விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 29, 2009

e என்னும் மாறிலி கணிதத்திலேயே மிகச்சிறப்பான மூன்று மாறிலிகளில் ஒன்று. பை மற்றும் i என்பன ஏனைய இரண்டு கணித மாறிலிகளாகும். 1614 இல் மடக்கைகளை அறிமுகப்படுத்திய நேப்பியருக்காக e என்ற இம்மாறிலியை நேப்பியர் மாறிலி என்றும், 1761 இல் அதை பல தசம இலக்கங்களுக்குக் கணித்து மெக்கானிக்கா என்ற தன் கணித நூலில் புகுத்திய ஆய்லரின் நினைவாக ஆய்லர் மாறிலி என்றும் சொல்வதுண்டு. ஆய்லருடைய கணிப்புப்படி e யின் பொறுமதி e = 2.718 281 828 459 045 235 360 287 4 ... ஆகும்.


ஆறுமுக நாவலர் (1822 - 1879; நல்லூர், யாழ்ப்பாணம்) 19 ம் நூற்றாண்டின் சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். தற்காலத் தமிழ் உரைநடையின் முன்னேடிகளில் ஒருவர். பல தமிழ் நூல்களை எழுதியும், பழம் பெரும் நூல்களை அச்சுப் பதிப்பித்தும் தமிழ்ப் பணி ஆற்றினார். சைவ சமயத்துக்கும் பெரும் பங்களிப்புக்கள் செய்தார். இவர் எழுதிய இலக்கணச் சுருக்கம், சைவ வினாவிடை ஆகியவை மாணவர்களுக்குப் பாட நூல்களாக அமைந்தன. எனினும் இவர் சாதிப் படிநிலை அமைப்பையும், வர்ணாச்சிரமத்தையும் வலியுறுத்தியமை சமூக சீர்திருத்தவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.