விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 17, 2011

பறக்கும் இடியாப்ப அரக்கன் என்பது பறக்கும் இடியாப்ப அரக்கன் திருச்சபை அல்லது பாசுத்தாஃபாரியனியம் என்ற பகடி சமயத்தின் கடவுள். இச்சமயமும் கடவுளும் 2005ம் ஆண்டு அமெரிக்காவில் பாபி எண்டர்சன் என்ற கல்லூரி மாணவரால் உருவாக்கப்பட்டன. அமெரிக்காவின் கேன்சசு மாநிலத்தில் கல்வி வாரியம் அம்மாநிலப் பள்ளிகளில் படிவளர்ச்சிக் கொள்கைக்கு மாற்றாக நுண்ணறிவு வடிவமைப்புக் கொள்கையை பாடமாக அனுமதித்தற்கு தனது எதிர்ப்பைக்காட்டும் வகையில் எண்டர்சன் இவற்றை உருவாக்கினார். கேன்சசு வாரியத்துக்கு ஒரு திறந்த கடிதம் எழுதிய எண்டர்சன் அதில், நுண்ணறிவு வடிவமைப்பைப் பாடமாக்கினால், தான் நம்பும் “பறக்கும் இடியாப்ப அரக்க”னையும் பாடமாக்க வேண்டும் என்று நையாண்டி செய்தார். எண்டர்சனின் இணையதளத்தில் வெளியான அக்கடிதம் விரைவில் உலகப் புகழ்பெற்று, ஒர் இணையத் தோற்றப்பாடாகவே ஆகிவிட்டது. பின் இடியாப்ப அரக்கன் பற்றி எண்டர்சன் ஒரு நூலையும் எழுதினார். பல்வேறு மதங்களின் புனித விசயங்களை நையாண்டி செய்து இப்பகடிமதத்தின் மைய நம்பிக்கைகளும், புனித புத்தகங்களும் சிறப்பு நாட்களும் தேர்ந்தடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க இறைமறுப்பாளர்களும் இடியாப்ப அரக்கனை வரவேற்று நுண்ணறிவு கோட்பாட்டை எதிர்க்கும் இயக்கத்தின் சின்னமாக அதை மாற்றிவிட்டனர். மேலும்..


விளாடிமிர் நபோக்கோவ் (1899-1977) ஒரு பன்மொழித் திறமை கொண்ட உருசிய-அமெரிக்கப் புதின எழுத்தாளரும், சிறுகதை எழுத்தாளரும் ஆவார். தனது முதல் ஒன்பது புதினங்களையும் உருசிய மொழியிலேயே எழுதிய நபோக்கோவ் பின்னர் ஆங்கிலத்தில் எழுதி உலகப் புகழ் பெற்றார். இவர் பூச்சியியலிலும் பங்களிப்புச் செய்துள்ளதுடன், சதுரங்கப் பிரச்சினைகளிலும் ஆர்வம் காட்டினார். நபோக்கோவின் லொலித்தா (1955) என்னும் புதினமே இவரது மிக முக்கியமான புதினமாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. அத்துடன் பரவலாக அறியப்பட்ட இவரது புதினமும் இதுவே. இவரது தந்தை சட்ட அறிஞரும், அரசியல்வாதியும், பத்திரிகையாளரும் ஆவார். இவரது குடும்பம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்த பிரபுத்துவக் குடும்பங்களுள் ஒன்று. நபோக்கோவ் சிறுவயது முதலே பிரெஞ்சு, ஆங்கிலம் உட்பட மும்மொழியாளராக இருந்தார். தன்வரலாற்று நினைவுகளை நூலாக எழுதிய நபோக்கோவ் தனது சலுகைகள் கொண்ட இளமைக்கால விவரங்கள் பலவற்றை விரிவாக விளக்கியுள்ளார். தனது இளமைக் காலத்தை மிகத் தெளிவாக நினைவுக்குக் கொண்டுவரக்கூடிய அவரது திறமை அவர் நிரந்தரமாக நாடுகடந்து வாழ்ந்த காலத்தில் அவருக்கு மிகவும் உதவியது. 1919 இல் நபோக்கோவ் குடும்பத்தினர் நாடுகடந்து மேற்கு ஐரோப்பாவுக்குச் சென்றனர். மேலும்..


பெரிய வியாழன் என்பது கிறித்தவர்கள் இயேசு கிறித்துவின் இறுதி நாட்களை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது பெரிய வாரம் அல்லது புனித வாரம் என்று அழைக்கப்படுகின்ற நாள்களில் வருகின்ற வியாழக்கிழமை ஆகும். பெரிய வியாழன் இயேசு தாம் துன்பங்கள் அனுபவித்து இறப்பதற்கு முந்திய நாள் தம் சீடர்களோடு இரவுணவு அருந்திய நிகழ்ச்சியை நினைவுகூர்கிறது. இந்நிகழ்ச்சி மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தி நூல்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது. இவ்விழா ஆண்டுதோறும் மார்ச் 19இலிருந்து ஏப்ரல் 22 காலப்பகுதியில் இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியை கொண்டாடுகின்ற ஞாயிறு எந்நாளில் நிர்ணயிக்கப்படுகிறதோ அதைச் சார்ந்து பெரிய வியாழனும் நிர்ணயிக்கப்படும். கத்தோலிக்க திருச்சபை உட்பட மேலைத் திருச்சபைகள் கிரகோரி நாட்காட்டியின் படியும், கீழைத் திருச்சபைகள் ஜூலியன் நாட்காட்டியின் படியும் இந்நாளை நிர்ணயிக்கின்றன. பெரிய வியாழன் கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் வருகின்ற "உயிர்த்தெழுதல் முப்பெரும் விழாவின்" முதல் நாள் ஆகும். இரண்டாம் நாள் புனித வெள்ளி. மூன்றாம் நாள் புனித சனி என்று அழைக்கப்படுகின்றன. இம்மூன்று நாள்களிலும் கிறித்தவர்கள் தங்கள் மறைசார்ந்த புனித நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றனர். மேலும்..