விருப்ப ஓய்வூதியம் (இந்தியா)

இந்திய அரசுப் பணியின் இயல்பான பணிஓய்வு வயதான 58 அல்லது 60 வயது முடிவதற்கு முன்னர் ஒரு அரசுஊழியர் தானாகவே முன்வந்து விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறும்போது அவருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் விருப்ப ஓய்வூதியம் ஆகும்.

விருப்ப ஓய்வில் செல்ல விரும்பும் ஒரு அரசு ஊழியர் 50 வயதை நிறைவு செய்தவராக இருக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் தகுதியான பணிக்காலத்தை முடித்தவராக இருக்க வேண்டும். இவ்விரண்டு நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்த அரசு ஊழியர் விரும்பினால் அவர் விருப்ப ஓய்வூதியத்தில் செல்ல விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தமிழக அரசின் அரசாணை எண் 1327 பணியாளர் துறை நாள் 27.11.1978 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அயற்பணியில் பணி புரியும் அரசு ஊழியரும் மேலே குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு விருப்ப ஓய்வில் செல்வதற்கு மனு செய்யலாம்.

தகுதியான பணிக்காலம் தொகு

ஒரு அரசுஊழியர் அரசுப்பணி ஏற்ற நாள் முதல் ஓய்வு பெறும் நாள் வரையிலான அவர் பணிபுரிந்த பணிக்காலம் அவருடைய மொத்தப் பணிக்காலமாக கணக்கிடப்படுகிறது. ஓய்வூதியத்திற்குச் சேராத சில குறிப்பிட்டவகை பணிக்காலங்கள் இம்மொத்தப் பணிக்காலத்தில் இருந்து கழிக்கப்படும்.தற்காலிகப் பணிநீக்க காலம், ஊதியமில்லா விடுப்புக்காலம் பயிற்றுனர் காலம், 18 வயதிற்கு முன்னர் பணியில் சேர்ந்த காலம் போன்றவை தகுதியில்லாத பணிகாலங்கள் ஆகும். இத்தகைய தகுதியில்லாத பணிக்காலங்கள் நீங்கலாக உள்ள நிகர காலமே தகுதியான பணிக்காலமாக (Net Qualilfying Service) எடுத்துக் கொள்ளப்படுகிறது. விருப்ப ஓய்வில் செல்ல விரும்பும் அரசு ஊழியர், தனக்கு 20 ஆண்டு மொத்தப் பணிக்காலம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

விருப்ப ஓய்வில் ஓய்வூதியப் பயன்கள் தொகு

58 வயதுவரை பணிபுரிந்து ஓய்வுபெறும் ஒரு அரசு ஊழியருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து ஓய்வூதியப் பயன்கள் விருப்ப ஓய்வில் செல்லும் ஓய்வூதியருக்கும் கிடைக்கும்.[1]

அவை,

  1. ஓய்வூதியம்
  2. தொகுத்துப் பெறும் ஓய்வூதியம்
  3. பணிக்கொடை
  4. ஈட்டிய விடுப்பு மற்றும் சொந்த காரணங்களுக்கான ஈட்டா விடுப்பை காசாக்கும் சலுகை
  5. சிறப்ப சேமநல நிதி
  6. சொந்தஊர் செல்லப் பயணப்படி

இவை தவிர அவருடைய நிகரப்பணிக்காலத்தில் அதிகப்பட்ச சலுகையாக (weightage) கூடுதலாக ஐந்தாண்டுகள் ஓய்வூதியக் கணக்கீட்டிற்காக சேர்த்துக் கொள்ளப்பட்டு அதனடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்படும் சலுகைக் காலம், விருப்ப ஓய்வில் செல்பவருக்கு எஞ்சியுள்ள பணிக்காலத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது. அதாவது, விருப்ப ஓய்வில் செல்பவர் 58 வய்தை நிறைவு செய்ய எஞ்சியுள்ள காலம் அல்லது ஐந்து ஆண்டுகள் இவற்றில் எது குறைவோ அந்தக் காலம் சலுகையாக வழங்கப்படுகிறது.

விருப்ப ஓய்வுக்கு வழங்கப்படும் சலுகைப் பணிக்காலம் தொகு

விருப்ப ஓய்வில் செல்லும் அரசு ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரிந்த மொத்தப்பணிக்காலம் அல்லது அவர்களுடைய வயது ஆகிய ஒன்றின் அடிப்படையில் சலுகை பணிக்காலம் ஓய்வூதிய கணக்கீட்டிற்காக வழங்கப்படுகிறது.[2]

அரசு ஊழியர் பணிபுரிந்த மொத்த பணிக்காலத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைப் பணிக்காலம் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம் உடையவர்களுக்கு அதிகப்பட்சமாக 5 ஆண்டுகள் சலுகையாக வ்ழங்கப்படுகிறது.

பணிக்காலத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகை

மொத்தப் பணிக்காலம் சலுகை
25 ஆண்டுகள் 5 ஆண்டுகள்
26 ஆண்டுகள் 4 ஆண்டுகள்
27 ஆண்டுகள் 3 ஆண்டுகள்
28 ஆண்டுகள் 2 ஆண்டுகள்
29 ஆண்டுகள் 1 ஆண்டு
30 ஆண்டுகள் இல்லை

வயதின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகை

நிறைவடைந்த வயது சலுகை
53 5 ஆண்டுகள்
54 4 ஆண்டுகள்(
55 3 ஆண்டுகள்
56 2 ஆண்டுகள்
57 1 ஆண்டு

அடிப்படைத் தொகுதி பணியாளர்கள் எனில் அவர்கள் 60 வயது வரை அரசாங்கத்தில் பணிபுரிய தகுதியுண்டு. அவர்களின் விருப்ப ஓய்வூதியத்திற்கு வழங்கப்படும் சலுகை பின் வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

நிறைவடைந்த வயது சலுகை
55 5 ஆண்டுகள்
56 4 ஆண்டுகள்
57 3 ஆண்டுகள்
58 2 ஆண்டுகள்
59 1 ஆண்டு

விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்தல் தொகு

விருப்ப ஓய்வில் செல்ல விரும்பும் அரசு ஊழியர் குறைந்தபட்சம் மூன்று மாத காலத்திற்கு முன்னரே, தான் விருப்ப ஓய்வில் செல்லப் போகும் விபரத்தை பணி அமர்வு அதிகாரிக்கு முன்னறிவிப்பு கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஒருவர் விருப்ப ஓய்வு கேட்கும் நாளில், அவர் மீது எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் நடப்பில் இருக்கக் கூடாது. அலுவலகத்தில் விண்ணப்பம் பெறப்பட்ட நாள் முதல் அவருடைய மூன்று மாத கெடு கணக்கிடப்படும். இக்கெடு காலம் துவங்கிய பின்னர் அவர் ஊதியமில்லா விடுப்பில் செல்லக்கூடாது. ஒருவேளை தவிர்க்க இயலாத காரணத்தால் அவர் ஊதியமில்லா விடுப்பில் செல்ல நேர்டும் நிகழ்வில், விடுப்பு முடிந்த பிறகு புதியதாக் முன்னறிவிப்பு விண்ணப்பத்தை அவர் அளிக்க வேண்டும்.

தற்காலிகப் பணி நீக்கத்தில் உள்ள ஒர் அரசு ஊழியர் விருப்ப ஓய்விற்கு விண்ணப்பம் கொடுக்க இயலாது. 58 வயது வரை ஒருவர் அரசுத்துறையில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பணிக்கு நியமிக்கப்பட்டவரும் அரசு செலவில் உயர் கல்வி பெற்றவரும் விருப்ப ஓய்விற்கு விண்ணப்பிக்க இயலாது.

விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தவரின் கெடு காலம் முடிவதற்குள் பணி அமர்வு அதிகாரி விண்ணப்பத்தை ஏற்று அல்லது நிராகரித்து ஆணையிட்டுவார். விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்த ஒருவர் பணி நியமன அலுவலர் அனுமதியுடன் விண்ணப்பத்தைத் திரும்பப் பெறவும் உரிமையுண்டு. இவ்வுரிமை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதியாணை வழங்கப்பட்ட பின்னரும் விண்ணப்பத்தைத் திரும்பப் பெறவும் பொருந்தும்.

விண்ணப்பம் திரும்பப் பெற்ற பின்னர் பணிவாய்ப்பு தொகு

விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்து ஓய்வில் சென்ற ஒருவர் மீண்டும் அரசிடமிருந்து ஆணைபெற்ற பிறகுதான் பணி ஏற்க முடியும். அவ்வாறு பணி ஏற்றுப் பின் அவர் ஓய்வு பெறுகையில் பெற்ற ஊதியமே வழங்கப்படும். சலுகையாகப் பெற்ற மொத்தப் பணிக்காலத்திற்காக கணக்கிடப்பட்ட ஓய்வூதியப் பயன்கள் குறைக்கப்படும்.

விருப்ப ஓய்வூதியத் திட்டம் நிதிஉதவி பெறும் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொருந்தும். அயற்பணியில் பணி புரிபவர்கள் தாய்த்துறை அலுவலகம் வழியாக பணியமர்வு அலுவலருக்கு விண்ணப்பம் செய்து விருப்ப ஓய்வில் செல்லலாம்.

மேற்கோள்கள் தொகு

இதனையும் காண்க தொகு