நுழைவு இசைவு
விசா ( இலத்தீன் மொழியின் சார்ட்டா விசாவிலிருந்து, பொருள்: "பார்க்கப்பட்ட தாள்")[1] என்று பரவலாக அறியப்படும் நுழைவிசைவு அல்லது நுழைவாணை ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஒருவர் செல்வதையும் அல்லது அங்கிருந்து வெளியேறுவதையும் அனுமதிக்கும் ஆவணமாகும். இந்த அனுமதி ஒருவர் நுழைகையில் நுழைவெல்லையில் உள்ள குடியேற்ற அதிகாரியால் மேலும் கட்டுப்படுத்தப்படும்.
இந்த அனுமதி ஓர் ஆவணமாக இருக்கலாம்; ஆனால் பெரும்பாலான நேரங்களில் விண்ணப்பதாரரின் கடவுச்சீட்டில் (அல்லது கடவுச்சீட்டிற்கு மாற்றான ஆவணத்தில்) முத்திரையாகப் பதிக்கப்படுகிறது. சில நாடுகள் சிலருக்கு நுழைவிசைவு இன்றியே உள்ளே செல்ல அனுமதிக்கின்றன; இவை இருநாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வின் அடிப்படையில் இருக்கும். நுழைவிசைவை வழங்கும் நாடு பொதுவாக தங்குவதற்கு பல நிபந்தனைகளை இடலாம்; நுழைவிசைவு பெற்றவர் செல்லக்கூடிய நாட்டின் பகுதிகள் (அல்லது செல்லக்கூடாத பகுதிகள்), தங்கக்கூடிய நாட்கள், நுழைவிசைவின் காலக்கெடு, ஒருமுறை அல்லது பலமுறை சென்றுவர இசைவு ஆகியன குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை வழங்க ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பின் செலவிற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
விசா அல்லது நுழைவிசைவு குடிமக்கள் அல்லாத வெளிநாட்டினருக்கு ஒரு நாட்டினுள் செல்லவும் அங்கு குறிப்பிட்ட நாட்கள் தங்கவும் அனுமதிக்கிறது. நுழைவதற்கான காலக்கெடு, எவ்வளவு நாட்கள் தங்கலாம் மற்றும் அங்கு வேலை செய்ய அனுமதி அல்லது தடை ஆகியவற்றை இந்த ஆவணம் வரையறுக்கிறது. விசா கிடைக்கப்பெற்றது அந்நாட்டிற்குள் நுழைய உறுதி வழங்குவதில்லை; எந்நேரமும் வழங்கப்பட்ட இசைவு இரத்து செய்யப்படலாம். வருகைக்கு முன்னதான விசா விண்ணப்பம் அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகளுக்கு வருகையாளரின் நிதி நிலை, வருகைக்கான காரணம், அந்நாட்டிற்கு வந்த முந்தைய வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்ள வழி செய்கிறது. நுழைகின்ற நாளன்று நிலவுகின்ற பல்வேறு அரசியல்/சமூக/தீவிரவாத நிகழ்வுகளுக்கேற்ப நுழைவிசைவு பெற்றிருந்தாலும் நுழைவு மறுக்கப்படலாம். இவற்றைத் தவிர வருகையாளர் எல்லையில் பாதுகாப்புச் சோதனைகளிலும் உடல்நலச் சோதனைகளிலும் தேர்வுற வேண்டும்.
சில நாடுகளில், காட்டாக சோவியத் ஒன்றியத்தில், அந்நாட்டு குடிமக்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் அந்நாட்டை விட்டு வெளியேற "வெளியேற்ற விசா" தேவைப்படுகிறது.[2]
வழங்கலுக்கான விதிமுறைகள்
தொகுசில நாடுகளில் அந்நாட்டில் நுழைகையிலேயே உட்புகும் துறையில் நுழைவிசைவு வழங்கப்படும். பொதுவாக அந்நாட்டு தூதரகம் அல்லது பேராளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சில நேரங்களில் இப்பணி மூன்றாம்நிலை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். தூதரகம் இல்லாதநிலையில் அஞ்சல் மூலமோ அல்லது தூதரகம் உள்ள வேறொரு நாட்டிலோ விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்நாட்டுக் குடிமகன், தங்கும் நாட்கள், அங்கு ஆற்றவுள்ள பணிகளைக் கொண்டு ஒருவருக்கு நுழைவிசைவு தேவையா அல்லவா என்பது தீர்மானிக்கப்படுகிறது. இவை மேலும் பலவகை விசாக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வகை விசாவிற்கும் வெவ்வேறு வரைக்கட்டுக்கள் விதிக்கப்படுகின்றன.
சில நாடுகள் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று எதிரெதிர் விசா முறைமைகளைக் கொண்டுள்ளன; ஏ என்ற நாட்டிற்கு செல்ல பி என்ற நாட்டு குடிமக்களுக்கு விசா தேவைப்படின் பி நாடும் ஏ நாட்டு குடிமக்களுக்கு விசா பெறுதலைத் தேவையாக்குகிறது. இதேபோல ஏ நாடு பி நாட்டு குடிகள் விசாவின்றி நுழைய அனுமதித்தால் பி நாடும் அத்தகைய சலுகையை ஏ நாட்டு குடிகளுக்கு வழங்குகிறது.
இத்தகைய எதிரெதிர் விசா முறைமையைக் கொண்டுள்ள சிலவற்றின் எடுத்துக்காட்டுக்கள்:
- அல்சீரியாவும் [1] கனடாவும் [2] பரணிடப்பட்டது 2010-02-17 at the வந்தவழி இயந்திரம்
- பெரும்பாலான விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் நாடுகளுக்கும் ஆபிரிக்க நாடுகளுக்கும்
- பிரேசில் மற்றும் கனடா/விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாய நாடுகள்
- ஆர்மீனியாவிற்கும் பெரும்பாலான விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயத்தில் இல்லாத நாடுகளுக்கும் [3] பரணிடப்பட்டது 2012-08-11 at the வந்தவழி இயந்திரம்
விசா வழங்குவதற்கு பொதுவாக கட்டணம் வசூலிக்கப்படும்; இதுவும் பொதுவாக எதிரெதிர் தன்மையுடையது. காட்டாக ஏ நாடு பி நாட்டு மக்களுக்கு 50 அமெரிக்க டாலர்கள் வசூலித்தால் பி நாடும் ஏ நாட்டு விசாக்களுக்கு அதே கட்டணத்தை வசூலிக்கும். மேலும் இந்தக் கட்டணத்தை நிர்ணயிப்பது ஒவ்வொரு தூதரகத்தின் விருப்புரிமை ஆகும். இதேபோல விசா செல்லுபடியாகும் காலம், எத்தனை முறை உட்புகுலாம் என்பதும் எதிரெதிர் நிலையில் அமைகின்றன. விசாவை விரைவாகப் பெற சில நாடுகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.
விசா வகைகள்
தொகுவழமையான விசா வகைகள்:
- கடப்பு விசா- ஒரு நாட்டின் வழியாக (கடந்து) மூன்றாம் நாட்டிற்கு செல்கையில் வழங்கப்படுகிறது. பொதுவாக இது மூன்று நாட்கள் அல்லது அதற்கு குறைவான காலத்திற்கு செல்லுபடி ஆகுமாறு இருக்கும்.
- பயணியர் விசா- குறிப்பிட்ட கால பொழுதுபோக்கு சுற்றுலாவிற்கு வழங்கப்படுகிறது. வணிக செயல்பாடுகள் அனுமதிக்கப்படுவதில்லை. சில நாடுகள் பயணியர் விசா வழங்குவதில்லை. காட்டாக, சவூதி அரேபியா 2004இல்தான் பயணியர் விசா வழங்கத் துவங்கியது. இருப்பினும் ஹஜ் யாத்திரிகர்களுக்காக புனிதப்பயண விசா வழங்கி வந்தது; தற்போதும் வழங்கி வருகிறது.
- வணிக விசா- அந்நாட்டில் வணிகச் செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கும் விசா. இவை நிரந்தர வேலைவாய்ப்பை தடை செய்கின்றன; அவற்றிற்கு பணி விசா தேவைப்படும்.
- தற்காலிக பணியாளர் விசா - புகுந்த நாட்டில் வேலைவாய்ப்பிற்கான விசா. இவை பொதுவாக பெறுவதற்கு மிகவும் கடினமானவை. விசாக்காலம் வணிக விசாவினை விட நீண்ட நாட்களுக்கு செல்லத்தக்கதாக இருக்கும். இவற்றிற்கான காட்டுகளாக ஐக்கிய அமெரிக்காவின் எச்-1பி மற்றும் எல்-1 விசாக்களைக் கூறலாம்.
- வருகைபோதுl விசா - நாட்டில் உள்ளே நுழையும்போது உடனடியாக வழங்கப்படும் விசா. இது வானூர்தி நிலையங்களிலும் எல்லைக் கட்டுப்பாட்டு மையங்களிலும் வழங்கப்படும். இது விசாவே தேவையில்லை என்பதிலிருந்து சற்று மாறுபட்டது. இதன்படி குடியேற்ற சரிபார்ப்பு பகுதிக்கு செல்லும் முன்னரே வருகையாளருக்கு விசா வழங்கப்படுகிறது. வருகையாளர்கள் விசா பெற்றபின்னரும் அனுமதி மறுக்கப்படலாம் என்றபோதும் இது வழமையாக வருகை வரியாகவே உள்ளது.
- வாழ்க்கைத்துணை விசா - ஒரு நாட்டில் வசிப்பவர் அல்லது குடிமகனின் வாழ்க்கைத்துணைக்கு (கணவன்/மனைவி) இருவரும் சேர்ந்து வசிப்பதற்காக வழங்கப்படுகிறது. காட்டாக ஐக்கிய இராச்சியம் வழங்கும் ஈஈஏ குடும்ப அனுமதி (EEA family permit) ஆகும்.
வழமையிலா விசா வகைகள்:
- மாணவர் விசா - ஒரு கல்வி நிறுவனத்தில் படிப்பதற்காக வழங்கப்படும் விசா. அல்ஜீரியா போன்ற சில நாடுகளில் மாணவர் விசாக்களுக்கு மாற்றாக பயணியர் விசா வழங்கப்படுகிறது. [4]
- பணியாற்றும் விடுமுறை விசா - நாடுகளிடையே சுற்றுலா மேற்கொள்ளும் அதே நேரத்தில் தற்காலிகப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கும் விசா. காட்டாக பத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாவது ஒன்றியத்தில் இல்லாத நாட்டு இளைஞர்களுக்கு இத்தகைய விசா வழங்குகிறது. [5] பரணிடப்பட்டது 2012-06-02 at the வந்தவழி இயந்திரம்
- தூதுவர் விசா (அல்லது அலுவல்முறை விசா) - வழங்கப்பட்டவருக்கு தூதுவருக்கான உரிமைகளை வழங்குகிறது. இது பொதுவாக தூதுவ கடவுச்சீட்டு உள்ளவர்களுக்கே வழங்கப்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Online Etymology Dictionary".
- ↑ B. S. Prakash (2006-05-31). "Only an exit visa". பார்க்கப்பட்ட நாள் 2008-05-10.
மேலும் தகவல்களுக்கு
தொகு- United States Department of State, "Report of the Visa Office" பரணிடப்பட்டது 2010-07-12 at the வந்தவழி இயந்திரம், Visa Office, Immigrant Visa Control and Reporting Division
- United States Department of State, Nonimmigrant Visa Statistics பரணிடப்பட்டது 2013-11-02 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
தொகு- நுழைவு இசைவு திறந்த ஆவணத் திட்டத்தில்
- Visa on arrival பரணிடப்பட்டது 2013-05-24 at the வந்தவழி இயந்திரம்
- Travel requirements பரணிடப்பட்டது 2017-11-06 at the வந்தவழி இயந்திரம் Passport, visa, onward ticket and health requirements of countries. The requirements are updated regularly by the பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம் but information for all countries may not be completely up-to-date.
- An online collection of different visa pictures from over 40 different countries
- Europe-wide Initiative for the Freedom of Travel for South Eastern Europe பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம்