வில்லியமினா பிளெமிங்

வில்லியமினா பேட்டன் இசுட்டிவன்சு பிளெமிங் (Williamina Paton Stevens Fleming, மே 15, 1857 - மே 21, 1911) என்பவர் இசுக்காட்லாந்தைச் சேர்ந்த வானியலாளர் ஆவார். இவர் தன் பணிக்காலத்தில், இவர் தன் பணிக்காலத்தில் விண்மீன்களுக்கான பொதுப் பெயரீட்டு முறையை உருவாக்கினார். மேலும் ஆயிரக்கணக்கான விண்மீன்களையும் பிற விண்வெளி நிகழ்வுகளையும் அட்டவணைப்படுத்தினார். 1888-இல் இவர் குதிரைத்தலை விண்மீன்குழுவைக் (நெபுலா) கண்டுபிடித்துப் பெரும்பெயர் பெற்றார்.[1]

வில்லியமினா பேட்டன் ஸ்டீவன்சு பிளெமிங்
Williamina Paton Stevens Fleming
Williamina Paton Stevens Fleming circa 1890s.jpg
பிறப்புமே 15, 1857(1857-05-15)
டண்டீ, இசுக்கொட்லாந்து
இறப்புமே 21, 1911(1911-05-21) (அகவை 54)
பாஸ்டன், மாசச்சூசெட்ஸ்
தேசியம்இசுக்கொட்டியர்
துறைவானியல்

வாழ்க்கைதொகு

வில்லியமினா 1857இல் மே 15ஆம் நாளன்று செதுக்குதல், பொன்முலாம் கைவினைஞரான இராபர்ட் இசுட்டீவன்சுக்கும் மேரி வாக்கருக்கும் இசுக்கொட்லாந்து, டண்டீ நகரில் பிறந்தார். இவர் கணக்காயரும் இசபெல்லா பாரின் முன்னாள் கணவருமான ஜேம்சு ஆர் பிளெமிங்கை 1877இல் மே 26இல் டண்டி பாரடைசு சாலையில் மணந்தார். போசுட்டனுக்குத் தன் கணவருடன் வருமுன் ஆசிரியராக இருந்தார். இவர் தன் கணவரால் கைவிடப்பட்டதும் பேராசிரியர் எட்வார்டு சார்லசு பிக்கெரிங் வீட்டில் வேலைக்காரியாகப் பணிபுரிந்தார். பிக்கெரிங் ஆர்வார்டு வான்காணகத்தில் இருந்த ஆண் பணியாளர்கள்பால் அவர்கள் வேலையில் சலிப்புற்றபோது இவர்களை விட எனது வேலைக்காரியே நன்றாகப் பணிபுரிவார் எனக் கூறியுள்ளாராம்.[2]

பிக்கெரிங் 1881இல் ஃபிளெமிங்கை வான்காணகத்தில் எழுத்துப்பணிக்காக பணியமர்த்தினார். அவர் அங்கு பணிபுரியும்போது விண்மீன்களின் கதிர்நிரல்கள் (spectra) காட்டும் நீரகத்தின் அளவைக் கொண்டு ஓர் எழுத்துப் பின்னொட்டால் பெயரிடும் முறையை உருவாக்கி நடைமுறைப்படுத்தினார். பேரளவு நீரகத்தைக் கொண்டிருந்த விண்மீன்கள் A- வகையாகப் பெயர் சூட்டப்பட்டன. அதற்கு அடுத்த அளவில் நீரகத்தைக் கொண்டிருந்தவை B-வகையாகப் பெயர் சூட்டப்பட்டன. இது அப்படியே தொடர்ந்து பின்பற்றப்பட்டது. பிறகு இந்த முறை அன்னி ஜம்ப் கெனான் என்பவரால் வெப்பநிலையைச் சார்ந்த வகைப்பாட்டால் மேலும் எளிமை படுத்தப்பட்டது.

என்றி டிரேப்பர் அட்டவணை எனப் பின்னர் வெளியிட்ட விண்மீன்களின் அட்டவணையை உருவாக்குவதில் பிளெமிங் முனைந்து செயல்பட்டார். ஒன்பதே ஆண்டுகளில் 10,000க்கும் மேற்பட்ட விண்மீன்களை இவர் அட்டவணைப்படுத்தியுள்ளார்ர். அப்போது அவர் 59 வளிம விண்மீன்குழுக்களையும் 310 மாறுவிண்மீன்களையும் 10 குறுமீன் வெடிப்புகளையும் (Novae) கண்டறிந்துள்ளார். இவர் 1907இல் தான் கண்டுபிடித்த 222 மாறுவிண்மீன்களின் பட்டியலை வெளியிட்டார்.

இவர் 1888இல் சீட்டா ஓரியானிசு விண்மீன்குழுவிற்கு 30 பாகை தெற்கில் இருந்த, 5 பாகை விட்டமுள்ள அரைவட்ட குழிவுகொண்ட பொலிவுமிக்க குதிரைத்தலை விண்மீன்குழுவை B2312 என்ற ஆர்வாடு ஒளித்தட்டில் பதிவு செய்து கண்டுபிடித்தார். இது பிறகு IC434 என வழங்கப்பட்ட்து. எட்வார்டு பிக்கெரிங்கின் உடன்பிறப்பான வில்லியம் என்றி பிக்கெரிங் என்பவரே இந்த ஒளிப்படத்தை எடுத்தார். ஆனால் அவர் அதை கருத்த மங்கலான பொருளாகத் தான் இனங்கண்டார். அடுத்துவந்த கட்டுரைகளும் நூல்களும் இந்தக் கண்டுபிடிப்புக்கான முன்மையை பிளெமிங்குக்கும் அவரது பேராசிரியரான பிக்கெரிங்குக்கும் தரமறுத்தன. இதற்கான முதல் அட்டவணைச் சுட்டியை உருவாக்கிய ஜே. எல். ஏ. டிரேயர் அப்போது ஆர்வார்டு கண்டுபிடித்த வான்பொருட் பட்டியலில் பிளெமிங்கின் பெயரை நீக்கிவிட்டார். அதைப் ”பிக்கெரிங்” என்ற மொண்ணையான பெயரில் சுட்டினார். எனவே இந்த பிக்கெரிங் என்ற பெயர் ஆர்வார்டுக் கல்லூரி வான்காணக இயக்குநராகவிருந்த ஈ. சி. பிக்கெரிங் என்றே அனவராலும் நினைக்கப்பட்டது. இரண்டாம் அட்டவணைச் சுட்டியை 1908இல் டிரேயர் வெளியிடும்போது பிளெமிங்கும் பிறரும் பெயர்பெற்றுவிட்டதால் பின்னருள்ள பிளெமிங்கின் கண்டுபிடிப்புகளுக்குத் தக்க மதிப்பு அளிக்கப்பட்டது. ஆனால் IC 434, குதிரைத்தலை விண்மீன்குழு ஆகிய பிளெமிங்கினது தொடக்க காலக் கண்டுபிடிப்புகளுக்கு உரிய மதிப்பு வழங்கப்படவேயில்லை.

பிளெமிங் கணக்கியல் வகைபாடுகளுக்காகப் பணியமர்த்தப்பட்ட பல மகளிர்க் குழுக்களுக்குப் பொறுப்பேற்றதோடு, வான்காணக வெளியீடுகளையும் பதிப்பித்தார். அவர் 1899இல் வானியல் ஒளிப்படங்களுக்கான அருங்காட்சியகராக அமர்த்தப்பட்டார். அவர் 1906இல் இலண்டன் அரசு வானியல் கழகத் தகைமை உறுப்பினரானார். இவர்தான் முதலில் அதில் உறுப்பினராகிய அமெரிக்கப் பெண்மணியாவார். மிக விரைவிலேயே வெல்லெசுலிக் கல்லூரியின் தகவுறு ஆய்வாளராகவும் ஆனார். இறப்புக்குச் சற்றுமுன் மெக்சிகோ வானியல் கழகம் அவருக்கு குவாடலூப் அல்மெந்தாரோ விருதை புதிய விண்மீன்களைக் கண்டுபிடித்ததற்காக வழங்கிப் பாராட்டியது. இவர் 1907இல் ”மாறுவிண்மீன்களுக்கான ஒளிப்பட ஆய்வு” என்ற நூலை வெளியிட்டார். மேலும் 1911இல் ”செந்தர வட்டாரங்களில் உள்ள விண்மீன்களின் கதிர்நிரல், ஒளிப்படப் பருமைகள்” என்ற நூலையும் வெளியிட்டார்.

இவர் 1911இல் நுரையீரல் அழற்சியால் இயற்கை எய்தினார்.

தகைமைதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Cannon, Annie J. (சூன் 1911). "WILLIAMINA PATON FLEMING". Science 33 (861): 987–988. சூன் 30, 1911. doi:10.1126/science.33.861.987. பப்மெட்:17799863. Bibcode: 1911Sci....33..987C. 
  2. Kass-Simon, Gabriele (1993). Farnes, Patricia; Nash, Deborah. eds. Women of science: righting the record. Midland Book. 813. Indiana University Press. பக். 92–94. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-253-20813-0. http://books.google.com/books?id=Ez7DCJM57esC&pg=PA92. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியமினா_பிளெமிங்&oldid=2746948" இருந்து மீள்விக்கப்பட்டது