும்.
- 3) ஆங்கில விக்கியில் பார்வையாளரின் வசிப்பிடத்தைக் கொண்டு ஒரு குறி வைத்த தள அறிவிப்பு இடத் திட்டமிட்டிருந்தோம். விக்கிமீடியா அறக்கட்டளையின் நன்கொடை வேண்டல் முயற்சி முடிந்தபின்னர் இதை நடத்துவதாக இருந்தது. ஆனால் இத்தகு முயற்சியால் விளையக் கூடிய வருகைகளைச் சமாளிக்கப் பெரும் ஆள்பலம் தேவை. அதற்குள் போட்டி பற்றிய செய்தி தமிழ் இணையத்தில் நன்றாகப் பரவியிருந்த படியால் இந்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.
வரவு செலவு
தொகு(இந்திய ரூபாய்களில்)
வரவு
தொகுதேதி | விவரம் | தொகை |
8-நவம்பர்-2011 | விக்கிமீடியா அறக்கட்டளையின் நல்கை | 38504.3 |
சேமிப்புக் கணக்கு வட்டி (ஆண்டுக்கு 4 %) | 513.39 | |
9-டிசம்பர்-2011 | நற்கீரனின் கொடை | 7849.41 |
சேமிப்புக் கணக்கு வட்டி (ஆண்டுக்கு 4 %) | 78.5 | |
மொத்தம் | 46945.6 |
செலவு
தொகுசெலவு | தொகை |
வழங்கப்பட்ட பரிசுத்தொகை | 43750 |
சான்றிதழ் அச்சிடல் | 500 |
அஞ்சல் உறைகள் | 150 |
அஞ்சல் செலவு - இந்தியாவுக்குள் | 350 |
அஞ்சல் செலவு - இலங்கைக்கு | 806 |
இலங்கைக்கு அமெரிக்க டாலர் வரைவோலைகள் வாங்கிய செலவு | 724 |
மொத்தம் | 46280 |
எஞ்சிய தொகை : 665. இதனை விக்கி சமூகத்தின் அனுமதியுடன் 665 ரூபாயை குறுந்தொடுப்பு ஆள்களப் பெயருக்கான (tawp.in) இவ்வாண்டு சந்தாவுக்கு மறுபயன்பாடு செய்ய அறக்கட்டளைக்கு விண்ணப்பித்துள்ளோம்.
நாணய மாற்றுக் குறிப்பு: விக்கிமீடியா நல்கை 1 டாலருக்கு 48.1 ரூபாய்கள் என்ற விகிதத்திலும் நற்கீரனின் கொடை 1 டாலருக்கு 52.3 ரூபாய் என்ற விகிதத்திலும் இந்தியாவில் கையிருப்பாகின. பரிசுகள் 1 டாலருக்கு 50 ரூபாய் என்ற விகிதத்தில் அளிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட இழப்பின் ஒரு பகுதி, கையிருப்பு இந்திய வங்கியில் இருந்த நான்கு மாதத்தில் ஈட்டிய வட்டியினால் சரிக்கட்டப்பட்டது (ஆண்டுக்கு 4%)
நன்றிகள்
தொகுபோட்டி வெற்றியடைய உதவிய பின்வரும் நண்பர்களுக்கு எங்கள் நன்றிகள். இப்பட்டியலில் விடுபட்டுப் போனவர்களுக்கும் எங்களது நன்றிகள்.
பரப்புரை:
- இரா. செல்வராசு - தமிழ்மண முகப்பில் இலவச விளம்பரம் தந்து உதவினார்
- மாலன், புதிய தலைமுறை ஆசிரியர் - புதிய தலைமுறையில் அறிவிப்பு செய்ய அனுமதி அளித்தார்,
- ரேணுகா ஃபத்னிஸ், த இந்துவின் இதழாளர், விரிவான செய்திக்கட்டுரை எழுதினார்
- பொள்ளாச்சி நசன், தமிழம்.நெட் தளத்தில் பதாகை இட்டு உதவினார்.
- கானா பிரபா, ஏடிபிசி யில் நேர்காணல் மற்றும் அறிவிப்புகளை ஒலிபரப்பினார்.
- புன்னியாமீன் - இலங்கை ஊடகங்களில் அறிவிப்புகள் வெளிவர ஏற்பாடு செய்தார்.
- டினு செரியன் இந்து இதழில் செய்தி வெளிவர உதவினார்.
- தாரிக் மற்றும் செந்தி அருமையான பதாகைகள், சின்னங்கள், துண்டறிக்கைகள், ஒட்டிகள் ஆகியவற்றை தயார் செய்து கொடுத்தனர்.
- தேனி எம். சுப்பிரமணி, இரவி, சூர்யா, அஸ்வின், கிருஷ்ணப்பிரசாத் மற்றும் குறும்பன் பரப்புரைக்கு அருமையான யோசனைகளும் உதவிகளும் வழங்கினர்
போட்டியாளர்கள்:
- அன்டன் தமிழ் புகைப்பட ஆர்வலர்களிடையே போட்டி பற்றி செய்தி பரவ உதவினர்.
- பூரேட்லி மற்றும் சூர்யா, பரிசு பெறும் தகுதி இல்லையெனினும் முறையே 6000 ஒலிக்கோப்புகளும், 600 படங்களும் பதிவேற்றினர்.
பராமரிப்பு:
- தமிழ் விக்கியர்கள்: Users தகவலுழவன், சூர்யா மற்றும் சண்முகம் - பராமரிப்புப் பணிகளின் பெரும் பங்கினை ஏற்று செய்து முடித்தனர்.
- ரோலாண்ட் பராமரிப்புப் பணிகளில் பேருதவியாற்றினார்
- மலையாள விக்கியர் கிரண் கொபி பதிப்புரிமை மீறல்களை அடையாளம் காணுவது, படிமத்துப்புரவு போன்றவற்றில் உதவினார்.
தொழில்நுட்பம்:
- டி. ஸ்ரீநிவாசன் புதிய தரவேற்றக் கருவியை உருவாக்கினார்.
- காமன்ஸ் நிருவாகி தன்வீர் தரவேற்றக் கருவியைப் போட்டிக்காக மாற்றியமைத்து உதவினார்.
முடிவுரை
தொகுபோட்டி முயற்சி தமிழ் விக்கிக்குப் பெரும் வெற்றியாக அமைந்தது. 15,000 புதிய கோப்புகளும் (இலக்கு: 3000) 251 புதிய பயனர்களும் (இலக்கு: 100) போட்டியில் பங்கேற்றனர். தமிழ் சமூக்கத்திடம் தமிழ் விக்கியை எடுத்துச் செல்லப் போட்டி நல்லதொரு வழியாக அமைந்தது. தமிழ் ஒளிப்பட ஆர்வலர்கள், தொழில்முறைக் கலைஞர்களிடையே தமிழ் விக்கி நல்ல அறிமுகம் பெற்றுள்ளது. போட்டிக்காக விக்கிமீடியா அறக்கட்டளையின் நல்கைத் திட்டத்தினைச் சரியான முறையில் நாம் பயன்படுத்திக் கொண்டது பின்வரும் காலங்களில் நாம் நடத்தப்போகும் திட்டங்களுக்கு நல்ல முன்மாதிரியாக அமையும்.
குறிப்புகள்
தொகு- ↑ http://tawp.in/r/2on5
- ↑ http://meta.wikimedia.org/wiki/Grants:Tamil_Wikimedians/TamilWiki_Media_Contest
- ↑ http://commons.wikimedia.org/w/index.php?title=Special:UploadWizard&campaign=twmc
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/article2719118.ece
- ↑ ta:File:Ta-twmc_interview-ATBC.ogg
- ↑ facebook page
- ↑ போட்டி முடிவுகள்
- ↑ http://toolserver.org/~magnus/glamorous.php?doit=1&category=TamilWiki_Media_Contest&use_globalusage=1&ns0=1
- ↑ http://commons.wikimedia.org/wiki/File:A_bamboo_basket_making_depiction_video.ogv
- ↑ http://commons.wikimedia.org/wiki/File:Drilling_operation_on_a_steel_bar.ogv.
- ↑ http://ta.wikipedia.org/wiki/User_talk:Natkeeran/தொகுப்பு10#Found_a_picture_thanks_to_the_competition
- ↑ http://fr.wikibooks.org/wiki/Photographie/Th%C3%A8mes/Le_mouvement
- ↑ http://code.google.com/p/mediawiki-uploader/