விஜயநகரப் பேரரசின் ஆட்சி முறை

விஜயநகரப் பேரரசின் ஆட்சி முறை, விஜயநகரப் பேரரசு இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலான தென்னிந்தியாவின் தக்காணத்தில் தனது பேரரசை சிறந்த ஆட்சி நிர்வாக அமைப்புடன் வழிநடத்தியது. பேரரசில் அனைத்துத் துறைகளும் நன்கு செயல்பட்டது. பேரரசின் பகுதிகளை மண்டல ஆளுநர்கள் நிர்வகித்தனர். பொருளாதாரம், பண்பாடு, நாகரீகம், அரசியல், சமூகம், சமயம், கலை, இலக்கியத் துறைகள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றங்கள் கண்டது. நிக்கோலா (உரோம்), அப்துல் ரசாக் (பாரசீகம்) மற்றும் டோமினிக்கோஸ் போத்துக்கீசர் போன்ற பல அயல்நாட்டு அறிஞர்கள் விஜயநகரப் பேரரசிற்கு பலர் வருகை வந்து, பேரரசின் செழிப்புக்களைக் கண்டு பாராட்டினர்.[1] [2]

பேரரசர் கிருஷ்ணதேவராயன் பெருமாள் - ஆண்டாள் திருமண திருவிழா குறித்து, இயற்றிய ஆமுக்தமால்யதா எனும் தெலுங்கு மொழிக் கவிதைக் காவியம் தெலுங்கு இலக்கியத்திற்கு ஒரு மைல் கல்லாகும். மேலும் கிருஷ்ணதேவராயர் அனைத்துத் துறைகளில் புகழ்பெற்ற கலைஞர்களை தனது அரசவையில் வைத்துப் போற்றியதுடன், நல்லறத்தின் மீது எப்போதும் நாட்டம் கொண்டிருந்தான். அரசனை விஷ்ணுவின் பிரதிநிதியாக மக்கள் போற்றி வணங்கினர். பேரரசர் குடிமை, படைத்துறை மற்றும் நீதித்துறைக ஆகியவற்றில் இறுதி முடிவு எடுப்பவராக விளங்கினார். இருப்பினும் பேரரசருக்கு ஆலோசனை கூற, பல்துறைகளில் திறமை வாய்ந்த அமைச்சரவை இருந்தது.

அமைச்சரவை

தொகு

விஜயநகரப் பேரரசருக்கு அரசியல் மற்றும் பிற துறைகளில் ஆலோசனை கூற பலதுறைகளில் திறமை வாய்ந்த அமைச்சரவை செயல்பட்டது. பிரதம அமைச்சர், அமைச்சர்கள் அந்தணர், சத்திரியர் மற்றும் வைசியர் குலங்களிலிருந்து நியமிக்கப்பட்டனர். சில குறிப்பிட்டத் துறை அமைச்சர்கள் பரம்பரையாக அமைச்சர் பதவியில் இருந்தனர். அமைச்சர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பிரதம அமைச்சர், கரூவூல அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆவார்.

சில நேரங்களில் விஜயநகரப் பேரரசு ஒரே நேரத்தில் இரண்டு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. கிபி 1336ல் விஜயநகரப் பேரரசை நிறுவிய ஹரிஹர - புக்கர் சகோதரர்கள் ஒரே காலகட்டத்தில் பேரரசின் பகுதிகளை ஆண்டனர். அதே போன்று விஜயராயனும், தேவராயனும் பேரரசின் பகுதிகளை ஒரே காலகட்டத்தில் ஆண்டனர்.

நிர்வாகம்

தொகு

நிர்வாக வசதிக்காக விஜயநகரப் பேரரசு ஆறு மாகாணங்களாக பிரித்திருந்தனர். மாகாணங்கள் பிரதேசம் அல்லது இராச்சியம் என அழைக்கப்பட்டது. ஒவ்வொரு மாகாணங்களை நிர்வகிக்க ஆளுநர் எனும் நாயக்கர் நியமிக்கப்பட்டனர். மாகாண ஆளுநர்களாக பேரரசின் இளவரசர்கள் அல்லது அரசகுடும்ப உறுப்பினர்கள் அல்லது செல்வாக்கான அரசவை பிரபுக்கள் நியமிக்கப்பட்டனர். மாகாண ஆளுநர்கள் குடிமை, இராணுவம் மற்றும் நீதித்துறைகளில் அதிகாரமிக்கவர்களாக விளங்கினார்கள். ஆளுநர்கள் மாகாணத்தின் வருவாய் மற்றும் செலவினக் கணக்குகளை காலமுறையில் பேரரசருக்கு அனுப்பினர்.

மாகாண நிர்வாகம்

தொகு

விஜயநகரப் பேரரசின் மைய அதிகாரங்களை மாகாண ஆளுநர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. மாகாணத்தின் நிர்வாக வசதிக்காக மாகாணத்தை மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் நாடுகளாகவும், நாடுகள் நகரங்களாகவும், கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டது. கிராம நிர்வாகம் தன்னாட்சியுடன் செயல்பட்டது.

உள்ளாட்சி நிர்வாகம்

தொகு

மாகாணாத்தின் சிறிய அலகான கிராமங்கள் தன்னாட்சியுடன் கிராம சபைகளால் நிர்வகிக்கப்பட்டது. கிராமக் கணக்கர், காவல்காரன் (தலையாரி) போன்ற பதவிகள் பரம்பரை பதவிகள் ஆகும். கணக்கர் மற்றும் காவல்காரர்களுக்கு ஊதியமாக விளைநிலங்கள் அல்லது விளைநிலங்களிலிருந்து கிடைக்கும் வேளாண் பொருட்கள் ஊதியமாக வழங்கப்பட்டது.

நாயக்கர் அல்லது பாளையக்காரர்கள்

தொகு

விஜயநகரப் பேரரசின் நாயக்கர் அல்லது பாளையக்காரர் அமைப்பின் படைவீரர்களின் ஊதியத்திற்கு, குதிரை போன்ற போர் விலங்குகளை பராமரிக்கவும், ஆயுத தளவாடங்களை ஆயத்த நிலையில் வைத்துக் கொள்ளவும் பெருமளவிலான விளைநிலங்கள் ஒதுக்கப்பட்டது. இவ்விளைநிலங்களிலிருந்து கிடைக்கும் தாணியங்களைக் கொண்டு பாளையக்காரர்கள் தங்கள் நிர்வாகத்தை நடத்திக் கொள்ள வேண்டும். போர்களின் போது இப்பாளையக்காரர்கள் போர்வீரர்களுடன் பேரரசுக்கு உதவ வேண்டியது கடமையாகும்.

நிதி ஆதாரங்கள்

தொகு

பேரரசின் முக்கிய நிதி ஆதாரம் வேளாண் நிலவரியாகும். வேளாண் நிலவரியை நிர்ணயிக்க விளைநிலங்களை, நஞ்சை நிலம், புஞ்சை நிலம், பழத்தோட்டங்கள் மற்றும் காடுகள் என நான்காகப் பிரிக்கப்பட்டது. வழக்கமாக விளைச்சலில் ஆறில் ஒரு பகுதி நிலவரியாக வசூலிக்கப்பட்டது. நிலவரி தானியமாகவும், நாணயங்களாகவும் பெற்றுக் கொள்ளப்பட்டது. சில நேரங்களில் நிலவரியானது விளைபொருள், மண்ணின் தரம், நீர்பாசான முறை முதலியவற்றிக்கு ஏற்ப மாறுபடும். நிலவரி அல்லாது நீர்பாசான வரி, ஏற்றுமதி, இறக்குமதி பொருட்கள் மீதான சுங்க வரி வசூலிக்கப்பட்டது.

நீதி நிர்வாகம்

தொகு

விஜயநகரப் பேரரசரே, பேரரசின் உயர் நீதித்துறை தலைவர் ஆவார். முக்கிய வழக்குகளில் பேரரசரின் தீர்ப்பே இறுதியானது. பொதுமக்கள் வழக்குகளின் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை பேரரசர் அல்லது பிரதம அமைச்சருக்கு சமர்ப்பிக்க வேண்டும். அவைகள் இந்து சமயச் சாத்திரங்களின் படி பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும். குற்றங்களுக்கான தண்டனை கடுமையாக இருக்கும். உண்மையை வரவழைக்க கடுமையான குற்றவாளிகள் துன்புறுத்தப்பட்டனர். கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை, உடல் உறுப்புகளை நீக்குதல், சொத்துக்களை பறிமுதல் செய்தல் போன்ற கடும் தண்டணைகள் விதிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் நடைபெறும் சிறு குற்றங்களை கிராமப் பஞ்சாயத்துக் குழுவே விசாரணை செய்து நீதி வழங்கப்படும்.

படைத்துறை அமைப்பு

தொகு

பேரரசின் படையில் தரைப்படை, விற்படை, குதிரைப்படை மற்றும் பீரங்கிகளும், போர் யாணைகளும் இடம் பெற்றது. பேரரசின் படையில் பாரசீகம் மற்றும் துருக்கிய வில்வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். பேரரசின் படையில் பீரங்கிகள் குறைவாகவே இடம் பெற்றிருந்தது.

அயல்நாட்டுப் பயணி டொமிங்கோ பயசின் கூற்றுப்படி, பேரரசரசர் கிருஷ்ணதேவராயன் படையில் 7,03,000 தரைப்படை வீரர்களும், 32,600 குதிரைப்படை வீரர்களும், மற்றும் 551 யாணைகளும், போர் வீரர்களுக்கு உதவிட கணக்கற்ற உதவியாளர்களும் இருந்தது. பெரும் இராணுவத்தின் எண்ணிக்கைக்கேற்ப, படைததிறனில் சமநிலை காணவில்லை.

அரசவையின் பெருமை

தொகு

விஜயநகரப் பேரரசின் அரசவை பெருமையுடன் விளங்கியது. அரசவையில் பிரபுக்கள், புரோகிதர்கள், பல்துறை அறிஞர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் சோதிடர்கள் வீற்றிருந்தனர்.

அரசாணைகள்

தொகு

பேரரசரின் ஆணைகளை, குறிப்பெடுப்பவர்கள் பனை ஓலையில் எழுதி, அரசமுத்திரையிட்டு உரியவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் சில அரசாணைகளை நாடெங்கும் முரசு கொட்டி பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Vijayanagara and Bamini Kingdom - Chapter 9 - Page 2.42
  2. The Vijayanagar empire, 1336–1646

வெளி இணைப்புகள்

தொகு