விக்கிப்பீடியா பேச்சு:2007 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2007 Tamil Wikipedia Annual Review

ரவியின் கருத்துக்கள் - த.வி-யை முன்னெடுக்க அணுகுமுறை மாறுதல்கள் தேவை

தொகு

2005, 2006 அறிக்கைகள் தொடர்னான உரையாடல்கள் படித்துப் பார்த்தேன். வருங்காலப்பணிகள் என்று நாம் இந்த ஆண்டு உரையாடப்போவதற்கும் சென்ற ஆண்டுகளுக்கும் பெரிய வேறுபாடு இருக்காது என்று நினைக்கிறேன். இந்த ஆண்டின் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு, நிரோ உருவாக்கிய திரைப்படக் குறுங்கட்டுரைகள். இதன் மூலம் திரைப்படங்கள் குறித்து தேடுவோர் பலரும் தமிழ் விக்கிபீடியாவுக்கு வரும் வாய்ப்பு வந்திருக்கிறது. அடுத்து, ஒவ்வொரு நாளுக்கும் கனக்ஸ் உருவாக்கியுள்ள கட்டுரைகளும், தொய்வில்லாத முதற்பக்க காட்சிப்படுத்தலும். நாடுகள் திட்டம் ஓரளவு இலக்கை நோக்கிச் சென்றிருக்கிறது. தனிமங்கள், மொழிகள், புத்த மதத் திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. இது போக, வேறெதுவும் குறிப்பிடத்தக்கதாக என் நினைவில் இல்லை. என் பார்வையில், தமிழ் விக்கிபீடியாவுக்கு இது ஒரு மிக மந்தமான ஆண்டு . (தமிழ் விக்சனரி நிலைமை கவலைக்கிடமாக உள்ளது :( அங்கு இந்த ஆண்டு சில நூறு சொற்கள் கூட சேர்க்கப்படவில்லை.). தொடர்ந்து பங்களிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பாளர் எவரும் இந்த ஆண்டு வராதது ஏமாற்றமே. மதுமிதா, காயத்ரி என்று சில புதிய பங்களிப்பாளர்கள் வந்தாலும் தொடர்ந்து காண இயலவில்லை. இப்போது முனைப்பாக இருக்கும் வினோத்தும் 2006லேயே தமிழ் விக்கிபீடியாவில் இணைந்த பயனர் தான்.

ஐந்தாவது ஆண்டில் இருக்கும் தமிழ் விக்கிபீடியாவில், தற்போது 10 முனைப்புடைய பங்களிப்பாள்கள் இருக்கிறோம் என்று கருதலாம். குறைந்தது 100 ஊக்கமுடைய பங்களிப்பாளர்களாவது இருக்கும் நிலையில் தமிழ் விக்கிபீடியா நல்ல நிலையை எட்டும் என்று எண்ணலாம். ஆனால், இது உடனடியாக நடக்கும் என்பதற்கு அறிகுறிகளைக் காணோம். 2010 ஆண்டுக்குப் பின்னர் நடக்கலாம் என்றே நினைக்கிறேன். இந்த சமயத்தில் தமிழ் விக்கிபீடியர்கள் யாவும் சில விசயங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். இது குறித்து ஏற்கனவே கோபியுடன் தனிப்பட பேசியதுண்டு. அவரும் விரித்துரைப்பார் என்று நினைக்கிறேன். தற்போதைய தமிழ் விக்கிபீடியா பங்களிப்பாளர்கள் யாவரும் தமிழின் பால் ஆர்வமும் திறமும் தனி வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நிலையில் உள்ளவர்களாவர். நம்முடைய பெரும்பாலான நேரத்தை ஒவ்வொரு நாளும் உட்கார்ந்து கட்டுரை எழுதுதல், பிழை திருத்தல், துப்புரவு என்று செய்து கொண்டிருந்தால் அது பெரும் நேர விரயமாகும். குறைந்த பட்ச தமிழ் அறிவு உடைய ஒரு typist அல்லது proof reader செய்யகூடிய வேலையைச் செய்து செல்வா போன்ற பேராசிரியர்கள், மயூரனாதன், கனக்ஸ் போன்று அறிவும் அனுபவமும் கூடியவர்கள் தங்கள் பொன்னான நேரத்தையும் ஆற்றலையும் வீணடித்து விடக்கூடாது.

தமிழ் விக்கிபீடியா என்ற வட்டத்துள் அடங்கத் தேவை இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் இணையத்திலும் எப்படி தகவல் ஆதாரங்களைச் சேர்ப்பது, ஒருங்கிணைப்பது என்பது குறித்து நம் எண்ணத்தையும் செயலையும் திருப்ப வேண்டும் என்று நினைக்கிறேன். நம்முடைய நோக்கத்துக்கும் ஆர்வத்துக்கும் உள்ள பல வழிகளில் தமிழ் விக்கிபீடியவும் ஒரு களமே. அதனால், நாம் முழு ஆற்றலையும் இங்கு குவிக்கத் தேவை இல்லை. அப்படியே குவித்தாலும், அதை எப்படி திறம்படச் செய்வது என்று யோசிக்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், ஏற்கனவே பல தொகுப்புகளாக கலைக்களஞ்சியம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அவற்றில் உள்ள தகவல்களை நம் சிரமப்பட்டு கைப்பட தட்டச்சு செய்து விக்கிபீடியாவில் ஏற்றுவதை விட, அந்த கலைக்களஞ்சியங்கள் முழுமையுமே இணையத்துக்கு எப்படி கொண்டு வருவது என்று யோசிக்க வேண்டும். ஏற்கனவே அச்சில் இல்லாத நவீன யுக நுட்பங்கள், அன்றாட நிகழ்வுகள் குறித்து தமிழ் விக்கிபீடியாவில் நி்றைய எழுதலாம். ஏற்கனவே அச்சு வடிவில் public domainல் இருக்கு தமிழர் அறிவு மூலங்களை இணையத்தில் ஏற்றி, தகுந்த இடங்களில் அவற்றுக்கு விக்கிபீடியாவில் இருந்து இணைப்பு தந்தாலே போதுமானது. இதை அரசில் lobby செய்வது மூலமோ நூலகம் திட்டம் போல் தமிழகத்துக்கு ஒரு தன்னார்வலத் திட்டம் உண்டாக்கியோ எப்படி செயல்படுத்த முடியும் என்று பார்க்க வேண்டும். அங்கும் மாங்கு மாங்கு என்று தட்டச்சு செய்யாமல், சில typistகளை பணிக்கு வைத்து செய்ய முடியுமா? இதற்காக ஒரு foundation உருவாக்க முடியுமா? நிதி ஆதாரங்களைத் திரட்ட முடியுமா என்று யோசிக்க வேண்டும். நாம் அன்றாடம் செய்யும் உரை திருத்தங்களை தமிழ் தெரிந்த, தமிழ் படித்த ஒரு சில இளைஞர்களை வேலையில் அமர்த்தியே செய்ய இயலும். கொடுத்த வேலையைச் செய்யாமல் நெடு நோக்கில் சிந்தித்து செயலாற்றக்கூடிய விக்கிபீடியர்கள் இவர்களை வழிப்படுத்தவும் இன்னும் பெரிய அளவிலான செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து சிந்திக்க வேண்டும். மிக விரைவில் தமிழ் விக்கிபீடியாவை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக மட்டும் இல்லை, தமிழின் பால் ஆர்வமுள்ளவர்களின் அறிவு, ஆற்றல், அனுபவம் இன்னும் திறமாக எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப்பட வேண்டும் என்றும் யோசிக்க வேண்டும்.--ரவி 19:21, 1 டிசம்பர் 2007 (UTC)

த.வி. வளர்ச்சிக்கு நேரடிப் பங்கப்பே முக்கியம். "வேலைக் அமர்த்தி" என்ற சிந்தனைப் போக்கு நல்லதல்ல. ஒருவித மேற்குடி சிந்தனைப் போக்கும்கூட. அது விக்கிபீடியாவின் அனைவருக்கும் சமமான திறந்த கொள்கைக் போக்குக்கு எதிராகவும் அமைகின்றது. எல்லா விடயங்களிலும் efficiency தேடுவது பொருத்தாமக அமைவதில்லை. தாய் அல்லது தகப்பன் தமது பிள்ளையை வளர்ப்பதை வேலைக்காரரிடம் விட்டுவிட்டு வேலைக்கு போவது போல் இருக்கின்றது. மேலும் பின்னர். --Natkeeran 00:08, 2 டிசம்பர் 2007 (UTC)

நற்கீரன், விக்கிபீடியாவின் இணக்க உணர்வுக்கும் கொள்கைக்கும் அனைவரும் நேரடியாக தன்னார்வமாக உழைப்பை ஈனுவது மட்டுமே ஏற்றுக் கொள்ளத்தக்கதும் நல்லதும் வருங்காலத்தில் எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்கதும் என்று உணர்ந்தே இருக்கிறேன். எனினும் விக்கிபீடியாவுக்கு, வெளியேயான ஒட்டு மொத்த தமிழிணைய வளர்ச்சி குறித்தும் சிந்திக்கையில் இந்த அணுகுமுறை ஆராயத்தக்கதே. linux, mozilla மென்பொருள் உருவாக்கத்தில் ஒரு core group பணிக்கமர்த்தப்பட்டு வேலைகளை ஒருங்கிணைக்க, முடுக்கி விடச் செய்வது போல் இதை நோக்கலாம். நேரடியாக, மென்பொருள் வளர்ச்சியில் பங்களிக்க இயலாதவர்கள் தரும் நன்கொடைகள் மூலம் இந்நிறுவனங்கள் இயங்குவது இல்லையா? அது போல் தமிழுக்காக நேரம், பணம், அறிவு என்று நாம் திரட்டக்கூடிய வளங்களை எப்படி ஒருங்கிணைக்க முடியும் என்று பார்க்கலாம். விக்கிபீடியாவுக்கு மட்டும் என்று இதை அமைப்பது இயலாத காரியம். விக்கிபீடியாவாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாட்டாது. ஆனால், பல களங்களில் இயங்கும் இந்த foundation தன்னுடைய உள்ளடக்க உருவாக்கப்பங்களிப்புகளில் ஒரு பகுதியை விக்கிபீடியாவுக்கும் தரும். அது போன்ற பங்களிப்புகளை ஏற்பதும் புறக்கணிப்பதும் அன்று இருக்கும் தமிழ் விக்கிபீடியர்களின் முடிவாகவே இருக்கும். இன்னும் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றால், விக்கிபீடியாவில் சந்தித்து வளர்த்துக் கொள்ளும் தமிழ் ஆர்வலர் networkஐ எப்படி தமிழ் விக்கிபீடியா களத்துக்கு வெளியே ஒருங்கிணைத்து இன்னும் சிறப்பாகச் செயல்படுவது என்று சிந்திக்கலாம். எனக்குத் தோன்றிய ஒரு யோசனையை கருத்தறியும் நோக்கத்துடனேயே முன்வைத்துள்ளேன். உங்கள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன்--ரவி 00:19, 2 டிசம்பர் 2007 (UTC)

அறிக்கையை நேர்த்தியாக, பலவற்றையும் நினைவில் வைத்து எழுதி இருக்கிறீர்கள், நற்கீரன். இது போன்ற ஒருங்கிணைப்பு, திட்டமிடல் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்--ரவி 23:18, 1 டிசம்பர் 2007 (UTC)

கோபியின் கருத்துக்கள்: நாம் செய்ய வேண்டியவையும் செய்யக் கூடியவையும்

தொகு

ரவி ஏற்கனவே சொல்லியுள்ள கருத்துக்களையே நானும் பிரதிபலிக்கிறேன். எமது தேவை எமக்குள்ள வளங்களிலிருந்து உச்ச பயனைப் பெற்றுக் கொள்வதாகும்.

இலங்கை, தமிழகத்தின் சாதாரண பொதுமக்களைத் தமிழ்க் கணினி இன்னும் சென்றடையவில்லை. காரணம் பொருளாதார நிலையும் கணினியறிவின் பரவலுக்கு ஏதுவான சூழல் இன்னும் வராமையுமாகும். 2015-2020 அளவில் பெருமளவு தமிழர் இணையத்துக்கு வருவர். அப்போது அவர்களுக்குத் தமிழில் உள்ளடக்கம் கிடைக்காவிட்டால் ஆங்கிலத்தையே நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர். இப்போதுள்ள வேகத்தில் போனால் 2020 இல் எங்கே நிற்போம்?

நேரடிப் பங்களிப்பு முக்கியம்தான். ஆனால் தமிழில் நேரடியாகப் பங்களிக்க ஆற்றலும் நேரமும் பொருளாதாரமும் உள்ள எத்தனை பேர் இருக்கின்றனர்? த.வி.யில் பலருக்குப் பயனர் கணக்குகளை அருகிலிருந்து உருவாக்கிக் கொடுத்தும் ஓரிருவரையே கொண்டுவர முடிந்தது. இப்பொழுது முழுமூச்சாகத் த.வி.க்குப் பங்களிப்போர் எத்தனை பேர்? இவர்களால் எவ்வளவு விடயங்களைத்தான் எழுதிவிட முடியும்?

பயனர் நாராயணன் அரிச்சந்திரன் பற்றி ஒரு கட்டுரை கோரியிருந்தார். இணையத்தில் தேடி ஓர் அரிச்சந்திரன் கதையைத்தானும் வாசிக்க முடியவில்லை. நாம் நிற்பது மிகவும் ஆரம்பநிலையில்.

ஏற்கனவே அச்சில் வெளிவந்த உள்ளடக்கத்தை முறையான அனுமதியுடன் இணையத்துக்குக் கொண்டுவருதல் மிகுந்த பயனளிக்கும். ஏற்கனவே வெளியான கலைக்களஞ்சியங்களை இணையத்துக்குக் கொண்டுவருவதும் அவற்றில் இல்லாத கட்டுரைகளுக்கு முக்கியத்துவமளித்து எழுதுவதும் வளங்களிலிருந்து உச்சப்பயன் பெற உதவும்.

தமிழ் விக்கிபீடியாவில் நாம் செய்ய வேண்டியவை

தொகு
  1. சரியான திட்டமிடலுடன் முக்கிய கட்டுரைகள் முதலில் எழுதப்படல் வேண்டும்
  2. அச்சிலும் வராத புதிய உள்ளடக்கத்தின் உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்

தமிழ் விக்கிபீடியாவுக்கு வெளியில் செய்ய வேண்டியவை

தொகு
  1. அச்சிலுள்ள அரச கலைக்களஞ்சியங்கள், தகவல்தரும் நூல்களை இணையத்துக்குக் கொண்டுவருதல்
  2. நாளாந்தம் பத்திரிகைகள், இதழ்களில் வெளிவரும் நல்ல கட்டுரைகளை இணையத்தில் ஆவணப்படுத்தல்
  3. இதழ்கள், நூல்களிலிருந்து ஆதாரங்கள், குறிப்புக்களைத் தட்டெழுதுவித்தல்

இவை தொடர்பில் பல உரையாடல்கள் நடக்கின்றன. அவற்றில் சிலவாவது செயல்வடிவம் பெறுமென எதிர்பார்க்கிறேன். நன்றி. கோபி 03:44, 2 டிசம்பர் 2007 (UTC)

நிலுவையிலுள்ள பணிகள்

தொகு

இனிவருங்காலங்களில் கவனம் செலுத்துவதற்கான சில பணிகள் வருமாறு

  • நாடுகள், தனிமங்கள், மொழிகள் ஆகிய விக்கித் திட்டங்களைத் தொடர்ந்து முக்கிய கட்டுரைகளுக்கான விக்கித் திட்டத்துக்கு முக்கியத்துவமளிப்பது பயனுள்ளதாக இருக்கும்.
  • குறுங்கட்டுரைகளை விரிவாக்குதலிலும் சிறிதளவு கவனம் செலுத்தப்படல் வேண்டும். புதிய கட்டுரைகள் உருவாகும்போதே 1000 பைட்டு அளவினைத் தாண்டுவதனை உறுதி செய்யலாம். எளிமையான அறிமுகமே 1000 பைட்டு அளவைத் தாண்டப் போதுமாக உள்ளது.
  • படிமங்களுக்கான உரிமங்கள் தொடர்பில் சற்றுக் கூடிய கவனம் செலுத்துவது நல்லது.
ஆமாம், இதில் கூடிய கவனம் தேவை. அளிப்புரிமை போன்று தமிழில் நாம் சட்ட நோக்கிலான சொல்லாடல்களையும் கொள்கைகளையும் வகுத்துக்கொள்ள வேண்டும். --Natkeeran 00:43, 2 டிசம்பர் 2007 (UTC)

--கோபி 21:10, 30 நவம்பர் 2007 (UTC)Reply

விண்டோஸ் எண்டி சார் இயங்குதளம் ஆகியவற்றிற்கான ஆகக்குறைந்த அளவினான கட்டுரை எழுதி முடிக்கப்படவேண்டும் இதற்கான இலக்காக ஜனவரி 2008 முடிவில் முடிக்கத் தீர்மானித்துள்ளேன். --உமாபதி 15:53, 1 டிசம்பர் 2007 (UTC)

எனது கருத்துகள் - வினோத்

தொகு

தமிழ் விக்கிபீடியாவில் அறிவியல் தொடர்பான கட்டுரைகள் இன்னும் அதிகளவில் சேர்க்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து. தற்போதுள்ள அறிவியல் சார்ந்த கட்டுரைகள் பெரும்பாலும் அறிமுகமாகவே உள்ளன, விரிவாக இல்லை . எனது கல்லூரிக்கு தேவைப்படு அனைத்து விஷயங்களையும் ஆங்கில விக்கிப்பீடியா கொண்டே நான் எடுக்கிறேன். அது போன்ற ஒரு நிலை, தமிழ் விக்கிபீடியாவிலும் வர வேண்டும். என்னைப்பொருத்த வரையில் பெரும்பாலான மாணவர்கள் விக்கிபீடியாவில் அறிவியல் மற்றும் பொறியியல் தொடர்பான கட்டுரைகளையே தேடுகின்றனர், அந்த நிலையில் விரிவாக கட்டுரைகள் இயற்றுவதல் வேண்டும். அப்பொழுதே மாணவர்கள் நம் பால் கவரப்படுவர்.

மேலும், தமிழ் தட்டச்சை ஜாவாஸ்கிரிப்ட் மூலம் த.வி.யுடன் இணைக்க வேண்டும் என்பது எனது கருத்து. தமிழ் தட்டச்சு என்பது இன்னும் பலருக்கு எப்படி வருகிறது என்பதே தெரியுவில்லை(XPஇல் தமிழ் வரும் என்ற விஷயம் கூட தெரியாது). அவ்வாறு இருக்கும்பட்சத்தில், Anonymous பயனர்கள் நம் பக்கம் வந்து கட்டுரைகளை காணும் போது, ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால் அவர்கள் அதை செய்வதற்கு ஏதுவாக இருக்கும். இது சிறிய தடையே ஆயினும், இதை விலக்குதல் நன்று என எனக்குப்படுகிறது வினோத் 02:30, 5 டிசம்பர் 2007 (UTC)

மேலே வினோத் இன் கருத்துக்களை ஏற்றுக் கொள்கின்றேன். இலங்கையில் இப்போது Scholnet என்ற ஒரு திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆயினும் அங்கேயிருந்து தமிழ், ஆங்கில விக்கிபீடியாக்களைப் பார்க்கமுடியாதுள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை. Webfilter ஐத் தேர்ந்தெடுத்தால் பக்கம் இல்லை என்று பிழைச் செய்தி வருகின்றது பார்க்க http://www.schoolnet.lk/index.php?lang=en&for=center_managers&page_id=2 பாடசாலைகளில் இருந்தே எழுத்தாளர்களை உருவாக்குவதுதான் எதிர்காலத்திற்கு நல்லது. மாணவர்கள் இணைந்தால் கலைக்களஞ்சியத்தை மேலும் பயனுள்ளதாக்கலாம்.

பிகு: நீங்கள் கூறுவதுபோன்று விண்டோஸ் 2000/எக்ஸ்பி/விஸ்டா எல்லாம் தமிழை ஆதரிக்கின்றன என்பது எவ்வளவு பேரிற்குத் தெரியும் என்பது ஒரு பிரச்சினைதான். மேலும் விடயங்களைப் பின்னர் சேர்த்துக் கொள்கின்றேன். --உமாபதி 00:27, 9 டிசம்பர் 2007 (UTC)


குறும்பன் கருத்துக்கள்

தொகு

இன்னும் தமிழ் விக்கிபீடியா மக்களிடம் பரவலாக சென்றடையவில்லை. ஆங்கில விக்கிபீடியாவையே நாடும் போக்கு உள்ளது. நிறைய பயனர்களை த.வி பக்கம் கொண்டு வந்தால் அவர்களால் த.வி வளம் பெறும். குறும்பன் 04:33, 8 டிசம்பர் 2007 (UTC)

உமாபதியின் கருத்துக்கள்

தொகு

2007 ஆம் ஆண்டில் விக்கிபீடியாவில் சோழர்களின் வரலாறு, மொழிகள், கணிதம் சார் கட்டுரைகள், நாயன்மார்கள், புத்தர், புத்தசமயம், துடுப்பாட்டம் பற்றிய கட்டுரை உருவாங்கள் எனக்கு மனநிறைவை உண்டு பண்ணியிருக்கின்றன. குறைகளில் முக்கியமானது இன்னமும் தமிழ் விக்கிபீடியா பலரைச் சென்றடையவில்லை. திருகோணமலையில் 2008 ஜனவரி/பெப்ரவரி முதல் அகலக்கற்றை (Broadband) இணைப்புக்கள் அறிமுகம் ஆகும் என எதிர்ப்பார்க்கின்றேன் (வேலைகள் நடந்தவண்ணம் உள்ளது) இவை எவ்வளவு தூரம் தமிழ் விக்கிபீடியாவை முன்னெடுக்கப்போகின்றதோ தெரியவில்லை ஆனாலும் நிச்சயமாகப் பார்ப்பவர்கள் கூடுவார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை. ஊடகவியலாளர்களின் பார்வையில் தமிழ் விக்கிபீடியா உட்பட்டதில் பெருமையும் உண்டு மறுபக்கத்தில் இலங்கை விக்கிபீடியர்களுக்கு ஆபத்தும் வரக்கூடும் என அஞ்சுகின்றேன். இலங்கையில் இருந்து பங்களிப்பவர்கள் இயன்றவரை செய்திக்கட்டுரைகளில் பங்களிப்பைத் குறைத்து பிரச்சினைகள் இல்லாத அறிவியற்கட்டுரைகளில் பங்களிப்பதுதான் நல்லது. நிரோ தமிழ் சினிமா குறித்து வேகமாகப் பலநூறு கட்டுரைகள் ஒரே நாளில் எழுதப்பட்டதும் விக்கிபீடியா வரலாற்றில் ஒருசாதனை என்பது எனது தனிப்பட்ட கருத்து. பத்தாயிரம் கட்டுரைகளைத்தாண்டியது தமிழர்கள் மகிழ்ச்சிப்படவேண்டிய விடயமே தவிர தமிழ் சினிமா பற்றிப் பல்லாயிரம் கட்டுரைகள் இருப்பதைப் பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை ஒன்று ஏனென்றால் இது ஒரு அச்சிடும் கலைக்களஞ்சியம் அல்ல தேவையானவர்கள் தேடுபொறிமூலம் வந்து வேண்டிய தகவலைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதுதான் எனது நம்பிக்கை. தவிர கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தமிழ் சினிமா குறித்த சதவீதமும் குறைவடையும்

செய்யவேண்டியவை

தொகு
  1. தமிழ் விக்கிபீடியாவை ஏதேனும் ஒரு விதத்தில் இறுவட்டில் (CD) இல் உருவாக்கி வெளியிடுதல்.
  2. உலாவிகளின் URL ஐ மின்னஞ்சலாகக் கொடுக்க இயலாதிருக்கின்றது அவ்வாறு கொடுத்தால் முதற்பக்கமே வருகின்றது இதற்குத் தற்காலிகத் தீர்வாக user:redirect ஐப் பாவித்து வருகின்றேன். இது வேலை மினக்கெட்ட வேலை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. ஏதோ ஒரு விதத்தில் தீர்வொன்றை உருவாக்குதல் வேண்டும்.
  3. தானியங்கிகள் (பாட்) நகரங்கள் பற்றிய கட்டுரைகளிற்குப் பயனபடுத்துவது நல்லது. இலங்கை பற்றிய சில கட்டுரைகளைத் தானியங்கி மூலம் உருவாக்க முடியும் என்றே நினைக்கின்றேன். ஜனவரி 2008 இல் இதுபற்றிக் கலந்துரையாடிவிட்டுச் செயற்படுத்துவோம்.
  4. எ-கலப்பை என்பவற்றில் தங்கியிருக்காது நேரடியாகத் தமிழில் தட்டச்சுச் செய்வதற்கான வழிவகைகளை தமிழ் விக்கிபீடியாவில் உருவாக்குதல்.

குறைகள்

தொகு

இன்னமும் தமிழ் விக்கிபீடியாவில் பங்களிப்பவர்கள் குறைவாகவே இருக்கின்றனர். கூடுதல் பங்களிப்பவர்கள் இருந்தால்தான் பரந்துபட்ட ஓர் பார்வையைத் தமிழ் விக்கிபீடியா கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தும். என்னுடைய கட்டுரைகளில் சில எழுத்துப்பிழைகள் உண்மையிலே ஏற்படுகின்றன. நான் மைக்ரோசாப்ட் சரிபார்க்கும் கருவிகளைப் பயன்படுத்தினாலும் கூட அநேகமானவை சரியாகக் கண்டுபிடிக்கப்படுவதில்லை, இவையும் மேம்படுத்தப்பட்டால் நலம் தரும்.

முடிபு

தொகு

நான் சில கட்டுரைகளிற்கான user:redirect ஊடாக இணைப்பை மின்னஞ்சல் செய்ததுண்டு அவர்களும் பார்த்து நன்றாக இருப்பதாகத் தெரிவித்தார்கள் இது மகிழ்ச்சியளிக்ககூடிய விடயமே. கூகிள் யாஹூ! தேடுபொறிகளில் தேடினால் தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரை இருந்தால் அநேகமாகத் தேடல் முடிபுகள் முன்னுக்கு வருகின்றது. இது ஆர்வமளிக்கும் ஓர் செயற்பாடே இதற்குத் தலையங்கமே தலைப்பில் இருப்பது காரணமாக இருக்கலாம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு என்றவாறு நாம் அனைவரும் ஒன்றுபட்டுக் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதுதான் எமது ஒட்டுமொத்த முன்னேற்றமாக இருக்கும். நன்றி. --உமாபதி 17:44, 13 டிசம்பர் 2007 (UTC)

எனது கருத்துகள் - சிவகுமார்

தொகு

2007ஆம் ஆண்டு

தொகு

என்னைப் பொறுத்த வரையில் 2007ஆம் ஆண்டு தமிழ் விக்கிபீடியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டு. கட்டுரை எண்ணிக்கை (ஆயிரம்,பத்தாயிரம் போன்ற இலக்குகள் முன் வைக்கப்படாமல் தரம், நடுநிலை, நம்பகத்தன்மை, கொள்கை உருவாக்கத்தில் முனைப்பு என அடுத்த நிலையை அடைந்துள்ளோம்.

இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க ஒன்று கட்டுரை ஆக்கத்தைப் போலவே உரையாடல்களும் அதிகம் நடைபெற்றன. இதன் மூலம் பல புதிய கொள்கைகளும் கருத்துக்களும் உள்வாங்கபட்டுள்ளன. மற்றொன்று, கணிதம், புவியியல், சமயம் போன்ற சில துறைகளின் ஆழம் அதிகரித்துள்ளது.

மற்ற பயனர்கள் குறிபிட்டது போல் விக்கியினால் புதிய பயனர்களை அதிகம் ஈர்க்க முடியவில்லை. இதற்கு காரணங்களாக நான் கருதுவது விக்கிபீடியா பங்களிப்பதில் உள்ள கடினப்பாடு (இது கணினி பயன்படுத்த வல்ல ஆனால் இணைய அறிமுகம் குறைவாக உள்ளவர்களை பற்றியது), விக்கிபீடியா கட்டுரை நடை பொது வழக்கில் இருந்து சற்று விலகியிருப்பது. தமிழக, இலங்கை வழக்குச்சொற்கள் மாற்றுப் பயனர்களுக்கு தெரியாமை சில சமயங்களில் கட்டுரை படிக்கும் ஆர்வத்தைக் குறைக்கலாம்.

முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்த பரிந்துரை

தொகு
  1. இருக்க க் கூடிய கட்டுரைகளின் தரம் உயர்த்துதல் - நடையினை செம்மைப்படுத்துதல், இலங்கை, தமிழக வழக்குச்சொற்கள் இருக்கும் இடங்களில் மாற்றுவழக்கை அடைப்புக்குறிக்குள் இயன்ற வரை தருதல், கட்டுரையின் நம்பகத்தன்மை கூட மேற்கோள் காட்டுதல் (ஒரு இலக்காக முக்கால் பங்கு கட்டுரைகளில் குறைந்த்து ஓரிரு மேற்கோள்களையாவது சேர்க்கலாம்)
  2. மேலும் சில விக்கித்திட்டங்களைத் தொடங்குதல் - இவை துறை ஆழத்தை அதிகரிக்க உதவும். எடுத்துக்காட்டாக அய்யாவழி, பெளத்தம், நாடுகள் போன்ற திட்டங்களைக் கூறலாம். தமிழ்த்திரைத்துறை, சோழர் பற்றிய திட்டங்கள் இருந்திருப்பின் நிரோஜன், மோகன்தாஸ் போன்றோரின் பங்களிப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. எடுத்துக்காட்டாக தமிழ்த்திரைத்துறை, கிரிக்கெட் போன்ற திட்டங்கள் இணையத் தமிழ்ப்பயனர்களை பயன்படுத்தவும் பங்களிக்கவும் தூண்டும்.
  3. விக்கி செயல்பாடு அறியாப் பயனர்களுக்கு உள்ள சிக்கல்களை தீர்த்தல் - தற்போதைய உதவிப்பக்கங்கள் கட்டுரை நடையில் உள்ளன. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்ற பக்கத்தை உருவாக்கி எளிய நடையில் விளக்குதல்.

--Sivakumar \பேச்சு 07:56, 21 டிசம்பர் 2007 (UTC)

செல்வாவின் கருத்துக்கள்

தொகு

இவ்வாண்டின் கடைசி நாளான இன்று இப்போதைக்கு என் கருத்துக்களைப் பதிவு செய்கிறேன். இவை பகுத்து வரிசைப்படுத்தாத தனித்தனி கருத்துக்கள்/எண்ணங்கள்.

  • முதற்கண், தமிழில் விக்கிப்பீடியா என்று பகர ஒற்று வருதல் கட்டாயம் வேண்டும். பம்பாய் மும்பை என்றும், மதராஸ் சென்னை என்றும் ஆகும் பொழுது, மின்னுலகில் உள்ள இப்பெயர் மாற்றம் செய்யக்கூடியதே. தமிழின் சீர்மையைக் குலைப்பதில் ஒன்றாக விக்கியின் பெயர் இருக்கலாகாது என்பது என் நினைப்பு. பகர ஒற்று இல்லாமல் "விக்கிபீடியா" என்று எழுதினால் Vikkibiidiyaa என்றுதான் தமிழில் ஒலிக்க (பலுக்க) வேண்டும். சிறுகச் சிறுக பல சொற்கள் இப்படி தமிழின் ஒலிப்பாங்கைச் சீர்குலையச் செய்தால், தமிழின் அடிப்படையான ஓர் பண்பு இறந்துபடும். விக்கிப்பீடியாவைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் (நிர்வாகிகள்), கட்டாயம் இம்மாற்றம் செய்ய உதவவேண்டுகிறேன்.
  • விக்கிப்பீடியாவின் தேடுபெட்டியில் இட்டுத் தேடினால் தாறுமாறாக "தேர்வு"கள் வருவதை கூடிய விரைவில் சீர் செய்தல் வேண்டும்.
  • 2007 ஆம் ஆண்டில் விக்கிப்பீடியா சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளது. நான் விக்கிப்பீடியாவில் சேர்ந்து ஒன்றரை ஆண்டுதான் ஆகின்றது. நான் சேர்ந்த பொழுது ஏறத்தாழ 2,600 கட்டுரைகள் இருந்தன. விக்கி 12 MB (மெகா 'பைட்) அளவாக இருந்தது. இன்று 12,400 கட்டுரைகளை எட்டிக்கொண்டிருக்கின்றது. களஞ்சிய 'பைட்டளவும் 50 MB ஐத் தாண்டி இருக்கும். இது மாபெரும் வளர்ச்சி. அடுத்த ஒன்றரை ஆண்டில் இப்படி 4-5 பங்கு வளர்ச்சியை எட்டினால் 55,000 கட்டுரைகளுக்கு மேலும் 200-250 மெகாபைட்டான பருவளவும் அடையலாம். இப்பொழுது உள்ளாவர்கள் மட்டுமே, இப்பொழுது ஆக்குவது போலவே ஆக்கி வந்தாலும் அடுத்த ஒன்றரை ஆண்டில் 8,000-10,000 கட்டுரைகள் ஆக்கி 22,000 கட்டுரைகள் எண்ணிக்கையை எட்டலாம் ('பைட் பருவளவும் ஏறத்தாழ 90 மெ.'பைட்டை எட்டலாம்).
  • கட்டுரைகள் அளவீட்டில் 512 'பைட் அளவை மீறும் கட்டுரைகள் இப்பொழுது இருக்கும் நிலை நல்ல நிலை. 80% கட்டுரைகள் 512 'பைட்டுக்குக் குறையாமல் இருக்க உழைக்கலாம். ஆனால் 2 கி.'பைட் அளவை மீறும் கட்டுரைகளின் எண்ணிக்கை வீதத்தைக் கூட்ட வேண்டும். இப்பொழுது 14% உள்ளது. இது இந்திய மொழிகளை ஒப்பிடும் பொழுது முன் நின்றாலும், இது போதாது. இதனை 40% ஆகவாவது உயர்த்த உழைக்க வேண்டும். செப்டம்பர் 2007 குறிப்புகளின் படி 1.4% கட்டுரைகளே 8 கி.'பைட் அளவைத் தாண்டுவன. இது 5-10% ஆக உயர வேண்டும் என்பது என் அவா.
  • எல்லா மொழி விக்கிகளிலும் இருக்க வேண்டிய கட்டுரைகள் என்று குறிக்கப்பட்டுள்ளவற்றில், தமிழில் குறைந்தது 80% ஆவது இருத்தல் வேண்டும். இப்பட்டியலில் ஐரோப்பிய பண்பாட்டுச் சாய்வு மிகவுள்ளது, என்றாலும் அவை யாவும் தமிழிலும் இருப்பது நமக்கு அழகே. தமிழில் கட்டாயம் சிறப்பான வடிவில் இருக்க வேண்டிய கட்டுரைகள் பலவும் இதனோடு சேர்க்க வேண்டும். இருக்க வேண்டிய கட்டுரைகள் பலவும் இன்னமும் இல்லாமல் இருக்கின்றன. இருப்பனவும் சிறப்பற்ற வகையில் உள்ளன.
  • தமிழ் விக்கியில் நாம் ஊன்றி கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இப்பொழுது 10-12 ஆவது வகுப்பில் தமிழில் பயிலும் மாணவர்கள் (தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்), தங்கள் பாடநூல்களில் உள்ள கருத்துக்களுக்கு விரிவு தருமாறு நம் கட்டுரைகள் இருத்தல் வேண்டும். பாடநூல்களில் உள்ள குறிப்புகள் தவிர மேற்கொண்டு அறிய ஏதும் செய்திகள் (குறிப்பாக அறிவியல் துறைகளில்) தமிழில் இல்லாததாலோ அல்லது மிகமிகக் குறைவாகவே கிடைப்பதாலோ (பொது நூல்கள், கட்டுரைகள் போன்றவற்றில்), தமிழ் விக்கிப்பீடியாவில் ஓரளவிற்கேனும் தர முயலவேண்டும். தலையாய பொறுப்புகளில் ஒன்றாக இதனை நான் கருதுகின்றேன்.
  • ஆணித்தரமான அடிப்படைக் கருத்துக்களுக்கு முதலிடம் தந்து கட்டுரைகள் ஆக்க வேண்டும். இவை பெரும்பாலும் காலத்தால் மாறுபடாதவை (எடுத்துக்காட்டாக கணிதக் கட்டுரைகள், அறிவியல் அடிப்படைக் கருத்துக்கள்). எனவே இவற்றை ஆக்குவதால் பயன் பெருகும்.
  • சுந்தர் கூறியவாறு, கட்டுரைகளில் வலுவூட்டும் சான்றுகோள்கள் தருதல் வேண்டும். ஒரு நூலில் இருப்பதாலோ, கட்டுரையில், வலைப்பதிவில் உள்ளதாலோ கருத்து வலுப்படாது. தரமான இடங்களில் இருந்து சான்றுகோளகள் தருதல் வேண்டும் (புகழ் ஈட்டிய நூல்கள், பல்கலைக்கழக பாடநூல்கள், ஆய்விதழ்கள், நம்பகத்தன்மை ஈட்டிய செய்தியூடகங்களின் வெளியீடுகள் முதலியன). வரும் ஆண்டுகளில் இந்த சான்றுகோள்கள் சேர்த்தலை வளர்க்க வேண்டும்.
  • எழுத்துப்பிழைகளும், இலக்கணப் பிழைகளும் இன்னமும் மிக மிகவுள்ளன. இவற்றை களைந்தும் திருத்தியும் செப்பம் செய்ய வேண்டும். சொற்றொடர்கள் மிக நீளமாக இருந்தால், பிரித்து இரண்டு மூன்று தொடர்களாக ஆக்குதல் வேண்டும். நடை மிக இறுக்கமாக இருந்தால், கூடியவாறு எளிமைப்படுத்த வேண்டும் (ஆனால் பேச்சு நடையாக்வோ, கொச்சை நடையாகவோ, பிறமொழி கலப்பு நடையாகவோ மாற்றிவிடக்கூடாது - எளிமை என்ற பெயரால்).
  • பற்பல சீர்தரங்கள் பேண வேண்டும் (எழுத்து, சொல், நடை). பிறமொழிச்சொற்களை எப்படித் தமிழ் விக்கியில் ஆளவேண்டும் (எத்தனை மூல மொழித்துல்லிய ஒலிப்பைப் பொருட்படுத்த வேண்டும்) என்பதையெல்லாம் கலந்துரையாடி கொள்கை முடிவுகள் எடுத்தல் வேண்டும். பிறமொழி ஒலிபெயர்ப்புகளுக்கு நாம் பற்பல பிற மொழிவழக்கங்களையும் கூர்ந்தறிய வேண்டும். பிரான்சிய மொழியில் (பிரெஞ்சு மொழி) Paris என்னும் சொல்லைப் பலுக்குவது போலவா ஆங்கிலத்தில் கூறுகிறார்கள், சீன, சப்பானிய மொழிகளில் கூறுகிறார்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். பொது வழக்கு என்ற போர்வையில், தமிழ் மொழியின் சீர்மையை நாளும் கெடுப்பவர்களுக்குத் துணைபோகாமல், கருத்தடிப்படையில், துணிந்து தரம் நிறுவும் வகையாக இயங்க வேண்டும். அஞ்சி அஞ்சிச் சாவதால் பயனில்லை.
  • இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் இப்பொழுது உழைப்பவர்கள் மட்டுமே உழைத்தாலும் (இன்னும் பன்மடங்கு பயனர்கள் வந்து சீர் பெருக உழைக்கவேண்டும் என்பதே உண்மையான அவா), தமிழ் விக்கிப்பீடியா ஓர் ஒப்பரிய கலைகளஞ்சியமாக விளங்கும்
  • பகுப்புகள் இருந்தாலும் துறை துறையாக பற்பல வாயில்கள் (Portal) அமைத்து தொடர்புடைய கட்டுரைகளை இன்னும் அழகுற பிணைக்க வேண்டும்.
  • கட்டுரைகளில் சாய்வுகள் இல்லாமல் நடுநிலையாக எழுதப்படுதல் வேண்டும்.
  • வளர்முகமாக மறுபார்வை கருத்துகள் பதிவு செய்து கட்டுரைகளை செப்பனிட வேண்டும்.
  • கட்டுரைகளில் இன்னும் ஏராளமான படங்கள் சேர்க்க வேண்டும். எளிதாக பிற விக்கிகளில் இருந்து எடுத்து இணைக்கலாம். யாரும் செய்யக்கூடிய எளிய பணி.
  • அனைத்து தமிழ்நூல்கள், இதழ்கள் பற்றிய செய்திகள் சேர்க்க வேண்டும் (இது விரைவில் முடிவதல்ல, ஆனால் தொடர்ந்து செய்துகொண்டே வரவேண்டிய பணி). ஒரு நல்ல எடுத்துக்காட்டு தமிழம் போன்ற இணையத்தளம்.
  • கட்டுரைப் பரட்சி (பல்வேறு துறை சார்ந்த தலைப்புகளில் இருப்பது) வேண்டும். மருத்துவம் போன்ற தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் குறைவு.
  • கட்டுரைகளில் ஏன், எப்படி, எதனால் என்று விளக்கி அறிவு பெருக்கும் (அறிவூறும்) வகைகளில் எழுதக் கூடிய தலைப்புகளில் உள்ளவற்றை முதன்மைப்படுத்தி ஆக்குதல் வேண்டும். எடுத்துக்காட்டாக தொலைபேசி, தொலைக்காட்சி, ஒரு வெப்ப அளவி, வெப்பமானி முதலியன எப்படி இயங்குகின்றன, அவற்றின் இயக்கத்திற்கு அடிப்படையான அறிவியல் கருத்துக்கள் யாவை (அவற்றை தெளிவாக புரிந்து கொள்ளுமாறு எழுதுதல் வேண்டும்) என்பன.
  • கடந்த ஒன்றரை ஆண்டு ஈடுபாட்டில் நான் கண்டவரை இங்கு பங்களித்ததில் ஏறத்தாழ அனைவருமே மிகச்சிறப்பான முறையில் பெரும் ஆக்கம் செய்துள்ளனர். ஒவ்வொருவரும் அவரவர் வழிகளில் சிறப்பாக ஆக்கம் அளித்துள்ளனர். யாவரிலும் முன்நிற்பவர், என் கண்களில், இன்னமும் மயூரநாதன் அவர்களே. அண்மையில் வந்தவர், புயல்போல் ஆக்கம் அளித்தவர் வினோத் அவர்களே. ஆழமாக வித்திட்டு (வார்ப்புருக்கள் ஆக்கியும் பலவாறு உதவியும்) ஆக்கம் தந்தவர் டெரன்ஸ், இடையறாது பன்முக தலைப்புகளில் எழுதி ஆக்கம் தந்தவர் கனகு, சிறப்பாக கணிதம், தவிர வானியல், மெய்யியல் துறைகளில் நல்லாக்கம் தந்தவர் பேரா வி.கே, நாயன்மார்கள் பற்றியும், கணித் துறை மென்பொருள் புலம் பற்றியும் எழுதி வளம் சேர்த்தவர் உமாபதி, கருமமே கண்ணாயினாராக பற்பல குறுங்கட்டுரைகள் ஆக்கியும் ,களைவன களைந்தும், வகைப்படுத்தியும் பெரும்பணியாற்றியவர் கோபி, இடையறாது தக்க தலைப்புகளில் குறுங்கட்டுரைகள் ஆக்கியும், திருத்தங்கள் செய்தும் ஆக்கம் தந்தவர் சிவகுமார், தமிழோடு தொடர்புடைய அனைத்தையும் பிடித்துவந்து தமிழ்வளம் சேர்ப்பவர், யாவரினும் அதிக தொகுப்புகள் செய்து நெடுங்காலம் முதல்வராக நிறபவர் நற்கீரன், கொள்கை, கருத்துப் பரப்பாளராக இணைய உலகிலும், பேச்சுப்பக்கங்களிலும் பணியாற்றி வளம் சேர்ப்பவர் ரவி. யாருமே வியக்கும் அளவுக்கு புதுப்புது தலைப்பில் கட்டுரைகள் ஆக்கி, விக்கிநுட்ப, கொள்கைநுட்ப அறிவுரைகள் தந்து தனிவளம்சேர்ப்பவர் சுந்தர், இசைபற்றியும், இராகங்கள் பற்றியும் எழுதிக்குவித்து சிற்ப்பு பெற்றவர் சிந்து, அருமையாக திருத்தங்கள் செய்து அழகாக எழுதி கட்டுரைகளின் தரத்தை கூட்டியவர் மு.மயூரன், ஊர்கள் பற்றிய கட்டுரைகளில் தானியங்கி வழி மிகப்பெரும் விரிவு தர உதவிய கணேஷ், 2,000க்கும் அதிகமான திரைப்படங்கள், பாண்டிய அரசர்கள், நாடகக்கலை கட்டுரைகள் என்று எழுதி பெரும் விரிவு தந்தவர் நிரோஜன். சிறிதுகாலமே பணியாற்றினாலும் அருமையாக பணியாற்றி வளம் சேர்த்தவர் நரசிம்மவர்மன், இலங்கை வானொலி முதலான கலை ஊடகங்களில் பணியாற்றியவர்கள் பற்றி எழுதி வளம் சேர்த்தவர் பாலச்சந்திரன். பாலாஜி, விஜய்கிருஷ்ணா, குறும்பன், விவியன் ரிச்சர்டு, மோகன்தாஸ் போன்று மேலும் பலரும் பல்வேறு வழிகளில் பங்களித்தனர். முன்னர் அருமையாக பணியாற்றி அண்மையில் அதிகம் காணமுடியாதவர்களில் கலாநிதி (பொருளியல் பற்றி எழுதிவந்தார்), காயத்திரி, மதுபாலா குறிப்பிடத்தக்கவர்கள். மிகச் சிறப்பாக பங்களிக்க கூடியவர்கள் சந்திரா, ஹரிகிருஷ்ணன், நாக கணேசன் போன்றவர்கள் ஏனோ அதிகம் பங்களிக்க வில்லை. இன்னும் திறமை மிக்க நல்ல எழுத்தாளர்கள் பலர் பதிவு செய்து பங்களிக்காமல் இருக்கின்றார்கள்.இங்கு இப்படிக் குறிப்பிடுவதன் முகமாக, இவர்களோடு பங்களித்த என் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இப்படி நல்ல பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை இருமடங்காக, மும்மடங்காக, ஏன் பத்து மடங்காகவும் கூடினால் எத்தனை வளம் சேர்க்க இயலும்!

(இவை இப்போதைக்கு). --செல்வா 17:26, 31 டிசம்பர் 2007 (UTC)

சுந்தரின் கருத்துக்கள்

தொகு

இந்த ஆண்டைப்பற்றியும் எதிர்வரும் ஆண்டைப்பற்றியும் எனது கருத்துக்கள். -- Sundar \பேச்சு 17:44, 31 டிசம்பர் 2007 (UTC)

நினைவில் நிற்பவை

தொகு

இவற்றில் சில சென்ற ஆண்டு இறுதியில் துவங்கியிருக்கலாம்.

  • பேரா.வீகேயின் கணிதக்கட்டுரைகள் - ஆழம்
  • கனகுவின் நாளொரு கட்டுரை - அகலம்
  • கணேசின் ஊர்கட்டுரைகள், நிரோவின் திரைப்படக் கட்டுரைகள் - ஈர்ப்பு[1]
  • டெரென்சின் செய்திக்கட்டுரைகள் - தற்காலப் பொருத்தம்
  • வினோத் - பின்னூட்டம்

தவிர இந்த ஆண்டு கோபியின் முனைப்பால் களையெடுப்பு (சில சிக்கல்கலுடன்) மற்றும் செல்வா போன்றோரின் பங்களிப்பால் கட்டுரைகளின் சராசரி நீளமும் தரமும் உயர்ந்துள்ளது.

அவ்வப்போது நிகழ்ந்த காரமான உரையாடல்கள் நேர விரையமெனினும் கொள்கைத் தெளிவை நோக்கி செலுத்தின.

வரும் ஆண்டு

தொகு
  • செல்வாவின் முதல் பரிந்துரையை விரைந்து நிறைவேற்ற வேண்டும், என் கண்களையும் அது உறுத்துகிறது.
  • நிலுவையிலுல்லவற்றை முனைந்து நிறைவு செய்ய வேண்டும்.
  • கட்டுரைகளைச் சரியாக பகுக்க வேண்டும், சேய்ப்பகுப்பிலிருக்கும் ஒரு கட்டுரையைத் தாய்ப்பகுப்பிலும் இடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • ரவியின் பரிந்துரைகளில் சிலவற்றை தகுந்த மாற்றங்களுடன் செயற்படுத்தலாம்.
  • நான் அண்மையில் சிவாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது தோன்றியது: வெளி அறிஞர்களிடம் கட்டுரைகளைப் பெற்று விக்கிமூலம் அல்லது தனி தளத்தில் ஆக்குனர் பெயர்களுடன் நிலையாக கட்டற்ற அளிப்புரிமையின்கீழ் பதிப்பித்து பின்னர் அங்கிருந்து மேற்கோளுடன் படியெடுத்து இங்கு நமது வழக்கமான முறையில் தொகுக்கலாம்.
  • பல புள்ளிவிவர அட்டவணைகளைக் கொண்டு தானியங்கிக் கட்டுரைகளை உருவாக்க முயல வேண்டும்.
  • நாளிதழ் (ரவி?) அல்லது வார இதழ் ஒன்றில் நம் தளத்தைப் பற்றிய அறிமுகக் கட்டுரை (+சுருக்கமான தொகுத்தல் உதவிச்சட்டம (நற்கீரன்?)) ஒன்றை வெளியிடச் செய்து சிறந்த கட்டுரை ஆக்கும் மூவருக்கு பரிசுகள் அறிவிக்கலாம்.
  • கல்லூரித் தமிழ்ச்சங்கங்களுடன் தொடர்பு கொண்டு வரவேற்கலாம். (வினோத்?)
  • விக்கிபீடியா:மேற்கோள் சுட்டுதல் ஊக்குவிக்கப்பட வேண்டும்

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. பல பயனர்கள் இதன்மூலம் வந்தவர்களே! (குறும்பன், நரேந்திரன்?) [1][2]

நற்கீரன் கருத்துக்கள்

தொகு

நிர்வாகப் பணிகள்/துப்பரவு

தொகு
  • Wikipedia:நடைக் கையேடு - முழுமைப்படுத்தல், தரமாக ஆக்குதல்
  • Wikipedia:உதவி - 25 ஆக வரையறுத்து செழுமைப்படுத்தல்.
  • Wikipedia:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும் - மொழி பெயர்த்தல், சட்ட வரையறைகளை தெளிவுபடுத்தல், நடைமுறைப் படுத்தல்.
  • இற்றைப்படுத்தலை இயன்றவரை தவறாமல் மேற்கொள்ளதல்.
  • விக்கிபீடியா வரலாற்றுப் பக்கங்களை இனம்கண்டு (எ.கா: Wikipedia:கலந்துரையாடல்), வகைப்படுத்தி காப்பகத்தில் இடுதல்.

அறிமுகப்படுத்தல், பயனர் சூழலுல், கூட்டு அறிவாக்கம்

தொகு
  • த.வி அறிமுகப்படுத்தலை பரந்த விரிந்த களங்களுக்கு எடுத்து செல்லல்.
  • ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்று பல இடங்களில் தமிழர் நிறைய வாழ்கின்றார்கள். ஏன் ஒரு சிலரைக் கூட தொடர்ச்சியாக ஈடுபடுத்த முடியவில்லை என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். அறிமுகப்படுத்தலை விரிவுபடுத்தி மேற்கொள்ள வேண்டும்.
  • Wikipedia:தமிழ் விக்கிபீடியாவில் பங்குபெற இருக்கும் தடைகள் மேலும் அடையாளம் கண்டு, அவற்றை இயன்றவரை நிவர்த்தி செய்யதல்.
  • கூட்டு உழைப்பை முன்னிலைப்படுத்தல்.
  • தமிழ்ச் சூழலில் ஒரு முனைப்பான அறிவு முனையாக நிலையெடுத்தல்.

சீர்தரம்

தொகு

நுட்பம்

தொகு
  • விக்கி தொழிநுட்பம், குறிப்பாக MySQL தகவல்களை கொண்டு எப்படி தமிழில் பல்துறைசார் கட்டுரைகளை வார்ப்புருக்களை பெர்ள் அல்லது Paython தானியங்கிகள் மூலம் கட்டமைக்கலாம் என்ற நுட்பத்தை பரவலாக அறியச் செய்தல்.

உள்ளடக்கம்

தொகு
  • நிகழ்நேர தகவல் சேகரிப்பு கட்டுரையாக்கம்.
  • பிரச்சினைகள் பட்டியல் மற்றும் முக்கிய தலைப்புகள் கட்டுரைகளை இயன்றவரை ஆக்குதல்.
  • புதிய சிந்தனைகளை, கலக்க சிந்தனைகளை அறிமுகப்படுத்தல்.
  • சிந்தனைப் புலத்தை (Ecology of Concepts and Knowledge) பற்றி மேலும் தெளிவு பெறுதல்.

தமிழ்

தொகு
  • நல்ல தமிழ் சொற்களுக்கான சிந்தனைப் புலத்தை ecology கட்டமைப்பதைப் பற்றி மேலும் தெளிவு பெறுதல்.
  • தமிழ் இலக்கணம் தொடர்பான விபரங்களை சேகரித்தல்.
  • தமிழ் மொழியில் சிறப்பான, தனித்துவமான ஒலி, சொல், இலக்கண மரபுகளைப் பற்றி தகவல்களை பெற்று தெளிவு பெறல்.

துறைசார் தமிழ் நூற்கள் தகவல் சேகரம்

தொகு

தமிழ் நூர்களைப் பற்றி நூற்களை இணையத்தில் பெறுவது பற்றி பல தளங்களில் அலசப்பட்டது. இதற்கான ஒரு விரிவான தீர்வு எட்டாக்கனியாகவே உள்ளது. எமக்கு (தமிழ் விக்கிபீடியர்கள்) உள்ள இப்போதைய தேவையை முன்வைத்து, சில எண்ணங்களை இங்கு பகிர்கிறேன்.

  • நூல் பற்றிய தகவல்
  • தமிழ் விக்கிபீடியாவில் யாரிடம் இருக்கின்றது அல்லது யாரால் பெறப்பட்டு குறிப்புகள் சேர்க்க முடியும்.
  • கிடைக்கும் நூலகம்
  • உலகத்தமிழர் பெறக்கூடிய வழிமுறை அல்லது விற்பனை அங்காடி.

மேற்கண்ட தகவல்களை துறைசார்பாக தொகுக்க தொடங்கினால், விரைவில் ஒரு பொது தகவல் சேகரத்தை தொகுக்க முடியும் என்று நம்புகிறேன். இது பிறர் செய்யும் ஆய்வுகளுக்கும், மாணவர்களுக்கும், கட்டுரை ஆக்கர்களுக்கும் உதவுவதோடு, தமிழ் விக்கிபீடியாவின் நம்பகத்தன்மையையும் தரத்தையும் உயர்த்தும்.

அல்லது வேறு ஒரு முக்கிய துறையில் தொடங்கலாம்.

பரிந்துரை: விக்கிப்பீடியா:கேள்விக்குட்படுத்தல்

தொகு

இந்த பக்கத்தை மேம்படுத்தி ஒரு கொள்கை அல்லது வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ள பரிந்துரை செய்கிறேன்.

அழகியல், மற்றயவை

தொகு
  • த.வி தனித்துவமான clip arts, banners ஆக்குதல்.

--Natkeeran 19:17, 31 டிசம்பர் 2007 (UTC)


எனது கருத்துக்கள் - மயூரநாதன்

தொகு

2007 ஆம் ஆண்டுக்குரிய ஆண்டறிக்கை சுருக்கமாகவும், சிறப்பாகவும் உள்ளது. நல்ல கலந்துரையாடலுக்காகக் களம் அமைத்துக் கொடுத்துள்ளது எனலாம். என்னுடைய கருத்துக்களை உடனடியாக எழுதுவதற்கு நேரம் போதுமானதாக இல்லை. விடுமுறை முடிந்து வந்ததும் எழுதுகிறேன். Mayooranathan 20:15, 5 டிசம்பர் 2007 (UTC)


ரவி குறிப்பிட்டிருப்பதுபோல் 2007 தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ஒரு மந்தமான ஆண்டாகத் தெரியவில்லை. இந்த ஆண்டில்தான் மிக கூடிய அளவு கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டில் உருவாக்கப்பட்ட கட்டுரைகள் ஏறத்தாழ 6500. முன்னைய ஆண்டில் சுமார் 4000 கட்டுரைகளே உருவாக்கப்பட்டன. எனினும் இவற்றில் மிகப் பெரும்பாலானவை (சுமார் 5000) முதல் ஆறு மாதங்களில் எழுதப்பட்டவை. கடைசி ஆறு மாதங்களில் எழுதப்பட்டவை 1500 மட்டுமே. எனவே இவ்வாண்டின் பின் அரைப்பகுதி மந்தமானது என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் இக் காலப்பகுதியில் கட்டுரைகளின் நீளம் ஓரளவு அதிகரித்துள்ளது என்றே எண்ணுகிறேன்.

தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்கால வளர்ச்சி பற்றி எண்ணும்போது சில முக்கிய விடயங்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது எனது கருத்து. முதலாவது தமிழ் விக்கிப்பீடியா யாருக்குப் பயனுள்ளதாக இருக்கும்? எப்படிப்பட்ட பயனர்களை இலக்கு வைத்து நாம் கட்டுரைகளை எழுத வேண்டும் என்பது. பொதுவாகப் பயனர்களைப் பின்வரும் குழுக்களாக நோக்கலாம்:

  1. ஆய்வாளர்கள்
  2. பல்கலைக் கழக / கல்லூரி மாணவர்கள்
  3. பாடசாலை / பள்ளி மாணவர்கள்
  4. பாடசாலை / பள்ளி ஆசிரியர்கள்
  5. பத்திரிகையாளர்கள் / எழுத்தாளர்கள்
  6. பணி தொடர்பான தகவல்கள் தேடும் தொழில் புரிவோர்
  7. குறிப்பிட்ட தகவல்கள் தேடும் பொதுமக்கள்
  8. பொது அறிவுக்காகத் தகவல் தேடும் பொது மக்கள்
  9. தமிழ்ப் பற்றினால் விக்கிப்பீடியா பக்கம் வருபவர்கள்

இக் குழுக்களில் சிலருக்கு உயர்தரமான கட்டுரைகள் தேவைப்படும். அதிலும் சில துறைகளைச் சேர்ந்தவர்களுக்குத் தமிழில் கட்டுரைகள் தேவைப்படுமா என்பதும் சந்தேகமே. எனவே எத்தகைய கட்டுரைகள் என்னென்ன துறைகளில் தற்போதைய சூழ்நிலையில் தேவை என்பதை உணர்ந்து கட்டுரைகள் எழுத முயலவேண்டும். வேளாண்மை, சிறு தொழில்துறைகளுக்கான தொழில்நுட்பங்கள் போன்ற விடயங்களும் பயனுள்ளவை.

கணினி வசதி, கணினியில் தமிழில் வாசிக்க, உள்ளீடு செய்வதற்கான வசதிகள் குறைவாக இருப்பது தமிழ் விக்கிப்பீடியாவைப் பரவலாக அறிமுகப்படுத்துவதற்கு உள்ள முக்கிய பிரச்சினை. எனினும் இந்நிலை விரைவில் மாறிவிடும். ஆனால், தமிழ்ப் பயன்பாடு தொடர்பான மனப்போக்கு நீண்டகாலப் பிரச்சினையாக இருக்கும் என்பது எனது கணிப்பு.

  • தமிழ் வளர்ச்சிக்காகத் தீவிரமாக முயல்வதைத் தேசியத்துக்கும், தேசிய நலனுக்கும் எதிரானதாகப் பார்த்தல்,
  • வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தமிழ் அவசியமில்லை என்ற நிலை,
  • தமிழ்ப் பயன்பாட்டைத் தாழ்வாக எண்ணும் மனப்போக்கு,
  • புதிய தலைமுறையினரிடையே தமிழ்க் கல்வியில் ஆர்வமின்மை

போன்ற பல விடயங்கள் பலரைத் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தொலைவிலேயே வைத்திருக்கும் காரணங்களாகத் தொடர்ந்தும் இருக்கக்கூடும். அண்மையில் உருவான சில தொலைக் காட்சி நிறுவனங்கள் நிகழ்ச்சிகளுக்குத் தமிழ்ப் பெயர்களையே சூட்டியிருப்பதுடன் நல்ல தமிழ்ச் சொற்களையும் பயன்படுத்தி வருகின்றன. இது ஒரு நல்ல சகுனம் என்றே தோன்றுகிறது. இது நல்ல தமிழ் அறிவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும்.

இணையத்துக்கு வெளியிலும் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேலும் முனைப்பாக முன்னெடுக்கப்படவேண்டும். மயூரநாதன் 20:47, 31 டிசம்பர் 2007 (UTC)

செல்வா குறிப்பிட்டபடி விக்கிபீடியாவை விக்கிப்பீடியாவாக மாற்றலாம். பெயர்வெளிகளிலும், கட்டுரைகளிலும் உள்ளவற்றைத் தானியங்கிகள் மூலம் மாற்ற முடியுமா? Logo விலும் மாற்றம் செய்யவேண்டும். மயூரநாதன் 09:40, 1 ஜனவரி 2008 (UTC)
பெயர்வெளிகளில் மாற்றம் செய்ய வழு பதிந்தால் போதும். உடையும் இணைப்புக்களைச் சரிசெய்ய எளிய தானியங்கி ஒன்றை ஆக்க முடியும். -- சுந்தர் \பேச்சு 07:31, 2 ஜனவரி 2008 (UTC)
அப்படியானால் இதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கலாம். எதிர்ப்புகள் இருக்காது என்பது எனது நம்பிக்கை. மயூரநாதன் 16:25, 2 ஜனவரி 2008 (UTC)
Return to the project page "2007 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2007 Tamil Wikipedia Annual Review".