விக்கிப்பீடியா:பயனர் தெரிவுக் கட்டுரைகள் - தொகுப்பு 03

பயனர் தெரிவுக் கட்டுரைகள்
இலக்கியம் - பத்து கன்னியர் உவமை பண்பாடு - சதுரங்கம்
மணவாளனுடைய வருகை

பத்து கன்னியர் உவமை இயேசு கூறிய உவமையாகும். இதில் இயேசு தன்னை மணவாளனாகவும் கிறிஸ்தவரை கன்னிகையாராகவும், பரலோக இராச்சியத்தை கல்யாண வீடாகவும் உவமானப்படுத்துகிறார். மத்தேயு 25:1-12 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.


பரலோக இராச்சியம் தங்கள் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தி இல்லாதவர்களுமாக இருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் விளக்குகளை மட்டும் எடுத்துக்கொண்டு போனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் விளக்குகளோடு தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள். மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். நடுஇரவில்: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் கேட்டது.

சதுரங்கப் பலகையும் காய்களும்

அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்படும் சதுரங்கம் (செஸ்), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் (8 x 8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாகக் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும். சதுரங்கம் அதிட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அல்ல. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும்.


சதுரங்கம் மனித இனத்தின் பிரபல விளையாட்டுக்களில் ஒன்றாகும். இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, ஒரு கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு.

வரலாறு - வடகொரிய வரலாறு அறிவியல் - சுழல் மின்னோட்டம்
வடகொரியா கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். 1948-ல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது. வடகொரியாவின் தொன்ம வரலாறு கொரிய வரலாற்றோடு பிணைந்தது. வடகொரியாவின் அண்மைக்கால வரலாற்றையே இந்தக் கட்டுரை விபரக்கின்றது.


5000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் வட பகுதியிலிருந்து கொரிய தீபகற்பத்திற்குச் சீனர்கள் குடியேறியதிலிருந்து கொரியாவின் ஏடறிந்த கொரிய வரலாறு தொடங்குகிறது. பல்வேறு சாம்ராஜ்யங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பிறகு 1910இல் ஜப்பானிய ஏகாதிபத்தியம் கொரியாவைக் கைப்பற்றியது. ஜப்பானின் பிடி, 1945இல் இரண்டாம் உலகப் போரில் அது தோல்வியுறும் வரை நீடித்தது. போரில் வெற்றி ஈட்டிய 'நேச நாடுக'ளான அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கொரியாவைத் தத்தமது செல்வாக்குப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டன. 38ஆம் அட்சக் கோட்டின் வடபுறம் சோவியத் யூனியனின் ஆதரவுடன் கிம் இல் சுங்-இன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியும் தென்புறம் அமெரிக்க ஆதரவு முதலாளித்துவ ஆட்சியும் அமைந்தன. வடபுறம் வடகொரியா என்றும் தென்புறம் தென்கொரியா என்று இரு நாடுகளாக ஆனது.

வட்டத்தட்டு மாறும் காந்தப்புலம் ஒன்றினூடே நகரும் போது, எடி மின்னோட்டம் (சுழல் மின்னோட்டம்) தட்டில் தூண்டப்படுகிறது. இதன் திசை லென்சின் விதியினாற் தரப்படும்

சுழல் மின்னோட்டம் (swirls or eddies) அல்லது எடி மின்னோட்டம் என்பது மின்காந்தத் தூண்டல் மூலம் பெறப்படும் ஒரு நிகழ்வாகும். மின்கடத்தி ஒன்று மாறும் காந்தப்புலத்தில் அதன் திசைக்குச் செங்குத்தாக நகரும் போது, அக்கடத்தியில் தூண்டப்படும் மூடிய சுழல் மின்னோட்டம் உருவாகும். இதனை ஃபோகால்ட் என்பவர் கண்டறிந்தார். இது ஃபோகால்ட் மின்னோட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

மாறுதிசை மின்னோட்டத்தை ஒரு கடத்தியினூடாகப் பாய விடும் போது, கடத்தியினுள்ளும் வெளியிலும் ஒரு காந்தப் புலம் உருவாகிறது. மின்னோட்டம் உச்ச நிலையை அடையும் போது காந்தப்புலம் ஏறு நிலையை அடைந்து, பின்னர் மின்னோட்டம் குறையும் போது காந்தப்புலமும் குறையும். வேறு ஒரு மின்கடத்தியை இந்த மாறும் காந்தப் புலத்துக்கு அருகில் காந்தப்புலத் திசைக்குச் செங்குத்தாகக் கொண்டு வரும் போது, இந்த இரண்டாவது கடத்தியில் ஒரு மின்னோட்டம் தூண்டப்படுகிறது. ஃபிளமிங்கின் வலக்கை விதிப்படி, காந்தப்புலத்தின் திசைக்குச் செங்குத்தாக இம்மின்னோட்டம் பாய்வதால், இவை உள்ளகத்தின் அச்சை மையமாகக் கொண்ட வட்டப் பாதையில் அமைகின்றன. இதற்காகவே இதனை சுழல் மின்னோட்டம் என அழைப்பர்.

கணிதம் - கணம் (கணிதம்) புவியியல் - புவியியல் ஆள்கூற்று முறை
A என்னும் கணம் B யின் உட்கணம்
கணிதத்தில், கணம் அல்லது தொடை என்பது பல்வேறு பொருள்களின் திரட்டு அல்லது தொகை ஆகும். இது மிகவும் எளிய கருத்தாகத் தோன்றினாலும், கணிதத்தின் ஓர் ஆழம் உடைய அடிப்படைக் கருத்துருக்களில் ஒன்றாக இது விளங்குகிறது. கணம் அல்லது தொடை என்பதில் உள்ள பொருட்களை உறுப்புகள் என்பர். எடுத்துக்காட்டாக 4, 7, 9 ஆகிய எண்களை ஒரு தொகுதியாகக் கொண்டு அதனை C என்னும் பெயர் கொண்ட ஒரு கணமாகக் கொண்டால், C யின் உறுப்புகள் 4, 7, 9 என்பன ஆகும். ஒரு கணத்தின் உறுப்புகளை நெளிந்த அடைப்புக் குறிகளுக்கு இடையே குறிப்பது வழக்கம். எடுத்துக்காட்டாக C என்னும் கணத்தை C = {4, 7, 9} என்று குறிப்பர். கணத்தில் அளவிடக்கூடிய எண்ணிக்கையுடைய உறுப்புகள் இருப்பவையும் உண்டு, அளவிட இயலா எண்ணிக்கை உடைய உறுப்புகள் கொண்ட கணங்களும் உண்டு. ஒல்லத்தக்க (இயலக்கூடிய) கணங்களின் அமைப்புகளையும் தொடர்புகளையும் பற்றிய கோட்பாடுகளுக்கு கணக் கோட்பாடு என்று பெயர். இத்துறை மிகவும் வளமையானது.
அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம்
புவியியல் ஆள்கூற்று முறை என்பது புவியின் மீதுள்ள எந்தவொரு இடத்தையும் கோள ஆள்கூற்று முறையின் இரண்டு ஆள்கூறுகளை பயண்படுத்தி வெளிப்படுத்தும் ஒரு முறையாகும். இதன் போது புவியின் சுழற்சி அச்சை மையமாக கொண்டு ஆள்கூறுகள் கணிக்கப்படுகிறது. கிரேக்க சிந்தனையாளரான தொலமி பபிலோனியர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு வட்டமொன்றை 360 பகுதிகளாக பிரித்தார்.(பாகை)

அகலாங்கு என்பது எந்தவொரு புள்ளிக்கும் மத்திய கோட்டுக்கும் இடையான கோணமாகும். ஒன்றுக்கொன்று சமாந்தரமான கற்பனைக் அகலாங்கு கோடுகள் சிறு வட்டங்களை அமைக்கின்றன. மத்திய கோடு 0 பாகை அகலாங்காகும் இது ஒரு பெருவட்டத்தை அமைக்கிறது. புவி முனகள் 90 பாகை அகலாங்காகும் (வட முனை 90° N, தென் முனை 90° S).

சமூகம் - சைவ சமயம் தொழில்நுட்பம் - கணினியில் தமிழ்
சைவக் குருமார்கள்
சைவ சமயம், இந்து சமயத்தின் உட்பிரிவுகளுள் ஒன்று. சிவன் அல்லது சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் சமயம். பிற சில முக்கிய சமயங்கள் போன்று இச்சமயத்தை ஒரு குறிப்பிட்டவர் தோற்றுவிக்கவில்லை. சைவ சமயத்துக்கு ஒரு மையப் பொதுமறை நூலும் இல்லை. இம்மதத்தினை இன்று 220 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர்.

மொகெஞ்சதாரோ - ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து, ஆரியர் வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்ததென்பதற்கும் அது திராவிட நாகரிகம் என்பதற்கும் சான்றுகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஜி. யு. போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தென்னிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார். அதேவேளை வேறு சில ஆதாரங்கள் சைவ சமயம் கி.பி. மத்திய இந்தியாவில் தோன்றி பின்னர் தென்னிந்தியாவுக்கு பரவியாதாக தெரிவிக்கின்றன.

தமிழ் கணிமை சிக்கல்கள்
கணினியில் தமிழ் தோன்றியது 1980 காலப்பகுதியிலேயே. இக்காலப் பகுதியில் தான் தனி மேசைக் கணினிகள் அல்லது தனியாள் மேசைக்கணினிகள் (personal desktop computers) விற்பனைக்கு விடப்பட்டன. பல வியாபார நிறுவனங்கள் இப்படிப்பட்ட பல கணினிகளைத் தயாரித்து வெளியிட்டு சந்தைக்கு முந்த முயன்று கொண்டிருந்தன. இவைகளும் தத்தமக்கெனத் தனியான இயங்கு முறைகளைக் (Operating system) கொண்டிருந்தன. பின்னர் மக் ஓ.ஸ். (MacOS), மைக்ரோசாப்ட் (Microsoft DOS), ஓ.எஸ்.2 (OS2) வகை இயங்கு முறைகளுடன் கணினிகள் கிட்டத் தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ் வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில். இவை வெளிவந்து கொண்டிருக்கும்போது தமிழ்க் கணினி விற்பன்னர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளை ஆரம்பித்து விட்டனர்.
நபர்கள் - நோம் சோம்சுக்கி படிமம் - அழகிய புன்னகை
நோம் சோம்சுக்கி
நோம் சோம்சுக்கி (பிறப்பு: டிசம்பர் 7, 1928) அமெரிக்காவில் வாழும் ஓர் பேரறிஞர். இவருடைய முழுப்பெயர் ஆவ்ரம் நோம் சோம்சுக்கி (Avram Noam Chomsky) ஆகும். பல துறைகளில் அடிப்படையான அறிவாக்கங்கள் தந்திருக்கின்றார். அமெரிக்காவில் உள்ள மாசாச்சுசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃவ் டெக்னாலஜி (MIT)யில் பல்லாண்டுகள் பணியாற்றி, பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். மொழியியல் துறையில் தோற்றுவாய் இலக்கணம் (generative grammar) என்னும் அறிவுக்கொள்கையை முன்வைத்தவர். மொழியியல் துறையில் தலைசிறந்த பேரறிஞர்களில் ஒருவராய் அறியப்படுகின்றார். உள்ளம், அறிவுத்திறன், உள்ளறிவு, உள்ளுணர்தல் முதலியவற்றைத் தொடர்பு கொள்ளும் அறிதிறன் அறிவியல் (cognitive science) என்னும் துறையில் பெரும் புரட்சியைத் தூண்டியவர் இவர்.


அழகிய புன்னகை
அழகிய புன்னகை