கணினியில் தமிழ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கணினியில் தமிழ் தோன்றியது 1980 காலப்பகுதியிலேயே. இக்காலப் பகுதியில் தான் தனி மேசைக் கணினிகள் அல்லது தனியாள் மேசைக் கணினிகள் (personal desktop computers) விற்பனைக்கு விடப்பட்டன. பல வியாபார நிறுவனங்கள் இப்படிப்பட்ட பல கணினிகளைத் தயாரித்து வெளியிட்டு சந்தைக்கு முந்த முயன்று கொண்டிருந்தன. இவைகளும் தத்தமக்கெனத் தனியான இயக்கு தளங்களைக் (Operating system) கொண்டிருந்தன. பின்னர் மக் ஓ.ஸ். (MacOS), மைக்ரோசாப்ட் (Microsoft DOS), ஓ.எஸ்.2 (OS2) வகை இயக்கு தளமுடைய கணினிகள் கிட்டத் தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ்வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில். இவை வெளிவந்து கொண்டிருக்கும்போது தமிழ்க் கணினி வல்லுநர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர்.
கணினிகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளையும் (operation commands) மறுமொழிகளையும் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என்று பலதரப்பட்ட சிறப்புப் பாவனைப் பொருட்களும் கணினியின் திறமையைப் பாவித்து சிறப்பாக இயங்குமாறு ஆங்கில மூல மென்பொருட்கள் பக்கச் சேர்ப்பாக உருவாக்கம் பெற்றன. இம் மென்பொருட்கள் மக்களின் பல தேவைகளை மிக எளிதாகச் செய்து முடிக்கப் பெரும் உதவியாக அமைந்தன.
தமிழில் முதல் மென்பொருள்
தொகுஇவற்றின் பயன்களைத் தமிழிலும் பெற முயன்றனர் தமிழ்க் கணினி வல்லுநர்கள். இம் முயற்சிகளின் பலனாக முதலில் தோன்றிய மென்பொருட்களில் ஓர் ஆவணங்கள் எழுதும் ஆதமி (Adami) என்பதும் ஒன்றாகும். இது 1984 இல் கனடாவில் வாழும் முனைவர் ஸ்ரீநிவாசன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தமிழில் எழுதி அவற்றை அச்சுப் பதிவு செய்து கொள்ளவும் முடியும். இது அக்காலத்தைய IBM DOS 2.x இயங்குதளங்களில் இயங்கக் கூடியது. இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக “ஆதவின்” என்ற மென்பொருளும் MS Windows இயங்கு தளத்தில் பயன்படக் கூடியதாக பின்னாளில் உருவாக்கம் பெற்றது. இம் மென்பொருட்கள் அந் நாளில் தமிழ்க் கணினிப் பயனாளர்களிடம் பிரபலமாக இருந்தன. இதே நேரத்தில் தோன்றிய இன்னொரு மென்பொருள் பாரதி என்பதாகும். இது சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பிரபலமாக இருந்தன.
தமிழ் எழுத்துருக்கள் அறிமுகம்
தொகு80 களின் பிற்பகுதியில் திரு. அர்த்தனாரி (Mr. T. S. Arthanari) ஒரு தமிழ் எழுத்துருவை உருவாக்கியதாக அறியப்படுகிறது ஆனால் மேலதிக விபரங்கள் பெற முடியவில்லை[மேற்கோள் தேவை].
1990 களின் முற்பகுதியில் “மக்கின்டாஸ்” கணினியில் தமிழ் எழுத்துரு (Tamil Fonts) அறிமுகப் படுத்தப் பட்டது. ஆதமி(1984) உருவாகும் முன்னர் பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் ஆப்பிள் கணினியில் தமிழ் எழுத்துருக்களை அறிமுகப் படுத்தியிருந்தார். இதே நேரத்தில் யூனிக்சு (UNIX) இயங்கு தளத்திலும் முதன் முதலாக முனைவர் பால சுவாமிநாதன் அவர்களும் அவர்தம் உடன்பிறந்தார் முனைவர் ஞானசேகர் அவர்களும் யூனிக்சில் தமிழுருக்கள் ஆக்கினர். அத்தோடு LaTex எழுதியில் பாவிக்க wntamil என்னும் எழுத்துரு முறை அறிமுகப் படுத்தப்பட்டது. ஐ-ட்ரான்ஸ் (iTrans) என்ற நிறுவனமும் யூனிக்சில் தமிழில் எழுத வசதியாக எழுத்துருக்களையும், உதவிகளையும் வழங்கியிருந்தது. இந்த எழுத்துருக்களை கணினியில் அடிக்க எழுத்துப்பெயர்ப்பு (transliteration) முறையே பாவிக்கப் பட்டது. அதாவது அம்மா என்பதை ammaa என்று கணினியின் விசைப்பலகையில் அடிக்க வேண்டும். எழுத்துருக்கள் உருவாக்கமும் எழுதும் முறையும் இலகுவாக இருக்க, கணினிகளில் மேலதிக மென்பொருள் தேவையின்றியே தமிழில் எழுத முடிந்தது. இக்கால கட்டத்தில் பல எழுத்துருக்களை பல வல்லுனர்கள் உருவாக்கத் தொடங்கினர். இதன் பயனாகப் பல எழுத்துருக்கள் கணினிகளிற் பாவனைக்கு வந்து கொண்டிருந்தன. இவ் வெழுத்துருக்களில் கனடாவில் வாழும் முனைவர் விஜயகுமார் அவர்கள் ஆக்கிய நூற்றுக்கணக்கான எழுத்துருக்கள் குறிப்பிடத்தக்கன. இவ்வெழுத்துருக்களுக்கு கருநாடக இசை இராகங்களின் பெயர்களை இட்டிருந்தார். முனைவர் பெ குப்புசாமி அவர்கள் ஆக்கி கல்வி என்னும் பயன்மென்பொருட்களுக்குப் பயன்படுத்திய எழுத்துருக்களும், முனைவர் கல்யாணசுந்தரம் அவர்கள் ஆக்கிய மைலை (Mylai)யும், பாமினி (Bamini) போன்றவையும் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தன. இந்த எழுத்துருக்களின் தோற்றங்களாற் பல நன்மைகள் ஏற்படலாயின. எழுத்துருக்களை வைத்துக் கொண்டு, ஏற்கனவே ஆங்கில மூலம் கிடைக்கும் எழுத்துக்கோர்ப்பு, கணிக்கும் அட்டவணை ஆக்கி (Word, Excel) ஆகிய மென்பொருட்களைத் தமிழில் பாவிக்க முடிந்தது. ஆதமி போல ஒரு தமிழ் மென்பொருள் உருவாகத்திற்கான தேவைகள் குறைந்தன.
விசைப் பலகைச் சிக்கல்கள்
தொகுஎழுத்துருவின் பாவனையிலிருந்த ஒரு பெரிய சிக்கல் எழுத்துக்களை அடிக்கத் தேவையான விசைப்பலகை (keyboard) தான். கணினியில் இருக்கும் விசைப் பலகை பெரும்பாலும் ஆங்கில மொழிக்குரியது. தமிழ் எழுத்துருக்கள் தமிழ்த் தட்டச்சு இயந்திரத்தின் விசைப் பலகையினை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டவை. தமிழ்த் தட்டச்சுத் தெரிந்திருந்தவர்களுக்கு மென்பொருட்களைத் தமிழ் எழுத்துரு மூலம் பயன்படுத்துவது இலகுவாக இருந்தது. இதனால் இந்த எழுத்துருக்கள் தமிழர் தாயகங்களில் பரவலாக அறியப்பட்டன. அங்கே இருந்த கணினி வல்லுநர்கள், பத்திரிக்கைகள், இதழ்கள் அல்லது சஞ்சிகைகள் போன்றவற்றை நடத்தும் எல்லோரும் தங்களுக்கென அழகழகாகப் பல எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டனர். தமிழ்த் தட்டச்சுத் தெரியாதவர்கள் நத்தை வேகத்தில் தான் இதைப் பயன்படுத்த முடிந்தது.
பொதுத் தரம் இல்லா எழுத்துருக்கள்
தொகுஇப்படி உருவான எழுத்துருக்களினால் இன்னொரு சிக்கலும் இருந்தது. அதாவது, எழுத்துரு உருவாக்குபவர்கள் எந்த ஒரு தகுதரத்தையும் (standards) கடைப்பிடிக்கவிலை. தரங்கள் ஏதும் வகுக்கப் படவில்லை. வெவ்வேறு எழுத்துருக்கள் வெவ்வேறு தனி முறைகளைக் கொண்டிருந்தன. இதனால், இந்த எழுத்துருக்கள் எல்லா வகையான ஆங்கிலமூல மென்பொருட்களிலும் நூறு விழுக்காடு (வீதம்) சரியாக ஒத்தியங்கவில்லை. சில சமயங்களில், சில மென்பொருட்களிலிலும் சங்கடங்கள் இருந்தன. ஆனாலும் அடிப்படைப் பயன்பாடுகளான எழுதி, கணக்குப் பதிவுகள் போன்ற தேவைகள் அப்போது தமிழில் நிறைவேற்றக் கூடியதாக இருந்தன.
வலைக் கணினியில் (இணையத்தில்) தமிழில் மின்னஞ்சல்
தொகுதொழில் நுட்பம் வளரும் போது, தனித்தனியாகத் தன் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கணினிகள் வலை வேலைப்பாட்டால் இணைக்கப்பட்டன. இணைக்கப் பட்ட கணினிகளும் அவற்றின் பிரயோகங்களும் மனிதனின் தேவைகளை மேலும் செம்மையாகப் பூர்த்தி செய்யத் தொடங்கின. வலையில் இணைக்கப்பட்ட கணினிகள், இந்தக் கால கட்டத்தில் (90 களில்) தொடர்பாடல் சாதனமாகப் பரிமணிக்கத் தொடங்கின. மின்னஞ்சல் பாவனை பிரபலமாகத் தொடங்கியது. யூனிக்சு (UNIX) இயக்கு தள (operating system) கணினிகளில் மின்னஞ்சல் தொடர்புகள் முன்னரேயே இருந்தும் கூட, தனிக் கணினிகளில் (Personal Computers) மின்னஞ்சற் தொடர்பாடல் பரவலாகத் தொடங்கும் போது தான் தமிழைத் தொடர்பாடலில் பயன்படுத்தும் தேவை எழுந்தது. தனிப்பட்டோரின் எழுத்துருக்கள் சீர்தரம் இல்லா சிக்கல்களால் இந்த இடத்தில் கொஞ்சம் இடரத் தொடங்கின.
தமிழ் மின்னஞ்சல் இடர்கள்
தொகுதனித் தனியான எழுத்துருக்களை ஒவ்வொருவரும் தத்தம் விருப்பத்திற் கேற்பப் பயன்பாட்டில் வைத்திருந்ததால், ஒருவர், தமிழில், தன்னிடமிருக்கும் எழுத்துருவில் எழுதி அனுப்பும் மின்னஞ்சல் மற்றவரைப் போய்ச் சேரும் போது, அதைப் பெற்றுக் கொண்டவர் வாசிப்பதற்கு அனுப்பியவரின் எழுத்துரு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அனுப்புபவர் அஞ்சலுடன் சேர்த்துத் தன் எழுத்துருவையும் அனுப்ப வேண்டும். அனுப்புபவர், பெறுனர் இருவரிடமும் ஒரே எழுத்துரு இருந்த வேளைகளிலும் அஞ்சல் தொடர்பு என்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை. மின்னஞ்சல் மென்பொருளிலேயே தமிழில் அனுப்பப்படும் அஞ்சலை வாசிக்க முடியாது. வேறு செயலிக்கு வெட்டி ஒட்ட (cut and paste) வேண்டும். அனுப்பப்பட்ட அஞ்சல், வலைக் கணினிகளினூடு பயணிக்கும் போது அந்தக் கணினிகள் ஏதாவது காரணத்தால் கடிதம் சரியாகப் போகிறதா என சோதித்துப் பார்க்கும் போது அறிமுகமில்லாத எழுத்துருக்களைக் குப்பையெனக் கருதி எறிந்து விடக்கூடும் அல்லது சிக்கலைப் பெரிதாக்கக் கூடும். ஆக, ஒட்டு மொத்தத்தில் தமிழில் மின்னஞ்சல் தொடர்பு என்பது கடினமாகவே இருந்தது.
தமிழில் மின்னஞ்சல் தீர்வுகள்
தொகுமதுரை
தொகுஇப்படியான சிக்கல்களில் சிக்குப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு மென்பொருள் தோன்றியது. அது தான் மதுரை (Madurai) என்றழைக்கப்பட்ட அந்த மென்பொருள் ஒரு வித்தியாசமான வேலையைச் செய்தது. அதாவது ஒரு கோப்பில் தமிழ் ஆக்கங்களை தமிழ் ஒலிப்பை இலத்தீன் (ஆங்கில) எழுத்துப்படி (எழுத்துப் பெயர்ப்பில்) எழுதிச் சேமித்து வைத்துக் கொண்டு மதுரை கட்டளையை (command) அந்தக் கோப்பின் மேல் செலுத்தினால் மறுமொழியாகத் தமிழ் எழுத்து வடிவம் திரையில் தோன்றும். இது பெருமளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை, ஆனால் எளிதாகச் சின்னச் சின்ன வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்த இது மிகவும் பயனுடையதாக இருந்தது. அத்துடன் ஒரு முக்கிய குறிப்பு என்னவென்றால், மதுரையிலிருந்து கிடைத்த தமிழ் எழுத்து வடிவம் எந்தவொரு தமிழ் எழுத்துருவிலும் தங்கியிருக்கவில்லை. அவை அசுக்கி (ASCII) அமைப்பிலமைந்தவை. ஆங்கிலத் தட்டச்சிலிருக்கும் கோடுகள், புள்ளிகள் மற்றும் சில எழுத்துக்களின் உதவியால் பெறப்பட்டவையே இந்தத் தமிழ் எழுத்துக்கள். ஆதலால் இவ்வெழுத்து வடிவில், தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது 1990 களின் முற்பகுதியில் செயல்படத் தொடங்கி இருந்தது. இந்த மென்பொருளை ஆக்கியவர் முனைவர் பாலா சுவாமிநாதன் அவர்கள்.
இதன் மூலம் கிடைக்கும் எழுத்துக்கள் கிட்டத்தட்ட இப்படித்தான் தெரியும்.
|_| L |_| L |T
படபடா என எழுதுவது கிட்டத்தட்ட இப்படியாக இருக்கும்.
இதிலிருந்த பெரிய குறை: எழுத்துக்கள் பெரிதும் சின்னதுமாக ஆங்கிலமும் தமிழும் கலந்திருப்பது போன்ற தோற்றத்தில் இருந்ததுதான். அதனால் இந்த மென்பொருள் மக்கள் பயன்பாட்டில் பெரிதாக இடம் பெற முடியாமற் போய்விட்டது.
தனித் தீர்வு நோக்கி - முரசு அஞ்சல்
தொகு“தமிழ் மூலம் மின்னஞ்சல்” பிரச்சினைகளுக்குத் தீர்வு முயற்சிகளும் ஆராய்ச்சிகளும் சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் போன்ற பகுதிகளிலும் நடைபெறத் தொடங்கின. 1986 ஆம் அண்டில் மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன், முரசு என்ற மென்பொருள் நிறுவனத்தினால் முரசு அஞ்சல் என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். இதில் எழுத்துரு (font), எழுதி (editor), மின்னஞ்சல் செயலி (e-mail application), விசைப்பலகை (keyboard) என்பனவும் வேறு சில பிரயோகங்களும் இடம் பெற்றிருந்தன. இதன் மூலம், இந்தச் செயலியை நிறுவியுள்ள கணினிகளின் பயனர்களிடையே மின்னஞ்சல் தொடர்பாடல் இப்பொழுது இலகுவாக்கப்பட்டது.
இந்தச் செயலியில் முக்கியமான அம்சம் விசைப் பலகை. இந்த மென்பொருளை ஆரம்பித்து விட்டு, ஆங்கில விசைப் பலகையினூடாகவே தமிழ்-ஆங்கில எழுத்துப்பெயர்ப்பு மூலம் தமிழை எழுத முடிந்தது. அத்தோடு இந்த விசைப் பலகையில் தமிழ்த் தட்டச்சும் முறையும் இருந்தது. இப்பொழுது, தமிழ்த் தட்டச்சுத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் இலகுவாகத் தமிழை எழுதத் தொடங்கினர். அது மட்டுமல்ல, தமிழை எழுத, வாசிக்கத் தெரியாத தமிழ் படிக்காத மேதைகள் கூட (ஆங்கிலம் தெரிந்திருந்தவர்கள்) எழுத்துப்பெயர்ப்பைப் பாவித்துத் தமிழில் எழுத் முடிந்தது. அதை அவர்கள் வாசித்துப் பிழை திருத்த முடியாதென்பது வேறு விடயம்.
முரசு அஞ்சல் வெளிவந்த மிக விரைவிலேயே, யூடோரா (Eudora) என்ற மின்னஞ்சற் செயலி தமிழ் போன்ற பிற மொழி எழுத்துருக்களை உள்வாங்கி மின்னஞ்சல்களை எழுதி அனுப்பவும், படிக்கவும் கூடிய வசதிகளுடன் வெளி வந்து மின்னஞ்சலிற் தமிழை மேம்படுத்தியது. முரசு அஞ்சல் (Murasu Anjal), இணைமதி (Inaimathi), மைலை (Mylai), ஆவரங்கால் (Avarangkal) போன்ற எழுத்துருக்கள் இதில் முக்கிய பங்காற்றின. இந்த எழுத்துருக்களும் கூட எந்தவொரு பொது நியமத்தையும் கடைப்பிடித்திருக்கவில்லை.
இந்நேரத்தில், யுனிக்ஸில் அகரம் (akaram) என்ற செயலியும், மக்கிண்டாசில் சில்க்கி (SILKey) என்ற செயலியும் தமிழைக் கணினியில் ஏற்ற உருவாகி விட்டிருந்தன
இணைய யுகம் - வைய விரி வலை
தொகுமின்னஞ்சல் தொடர்பாடல் தமிழில் சாத்தியமாகி வரும் நேரத்தில் இன்னொரு புரட்சிகரமான மாற்றம் கணினி உலகில் எற்படத் தொடங்கியது. இது ஒரு புது யுகத்திற்கும் வித்திட்டது. அது தான் இணைய யுகம். (Internet era)
இணையத்தில், வைய விரி வலை (world wide web) 1990 நடுப் பகுதியில் கோபர் (Gopher), மொசையிக்(Mosaic) என்ற வடிவங்களில் தகவல் பரிமாறும் தளங்கள் உருவாகி வலைக் கணினிகளின் பாவனையை ஒரு படி உயர்த்தத் தொடங்கியிருந்தன. மிக விரைவாகவே இது அபிவிருத்தி அடைந்து மீயுரைக் (HTML) குறியுடன் “நெற்ஸ்கேப்” (Netscape) உலாவிகளில் இணைய உலா முழு வடிவம் பெற்று இணைய யுகமே ஆரம்பமாகியது.
சில இணையத் தளங்களும் தமிழும் ஆங்கிலமும் கலந்த நிலையில் உருவாக்கம் பெறத் தொடங்கின. தமிழர் தாயகங்களிலிருந்து தனிப்பட்ட எழுத்துருக்களிலும் பல இணையத் தளங்கள் பிரபலமாகத் தொடங்கின. ஆனந்த விகடன், குமுதம், வீரகேசரி மற்றும் பல பத்திரிக்கைகள், சஞ்சிகைகள் இணையத்தில் கால் பதித்துக் கொண்டன. ஒரு தடவை அவர்களின் எழுத்துருவைத் தனிக் கணினிகளில் இறக்கம் செய்து வைத்திருந்தால் போதும் அந்த இணையத் தளங்களை எப்பொழுதும் வாசிக்க முடியும்.
இணையத் தமிழ் முன்னோடி - நா. கோவிந்தசாமி
தொகுமுதலில் தமிழை இணையத்தில் ஏற்றிவைத்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த நா. கோவிந்தசாமி. "1995ம் ஆண்டு அக்டோ பர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது." [1]
இயங்கு எழுத்துரு
தொகு90 இறுதியளவில், பிற மொழி இணையத் தளங்களைக் கருத்திற் கொண்டு, இயங்கு எழுத்துரு (dynamic font) என்ற ஒரு விடயம் பாவனைக்கு வந்தது. இதை பிட்ஸ்ரீம் (bitstream) என்ற ஒரு தனியார் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதன் மூலம் இணையத் தளங்கள் தங்கள் எழுத்துருவையும் சேர்த்தே பார்வையாளர்களுக்கு அவ்வப் பொழுது வழங்கி வந்தன. இதன் அடிப் படையில், பாவனையாளர் எந்தவொரு எழுத்துருவையும் இறக்கம் செய்யாமலேயே இணையத் தளங்களைப் பார்வையிட முடிந்தது. இந்த இயங்கு எழுத்துருவைப் பாவித்துப் பல தமிழ் மொழி இணையத் தளங்கள் அழகாக உருவாகத் தொடங்கின. ஒரு கட்டத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனமும் இயங்கு எழுத்துருவுக்குக் கருவிகளை வழங்கியிருந்தது. காலப் போக்கில் இது நடைமுறையிழந்து வருவது தெரிகிறது. இப்படிப் பல துறைகளில் எழுத்துருக்கள் உருவாக்கம், பிற மொழியாளர்களை அவர்கள் மொழியில் கணினியில் கருமமாற்ற உருப் பெற்ற வண்ணமிருந்தன.
தமிழ்.நெட்
தொகுஇணையப் பாவனையும் தமிழில் மின்னஞ்சல் சாத்தியமான சூழலும் பல் வேறு நாடுகளிலுமிருந்த பல தமிழர்களைக் கணினியில் தமிழில் தொடர்பாட வைத்தன. இந் நிலையில், 1995 அளவில், அவுஸ்திரேலியாவில் இருக்கும் திரு. பாலா பிள்ளை என்பவர் ஒரு மடலாடற்குழுவைத் தமிழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழ்.நெட் (tamil.net) என்ற இணையத் தளத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஒரு மடலாடற் குழுவையும் ஏற்படுத்தினார். தமிழார்வமுள்ள பலர் அதில் இணைந்து கொண்டு தமிழைப் பற்றியும், தமிழிற் கணினி பற்றியும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்துரையாடினர். தமிழும் தமிழர் சார்ந்த எல்லா விடயங்களுமே அங்கே அலசப்பட்டன. பல அறிஞர்களையும், வித்துவான்களையும் சந்திக்க வைத்து அவர்களுக்கு ஒரு வடிகாலாக அமைந்த தமிழ்.நெட் பெருமைக்குரியது. முரசு அஞ்சல் எழுத்துருவை நியமமாகக் கொண்டு எல்லோரும் கலந்துரையாடுவது சிக்கலின்றிச் செவ்வனே நடந்து கொண்டிருந்தது.
தகுதர நியமம்
தொகுஉலகின் பல பாகங்களிலுமிருந்த பல கணினி வல்லுநர்கள், தமிழ் வல்லுநர்கள் சந்தித்துக் கொள்ள தமிழ்.நெட் ஒரு அரிய வாய்ப்பாக இருந்தது. இதன் மூலம் தமிழின் எழுத்துருவுக்கு ஒரு நியமத் தரத்தைச் (standard) சர்வதேச அங்கீகாரத்துள் கொண்டு வர வேண்டுமென்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒரு புது வேகம் பெற்றது. இதற்கான ஆராய்ச்சிகள், கலந்துரையாடல்கள் மற்றும் செயற்பாடுகள் மடலாடற் குழுவூடாகவும், அதற்குப் புறம்பாகவும் மிக்க கரிசனையோடு பலரின் நேரம், பொருட் செலவுகளோடு நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இவர்களின் ஆராய்ச்சிகளினாலும், செயற்பாடுகளினாலும் தகுதரம் என்ற ஒரு நியமச் சூத்திரத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்தார்கள். ஆங்கிலத்தில் தஸ்கி (TSCII) என்று இதை அழைத்தார்கள். இந்த நியமத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் எழுத்துக்களுக்குக் கணினித் தொழில் நுட்பத்தில் நிரந்தர இடத்தை நிர்ணயப் படுத்தினார்கள். ஏற்கனெவே இருந்த சில எழுத்துருக்கள் இந்த நியம வடிவுக்குள் தங்களைக் கொண்டு வந்து மெருகு பெற்றன. நியமம் ஒன்று உருவெடுத்ததால் பெரிய நன்மை ஏற்பட்டது. இந்த நியமத்திலமைந்த எழுத்துரு ஏதாவது ஒன்று எம் கணினியில் இருந்தால், இதே நியமத்திலமைந்த வேறொருரு எழுத்துருவில் எழுதப்பட்டவற்றை வாசிக்கப் பிரச்சனையில்லை. இந்தத் தகுதரம் உலக தமிழ் அரச அங்கீகாரத்திற்காகக் காத்திருந்தது.
ஒருங்குறி நியமம்
தொகுதமிழுக்காக ஆக்கப்பட்ட தகுதரத்தின் உருவாக்கத்திலும் சில முரண் கருத்துக்கள் இருந்தன. தமிழ்க் கணினி விற்பன்னர்கள் தகுதர வேலையில் இருக்கும் வேளையில், ஒருங்குறி (unicode) என்ற ஒரு அமைப்பு உலக மொழிகள் அனைத்தையும் கணினியில் உள்ளடக்குவதை குறிக்கோளாகக் கொண்டு ஆய்வுகளை முன்னெடுத்து சீர்தரங்களை (நியமங்களை) அறிவித்தது. தமிழிற்கும் ஒருங்குறி சீர்தரம் (நியமம்) செய்யப்பட்டு உருப் பெற்றது. ஆனால் இது முன்னர் தமிழுக்காக ஆக்கப்பட்ட தகுதரத்தின் சீர்தரத்தை (நியமத்தை) ஒத்திருக்கவில்லை. எனினும், ஒருங்குறி அமைப்பானது உலகில் உள்ள மிகப்பல மொழிகளுக்கும் இடம் வகுத்து இயங்கியமையாலும் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்கள் பலவும் ஆர்வமுடன் எடுத்தாளுவதாலும் மிகுந்த செல்வாக்கு பெற்று முன்னணியில் இருக்கின்றது.
அரசின் ஏற்பு
தொகுஒருங்குறியும், தகுதரமும் சீர்தரங்களாக உருவெடுத்த வேளையில், தமிழ்நாடு அரசு கணினியில் தமிழின் சீர்தரம் கருதி ஒரு ஆராய்ச்சி மாநாட்டைக் கூட்டியது. அரசு ஆதரவுடன் முன்னெடுக்க ஒரு சீர்தர் சூத்திரத்தைத் தேர்ந்தெடுக்க முனைந்தது அரசு. தமிழ்நெட்99 (Taminet99) என்ற இந்த மாநாட்டில் ஒருங்குறி முறையையே தமிழக அரசு தேர்வு செய்தது. தகுதரம் இங்கே சமர்ப்பிக்கப்பட்டும் ஏற்கப் படவில்லை. தமிழ்நெட்99 இன் முடிவை இதர பல நாடுகளின் தமிழ்ப் பிரிவுகளும் ஏற்கத் தொடங்கின. இப்பொழுது ஒருங்குறி சீர்தரமே எல்லோராலும் ஏற்கப் பட்டு இயல்பாக பாவனைக்கும் வந்து விட்டது. அத்துடன் தமிழ்நெட்99 இன் தொடர்ச்சியாக தமிழ்நெட் என்னும் தலைப்பில் ஆண்டுதோறும் மாநாடுகள் நடை பெறுகின்றன. உத்தமம் என்ற ஒரு அமைப்பும் இப்பணிகளுக்கு உதவுகின்றது.
கீமான்
தொகுமுரசு அஞ்சல் விசைப் பலகையைத் தொடர்ந்து, கீமான் (keyman) என்னும் விசைப் பலகை, பன் மொழிப் பாவனையாளர்களுக்கு ஒரு நிறுவனத்தால் (Tavultesoft) தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது (விநியோகிக்கப்பட்டது). இந்தக் கீமான் மூலம் தமிழில் தட்டி எழுதுவது இலகுவாகியது. இதைப் பாவித்து ஈ-கலப்பை (e-kalappai)என்ற ஒரு செயலி மூலம் விசைப் பலகைகள் தமிழுக்கு இசைவாக்கம் செய்யப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த முகுந்தராஜ், அன்பரசன் போன்றோர் இந்தத் துறையில் ஊக்கமாகச் செயற்படுகிறார்கள். இந்த ஈ-கலப்பை இப்பொழுது தமிழா என்ற செயலியில் இலகுவாகக் கிடைக்கிறது. ஈ-கலப்பையில், ஒருவர் தட்டி வேண்டிய எழுத்துருவை, ஒருங்குறி எழுத்துருவா அல்லது தகுதர எழுத்துருவா அல்லது ஆங்கிலமா என்று தெரிவு செய்யும் வசதியும் உண்டு.
நிலைபெற்று வரும் ஒருங்குறி
தொகுஒருங்குறி, கீமான் விசைப்பலகை ஆகியவற்றின் துணையோடு தமிழ் இப்பொழுது இணையத்திலும், நாள்தோறும் வளர்ந்து வருகின்றது. ஒருங்குறிச் சீர்தரமே இன்று (2007 வரை) தமிழுக்கு அனைத்துலக மட்டத்தில் ஏற்புப் பெற்று நிலைத்து வருகின்றது.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகுK. Kalyanasundaram. (). An Overview of different tools for word-processing of Tamil and proposal towards standardisation.; தமிழ் எழுத்துரு சீர்தரம் பற்றிய கட்டுரை
வெளி இணைப்புகள்
தொகு- தமிழை தமிழால் எங்கிருந்தும் எழுத கிளிக்எழுதி
- பழைய எழுத்துரு தரவிறக்க[தொடர்பிழந்த இணைப்பு]
- iTrans ஐ-ட்ரான்ஸ்
- தமிழ் எழுத்துரு நியமம் பற்றிய கட்டுரை
- சில எழுத்துருக்களின் விளக்கம் பரணிடப்பட்டது 2006-11-29 at the வந்தவழி இயந்திரம்
- சில்க்கி
- அகரம் பற்றியொரு தகவல் பரணிடப்பட்டது 2007-03-28 at the வந்தவழி இயந்திரம்
- தஸ்கி (TSCII) தற்போது
- தமிழ்.நெட் இல் தஸ்கி பரணிடப்பட்டது 2007-01-10 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ்.நெட் தற்போது பரணிடப்பட்டது 2007-10-29 at the வந்தவழி இயந்திரம்
- பிற்ஸ்ரீம் இயங்கு எழுத்த்ரு பரணிடப்பட்டது 2008-03-19 at the வந்தவழி இயந்திரம்
- மைக்ரோசப்ட் இயங்கு எழுத்துரு
- ஒருங்குறி
- ஒருங்குறியில் தமிழின் இடம்
- தமிழ்நெட்99
- உத்தமம்
- ஈ-கலப்பை
- தமிழா பரணிடப்பட்டது 2007-01-13 at the வந்தவழி இயந்திரம்
- கீமான்
- விஸ்டா தமிழ்
- தமிழ் மென்பொருட்கள்
மேலதிக தகவல்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-03-11. பார்க்கப்பட்ட நாள் 2007-03-11.