விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 5, 2013

கீற்று முடைதல் என்பது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்படும் ஒரு கைத்தொழில்ஆகும். தமிழர்கள் தாங்கள் கொண்டாடும் அனைத்து விழாக்களிலும் முடைந்த கீற்றுகளை (கிடுகு) பயன்படுத்தியே பந்தல், மேடைகள், கொட்டகைகள் போன்றவற்றை அமைப்பார்கள். பண்டைகாலத்தில் விழா அலங்காரங்கள் அனைத்தும் பல மரங்களின் இலைகள், பூக்கள், காய்கள் ஆகியவற்றை வைத்தே வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் கீற்று முடையும் தொழில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முடைதல் சொல்லுக்கு பின்னுதல், கட்டுதல், நிரைத்தல் என்ற பொருள்கள் உண்டு. கீற்று முடை தொழில் சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தென் இந்தியாவில் இருந்திருக்கிறது. கிடுகினால் குடிசைகளும், பனை ஓலைகளினால் பறைகளும் கூரைகளும் செய்திருக்கிறார்கள். ஒரு வீட்டை சுற்றி வேலிகள் அமைப்பதற்கும் கிடுகுகள் பயன்படுத்தப்படுகிறது. இதனை கிடுகு வேலி என்று கூறுவது வழக்கம். மேலும்...


வி. வி. வைரமுத்து (1924 - 1989) இலங்கையின் மிகச்சிறந்த இசை நாடகக் கலைஞராகக் கருதப்படுபவர். இவர் அரிச்சந்திரனாகத் தோன்றி நடித்த 'மயான காண்டம்' எண்ணற்ற தடவைகள் மேடையேற்றப்பட்ட இசை நாடகமாகும். தனது இனிய குரல் வளத்தால் பாடி, உருக்கமாக வசனங்கள் பேசி நடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறையைச் சேர்ந்த வேலப்பா, ஆச்சிக்குட்டி தம்பதியினருக்கு வைரமுத்து மகனாகப் பிறந்தார். காங்கேசன்துறை சைவ வித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடங்கினார். பாடசாலைக் காலத்தில் அப்பூதியடிகள் என்ற இசை நாடகத்தில் அப்பூதியடிகளாக நடித்தார். இசையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் 1941 தொடக்கம் 1942 வரை தமிழகம் சென்று மதுரையில் வித்துவான் செல்லப்பா பிள்ளையிடம் கருநாடக இசை பயின்றார். இரண்டு ஆண்டுகளில் இசை மேதையாகவும், ஒரு நடிகனாகவும் நாடு திரும்பினார். இலங்கை திரும்பியவருக்கு இரத்தினபுரியில் ஆசிரியப் பணி கிடைத்தது. நாடகக்கலையில் ஆர்வமுள்ள வைரமுத்து, அடிக்கடி விடுமுறை எடுத்து யாழ்ப்பாணம் வந்து மேடை நாடகங்களில் நடிப்பார். இதனால் இவரின் ஆசிரியர் வேலை பறி போனது. மேலும்...