விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 19, 2010

உயிரணுக்கொள்கை அல்லது கலக்கொள்கை (Cell theory) அனைத்து வகையான உயிரினங்களினதும் அடிப்படையான கட்டமைப்பு மற்றும் தொழிற்பாட்டு அமைப்பு உயிரணு அல்லது கலம் எனும் கருத்தை கூறுகின்றது. இக்கொள்கையின் மேம்பாடு 1600 களின் நடுப்பகுதியில் நுண் நோக்கியலில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக சாத்தியமானது. இக்கொள்கை உயிரியலின் அடிப்படைகளில் ஒன்றாகும். இக்கொள்கையானது புதிய உயிரணுக்கள் முன்பிருந்த உயிரணுக்களிலிருந்தே தோன்றுகின்றன என்றும் அனைத்து உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, மற்றும் ஒழுங்கமைப்பு ரீதியிலான அடிப்படை அலகு உயிரணு என்றும் கூறுகின்றது.உயிரணுக்கொள்கை உள்ளடுக்குவது: (1)அனைத்து உயிர் வாழ் பொருட்களும் அல்லது உயிரினங்களும் உயிரணுக்களால் ஆக்கப்பட்டவை.(2)புதிய உயிரணுக்கள், பழைய உயிரணுக்கள் இரண்டாக பிரிவதன் மூலம் தோன்றுகின்றன.(3)உயிரின் அடிப்படை கட்டுமான அலகுகள் உயிரணுக்கள் ஆகும்.உயிரணுக்கள் பரம்பரை தகவலை (டி.என்.ஏ) கொண்டிருக்கிறது. இது உயிரணுக்களின் பிரிவின் போது, தாய் உயிரணுவிலிருந்து பிரிந்து வரும் மகள் உயிரணுக்களிற்கு கடத்தப்படுகிறது.


எவ்வித தணிக்கையும், தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, கற்பிக்க ஒருவருக்கு இருக்கும் சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும். இது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. கருத்து வெளிப்பாடு என்பது பேச்சுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், சமயச் சுதந்திரம் போன்ற பல்வேறு சுதந்திரங்களுடன் இணையாக முன்னிறுத்தப்படுகிறது. பேச்சு, எழுத்து, இசை, நாடகம், ஓவியம், நிகழ்த்தல், பல்லூடகம், அலங்காரம், நம்பிக்கைகள், இணையம் என பல்வேறு வடிவங்களிலும் கட்டுப்பாடுகளின்றி கருத்துக்களை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, பகிர ஆகியவற்றுக்கான சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும்.கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மக்களாட்சிக்கு, அரசில், முடிவெடுத்தலில் மக்களின் பங்களிப்புக்கு மிகவும் அவசியமானது. அரசை, சமயத்தை, படைத்துறையை, சமூகக் கட்டமைப்புகள் என பலவற்றை விமர்சிப்பதற்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அவசியம் ஆகும். இந்த விமர்சனங்களால்தான் திருத்தங்கள், மாற்றங்கள் சாத்தியப்படுகின்றது.