விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 16, 2012
பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமி சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்கும்,பெண் விடுதலைக்கும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு பெரியார் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார். இவரின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் "புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும்...
பரவளைவு என்பது கணிதத்தில் ஓர் கூம்பு வெட்டாகும். இக்கூம்பு வெட்டின் ஆங்கிலப் பெயரான parabola என்பது παραβολή என்ற கிரேக்கச் சொல்லிருந்து தோன்றியது. ஓர் நேர்வட்டக் கூம்பின் உச்சியையும் அதன் அடிவட்டப் பரிதியில் அமையும் ஒரு புள்ளியையும் இணைக்கும் கோட்டிற்கு இணையான(சமாந்தரமான) ஒரு தளத்தால் அக்கூம்பு வெட்டப்படும் போது கிடைக்ககூடிய வெட்டுமுக வடிவமே பரவளையமாகும். தானுந்துகளில் அமைக்கப்பட்டுள்ள முகப்பு விளக்குகளிலிருந்து ஏவுகணைகள் வரை பரவளைவுகளின் பயன்பாடு விரிந்துள்ளது. இயற்பியல், பொறியியல் போன்ற முக்கியமான பலதுறைகளில் பரவளைவு பயன்படுகிறது. பரவளைவு மற்றும் பிற கூம்பு வெட்டிகளின் குவியம்-இயக்குவரை பண்பைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டிரியாவின் கணிதவியலாளர் பாப்பசு. புவியீர்ப்பினால் ஏற்படும் சீரான முடுக்கத்தின் விளைவாக ஒரு எறிபொருளின் பாதை பரவளைவாக அமைவதைக் கலீலியோ கண்டுபிடித்தார். மேலும்...